வாழ்த்துக்கள் Dr Nishānthan Ganeshan
இந்தப் பதிவு நிசாந்தனை ஒரு PhD பட்டம் முடிக்கும் பத்துடன் ஒன்று பதினொன்றாக நினைக்கக் கூடாது என்பதும் நிசாந்தனின் பல்வேறுபட்ட ஆளுமையைப் புரிந்துக் கொள்வதற்காகவும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
இதன் நோக்கம் நிசாந்தனின் கல்விச் சாதனை மலையக மாணவர்கள் அனைவருக்கும் ஒரு inspiration. அவருடைய பாடசாலை வாழ்க்கை தொடக்கம் PhD வரையிலான பயணத்தை ஒரு நூலாக எழுதச் சொல்லியிருக்கிறேன். அவரை அவரது பாடசாலை வாழ்க்கையில் சூழலியல் பாடம் படிப்பிக்கும் போது (அப்போது நான் பல்கலைக்கழக மாணவன்) நான் inspire பண்ணியிருக்கிறேன் என்பதும் பல ஆண்டுகாலம் கழித்து என்னுடன் வேலை செய்யும் போது அவர் எனக்குச் சொன்ன செய்தி!
நிசாந்தன் தன்னுடைய PhD இரண்டாவது ஆண்டில் எனது பயணத் தோழனாக இணைந்து கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாத்தளையில் காரில் தொடங்கும் பயணம் யூனியன் ப்ளேஸின் எனது அலுவலகத்திற்கு அருகில் முடியும். அது போல் வெள்ளிக்கிழமை மறுதலை! கிட்டத்தட்ட 08 மணி நேரம் வாரத்திற்கு உரையாடல்!
இருவருமாக மாத்தளையின் கல்வி வளர்ச்சி, எப்படி அறிவியல் ஆய்வு போன்றவற்றில் இன்னும் பலரை உருவாக்கலாம், கல்விசார் சமூகம், அரசியல், சமூகப்பிரச்சனை, நிர்வாகம், தத்துவம், ஆன்மீகம் என்று பலதும் கலந்து சுவாரசியமாக உரையாடல் செல்லும்.
PhD முடிக்கும் தருவாயில் எனது இயற்கை விவசாய மாதிரித்திட்டத்தின் ஆய்வாளராக இணைந்துகொண்டார். நிசாந்தன் ஒரு நீரியல் வள ஆய்வாளர். எனது திட்டம் முழுமையாக தாவரங்கள், மண், மண்புழு, பூச்சிகள் போன்றவற்றின் அறிவியல் அடிப்படையும் அவற்றைக்கொண்டு உற்பத்திச் செய்து அதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்பதும் பற்றியது! நிசாந்தனிடமிருந்தது செயலூக்கம், அறிவியல் முறைச் சிந்தனை, பொறுமை என்பவை மாத்திரமே! மேலும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். யானை, சிறுத்தை, கரடி, விஷப்பாம்பு என்று திட்டத்திற்கு தேர்ந்தெடுத்த இடம் படுவில்லங்கமான இடம்! இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு வேலைசெய்தார்.
மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் நிசாந்தன், தட்சணேஷ் காந் மற்றும் சில அவர்களது நண்பர்களது எண்ணக்கரு! இதனை வழிகாட்டும் பொறுப்பையும் என்னிடம் கேட்டார்கள். இந்த ஒன்றியம் பலருக்கு உத்வேகம் அளித்து நாமும் இதைப்போன்று செய்ய வேண்டும் என்ற ஒன்றாக இன்று மாறியிருக்கிறது.
மற்றவர்களும் எம்மைப் போன்று இப்படிச் செயல் புரிய தூண்ட வேண்டும் என்ற இந்த உத்தியை நாம் இருவரும் திட்டமிட்டே செய்தோம். எமது சமூகத்தில் கல்வியினது அறிவினையும் முதன்மைப்படுத்த பலரையும் தூண்ட ஒருவழியாக ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைந்தது! இதன் செயற்பாடு ஈ கல்வியுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பினை தேடித்தந்தது.
என்னைப் பொறுத்த வரையில் மிக இளம் வயதில் தனது PhD இனை முடித்து ஒரு ஆய்வறிஞராக, விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கும் நிசாந்தன் தன்னைப் போன்று பலரை உருவாக்குவார் என்பது எனது நம்பிக்கை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.