சாணக்கிய நீதியில் வரும் ஒரு சுலோகம் இப்படிச் சொல்கிறது; ஒருவனது அக உறவினர்களான - மனப்பண்புகள் எப்படி இருக்க வேண்டும்.
சத்தியம் எனது தாய்;
ஞானம் எனது தந்தை;
தருமம் எனது சகோதரன்;
கருணை எனது தோழன்;
அமைதி எனது மனைவி;
மன்னித்தல் எனது மகன்;
இந்த ஆறு நற்பண்புகளே
எனது உறவுகள்.
நாம் தாயின் வயிற்றிலுருந்து வளர்கிறோம்; தந்தையின் வளர்ப்பில் ஞானத்தைப் பெறுகிறோம்; தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றபடி சகோதரன் இருக்கும் பிணைப்பில் வலிமை பெறுகிறோம். தோள்கொடுக்கும் தோழன் இருந்தால் வாழ்வு சிறக்கிறது.
இறுதியாக மனதைப் புரிந்துகொள்ளும் மனைவி/கணவன் வாய்த்தால் வாழ்க்கை அமைதியாக இன்பமாகிறது.
இதுபோல் ஒருவனின் மன ஆளுமை வளர எது உண்மை/ சத்தியம் என அறிதல் அவசியம். இதுபற்றி வள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சத் ஆகிய உண்மை பற்றிய தெளிவு சத்தியம்.
ஞானம் என்பது தான் யார் என்பது பற்றிய தெளிவு.
தர்மம் என்றால் எம்மை பிணைப்பது என்று பொருள்; தர்மம் என்பதன் அடிச்சொல் த்ர என்ற சமஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் அச்சாணி; எது எம்மை பிணைக்கிறதோ அது தர்மம்.
ஒருவன் உண்மையை அறிந்து, தன்னை அறிந்து, அனைவருக்கும் பயன்பட தன்னை சமூகத்துடன் பிணைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தர்மத்தை சரியாக உணர வேண்டும்.
தர்மம் சரியாகத் தெரியாதவன் தன்னை மற்றவர்களுடன் பிணைத்துக்கொள்ள மாட்டான்.
உதாரணமாக ஆசிரியன் என்ற தர்மத்தை ஏற்றால் மாணவனை ஆசு என்ற மாசு நீக்கி தெளிவுபெற வைப்பதே கடமை என்பதை உணர்வது தர்மம்.
தர்மம் தெரிந்தாலும் நான், எனக்கு என்ற சுயநலப்புள்ளியில் இருந்து வெளிவந்து செயலாற்ற கருணை என்ற நண்பன் தேவை. நட்பு என்பது உயர்வு, தாழ்வு என்ற அந்தஸ்து பார்க்காது. அதுபோல் கருணை என்ற குணம் எதையும் எதிர்பார்க்காது உதவி செய்யும் குணம்.
ஒருவன் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ அவனது வாழ்க்கைத் துணை அமைதியான மனம் படைத்தவராக இருத்தல் அவசியம். குழப்பம் நிறைந்த மனம், வாழ்க்கையை சரியான திசையில் செல்ல விடாது.
பிரச்சனைகள் எம்மை விட்டு நீங்கவேண்டும் என்றால் குரோதம் கொள்ளாமல் மன்னிக்கும் பண்பு வேண்டும். எப்பேர்பட்ட கோபக்காரனாக இருந்தாலும் பிள்ளைகளுடைய தவறுகளை மன்னிக்கும் மனமுடையவனாக இருப்பது மனிதனின் இயல்பு. மன்னிக்கும் மனம் உடைய மாந்தர்க்கு வாழ்க்கை உளப்பிரச்சனை அற்றதாக இருக்கும்.
ஆக இந்த ஆறுபண்புகளும் மனிதன் தன்னுடைய ஆளுமையை வளர்க்க அவசியமானவை என்பதை இந்த உவமானத்தால் கூறியிருக்கிறார் என்று கொள்ளலாம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.