திருவாகிய சிவம் என்ற செல்வத்தின் மூலம் காட்டும் திருமூலரின் திருமந்திரத்தின் பிண்டலிங்கம் என்ற பாடல்களின் விளக்கம். - 02
பிண்டம் என்ற உடலின் குறியீடு பற்றிய விளக்கம் - பிண்ட லிங்கம்.
லிங்கம் என்றால் குறியீடு என்று அர்த்தம். மறைந்திருக்கும் சூக்ஷ்மமான ஒன்று வெளிப்படும் போது அது தனக்கே உரிய குறியீட்டினை வெளிப்படுத்தும்; ஒரு ஆண் குழந்தை பிறந்தால் அது ஆண்குழந்தை என்பதை உடனடியாகப் புரிந்துகொள்ளும் குறியீடு அதன் ஆண் குறி. அவன் ஆண் என்பதைக் குறிக்கும் குறியீடு!
அதுப் போல் சிவமாகிய பரம்பொருள் தனது தன்மைகளை எல்லாம் வடித்தெடுத்து சுருக்கி விலகி ஓடும் ஐம்பூதங்களையும் ஒன்றுபடுத்தி ஸ்தூல உடலாக்கி தன்னை அறிவதற்கான குறியீட்டினை இந்த மனித உடலிற்குள் வைத்திருக்கிறது. இதை அறியும் படிமுறைகளைக் கூறுவதுதான் திருமூலரின் பிண்ட லிங்கப் பாடல்களின் நோக்கம்;
முதல் பாடலில் சிவம், சிதம்பரம், சதாசிவம், திருக்கூத்து ஆகிய நான்கு இரகசியங்களை உடலினை அறிவதன் மூலம் அறியலாம் என்பதைக் கூறி இரண்டாவது பாடலில் மரணத்தைப் புரிந்துக் கொள்வதன் மூலம் எப்படி ஐம்பூதங்களும் சிவம் இருப்பதால் ஒருங்கிணைந்து இயங்குகிறது என்பதை விளக்குகிறார்.
இந்தப் பாடல் சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இரண்டிற்கும் ஆதாரமான தத்துவத்தையும் கூறுகிறது.
உலந்திலர் பின்னும் உளரென நிற்பீர்
நிலந்தரு நீர்தெளி யூனவை செய்யப்
புலந்திரு பூதங்கள் ஐந்தும் ஒன்றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே. 2
உடல் அழிந்த பின்னும் நீங்கள் இருப்பீர்
நிலமும், நீரும் ஆக்கிய ஊன் மட்டுமே நீங்குகிறது
ஒன்றோடு ஒன்று சேராத பூதங்கள் ஐந்தும் ஒன்றாகச் சேர்வது
வல்லமை தரும் தேவராகிய சிவத்தை வந்தனை செய்யவே
உடல் ஏன் அழிகிறது? ஏன் தோன்றுகிறது? என்ற விளக்கம் இந்தப் பாடலில் கூறப்படுகிறது. மரணம் என்பது நீராலும், நிலத்தாலும் ஆன ஸ்தூல உடலை விட்டு உயிர் நீங்குவதே! உலந்தல் என்றால் அழிவு என்று பொருள்; ஆகவே உடல் அழிந்தாலும் நீங்கள் இருக்கத் தான் செய்கிறீர்கள். இந்த ஐந்து பூதங்களும் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இயங்க மாட்டாதவை; ஒன்றிலிருந்து ஒன்று விலகி ஓடும் தன்மை உடையவை. இவை ஐந்தும் ஒன்றாக சேர்த்து இயங்குவதற்கான ஒரேயொரு நோக்கம் உடலிற்குள் எல்லா வல்லமையையும் தரும் தேவராகிய சிவம் உள்ளே இருப்பது, அவரை வணங்கவே!
ஆகவே தனித்த இயல்பின் ஒன்றுடன் ஒன்று சேராத ஐம்பூதங்களும் ஒன்றாக சம நிலையடைந்து உடலை பெறுவது வல்லமை தரும் சிவம் இந்த உடலினுள் இருப்பதாலேயே என்பது பெறப்படுகிறது. அதை உடலில் அறிந்து உணர வேண்டும்.
உண்மையை அறிய விளையும் சாதகன் தனக்கு உடல் எப்படிக் கிடைத்தது என்ற இரகசியத்தை முதலில் அறிய வேண்டும். மேலும் தனக்குள் இருக்கும் ஐம்பூதங்களும் எதனால் ஒத்திசைந்து வேலை செய்கிறது என்பதையும் அறிய வேண்டும். உடலிற்குள் இருக்கும் வல்லமை தரும் தேவராகிய சிவம் இருப்பதாலேயே இவை எல்லாம் ஒன்றிணைந்து வேலை செய்கின்றன.
சிவம் இருப்பதால் மனமும், பிராணனும் அதிலிருந்து கதிர்க்க, அதனால் ஐந்துபூதங்களும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உறுதியான இந்த உடலை உருவாக்குகிறது. இந்த உண்மையைப் புரியாமல் வாசியை எழுப்புகிறேன், பிராணனைக் கட்டுகிறேன் என்று முயற்சிப்பதெல்லாம் அறிவிலித்தனம்! ஆகவே பிண்டத்தில் சிவம் இருப்பதால் நடைபெறும் செயல்கள் அனைத்தையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.
மனித உடலிற்குள் சிவம் வடித்த, செறிந்த – essence and concentrate form – நிலையில் இருக்கிறது என்பதை சாதகன் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த உண்மையை மரணத்தின் மூலம் அறிந்துக் கொள்ளலாம் என்பது இந்தப் பாடலின் சாராம்சம். இறந்த பின்னரும் நாம் இருக்கிறோம் என்பதை யோகத்தின் சூக்ஷ்ம சரீர யாத்திரை மூலம் அனுபவமாக அறியலாம். இந்த சூக்ஷ்ம யாத்திரை செய்ய நில, நீர் பூதங்களின் ஆளுகையிலிருந்து வெளிவரும்படி பிராணனையும், மனத்தினையும் இயக்க வேண்டும். இதை முறையான ஆசானிடம் நேரில் பயில்க!
மேலும் கற்க ஆர்வமுள்ளவர்கள் கேள்விகளால் உரையாடலைத் தொடர்க!