பல சமயங்களில் கருத்தாடல்கள் கருத்தாடல்களாக அன்றி தனிமனித தாக்குதல்களாக உருப்பெறுகிறது. தொகுதியின் சமநிலையினை குழப்புகிறது. தொகுதி குழம்பும் போது அது சரியான திசையா, பிழையான திசையா என்று நிர்ணயிக்க முடியாத நிலையினை நோக்கி நகர்ந்து ஆரோக்கியத்தையும் தரலாம், அழிவையும் தரலாம்! இது ஒரு சக்கர வியூக நிலை!
மகாபாரதத்தில் சிறுவன் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி மாண்டான் என்ற கதை படித்திருப்போம். கதை எதுவாக இருந்தாலும் அதில் உள்ள நீதியினை அறிவதற்காகவே கதை.
இங்கு சக்கரவியூகம் என்பது அலை அலையாக உத்வேகங்களால் மனதில் எழும் எண்ணங்களில் மனிதன் சிக்கி மூழ்கும் நிலை! ஒரு மனிதன் பொதுவாக ஒரு விடயத்தில் இச்சை கொண்டு தனது மனதை ஈடுபடுத்தி எண்ணங்களை உருவாக்கி ஒரு கட்டத்தில் எல்லை மீறி சென்று அந்த எண்ணங்களே அவனுக்கு எமனாகிவிடும் நிலை!
இன்பத்துக்காக சாராயம் குடிப்போம் என்று அடிமையாகி ஈரல் கெட்டு செத்தவன்!
போராடுவோம் என்று புறப்பட்டவன் ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டம் என்பது தீர்வுக்காக என்பதனை மறந்து போராடி இறக்கும் நிலை!
பலரும் தம்மை நிலை நிறுத்துவதற்காக செய்யும் ஒவ்வொரு செயலும் கடைசியில் சக்கரவியூகமாக சூழ்கிறது!
இப்படி அநேகமாக எல்லோருமே எதோ ஒருவிதத்தில் சக்கரவியூகத்தில் மாட்டிகொண்டுதான் இருக்கிறோம்.
இனி விடயத்திற்கு வருவோம், ஒரு விடயம் மீதான கருத்து என்பது மற்றவர்களுக்கு கூறப்படுபவரால் தனது விடயம் சார்ந்த மனகுழப்பமற்ற தெளிவான புரிதலை ஏற்படுத்த முயல்வது. கருத்தை கூறப்பட்டவர் நிலையில் இருந்து கேட்காவிட்டால் புரிதல் என்பது எப்போதும் தவறாகவே இருக்கும். பெரும்பாலும் நாம் கருத்துக்களை கேட்கும்போதும், வாசிக்கும்போதும் எமது கருத்து என்ற ஒரு புள்ளியில் எம்மை அசையாமல் நிறுத்தி விட்டே கேட்க தொடங்குகிறோம். ஆனால் மற்றவர் கருத்து என்பது எமது கருத்துடன் ஒன்றாத ஒரு ஒன்றாகவே எப்போதும் இருக்கும்.
ஒரு பெண் தனக்கு பேஸ்புக்கில் நடந்த உரையாடலை தனது மனவெளிப்பாட்டுடன் பதிய அதன் விளைவு எதிர்கருத்துக்கள், தூஷணைகள், காரசாரமான செல்ல தொகுதி குழப்பத்தை நோக்கி நகர்ந்தது. இங்கு நடந்த சம்பவத்தில் தனது கருத்து என்று கூறும் பகுதி பலரை பலவாறாக சிந்திக்க வைத்தது. ஆக புரிதல் என்பது ஒவ்வொருவரது மனம், அனுபவம் சார்ந்தது. ஒருவனுக்கு ஆரோக்கியம் தரும் இனிப்பு மற்றவனுக்கு நோயினை கூட்டும் காரணியாக அமையும் என்ற உண்மையும், கருத்தினை கூறவருபவர் என்ன கூறவருகிறார் என்பதனை மனஉத்வேகங்கள் இன்றி புரிந்து கொள்ள கூடிய சமநிலையிலுமே ஒரு விடயம் பிரச்சனையா இல்லையா என்பது இருக்கிறது. எப்போதும் எங்குமே பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடவுள் தவிர்ந்த பிரபஞ்ச உண்மை என்று எதுவும் இல்லை, எல்லாம் அது சார்ந்த தொகுதி உண்மைகள்தான், (there is no absolute truth rather than God, all are system related conditional truths), ஆக ஒருவர் கூறும் கருத்துக்களை அவரது தொகுதி சார்ந்த உண்மைகளாக கொள்ளப்பட வேண்டுமே அன்றி பொதுமைப்படுத்த படுத்தப்பட்ட ஒன்றாக எடுத்துகொண்டு விவாதிக்க முயன்றால் அது ஆரோக்கியமான கருத்தாடலாக அமையாது என்பதையும், கருத்தாடல் பல திசைகளை நோக்கி பயணிக்க தொடங்கும் என்பதனையும் இந்த சம்பவம் வெளிப்படுத்தியது. இது கருத்தினை பெறுபவர் மனம் எத்தகைய உணர்ச்சியுடன் அணுகுகிறது என்பதையும், மற்றவர் என்ன கூறவருகிறார் என்பதனையும் புரிந்து கொள்வதை தடுக்கிறது.
இதன் இரண்டாவது பகுதி கருத்தினை கூறவருபவர் தனது கருத்தின் மூலம் மற்றவர் மனதில் புரிதலையா, குழப்பத்தையா ஏற்படுத்துகிறார் என்பது பற்றிய தெளிவு. எப்போதும் கருத்தாடல்கள் என்பது தொகுதியின் ஒத்திசைவிற்காகவா (to lead to harmony), அல்லது குழப்புவதற்கானதா (to lead to Chaos) என்ற நோக்கம் சார்ந்தது, நான் பெற்ற அனுபவத்தை சமூகத்தின் நன்மை கருதி, ஒத்திசைவிற்காக பயன்படுத்தும் போது அது பலர் மத்தியில் புரிதல்களை மேம்படுத்தும், அவ்வாறின்றி உணர்ச்சி வசப்பட்டு கூறப்படும்போது நல்ல கருத்தாக இருந்தாலும் கருத்தினை விட்டு அவர்களது உணர்ச்சி வெளிபாடே மிகுந்து நிற்கும். இப்படியான உணர்ச்சி வெளிப்பாடு மற்றவர் மனதில் அதேபோன்ற உணர்ச்சியினையும் ஏற்படுத்தலாம், அல்லாமல் எதிர்ப்பு உணர்ச்சியினையும் ஏற்படுத்தலாம். இந்த தாக்க சங்கிலியின் விளைவை கருத்து கூறுபவரால் எல்லா வேளைகளிலும் கட்டுப்படுத்த முடியாது. இதனை கிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்றோ பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக கொள்ளலாம். கருத்து கூறவருபவரின் நோக்கம் அறிவுசார் புரிதலின் வெளிப்பாடா, மனம் சார் உணர்ச்சியின் வெளிப்பாடா என்பது மிக முக்கியம்.
அறிவுசார் புரிதலின் வெளிப்பாடு குழப்பத்தை
ஏற்படுத்துவதில்லை,
உதாரணமாக உலக சரித்திரத்தை ஆராய்ந்து மூலதனத்தை பகுத்து கோட்பாடு எழுதிய காரல்மார்க்ஸ் குழப்பவாதியில்லை, அவர் எழுதியது இதுதான் என்று உணர்ச்சியுடன் பரப்பபட்ட சித்தாத்தம் உலக சமநிலையினை குழப்பியது, தொகுதியை புதிய திசை நோக்கி திருப்பியது,
வாழ்க்கையின் உண்மை அன்பு என்று உணர்ந்த இயேசு உரைத்த உண்மைகள் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை, இதுதான் உண்மை என்று உரைக்கப்பட்ட மதம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இப்படி அறிவால் உணர்தலும், புரிதலும் தெளிவைதரும், ஆனால் மனத்தால் இதுதான் உண்மை என்று நிறுவ முற்படும் விடயங்கள் உத்வேகத்தை எழுப்பி குழப்பத்தையே தரும்.
ஆகவே கருத்தாடலில் மனம் எனும் காரணி அறிவுடனா, உணர்ச்சிகளுடனா சேர்ந்துள்ளது என்பதை பொறுத்து தொகுதி சமநிலை அடையுமா, குழப்ப நிலை அடையுமா என்பது தங்கியுள்ளது