நோக்கமும் தெளிவும்: ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்

நாம் அறிவித்த ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை  கற்கைநெறி வகுப்புகள் வெகு வரவேற்பு பெற்றுள்ளது என்பதனை பதிவு செய்த அன்பர்களின் எண்ணிக்கை காட்டுகிறது.  

இந்த வேளையில் இதில் இணைந்து கொள்பவர்களும், விமர்சிப்பவர்களும், எம்மீது கருத்து தாக்குதல் நடாத்துபவர்களுக்கும் ஓர் சில தெளிவுகளையும், நோக்கங்களையும் தருவது எமது கடமையாகிறது. 
 1. கடந்த பலவருடங்களாக நாம் ஆத்ம, யோக, ஞான கருத்துக்களை  எழுதி வருவதன் நோக்கம் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சித்தர்கள் வாக்குப்படி நாம் பெற்ற அறிவினை பகிர்ந்து கொள்வது என்ற ஒரு நோக்கம் மட்டுமே. இதுதவிர இதனை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம், கூட்டம் சேர்க்கலாம் என்பது இல்லை. ஏனெனில் இதற்கான தேவை இல்லாதபடி குருநாதரும் தேவியும் எம்மை நல்ல நிலையில் வைத்துள்ளார்கள். 
 2. இந்த அறிவு பகிர்வில் எதுவித எதிர்பார்ப்பும் இருக்க கூடாது என்பது எமது குருநாதரின் விருப்பம், எனினும் ஒரு சில நிலைகளில் யாராவது கருத்து தெரிவிக்க மாட்டார்களா என எண்ணி கேட்டிருக்கிறோம். எனினும் அந்த எண்ணங்களும் குருநாதரால் நீக்கப்படிருக்கிறது. 
 3. காயத்ரி பற்றி அதிகம் எழுதுவதை பல சாராரும் பலவிதமாக விமர்சித்திருக்கிறார்கள்.  ஒரு சிலர் பிராமணர் மட்டும்தான் சொல்லவேண்டும், பெண்கள் சொல்லக்கூடாது, போன்ற பல்வேறு பிற்போக்கான கருத்துக்கள முன்வைக்கப்பட்டன. எனினும் இவை வெறும் மனக்குழப்பமே அன்றி உண்மை இல்லை என்பதை அனுபவ பூர்வமாகவும், தெளிவாகவும் பதிவித்திருக்கிறோம். 
 4. இது இவ்வாறு இருக்க இன்னும் பலர் ஆரிய திராவிட சண்டையாக சித்தர்களுக்கும் காயத்ரியிற்கும் தொடர்பு  இல்லை, காயத்ரி தமிழில் இல்லை அது எப்படி எமக்கு உகந்த மந்திரமாக இருக்க முடியும் என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். 
 5. இப்படியான கருத்துக்களை இவ்வாறு விவாதித்து எம்மை நிலை நிறுத்தி இவற்றை பரப்ப வேண்டும் என்ற கடப்பாடு எமக்கு இல்லை. நாம் அனுபவமாக அறிந்த. கற்ற பயிற்சி செய்து பயன்பெற்ற விடயங்களை அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் பகிர்கிறோம். அவற்றை வாசித்து, உங்கள் அறிவால் துணிந்து பின்பற்றுவதா  வேண்டாமா என்பது உங்களுடைய முடிவு. 
 6. ஏனெனில் நாம் இறைவன் தந்த ஆன்ம சுதந்திரத்தை நீங்கள் முழுமையாக் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்.   
 7. மேலும் எவரையும் எமது கருத்துக்களால், அறிவால், சக்தியால் அடிமைப்படுத்தி அவர்கள் வளர்ச்சியை தடை செய்யாமல் அவர்களது இயல்பான பரிணாம வளர்ச்சிக்கு துணையாக எம்மால் எப்படி உதவ முடியும் என்பதே எமது குறிக்கோள். 
 8. இதன்படி இங்கு நாம் அறிவித்த   "ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்"  யார் உங்கள் அறிவால் தெளிந்த முடிபு செய்து காயத்ரி மந்திரத்தை புரிந்து கொண்டு, பயனை பெற விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரும் இணைந்து கொண்டு கற்கலாம். 
 9. இந்த கற்கை நெறியினை உங்களுக்கு ஒழுங்கு படுத்த எமது மிகுந்த வேலைபளுவிற்கு மத்தியில் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது, எனினும் எமது நேரத்தை உங்களுக்காக எதுவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தருகிறோம். அதனால்தான் இந்த கற்கை நெறிக்கு எதுவித கட்டணம் என அறிவிக்க படவில்லை. 
 10. வித்தையினை கற்பதற்கு சிரத்தை, மனப்பண்புதான் அவசியமே அன்றி பணத்தால் வாங்க முடியாது.  ஆகவே நீங்கள் அந்த பண்பினை பின்பற்றாமல் இந்த கற்கையினை தொடரமுடியாதபடி வடிவமைத்துள்ளோம். 
 11. மேலும் காயத்ரி சாதனை என்பது தெய்வீக பண்புகளை பெறுவதற்குரிய சாதனை, குறித்த அடிப்படை தெய்வ பண்புகளை பெறாமல் இரசவாதம், மருத்துவம், மாந்திரீகம் என்பவற்றில் மனதை பற்றி அலைந்தால் எத்தனை காலமானாலும் ரிஷிகள் கூறிய உயர்ந்த நிலையினை பெறமுடியாது. 
 12. பெரும்பாலானவர்கள் தமது பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு, அதீத சித்திகளை பெறுவது, போன்ற பலவித இலக்குகளை மனதில் உருவாக்கி கொண்டு ஒருவித அகங்காரத்துடன் தெய்வ சாதனைகளை தொடங்கிறார்கள்.  நான் அந்த சித்தியை அடைந்துவிட்டேன், இந்த சித்தியை அடைந்து விட்டேன், எனக்கு அந்த வித்தை தெரியும், இந்த வித்தை தெரியும் என்று ஒருவித மனதின் அகங்கார விளையாட்டில் சிக்கி விடுகிறார்கள். இதனாலேயே பக்தியும், சரணாகதியும், பலனை எதிர்பாராமல் கர்மம் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கும் தேவைப்படுகிறது. 
 13. ஏனென்னில் எம்மை விட இந்த பிரபஞ்ச சக்தி மிகப்பெரியது, அதனுடன் இயைந்து சென்றால் அதனை நாம் பயன்படுத்தி கொள்ளலாம், இல்லாமல் மேற்கூறியது போல் அகங்காரமடைய ஆரம்பித்தால் தெய்வ சக்தி எம்மில் செயற்படுவது தடைபட ஆரம்பிக்கும். 
 14. இப்படி குருபக்தி, சரணாகதி என்றவுடன் பலரும் குருதேவா, நீங்கள் எல்லாம் அறிந்தவர், வல்லவர் என கற்பிப்பவரை புகழ்பாட ஆரம்பித்து மீண்டும் இன்னொரு வழியில் இந்த வலையில் சிக்கிக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். 
 15. ஆக இந்த கற்கையில் மிக தெளிவான புரிதல் நீங்கள் அறிய வேண்டியது, நாம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு உங்களுக்கு மோட்சம் தரவந்த கடவுள் இல்லை என்பது. நாம் அறிந்தவற்றை உங்களுக்கு ஓர் ஒழுங்குமுறையில் நெறிப்படுத்தி தருகிறோம், அதன் படி உங்கள் முயற்சியினை செய்து நீங்கள் நிலையினை அடைவது உங்கள் பொறுப்பு. 
 16. சுருக்கமாக ரிஷிகளின் வழிநின்று அன்பினை, தெய்வ குணத்தினை மனித மனத்தில் விதைப்பது நோக்கம்! 
அன்புடன் 

Comments

 1. நெத்தியடி....அனைத்து சந்தேகங்களும் தூள் தூள்!

  ReplyDelete
 2. ஐயா,
  நன்றி
  வி.ரவீந்திரன்.

  ReplyDelete

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு