மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை


திருமணம் என்பது இரு ஆன்மாக்களின் இணைவு, திருமணத்தின் மூலம் இருவேறு விருப்பம், உணர்வு கொண்ட இருவர் தமது சொந்த நோக்கங்களை தியாகம் செய்து புதிய உறுதிமொழியுடன் ஒருவருக்கு ஒருவர் இணையாக தம்மை உருவாக்கி கொண்டு இன்பமுடன் வாழும் வழி! ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த உலகில் தனித்திறமைகளுடன், விருப்பு வெறுப்புகளுடன் அதே வேலை சில குறைகளுடன் பிறந்திருக்கின்றனர். அவர்கள் திருமணம் எனும் இணைவின் மூலம் தமது திறமைகளை இணைத்து, குறைகளை ஒருவர் ஆற்றலில் இருந்து மற்றொருவர் மூலம் நிவர்த்தித்து இன்பமாக வாழும் செயல் முறையே திருமணம். இதன் மூலம் குறித்த ஆணும், பெண்ணும் முழுமையான ஆளுமையினை பெறுகின்றனர். இந்தக் காரணத்திற்காக மனித குலத்திற்கு திருமணம் என்ற ஒரு பொறிமுறை தேவையாக இருக்கிறது. இதன் மூலம் இரண்டு ஆன்மாக்களின் மனம், உடல், உணர்வு இணைந்து தமது வாழ்விலு, தம்மை சூழ உள்ள குடும்ப, சமூகத்திலும் மன, பௌதீக, ஆன்மீக இன்பங்களை உருவாக்குவதே திருமணத்தின் இலக்கு!

இத்தகைய திருமண வாழ்க்கையிற்கு கணவனும், மனைவியும் தம்முடைய எண்ணங்கள், செய்கைகள், நோக்கங்களில் சிறந்த தெளிவுகளை கொண்டிருக்க வேண்டும். இந்த தெளிவிற்கு மனதிற்கு கொடுக்க வேண்டிய உணவினை கீழே தந்திருக்கிறோம்,

திருமணத்தில் கணவனின் உறுதி மொழி!
 1. இக்கணம் முதல் எனது தர்மபத்தினியை எனதொரு பாகமாக, எனது மனதையும் உணர்வையும் மனைவியின் மனம், உணர்வுடன் இணைத்து புதியதொரு உயிர்ப்புள்ள ஆன்மாவாக மாறுகிறேன்! எனது சொந்த உடலை பாதுகாப்பது போல் எனது மனைவியினை பாதுகாப்பேன்!
 2. மனமகிழ்ச்சியுடன் குடும்பத்தின் நிதி முகாமைத்துவத்துவ பொறுப்பை எனது மனைவியிடன் ஒப்படைத்து, குடும்பத்தின் எந்த ஒரு முக்கியமான  முடிவிலும் அவரது அபிப்பிராயத்தினை மதித்து நடப்பேன் என உறுதி கூறிகிறேன்!
 3. எக்காலத்திலும் மனைவிக்கு எதிராக வெறுப்பையோ, எதிர்ப்பையோ எனது மனதில் உண்டாக்க மாட்டேன், அவளது தோற்றம் சார்ந்து, உடல் நலம், அழகு, சுபாவம், நோய், அறியாமல் செய்த தவறு தொடர்பில் அதிருப்தியை தெரிவிக்க மாட்டேன்! எப்போது அன்புடன் பாசத்துடன் நல்லுறவுடன் அவளது குறைகளில் இருந்து மீண்டு வர உதவி செய்வேன்!
 4. எனது மனைவிக்கு மிக நெருங்கிய நண்பனாக எப்போதும் இருப்பேன்! எவ்வளவு அதிகமாக நேசிக்கலாமோ அவ்வளது அதிகம் நேசிப்பேன்! இந்த உறுதியை வார்த்தையிலும் ஆத்மார்த்தமாகவும் நடைமுறைப்படுத்துவேன்!
 5. எனது மனைவி எப்படி நடக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேனோ அப்படி நானும் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன். மனைவியை குடும்பத்தை பாதிக்கும் எந்த தவறான ஒழுக்கத்திலும் நான் ஈடுபடமாட்டேன்.
 6. குடும்ப முடிவுகளில் எனது மனைவியின் கருத்துக்களை முதன்மையாக  நடப்பேன், எனது மனைவியுடன் கலந்து ஆலோசிக்கும் குடும்ப நிதி திட்டத்தின் மூலம் எனது குடும்பம் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை உருவாக்குவேன்!
 7. எனது வலிமையினையும், செல்வத்தையும் கொண்டும் இன்பமாகவும், அமைதியாகவும், ஆனந்தமாகவும், வளமாகவும், பாதுகாப்பாகவும் எனது மனைவி வாழ்வதற்கு வழி ஏற்படுத்துவேன்!
 8. எனது சொந்த நடத்தை, மனப்பாங்குகளுடன்  மனைவியின் பிரச்சனைகள், தவறுகளை அணுகாமல் அவசரப்படாமல், நிதானத்துடன் அமைதியாக அணுகி தீர்வு காண்பேன். எப்போதும் எனது மனைவியை பிறர் முன்னிலையில் அவமதிக்கவோ, வெறுப்பு காட்டவோ, குற்றம் சொல்லவோமாட்டேன்.
 9. எனது மனைவி ஏதாவது ஒரு காரணத்தினால் தனது கடமைகளில் இருந்து விலகி, உறுதியற்று  எனது விருப்பத்திற்குமாறாகவோ நடக்கும்போதும் நான் ஒருபோதும் எனது பொறுப்புகளில் இருந்து விலகாமல் எனது மனைவியிற்கு தரக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பை தருவேன்!
 10. மனைவி பூவுலகில் என்னை கவனிக்கும் இறைவனின் சக்தி வடிவம். எனது மனைவியுடன் பேசும்போது எப்போதும் இனிமையாகவும், அன்புடனும் பேசுவேன். எனது நடத்தைகள் கருணை, அன்புடன் கூடியதாக இருக்கும், எப்போதும் எனது உறவு அவளுடன் அதிக நம்பிக்கையுடன் கூடியதாக இருக்கும்!  


திருமணத்தில் மனைவியின் உறுதிமொழி
 1. கணவனின் வாழ்க்கைமுறையுடன் எனது வாழ்க்கையினை ஒன்றாக இணைக்கிறேன், மனித குலத்தின் புதிய உயிரை உருவாக்கும் தாய்மை ஆற்றலுடைய நான் கணவரின் சரிபாதியாக நான் விளங்குவேன்.
 2. எனது கணவரின் குடும்ப உறவினர்கள், நண்பர்கள், அவரை நாடி வருபவர்கள் அனைவரையும் அன்புடன் ஆதரிபேன். அவர்களுடன் இனிமையாகவும் திறந்த மனதுடனும் நடந்து கொள்வேன்!
 3. எப்போதும் சோம்பலுடன் இருக்கமாட்டேன், உற்சாகமாய் குடும்ப காரியங்களில் ஈடுபடுவேன். இந்தவகையில் எனது கணவரின் வேளைகளில் ஒத்துழைப்புடன் நடந்து அவரது முன்னேற்றத்திலும் குடும்ப முன்னேற்றத்திலும் பங்களிப்பேன்.
 4. எனது கணவருக்கு நம்பிக்கையானவளாக எப்போதும் இருப்பேன். மரியாதையுடன் எப்போதும் கணவருக்கு ஆதரவாக இருப்பேன். எப்போதும் கணவருடன் ஆணவமாக நடந்து கொள்ளமாட்டேன். எந்த விடயங்களிலும் அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் அமைதியுடன் செவிமடுப்பேன். இதை எனது வார்த்தையிலும், ஆத்மார்த்தமாகவும் கடைப்பிடிப்பேன்.
 5. எனது பண்புகளை தன்னலமற்றதாகவும், தூய்மையானதாகவும், அமைதியானதாகவும், இனிமையானதாகவும் வளர்த்துக்கொள்வேன். தீய குணங்களான பொறாமை, ஒருவரை துன்பப்படும்படி பேசுதல், குறைகூறுதல் போன்றவை என்னும் வளர ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இந்த வகையில் நான் எப்போதும் இன்பமுடையவளாக இருப்பேன்!
 6. குடும்ப செலவுகளை எப்போதும் வரவினை விட குறைவானதாக வைத்துக்கொள்வேன். ஊதாரித்தன செலவுகளை தவிர்த்துக்கொள்வேன். கணவரது வருமானம் குறையும் நேரங்களில், உடலளவில் ஆரோக்கிய குறைவு ஏற்படுப்போதும் இந்த சேமிப்பினை கொண்டு குடும்ப வாழ்க்கை பாதிக்காமல் பாதுக்காப்பேன்.
 7. எனது கணவரை கடவுளாக மதிப்பேன். எனது வாழ்நாள் துணையாக இருப்பவர், அவரை மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் வைத்திருப்பதற்கு என்னால் இயன்ற அளவு உதவியாக இருப்பேன். எனது கணவரை ஒருபோதும் பிறர் முன்னிலையில் வெறுக்கவோ, அவமானப்படுத்தவோ மாட்டேன்.
 8. எனது கணவரின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களை எப்போது அன்புடன் நடத்துவேன். அவர்கள் அனைவரும் எனது அன்புக்கும் பாத்திரமானவர்கள்.
 9. வாழ்வில் எல்லாத்தருணங்களிலும் குடும்பத்திற்கும், கணவருக்குமான எனது கடமைகளில் எதுவித குறைவும் இன்று நடப்பேன் என உறுதி கூறுகிறேன்.  

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு