இன்று காதலர் தினம்! காதலிற்கு தினம் வகுத்து அதை உலகறியச் செய்தல் வேண்டும் என்கிறது மேற்கு நாகரீகம். இப்படி பிரகடனப்படுத்தப்பட்ட மற்றோருக்கு தெரியப்படுத்தப்பட்ட காதலை விட தனது அகத்தினை வளப்படுத்தும் நுண் உணர்வுகளை பெற்று இன்பம் துய்க்கும் முறையினை வகுத்தவன் தமிழன்,
ஒரு ஆணும் பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அகத்திணை என தமிழர் வாழ்வியலில் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.
அகம் என்பது உள்ளம், திணை என்பது ஒழுக்கம். இந்த இலக்கியங்கள் குறித்த நிலையில் உள்ள ஆணிற்கும் பெண்ணிற்கும் தாம் அக ஒழுக்கத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என்று அறிந்து தம்மை மேம்படுத்த உதவும்.
தொல்காப்பியம் அகத்திணையை ஏழாக வகுத்து இலக்கணம் கூறுகிறது;
1. கைக்கிளை : இது ஒருதலைக்காதல், உதாரணம் காமமும் காதலும் மேலிட்ட ஆண் அதை ஏற்க பக்குவம் இல்லாத பெண்ணை தொல்லைப்படுத்தல். சிறுமையான உறவு அல்லது பெருமையில்லா உறவு என்பது கைக்கிளையின் பொருள்.
2. முல்லைத் திணை : தன்னை விட்டு பிரிந்த தலைவனைப்பற்றி தவறாக எண்ணாமல், வருந்தாமல் தனது தினசரி கடமைகளை செய்தவண்ணம் தலைவன் வரவிற்காய் காத்திருக்கும் நிலை.
3. குறிஞ்சித் திணை : தலைவன் தலைவியை அவளது வீட்டார் அறியாமல் காதல் செய்யும் நிலை, இங்கு இருவரும் மனமொத்த நிலை வீட்டாரிற்கு தெரியாது.
4. பாலைத் திணை : போரிலும், செல்வம் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்த தலைவன் தலைவியை பிரிதலும், அவள் குடும்பம் அறியாமல் அழைத்துச் சென்று வாழலும் பாலைத் திணை.
5. மருதத் திணை : காமக் கிழத்தி, காதற் பரத்தை, சேரிப் பரத்தை என இவர்களைச் சந்திக்க வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். ‘புறத்தொழுக்கம்’ எனப்படும் இத்தீய ஒழுக்கத்தில் ஈடுபட்டுத் திரும்பி வரும் தலைவனிடம் தலைவி பொய்க் கோபம் கொள்வாள். இதுவே ஊடல் எனப்படும். இல்லம் வர விரும்பும் தலைவனுக்காகத் தூது வரும் பாணன் முதலியோரிடமும் சினம் கொண்டு பேசுவாள்.
6. நெய்தல் திணை : பாலைத் திணைக்குக் கூறியதுபோல ஏதேனும் ஒரு காரணத்தின் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான். அவன் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற காலம் வந்தவுடனோ வருவதற்கு முன்போ தலைவி, அக்காலம் வந்ததாகவும் தலைவன் வரவில்லை என்று வருந்துவது இரங்கல் ஆகும்.
7. பெருந்திணை : காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம்.
இன்றைய உளவியலை மிஞ்சும் அறிவு தமிழனின் அகத்திணை; ஒருவன் அல்லது ஒருத்தி தான் காதல் – காம வாழ்க்கையில் எந்த நிலையில் இருக்கிறோம் என தம்மை அகத்தாய்வு செய்து சரியான ஒழுக்க நெறியில் ஈடுபட அகத்திணை உதவுகிறது.
ஆதலால் தமிழ் கற்று அகத்திணையறிந்து காதல் செய்வீர்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.