வாதுக்குறி வைத்தியரே சொல்லக்கேளீர்
வாகாக்கண் மூன்று தலைகள் நான்கு
நீதமுடன் முகங்களைந்து கைகளாறு
நிலை சரீரங்களெட்டு கால்கள் பத்து
வீதமிதன் பயனறிந்தார் வியாதி தீர்ப்பார்
விதமறியார் மானிடரைப் பழியே செய்வார்
செதமாஞ்ச் செய்மருந்து பலித்திடாது
செத்தபின்பு தீ நரகிற் சேருவாரே
(அகத்தியர் வைத்திய சாரம் - பாடல் எண்:05)
இந்தப் பாடலில் பொருள் என்னவென்றால் நோய்கள் எப்படி கிளைவிடும் என்பதைக் கேளும் வைத்தியரே, வாது என்றால் மரத்தின் கிளை என்று பொருள். வாதுக்குறி என்றால் எப்படி நோய் கிளைவிடும் வைத்தியரே என்பதே வாதுக்குறி வைத்தியரே சொல்லக்கேளீர் என்ற வார்த்தையின் பொருள்!
அடுத்து நோயினை ஒரு உடல் என்று உருவகித்தால் அதனுடைய அங்கங்கள் எவை என்பது பற்றிய விளக்கம்!
கண்கள் காண்பதற்கு உரியது! ஒரு உடலில் இருக்கும் நோயினைக் கண்டுகொள்ள மூன்று கண்களைப் பற்றி தெளிவாக வைத்தியன் அறிந்திருக்க வேண்டும்!
எல்லாப் பிரச்சனைகளும் சேரும் இடம் தலை, நோய்கள் சேரும் தலைகள் நான்காகும்.
அகத்தின் அழகு முகத்திற் தெரியும், அது போல் நோயின் நிலைகள் தெரியும் முகங்கள் ஐந்தாகும்.
நாம் எதைச் செய்வதற்கும் கைகள் தேவை, அது போல் நோய் செயற்படும் கைகள் ஆறு, இதைப் பற்றி வைத்தியர் அறிய வேண்டும்.
நோய் சரீரத்தில் நிலை கொண்டு வெளிப்படும் இடம் எட்டு! இந்த எட்டு நிலைகளையும் பரிசோதிக்க வேண்டும்.
நோய் ஸ்திரம் கொள்ள இருக்கும் கால்கள் பத்து! இதையும் அறிய வேண்டும்.
இப்படி நோயின் கண்கள், தலைகள், முகங்கள், கைகள், நிலைகள், கால்கள் ஆகிய ஆறு அங்களையும் அறிந்து வைத்தியம் செய்தால் மட்டுமே வைத்தியம் பலிக்கும்!
இன்று பலரும் மூலிகை வைத்தியம், இயற்கை வைத்தியம் என்று தாவரத்தை மாத்திரம் நம்பி செயற்படும் என்று பரிந்துரை செய்கிறார்கள்.
ஆனால் சித்த மருத்துவம் ஒரு முழுமையான நோயைப் பற்றிய systemic analysis இனைக் கூறுகிறது.
இதற்கு அடுத்த பாடலில் இந்த ஆறு அங்கங்களும் எவை என்பது பற்றி விளக்கமாகக் கூறுகிறார்.
மருந்து சுத்தி குணம் நிகண்டு மூன்றாம்
வாத பித்தசிலேட்டும தொந்தந்தலைகள் நான் காம்
அருந்தும் அறுசுவையறிதல் கைகளாறாம்
அஷ்டவிதக்குறியறிதல் சரீரமெட்டாம்
இருந்த தச நாடி தசவாயுவிரண்டும்
இதமாகப் பார்த்திடில் கால்கள் பத்தாம்
பொருந்தியதோர் பிணட நிலை முகங்களைந்தாம்
பொதிகைமலை அகஸ்தியனார் புகன்றவாறே
(அகத்தியர் வைத்திய சாரம் - பாடல் எண்:05)
மருந்து, அதைச் சுத்தி செய்தபின்னர் அதன் குணம் (குண, வீரிய, விபாகம்), ஒரு மூலிகைக்கு பல பெயர் இருந்தால் அதன் விபரம் அறியக் கூடிய நிகண்டு! இந்த மூன்றுமே வைத்தியரின் கண்கள்!
நோய் என்பது முத்தோஷங்களின் சம நிலை! வாதம், பித்தம், சிலேத்துமம் இது மூன்றும் எப்படி உடலில் இயங்குகிறது, சம நிலை கெடுகிறது என்பது பற்றி வைத்தியன் தெளிவாக அறிந்து இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று கலந்து தொந்தித்தால் எப்படி செயல்புரியும் என்று அறிந்தால் நோயின் தலைகளைக் கண்டுபிடிக்கலாம்!
நோய் செயற்படுவதை உணவின் சுவை மாறுபாட்டால் அறியலாம், ஆகவே அறுசுவையும் நோயாளிக்கு எப்படி மாறிச் சுவைக்கிறது என்பதை அறிந்தாலும் நோயின் தோஷத்தின் குழப்பத்தை அறியலாம்.
நோய் சென்று நிற்கும் இடங்கள் எட்டு, அவை நாடி, ஸ்பரிசம், நா, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம். இந்த எட்டின் நிலைகளைப் பரீட்சித்தால் நோயின் நிலை என்னவென்று அறியலாம்!
நோயோ, அன்னாதி உணவோ, மருந்தோ உடலிற்குள் நடக்கும் கால்கள் தசப்பிராணனும், அவை சஞ்சரிக்கும் தச நாடிகளும் இவற்றின் செயற்பாட்டினை அறிந்திருக்க வேண்டும்.
இவையெல்லாம் பொருந்தி பிண்டமாகிய ஞானேந்திரியம், கர்மேந்திரியம் என்ற ஐந்திலும் வெளிப்படுவது நோயின் உக்கிரத்தை (அழகைக்) காட்டும் முகங்கள் ஐந்தாம்!
இதுவே பொதிகைமலை அகஸ்தியனார் வைத்தியர்களுக்கு கூறிய அறிவுரை வைத்தியரே!
இவற்றைத் தெரியாமல் எவருக்காவது வைத்தியம் செய்கிறேன் என்று மூலிகைகளோ, மருந்துகளோ தருபவன் மானிடரிற்கு இன்னும் நோயைக் கூட்டும் பழியைச் செய்பவன்! செய்யும் மருந்தும் பலித்திடாது! செத்த பின்பு தீய நரகத்தில் சேர்வான்!
இந்தப் பாடல்கள் இரண்டையும் படித்துப் பொருள் காணவேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.