ஆண் பெண் உறவு என்பது இயல்பானது, உலகம் இயங்குவதற்கும், நல்ல நோக்கங்களுக்கும் அத்தியாவசியமானது. இந்த உறவு உலகம் தோற்றம்பெற்ற நாளிலிருந்து இருக்கும் ஒன்றாக இருக்கும் அதேவேளை அழிவுவரை இருக்கப்போகும் ஒன்றாகவும் இருக்கப்போகிறது. இது மனித சமூகத்தில் எல்லா வயது வந்த ஆண் பெண்களால் திருமணம் என்ற கட்டமைப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சமீபகாலமாக பலரது திருமண வாழ்வில் குழப்பங்களும், முறிவுகளும் நிறைந்த ஒன்றாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதன் விளைவாக ஆணும் பெண்ணும் தமது துணைகளில் திருப்தி அற்றவர்களாகவும், இன்பமற்றவர்களாகவும் சிதைவுற்று மாறிக்கொண்டு வருகிறார்கள். இந்த சிதைவுகளும், திருப்தியற்ற தன்மைகளும் பெரும் சுமைகளாக மாறிவிடுவதால் திருமண அமைப்பு தவறானது என்று கூறிவருகிறார்கள். இத்தகைய எண்ணங்களால் திருமணத்தின் அடிப்படை விதிகள் மீறப்பட்டு உடைக்கப்பட்டு விடுகின்றன. பலர் பொறுப்புகளை ஏற்க முடியாத கையாலாகத்தனத்தாலும், ஏமாற்றப்பட்ட பட்ட மத நம்பிக்கைகளாலும் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.
இடைக்காலத்தில் தான் தோன்றித்தனமாக தோன்றிய சுய பிரகடன தகுதியற்ற, சுய நலம் வாய்ந்த அடிமைகளை உருவாக்கும் சமயத்தலைவர்கள் புதுவித கருத்துக்களை சமூகத்தில் விதித்தனர். திருமணம் செய்து கொள்வது ஒருவனை பலவீனப்படுத்தும் தாழ்மையான செயல், அது ஒருவனை நரகத்திற்கு செலுத்தும் எனவும் ஆகவே எல்லாவித குடும்ப பொறுப்புகளையும் விட்டுவிட்டு சொர்க்கத்தை தேடுங்கள் எனவும் போதிக்கப்பட்டது. இந்த போதனை வலுப்பெற்றதால் இன்று பலரும் ஆன்மீகம் என்ற பெயரில் என்ன செய்வது என்று தெரியாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் விரக்தியில் அலைகிறார்கள்.
இந்த சிந்தனை முறையே முற்றிலும் தவறானது. நிச்சயமாக எது உயர்ந்த ஆன்மீக நிலையாக சன்னியாசத்தால் அடைய முடியுமோ அந்த நிலை குடும்ப வாழ்வில் இருந்து அடையக்கூடியது. திருமண வாழ்க்கை என்பது இயல்பானது, எளிமையானது, முழுமையான யோக சாதனையின் வடிவம் அது. திருமணத்தின் அனைத்து விதிகளும் தெளிவாக விளங்கினால், அதனை தவறாமல் பின்பற்றினால் ஒருவன் மிக உயர்ந்த ஆன்மீக நிலையையும், ஞானத்தையும், சொர்க்கமயமான இன்ப வாழ்வையும் அடைவான் என்பதில் எதுவித ஐயமுமில்லை. இந்த கட்டுரைத்தொடரின் நோக்கம் எமது முன்னோர்களான ரிஷிகள் எப்படி ஆண் பெண் உறவுகளை தமது முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினார்கள் என்பதனை இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்கூறுவதாகும்.
குடும்ப வாழ்வின் அவசியம்
*****************************************************************************************
யோகம் என்ற சொல் இணைவதற்கு அல்லது ஒன்று சேர்வதற்கு என்ற அடியைக் கொண்ட்து. ஆணோ பெண்ணோ ஒவ்வொரு மனிதனும் தனது இயல்பான தனித்த நிலையில் பூரணமற்றவன். இந்த பூரணமற்ற தன்மையை நிரப்புவதற்கு அவன் இன்னொரு தகுதிவாய்ந்த சக்தியுடன் கைகோர்த்து நிரப்ப வேண்டியுள்ளது. இப்படி இணைவு ஏற்பட்டால் அவனது சக்திவளர்ச்சி குறை நிலையில் இருந்து பூரணத்துவத்தை நோக்கி துரிதமாக வளரத்தொடங்குகிறது. அபூரணத்தில் இருந்து பூரணமாதல்; இதுவே யோகத்தின் நோக்கம்.
குறைந்த்து 84 வகை யோகங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது; ஹத யோகம், ராஜ யோகம், ஜப யோகம், லய யோகம், தாந்திர யோகம், பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம், ஸ்வர யோகம், ரிஜு யோகம், மஹா யோகம், குணலினி யோகம், சமத்துவ யோகம், புத்தி யோகம், பிராண யோகம், தியான யோகம், சாங்கிய யோகம், ஜட யோகம், சூரிய யோகம், சந்திர யோகம், சஹஜ யோகம், பிரணவ யோகம், நித்ய யோகம் என்பவை இவற்றில் சில. இது தவிர 700 க்கும் மேற்பட்ட சிறிய பிரபலமற்ற யோக முறைகள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றினதும் சாதனா முறைகளும், பயிற்சிகளும் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்று மாறுபட்டு காணப்படுகின்றன. எத்தகைய வேறுபாடு இருந்தாலும் இவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்றே! அந்த நோக்கம் பூரணமற்ற தன்மையில் இருந்து பூரணத்துவத்தினை நோக்கி பயணித்தல், அறியாமையில் இருந்து அறிவிற்கு, இருளில் இருந்து ஒளியிற்கு, இறப்பிலிருந்து அமரத்துவத்திற்கு. யோகம் என்பது எல்லைக்குட்பட்ட ஜீவாத்மாவை எல்லையற்ற பரமாத்மாவாக விரிவடையச் செய்யும் பயிற்சி. யோகம் என்று போதிக்கப்படும் அனைத்தும் இந்த இலக்கினையே வெவ்வேறு வழிமுறைகளில் போதிக்கின்றது.
ஒரு இட்த்தினை அடைவதற்கு பல்வேறு திசைகளில் இருந்து பல்வேறு பாதைகள் இருப்பது போல் ஆன்மாவை அறியும் ஞானத்திற்கும் பல பாதைகள் காணப்படுகிறது. ஒருவன் பசிக்கும்போது அவனது பழக்கத்திற்கேற்றவகையில் பாண், சோறு, இனிப்பு, இறைச்சி என்ற ஏதாவது ஒன்றை உண்டு பசியை தீர்த்துக்கொள்வான். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவை அனுபவத்தை உண்பவனுக்கு தந்தாலும் இறுதியாக அது அடையும் இலக்கு ஒன்று, அது பசி தீர்தல் என்ற இலக்கு. இதுபோன்றே எல்ல யோக முறைகளினதும் இலக்கு “ தனியொரு ஆன்மா தனது அனுபவத்தில் விரிவடைதல்” அல்லது பரமாத்மனுடன் இணைதல் தொடர்பு படல் என்பனவாகும்.
இந்த எல்லாவித யோக வகைகளிலும் கிரக்ஸ்த யோகம் என்பதும் ஒருவகை யோகமே.
இந்த யோகத்திற்கு ஒருவன் முக்கியத்துவம் தருவானேயானால் குடும்பத்தில் வளர்வது
மிக அவசியமான ஒன்று என்பதையும் எளிய யோக முறை என்பதையும் அறிவான். இந்த கிரகஸ்த யோகத்தின்
மூலம் பெறும் சித்திகள் மற்றைய யோக முறைகளால் பெறும் சித்திகள் எவற்றிலும் குறைவானது
அல்ல. உண்மையில் அவை அவற்றை விட உயர்வானவை. கிரகஸ்த ஆசிரம்ம் மற்றைய மூன்று ஆசிரம தர்மங்களும்
சரியாக இருக்க அவசியமான ஒரு அமைப்பு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மற்றைய மூன்று
ஆசிரமங்களும் சரியாக இயங்க முறையான கிரகஸ்த ஆசிரம்ம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இயங்க
வேண்டும்.
இளமைக்காலத்தில்
ஒருவன் தனது ஆற்றல்களை சிதறவிடாமல் ஒருமுகப்படுத்தி, தவறான பழக்க வழக்கங்களுக்கு உட்படாமல்
தனது ஆற்றல்களை முன்னேற்றுவதில் மாத்திரம் பயிற்சிக்க பிரம்மச்சரிய ஆசிரமத்தில் பயிற்றுவிக்கப்படுகிறான்.
இதனால் அடுத்து வரும் கிரகஸ்த ஆசிரமம் சக்தி வாய்ந்த்தாகவும்,வளம் நிறைந்ததாகவும் இருக்கும்.
வானப்ரஸ்தம், சன்னியாச ஆசிரம்ம் ஏற்றுக்கோண்டவர்கள் அவர்கள் சக்தியை “மற்றவர்களின்”
வாழ்க்கையிலும் இந்த உலகத்திலும் அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்த தம்மை அர்ப்பணிக்கிறார்கள்.
மேற்கூறிய வார்த்தைகளில் மற்றவர்கள் என்பதும், இந்த உலகத்தில் என்பவை எதைக்குறிப்பிடுகிறது?
கிரகஸ்த ஆசிரமத்தையே! மற்றைய மூன்று ஆசிரமத்தை ஒருதட்டில் வைத்து நிறுத்தால் அடுத்த
தட்டில் அவற்றிற்கு நிகராக இருக்க கூடிய ஒன்று கிரகஸ்த ஆசிரமம். கிரகஸ்த ஆசிரம்ம் ஒழுங்கற்றுப்போனால்
மற்றைய மூன்று ஆசிரமங்களும் ஒழுங்கற்றுப்போய் இல்லாமல் போய்விடும்.
ஒவ்வொரு
மனிதனிற்கும் குடும்பம் இருக்க வேண்டியதன் அவசியத்தை சாஸ்திர நூற்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன.
சந்த்தி இல்லாது உடலை விடும் ஆத்மாக்கள் நரகத்திற்கு செல்வதுடன் நிம்மதியாக அடுத்த
பிறவி எடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையை பெறாமல் தாம் பெற்றோரிடம்
கடனாளியாகவே வாழ்க்கை இருக்குமென்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. இதன் உண்மை விளக்கம்
ஒருவன் சமூகப்பொறுப்புடன் குடும்பத்தில் நிலைத்திருப்பவனாக, தனது எதிர்கால சந்ததிக்கு
சமூகத்திற்கு நன்மையை ஏற்படுத்துபவனாக பொறுப்புள்ளவனான மனப்பாங்கினை உருவாக்குவதே.
இந்த பலன் தொடர்ச்சியாக கடத்தப்பட்டுக் கொண்டு இருக்கும். ஏன் கிரகஸ்த ஆசிரமத்திற்கு
அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? இதை விபரமாக ஆராயும் ஒருவன் குடும்ப வாழ்க்கை
என்பது மிக தனது ஆன்மாவினை அறிந்து பரிணமத்தை வளர்க்கும் அரிய யோக சாதனை என்பதனை தெளிவாக
விளங்கிக்கொள்வான். இது ஒருவனிற்கு சொர்க்கத்தை அனுபவிக்க வைப்பதுடன் உலக வாழ்க்கை
தடைகளை நீக்கி தன்னை உணரவைக்கும் யோக முறையாகும்.
அனேகமாக
எல்லா இந்திய ரிஷிகளும் திருமணம் புரிந்து அவரவர் குடும்பத்துடனேயே தவ வாழ்க்கையில்
ஈடுபட்டார்கள். வஷிஷ்ட ரிஷி 100 புதல்வர்களை பெற்றிருந்தார். அத்ரி மகரிஷியின் மனைவி
அனூசூயை, கௌதமரின் மனைவி அகல்யை, பரசுராமர் ஜமதக்னி முனிவரின் புதல்வர், சுகன்யா சாயவன
ரிஷியின் மனைவி, யக்ஞவல்ய ரிஷியிற்கு கார்கி மைத்ரேயி ஆகிய இரு மனைவியர், சிருங்கி
லோமேஷ ரிஷியின் புதல்வர். ஒரு சில சன்யாச ஆசிரம்ம் ஏற்று தவம் புரிந்து ரிஷிகளும் இருந்திருக்கிறார்கள்.
எப்படியாயினும் அனேக ரிஷிகள் கிருகஸ்த ஆசிரமத்தில் வாழ்ந்துகோண்டு, குடும்பக்கடமைகளை
ஏற்றுக்கொண்டு மனைவி மக்களுடனேயே தமது தபஸினை செய்து வந்திருக்கிறார்கள். யோகத்தின்
உயர்ந்த குருவான கிருஷ்ணனும், சிவனும் குடும்பத்துடனேயே வாழ்ந்து சாதனை புரிந்ததாக
உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்கால
சமூகபழக்க வழக்கங்களுக்கு அமைவாக நீண்ட தலை முடி வளர்த்து, கௌபீனத்துடன், புலி,மான்
போன்ற தோல் ஆசன்ங்களில் அமர்ந்து தவம் புரிந்து வந்தார்கள். மக்கள் சிறு களிமண் குடிசைகளில்
வாழ்ந்தார்கள். ஆகவே இன்று இவற்றை தரிப்பதன் மூலம் பலர் தாம் தவத்தில் ஈடுபடுவதாக காட்ட
முனைவது தவறு. அதேவேளை இப்படி வேடங்கள் தரித்து குடும்பத்தை விட்டு விலகி வாழ்வதுதன்
மூலம் மட்டுமே ஆன்ம விழிப்புணர்வு கிடைக்கும் என்று எவராவது நினைத்தால் அந்த நினைப்பும்
தவறானதே.
ஆன்ந்தமான
குடும்பத்தை உருவாக்கி வளர்ப்பது மிக இயற்கையான ஒன்றும், எல்லாவித யோக பாதைகளை பயிற்சிப்பதற்கு
அத்தயாவசியமான ஒரு கட்டமைப்பும் ஆகும். ஒரு ஆண் தனிமையில் வாழும் வரை அவன் தன்னைப்பற்றி
மட்டுமே சிந்திப்பான். அவனது உணவு, உடை, படிப்பு, வேலை, விளையாட்டு என்று அவனது சொந்த
சந்தோஷம் மட்டுமே அவனது குறிக்கோள். அவன் திருமணம் நிகழும்போது அவனது தான் என்ற வட்டம்
மனைவி என்ற வட்டத்துடன் சேர்ந்து விரிவடைகிறது. அவன் தனது மனைவியின் இன்பம், வசதி பற்றி
சிந்திக்கத்தொடங்குகிறான். அதன் பின்னர் அவன் தனது உழைப்பு, சக்தி மூலம் அவளது வசதிகளையும்
ஆசைகளையும் நிறைவேற்ற முனைகிறான். இதன் மூலம் தன்னைப்பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருந்த
ஒருவனது சிந்தனை இன்னொருவரைப்பற்றியும் சிந்திக்கும்படி விரிவடைகிறது. குழந்தை பிறக்கிறது.
அவனது வட்டம் இன்னும் சுய நலமற்று விரிவடைகிறது. அவன் தனது குழந்தையின் படிப்பு, ஆரோக்கியம்,
சந்தோஷம் பற்றி சிந்தித்து அதற்காக கடமையாற்றுகிறான். நாட்கள் ஆக ஆக மனைவிக்காகவும்,
குழந்தைக்காகவும் வேண்டி சுயகட்டுப்பாட்டினை வளர்த்து தன்னை செம்மைப்படுத்துகிறான்.
இதன் மூலம் தான் என்ற சுய நல வட்ட்த்தில் இருந்து வெளிவந்து விரிவடைந்து தனது ஆன்மாவினை
வளர்க்கிறான்.
முழுமையான
மனிதன் என்பவன் தனது மனைவியும் பிள்ளையும் உடையவன் என்று மனு கூறுகிறார். மனைவி, பிள்ளை
ஆகிய இரண்டும் கிடைக்கும் வரை அவன் முழுமையடையாத பாதி வளர்ச்சியுற்ற மனிதனே. இது அனுமதி
தேர்வு சித்தியடையாமல் ஒரு கல்லூரியில் கற்கையை பூர்த்தி செய்ய முடியாது அல்லவா, அதுபோல்
கிரக்ஸ்த ஆசிரமத்தை பூர்த்தி செய்யாமல் வானப்பிரஸ்தமோ, சன்னியாசமோ பூர்த்தியாகாது.
இதனால் கிரகஸ்த ஆசிரம் ஒருவன் தனது நிலையில் இருந்து மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக தன்னை
விரிவடைய வைத்துக்கொள்ள வைக்கிறது.
தனியொருவன்
கணவன் மனைவி என்ற இரண்டாகி, பிறகு குழந்தையுடம் மூன்றாகி, உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள்,
சமூகம், கிராம்ம், மானிலம், தேசம் எனவிரிந்து இறுதியாக முழு உலகமாக விரிவடைகிறது. இப்படி
முழு மனித குலமும் விரிவடைந்து ஒன்றாவதற்கான அடிப்படை அலகு கிரகஸ்த ஆசிரமம்.
இப்படி
தனக்கு உள்ளே இருக்கும் ஒரே ஆத்மாவே இப்படி விரிந்து பலவாகிறது என்ற அத்வைத தத்துவத்தை
அனுவமாக கொண்டு வருவதற்குரிய சாதனம் கிரகஸ்த ஆசிரமம்.
மனைவியின்
வருகையுடன் ஒருவன் தனது தான் என்ற சுய நலத்தை குறைத்து கட்டுப்படுத்தி மெதுவாக சுய
கட்டுப்பாட்டில் முன்னேறுகிறான். இப்படி சுய கட்டுப்பாட்டில் சித்தியடைந்த்தன் ஊடாக
தான் ஆற்றும் காரியம் எதுவும் தனக்காக அல்ல மற்றவர்களுக்கானது என்ற உயர்ந்த கர்ம யோக
மனப்பாங்கினை பெறுகிறான். இப்படி படிப்படியாக அவன் செய்யும் செயல் யாவிலும் பற்று அற்று
அனைத்தும் மற்ற்வர்களின் நலத்திற்காகவே என்ற மனப்பாங்கினை பெறுகிறான்.
திருமணம்
என்பது யோகத்தின் இறுதி இலக்கான ஜீவான்மா பரமான்மாவுடன் கலத்தல் என்பதனை அனுபவத்தில்
கொண்டுவர பயிற்சிக்க கூடிய அரிய வாய்ப்பு. கிரகஸ்த யோகம் இந்த வாய்ப்பினை தருகிறது.
தான் என்ற சுய நலத்தில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மா தனது கட்டுகளை உடைத்து விரிந்து
பூரணத்துவம் பெறுவதற்கும், தன்னை செம்மைப்படுத்திக்கொள்ளவும், யோகத்தின் இறுதி இலக்கினை
அடைவதற்கு கிரகஸ்த யோகம் வழிதருகிறது.
***************************************************************************************************
இது குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சார்யா ஹிந்தி மொழியில் எழுதிய கிரகஸ்த யோக ஏக் சித்த யோக" என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை தழுவிய தமிழ் கட்டுரை.