யோக ஆன்மீக பாடங்கள் கற்பதற்க்கான வழிகாட்டி - 01
எமது குருதேவர் காயத்ரிசித்தர் தனது உரைகள் மூலம் ஒரு மனிதன் தனது ஆரம்ப நிலைச் சாதனையை தொடங்குவதற்க்கான அடிப்படைப்பண்பான “குருபக்தி” பற்றி நிறையவே விளக்கியிருக்கின்றார். தனது குருசேவையை பூர்த்தி செய்த மாணவன் மேலே எவற்றைக்கற்க வேண்டும் என்பவற்றை இலகு படுத்தி தான் தன்னுடைய குருநாதராகிய ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய வித்தைகளை நூல்களாக்கி அனைவரும் கற்று தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவில் கிட்டத்தட்ட அரிய ஆன்மீக விளக்கங்களடங்கிய பல நூற்களாக வெளியிட்டுள்ளார். இவற்றை எப்படி பயன் படுத்துவது என்பது அனைவரது மனத்திலுமிருக்கின்ற மிகப்பெரிய கேள்வி! குருதேவரது ஆன்மீக ஆற்றல்கள், மனோசக்தி, தெய்வீக தேஜஸ் என்பவற்றிற்க்கு அவர் இவற்றை உண்மையாக பயிற்சி செய்து சித்தி பெற்றமையே காரணம். இங்கு “சித்தி” என்ற வர்த்தை ஒருவன் ஒரு விடையத்தில் தேர்ச்சி பெறுதலையே குறிக்கும் அன்றி பலரும் நினைப்பது போல் அற்புதங்கள் செய்யும் ஆற்றல்கள்களையல்ல!  

அந்தவழியில் இந்தக்கட்டுரையின உண்மையாக ஆன்மீக வழியைப் பின்பற்றி அவரது படைப்புகளை படித்து, விளங்கி, பயிற்சி புரிந்து சித்தி பெற வேண்டும் என்பதற்க்காக ஏங்கும் சாதகர்களுக்கும், மாணவர்களுக்குமாக வெளியிடப்படுகிறது.  

சாதகன் ஆன்மீக தாகம் கொண்டு தன்னை யார் என்றும், தனக்கு மேலிருக்கும் சக்தி எதுவென்றும், அன்றாட வாழ்க்கையில் ஏன் பிரச்சனைகள் ஏற்ப்படுகின்றது என குழப்ப நிலையில் இருக்கும்  ஆரம்ப நிலை சாதனிகன் இவற்றிற்க்கான விளக்கங்களை பெறுவதற்க்கும், சித்தம் எனப்படுகின்ற ஆழ்மனதில் உயர் வாழ்க்கைக்கான விதையினை விதைப்பதற்க்கான செயல்முறையே இந்தப் பாடங்களாகும். இந்த பயிற்ச்சியினை சரியாக பூர்த்தி செய்யும் சாதகன் மட்டுமே ஆன்மீகப்பாதையில்  தொடர்ந்து இடைவிடாமல் பயணிக்க முடியும்.

இதை தகுந்த உதாரணம் மூலம் விளக்குவதானால் கணணிப்பொறியின் செயற்ப்பாட்டுடன் ஒப்பிடலாம். நீங்கள் குறிப்பிட்ட கட்டளை சரியாக இயக்க வேண்டுமானால் அதில் அதற்க்குரிய மென்பொருள் (software) இருக்க வேண்டும். அது போல் நாம் எமது மனதினை கணணியாக எடுத்துக்கொண்டால் ஆன்மீக வாழ்வு எமது புரோகிராமாக இருந்தால் இந்த ஆரம்ப நிலை பாடங்கள் தான் அதற்க்கான மென்பொருட்கள். இவற்றை சரியாக மனதில் பதிக்காமல் யாரும் சரியான ஆன்மீக வாழ்க்கையில் பயணிக்க முடியாது. அப்படிச் சென்றாலும் சரியாக நிறுவப்படாத மென்பொருள் கணணியை தடுமாறச் செய்வது போல் இடை வழியில் தடுமாறுவார்கள்.  ஆகவே இது ஒரு முக்கியமான விதியாகும். 

இந்த விதியை சரியாக கடைப்பிடிப்பதற்க்கு என்ன செயற்பாடுகள் அவசியம் என்பதை அடுத்து பார்ப்போம். யார் இதனைக்கற்க வேண்டும் என ஆர்வம் கொள்கின்றனரோ அவர்கள் கீழ் வரும் வழிமுறைகளை ஏற்ப்படுத்திக்கொள்ளும் படி வேண்டிக்கொள்கிறோம். 
1.      உங்களது ஆன்ம முன்னேற்றக் கல்விக்கென வாரத்தில் குறித்த தினத்தில், குறித்த ஒரு மணி நேரத்தினை ஏற்ப்படுத்திக்கொள்ளுங்கள். இதனை மாறாமல் கடைப்பிடித்து வாருங்கள்.
2.      இங்கு நாம் குறிப்பிடும் நூற்களை, பாடங்களை வாரந்தோறும் குறிப்பிட்ட அளவு அமைதியாக வாசித்து அதிற்க்குறிப்பிடப்படும் விடயங்களை சிந்தித்து மனதிற் பதித்து ஆரய்ந்து வாருங்கள்.
3.      பாடங்களை வாசிக்கும் போது சாதாரண செய்தித்தாள் வாசிப்பது போலல்லாது மனதினை முழுமையாக ஈடுபடுத்தி வாசிக்கவேண்டும். 
4.      நீங்கள் பாடங்களை வாசிப்பதற்க்கு முன் சித்த வித்யா குருமண்டல குருமார்களை மானசீகமாக வணங்கி அவற்றின் உண்மைப்பொருளை விளங்க அருள் புரியுமாறு பிரார்த்திக்கவும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக கற்று வரும் போது உங்கள் மனதில் ஆன்மீக சாதனைகள் புரிவதற்க்குரிய ‘சித்த சம்ஸ்காரங்கள்’ விழிப்படையும். அதன் பின் படிப்படியாக சாதனை புரிவதற்க்குரிய ஆற்றல் மனதில் வளர்ந்து வரும். 

சாதகர்கள் இங்கு ஒருவிடயத்தை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும், இது விவசாயம் செய்வதைப் போன்றது, நிலத்தை சரியாக பண்படுத்தி, உழுது, விதைத்து, உரம் இட்டு, களை பிடுங்கி விளைச்சல் பெறுவதைப் போன்றது. அவசரப்பட்டால் எதுவும் நடந்து விடாது. மனதினையும், சித்தத்தினையும் பண்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மந்திரம் ஜெபித்தாலும், மணிக்கணக்கில் தியானம் இருந்தாலும் எதுவும் கிட்டிடாது.

குருதேவரது ஆன்ம சேவையில்,
ஸ்ரீ ஸக்தி சுமனன்

Comments

Popular posts from this blog

காம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது?

சித்த வித்யா பாடங்கள் - சித்த வித்தை கற்பதற்கான அழைப்பு

நோக்கு வர்மம் - மெஸ்மரிசம் - ஹிப்னாடிசம் - ஒரு ஒப்பீடு