இந்து - பாரதீய
கலாச்சாரத்தினை அறிவியல் ரீதியில் புரிந்துகொள்ள வேண்டும் என்று எவருக்காவது
விருப்பம் இருந்தால் சும்மா குதர்க்கம் பேசுவதைப் பகுத்தறிவு என்று நினைக்காமல்
சற்று சிரத்தையுடன் தாம் கேட்கும் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கு உழைக்க
வேண்டும்.
சுவாமி
விவேகானந்தரின் உரைத்தொகுதியை வாங்கிக்கொள்ளுங்கள்; ஒவ்வொன்றாக படித்து
முடியுங்கள்!
அண்மையில் நண்பர்
ஒருவர் தீபாவளிக்கு நரகாசூரன் கதை இருக்கிறது; இராவணன் கதை இருக்கிறது இதில் எது
உண்மை என்று வினாவியிருந்தார்; இந்தக் கேள்வி ஒரு அப்பாவித்தனமான கேள்வி; இதற்கு
சுவாமி விவேகானந்தர் கர்மயோகத்தில் இப்படியொரு பதில் கொடுக்கிறார்;
ஒவ்வொரு மதத்திலும்
தத்துவம், புராணம், சடங்கு என்று மூன்று பகுதிகள் உள்ளன. எந்த மதத்திற்கும்
தத்துவமே சாரமாக அமைந்துள்ளது. இந்தத் தத்துவத்தை ஏறக்குறைய கற்பனைப்
பாத்திரங்களோ,வாழ்ந்த மாமனிதர்களின் வாழ்க்கை, கதைகள், உவமைகள் போன்ற அற்புதமான
விஷயங்கள் மூலம் விளக்கி விவரிப்பது புராணம். சடங்கு என்பது தத்துவக்
கருத்துக்களுக்கு, எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவான வடிவம் கொடுப்பது.
உண்மையில் தத்துவத்தின் உருத்தோற்றமே சடங்கு.
புராணங்கள் கதைகள்
என்பன தத்துவத்தை மனதில் புகுத்துவதற்காக சேர்க்கப்பட்ட கதைகள்! அவை உண்மைச்
சம்பவத்தை அடிப்படையாகப்பட்ட மெருகேற்றப்பட்ட புனைவுகளைக் கொண்டும் இருக்கும்.
இந்தக் கதைகளை வைத்துக்கொண்டு உண்மையைத் தேடக்கூடாது.
கதைக்குப் பின்னால்
இருக்கும் தத்துவமும், அந்த தத்துவத்தை வாழ்வியலாக்க பயன்படும் சடங்கும்
மனிதர்களுக்கு முக்கியமானது!
தீபாவளியில்
நரகாசூரன், இராவணன் கதை அல்ல முக்கியமானது! அதற்குப் பின்னால் இருக்கும் தத்துவக்
குறியீடு! மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கம்! சமூகத்தை ஒன்றிணைந்து சந்தோஷிக்க
வைக்கும் மன நிலை இவையே நாம் அறிந்துகொள்ள வேண்டியவை!
கதைகள் அவரவருக்கு
தேவையான வகையில் புனைந்து இன்புற்றுக்கொள்ளலாம்! இப்படித்தான் மனிதன் தனக்குப்
பிடித்தமான வகையில் கடவுளிற்கு பெயரிட்டுக்கொள்கிறான்; பிறகு முட்டாள்தனமாக எனது
கடவுளும் அவனது கடவுளும் வேறு என்று சண்டைபிடிக்கத்தொடங்குகிறான்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.