தம்பி Arunachalam Ambalam ஒரு பதிவிட்டிருந்தார்: ஆன்மீகம் என்ற பெயரில் உணவினை உயர்வு
தாழ்வு கற்பிப்பது இங்கு பெரும் பிரச்சனை! உண்மையில் நாம் உடலாலும், மனதாலும்
செய்யும் காரியத்திற்கு உகந்த உணவு என்பதே அடிப்படை விதி!
கிரணாகமத்தின் படி
சித்தாந்த தீக்ஷை உடையவர்களுக்கு ஆகாத உணவுப் பொருட்களாக சிலதைப்
பட்டியலிட்டிருந்தார்.
வெங்காயம்
வெள்ளிப்பூண்டு
சுரக்காய்
மாமிசம்
மச்சம்
இதை நாம் சரியாக
அர்த்தப்படுத்திக் கொள்வதென்றால் கிரணாகமம் விதித்த வகையில் ஒருவன் தீக்ஷை பெற்று
சாதனை புரிந்து அந்த ஆகமம் கூறும் உயர் சித்தி பெற விரும்புவன் மேற்குறித்த
உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும்! இது எல்லோருக்கும் பொதுவாகச்
சொல்லப்பட்டதாகக் கருதிக்கொண்டு குழம்பக்கூடாது.
அதில் வெங்காயமும்,
வெள்ளிப்பூடு, சுரக்காய் மிக முக்கியமானது. பல ஆன்மீக சாதனை செய்பவர்கள், தியான
மார்க்கிகள் இதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டாலும் இதற்குரிய காரணம்
என்னவென்பது பலருக்கும் விளங்குவதில்லை.
இதை நாம் ஆயுர்வேத
திரவிய குண விஞ்ஞானத்தின் மூலம் அணுகினால் இதன் விடை கிடைக்கும்.
வெங்காயம்
முத்தோஷங்களில் வாதத்தையும், கபத்தையும் அதிகரிக்கும்; ஆனால் பித்தத்தைக்
கூட்டாது;
இதேபோன்ற செய்கைதான்
வெள்ளைப் பூடும் செய்யும்.
ஒருவன் தனது ஆன்ம
சாதனையில் நீண்ட நேரம் மனதை ஒருமுகப்படுத்த அக்னியாகிய பித்தத்தின் துணை தேவை;
உடலில் தேவையான அளவு அக்கினி இருந்தால்தான் ஒருவன் நீண்ட நேரம் மனதை
ஒருமுகப்படுத்தி தாரணை, தியான, சமாதி நிலைக்குள் செல்ல முடியும். உடலில் கபம்
அதிகமாக இருந்தால் சோம்பலும், வாதம் அதிகமாக இருந்தால் மனதிலும், உடலிலும் பதட்டம்
அதிகமாக இருப்பதால் அதிக நேரம் தியானம் செய்ய முடியாமல் உடல் தடுக்கும்.
சுரக்காய் கசப்புச்
சுவையுடன் உதான வாயுவைத் தூண்டக்கூடியது; இது வாந்தியை ஏற்படுத்தி ஹிருதயத்திற்கு
நெருக்கத்தைக் கொடுக்க கூடியது. தியானம் செய்பவர்கள் பஞ்சப்பிராணன் களான பிராண,
அபான, உதான, சமான, வியான வாயுக்களில் பிராண அபானக் கலப்பையே தமது கும்பகம், தாரணை,
தியானத்தில் செய்கிறார்கள். இவை இரண்டும் கலக்கும் போது மற்றைய வாயுக்கள் அடங்கி
இந்த பிராண அபானக் கலப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும். சுரக்காய் சாப்பிட்டு விட்டு
தியானம் செய்யும் போது உதான வாயுக் கிளர்ச்சியால் நீண்ட நேரம் தியானம் செய்ய
முடியாது என்பதால் இங்கு சுரக்காய் விலக்கப்பட்டிருக்கிறது.
இங்கு வாசிப்பவர்கள்
விளங்கிக்கொள்ள வேண்டும் உயர் ஆன்ம சாதனையில் குருமுகமாய் தீட்சை பெற்று தியான
சித்தி, சமாதி ஸித்தி பெற விரும்புவர்களுக்கே இந்த உணவு விதிகள் எல்லாம்!
உடல் ஆரோக்கியமாக
இருக்க வேண்டுபவர்கள் எதையும் அளவாக உங்கள் ஜீரண சக்திக்கு தக்க உண்ணலாம்! எந்த
தீங்கும் வராது!
உடலில் பலம், காம
உணர்வு விருத்தி, தோல் நோய் உள்ளவர்கள் வெங்காயம், வெள்ளைப்பூடு நன்றாகச்
சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.