இன்று கடன் வாங்குவது தப்பு என்று பலரும் சொல்லிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். நானும் ஒருகாலத்தில் கடன் வாங்குவது தப்பு என்றே எண்ணினேன்! ஒரு கட்டத்தில் கடன் வாங்குவது என்பது மனதினை ஒழுங்குபடுத்துவதற்கான உத்தி என்பதையும் இந்தக்கோட்பாடு இல்லாவிட்டால் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி சமூக ஒழுங்கு கெட்டுவிடும் என்றும் புரிந்துகொண்டேன்.
எமது சாத்திரங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் பித்ரு கடன், ரிஷி கடன், தேவ கடன் இருப்பதாகச் சொல்லுகின்றன.
இன்று பலரும் பித்ரு கடன் என்று பலவித சடங்குகளைச் செய்வதையும் பார்க்கிறோம்.
பித்ரு கடன் என்பது நான் எனது தாய் தந்தையிடமும், எனது முன்னோர்களிடமிருந்தும் இந்த உடல், வாழ்க்கையைப் பெற்றிருக்கிறேன்; அவர்களிடம் இருந்து பெற்ற இந்தக் கடனை நான் என்னை முன்னேற்றி, அவர்கள் சந்தோஷமாக வாழ வழி செய்து அவர்களிடமிருந்து கடன் வாங்கிய உடலில் இருந்து வரும் எனது பிள்ளைகளை சரியாக வளர்ப்பேன் என்பதே அதன் அர்த்தம்!
அடுத்தது ரிஷி கடன்; ரிஷி என்றால் அறிவினைத் தரிசித்தவர்கள் என்று அர்த்தம்; இன்று எம்மிடம் இருக்கும் பௌதீக, ஆன்மீக அறிவுகள் எல்லாம் எமக்கு முன்னிருந்த ரிஷிகளின் கடின உழைப்பால் உருவாகியவை; ஆகவே நாம் அறிவைப் பெற்றால் அந்த அறிவு வளர்ந்து பெருக, நாம் பெற்ற அறிவை விட பெருமளவு அறிவினை உருவாக்கி விட்டு இந்த பூமியை விட்டுப் போக வேண்டும்; நல்ல ஆய்வுகள் செய்து அறிவினை வளர்க்க வேண்டும்; எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு அறிவினைத் தரவேண்டும்; அறிவு பெருக பாடுபட்டால் ரிஷி கடன் தீரும்.
மூன்றாவது கடன் தேவ கடன்; இந்த பூமியில் நாம் வாழ அனைத்தையும் இறைவனே உருவாக்கி வைத்திருக்கிறான்; நாம் எதையும் உருவாக்க முடியாது; ஆகவே இந்த இயற்கை சக்திகளை மனித குலம் நன்றாக வாழ பயன்படுத்துவதுடன், தர்மத்திற்கமைய பாவிக்கும் ஒழுக்கம் தேவ கடன்.
இந்த மூன்று கடனையும் வாங்கிய பொறுப்பு எமக்கு இருந்தால் மனம் வாழ்க்கையை கடமையாகச் செய்யும்! இந்தப் பண்பு உள்ளத்தில் இல்லையென்றால் குடும்பத்திற்கோ, அறிவிற்கோ, பூமியிற்கோ பலன் இல்லாத ஒரு ஜென்மமாக வாழ்க்கையை மனிதன் வாழத் தொடங்குவான், இப்படி வாழ ஆரம்பித்தால் மனித குலம் சிதைந்து போகும்!
இதேபோல் தான் உழைப்பு அதிகம் உள்ள சலிக்காத ஒருவன் வங்கியில் கடனை வாங்கி குறுகிய காலத்தில் பல சாதனைகளைச் செய்யலாம்! உழைக்கத் தெரியாத சோம்பேறி கடன் வாங்கினால் வங்குரோத்து அடையலாம்! இலங்கை அரசாங்கத்தைப் போல!
கடன் பெறுவது தப்பல்ல! ஆனால் கடனின் தத்துவம் சரியாக அறிந்து உழைக்கக்கூடிய மனதுடன் கடன் பெறுபவன் அறிவையும், செல்வத்தையும், வளத்தையும் பெருக்க வல்லவன்!
இன்று பலர் உதவி என்று செய்யும்போது பெறுபவர் மனதில் இவர் பெரிய பணக்காரர், இவரிடம் நிறையச் செல்வம் இருக்கிறது, நாம் வேண்டியளவு எடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தினைத் தூண்டுகிறார்கள்! அதேபோல் உதவி பெறுபவர் மனதில் தான் வலிமை குறைந்தவர்; எனக்கு எப்போதும் எவராவது உதவிக்கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறார்கள். இது தவறானது! ஒவ்வொருவரும் முன்னேற எம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது அவர்களிடமிருந்து நாம் மீண்டும் எதையும் பெறவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் இருக்கக்கூடாது; ஆனால் பெறுபவர் பொறுப்புடன் பெற்ற உதவியைச் சரியாக பாவித்து தன்னை உயர்த்திக்கொண்டு பலருக்கும் அதைப்போன்ற உதவிகளைச் செய்யும் ஆற்றலுடையவர்களாக மாற வேண்டும்.
இந்த நோக்கத் தெளிவில்லாமல் நாம் சமூகப்பணி எவற்றையும் பகட்டிற்கு செய்யக்கூடாது.
இதுவே கடனின் தத்துவம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.