திராவிட ஹிந்தி எதிர்ப்பாளர்களுக்கும், புதிதாக கிளம்பியிருக்கும் யாழ்ப்பாண ஹிந்தி எதிர்ப்பாளர்களுக்கும் ஒரு நற்செய்தி!
ஹிந்தி நீங்கள் நினைப்பது போல் ஒரு ஆரியமொழியில்லையாம்! பிரித்தானியரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு வடிவம் என்கிறது Urdu Hindi: An Artificial Divide (Politics of Language) என்ற நூல்.
ஹிந்தியினது ஆரம்ப வேர் Austric-Munda and Dravidian குடும்ப மொழியாம்! பின்னர் சமஸ்க்ருதம், அரபு, பேர்சிய மொழி கலந்து தற்போதைய உருவம் பெற்றது என்பதை ஆதாரத்துடன் நிறுவுகிறார் நூலாசிரியர்.
ஒரு மொழியைப் பரப்புவதும், பரவுவதை எதிர்ப்பதும் பரப்ப நினைக்கும் அதிகாரம் தனது ஆளுமையைப் புகுத்தவும், பெறும் சமூகம் மாற்றுச் சமூக அதிகாரம் தமது சமூகக் குழுக்களுக்குள் புகுந்து அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும் என்ற பயம் சூழ்ந்த அரசியல் காரணத்திற்காகவே!
தமிழ் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக பல நூறு மொழிகளின் தாக்கத்திலும் தனது தனித்தன்மையை இழக்காத ஒரு இலக்கணக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அன்னியமொழி வந்தால் அதை எதிர்க்காமல் தற்பவம் அல்லது தற்சமம் ஆக்கி தனக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை தமிழிற்கு உண்டு. இது பெரும் வீரனுக்கு இருக்கும் ஆற்றல்; எந்த எதிரி வந்தாலும் அவர்களிடம் தோற்காமல் தனக்கு வேலை செய்ய வைக்கும் ஆற்றல் தமிழிற்கு உண்டு.
இந்த ஆற்றல் எப்படி வந்தது என்றால் மொழியை விடாது கற்கும் பண்டிதர் மரபு சமூகத்தில் இருந்ததால்; நன்னூலும், தொல்காப்பியமும், தண்டியலங்காரமும், யாப்பருங்கலக்காரிகையும் கற்கும் மரபு இருந்ததால்!
இப்படி தன்மொழி கற்றுத் தேர்ந்த வீரன் வேறு மொழியிடம் மண்டியிடாத அதேவேளை அந்த மொழியை தனது வலிமையாக்கும் ஆற்றலுடையவனாக இருப்பான்.
ஆகவே எந்த ஆதிக்கத்தைப் பார்த்தும் வெருண்டு ஓடாமல், தன்மொழியில் புலமையுடன் இருக்கும்போது மற்ற மொழிகளையும் உள்வாங்கி எமது சமூகத்தின் வலிமையைக் கூட்ட வேண்டும்.
ஹிந்தியை எதிர்க்கும் தமிழ் பெருமகன்கள் ஒவ்வொருவரும் தாய்மொழியாம் தமிழை ஒரு உலக மொழியாக்க போராடுவார்கள் என்று நினைக்கிறேன்!
அவுஸ்ரேலியாவிலும், ஜேர்மனியிலும், பிரான்ஸிலும் விரைவில் உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நன்னூல், தொல்காப்பியம், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை கற்று உலக அரங்கில் தமிழ் மொழி சிறந்து விளங்கப் பாடுபடவேண்டும்.
அதிக வாசிப்பும், தேடலும், சிந்தனையும், ஆய்வும், தெளிவும் இல்லாமல் பேஸ்புக்கில் மக்களை உசுப்பேத்த எழுதும் நண்பர்கள் இப்படியான நூல்களைப் ஆழமாகப் படித்து சமூகத்திற்கு தெளிவுதரும் சிந்தனைகளை தமிழில் எழுத வேண்டும்.
இப்படிச் செய்யும்போது உலக அரங்கில் தமிழர்கள் பெரும் வலிமையுடனும், பெருமையுடனும் இருப்போம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.