புராணங்கள் என்பவை ஆழ்மனதிற்கு உண்மையைச் சொல்லும் உத்திகள்!
பாகவத புராணம் ஸ்ரீ கிருஷ்ணனின் மகிமையைச் சொல்லும் புராணம். இதில் வரும் கிருஷ்ணனின் ராஸ லீலை என்பது பற்றி எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் கூறிய தத்துவ விளக்கம் வருமாறு;
கிருஷ்ணன் 16,000 கோபியருடன் ராஸலீலை விளையாடினான் என்பதை ஒரு தர்க்கத்திற்கு உட்படுத்துவோம். ஒரு பெண்ணுடன் ஒரு இரவு என்றால் 16,000/365= ~45 வருடங்கள் தேவைப்படும். கிருஷ்ணன் ராஸ லீலை 15 வயதில் தொடங்கினான் என்று எடுத்துக்கொண்டால் அறுபது வயதில் பூர்த்தி செய்தான் என்று கணக்கு வரும். ஆனால் சிறுவனாக இருக்கும் போதே ராஸ லீலை முடிந்துவிட்டதாக பாகவதம் சொல்லுகிறது.
இதன் விளக்கம் என்ன?
கழுத்தில் 16 இதழ் தாமரை (விசுத்தி சக்கரம்) இருக்கிறது; தலையுச்சியில் சஹஸ்ராரத்தில் 1000 இதழ் தாமரை இருக்கிறது. விசுத்தியில் உள்ள ஒவ்வொரு இதழும் சஹஸ்ராரத்திலுள்ள ஒவ்வொரு இதழுடன் பிராண ஓட்டத்தினை ஏற்படுத்தினால் மொத்தமாக 16000 நாடிகள் (பிராண ஓட்டப் பாதைகள்) கிடைக்கும். இவை எம்மில் உருவாகக்கூடிய சித்த விருத்திகளின் எண்ணிக்கை. எமக்கு எழும் சித்த விருத்தியிலேயே மனம் இன்பமுறுகிறது. கிருஷ்ணன் இந்த பதினாறாயிரம் விருத்திகளை இன்புற்றார் என்கிறோம். கோபியர் எங்கிருந்து வருகிறார்கள்? பால் உற்பத்தியாகும் இடத்திலிருந்து; உடலில் இது மார்பினை - அனாகதச் சக்கரத்தினைக் குறிக்கிறது. இது மகாலஷ்மியின் ஸ்தானம். மகாலக்ஷ்மியின் ஆற்றல் மார்பில் இருப்பதால் அங்கிருந்து சுரக்கும் தாயின் பால் உடலிற்கு ஆற்றலையும் நோயற்ற தன்மையையும் தருகிறது. அதுபோல் அனாகதச் சக்கரத்துடன் தொடர்புபட்டு (கோபியரிடமிருந்து) விசுத்திக்கூடாக வெளிப்படும் சித்த விருத்திகள் சஹஸ்ராரத்தில் ஒடுங்குவதால் கிருஷ்ணன் பரமானந்த நிலையில் இருக்கிறான் என்பதே ராஸலீலை!
இந்த நடனம் ஒரு வட்டமாக - சக்கரமாக நடைபெற்றது என்று சொல்லப்படுகிறது. இதை ஸ்ரீ - மகாலக்ஷ்மியினுடைய சக்கரம் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சக்கரத்தில் 16000 கோபியருக்கு 16000 கிருஷ்ணன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் விளக்கம் என்ன? கிருஷ்ணன் தன்னை க்ளோனிங்க் செய்துகொண்டானா?
கிருஷ்ணா என்பதும் காளி என்பதும் ஒரே பொருளைத் தரும் சொல்; கருமையான அறியப்படாத ஆற்றல் என்பது அதன் அர்த்தம். காளி, கிருஷ்ணன் இரு ஆற்றல்களுமே காலத்தின் ஆற்றல், மௌனமாக சூனியத்தினூடாகச் செல்லும் நதியைப் போன்ற ஆற்றல்கள். சக்கர நடனம் என்பது ஒரு எண்ணம் உருவாகி மற்ற எண்ணம் உருவாகுவதற்கு இடையில் ஒரு சூன்யம் அல்லது மௌனம் அல்லது இடைவெளி இருக்கும். அதேபோல் இரண்டு மௌனங்களுக்கு இடையில் எண்ணம் இருக்கும். இந்த நிலையினை ஒருவன் அனுபவிக்கும் தன்மையே கிருஷ்ணனின் ராஸ லீலை!
இப்படி அவதானிக்கும்போது எண்ணம் அற்ற சூன்யம் ஆனால் அதுவே கருமை நிறக்கண்ணன்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.