Divide and conquer theory explained
ஜனரஞ்சகமாக சமூகத்தை உசுப்பேத்தும் நபர்களை மக்கள் ஏன் அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதைப் பற்றி சரித்திரம் என்ன சொல்கிறது?
யுவல் நோஹா ஹரியின் பதில்;
இது சரித்திரப் புத்தகங்களில் காணப்படும் ஒரு பழைய உத்தி! ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தை அடைவதற்கான உத்தி மக்களுக்கிடையிலான நம்பிக்கையை சந்தேகத்திற்கு உட்படுத்தி சமூகத்தைப் பிளந்து தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதிகாரத்தை அடையும் வழி!
ஆனால் ஜனநாயக வழியில் நீங்கள் அதிகாரத்தை அப்பியாசிக்க வேண்டுமானால் மக்கள் அனைவரிடமும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இருக்க வேண்டும். மற்றைய கட்சிகளையும் நம்ப வேண்டும். மாற்றுக்கருத்து உள்ள எதிராளியுடன் நான் எனது கருத்துக்களில் ஒத்துவரவில்லை என்றாலும் நான் அவர்களை முட்டாள் என்று நினைக்கவில்லை; அவர்கள் தீய பிசாசுகள் என்று எண்ணவில்லை! அவர்கள் எமக்கு தீமை செய்வார்கள் என்று எண்ணவில்லை! இப்படியான எண்ணமே, பண்பே ஜனநாயக முறையின் அடிப்படை!
நான் தேர்தலில் தோற்றாலும் நான் பெரும்பாலான மக்களுடைய ஆணையை மதித்து நடக்கிறேன் என்று செயற்படுவது ஜனநாயக செயல்! மற்றைய கட்சியினர் எனது போட்டியாளர்கள் என்பதை ஏற்காமல் எதிரிகளாக கற்பித்து, அவர்கள் எமது வாழ்க்கையை அழித்து விடுவார்கள், எங்களை அடிமையாக்கி விடுவார்கள்; இப்படியான தோற்றத்தை, பயத்தை ஏற்படுத்தி தேர்தலை வெற்றிபெற சட்டரீதியாகவோ, சட்டத்திற்கு மீறியோ எதையாவது செய்து தேர்தலில் தோற்றாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் ஒரு சர்வாதிகாரியின் பண்பு.
இந்த நிலை, நாடு உள்நாட்டுப் போரிற்குள் செல்லவோ அல்லது சர்வாதிகாரியின் ஆட்சிக்குள் செல்லவோ முடியும்! சர்வாதிகாரி மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க அவசியமில்லை! மக்கள் ஒருவர் ஒருவரை நம்பாமல் சண்டைபிடித்துக்கொண்டிருப்பது சர்வாதிகாரிக்கு மிக நல்ல விஷயம். அப்படியிருந்தால்தான் மக்கள் ஒன்றுபட்டு தனக்கு எதிராகத் திரும்பி தன்னை வெளியேற்றாமல் இருப்பார்கள் என சர்வாதிகாரி நினைப்பார்.
சர்வாதிகாரம் என்பது களைபோன்றது; அது எங்கும் வளரும்; ஆனால் ஜனநாயகம் என்பது மென்மையான மலரைப் போன்றது! அது வளர்ந்து அழகாவதற்கு சில முக்கிய நிபந்தனைகள் இருக்கிறது. அதன் முக்கியமான நிபந்தனை,
" நம்பிக்கை" - பல்வேறுபட்ட சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்.
ஆனால் இந்த ஜனரஞ்சக அரசியல்வாதிகள் உலகெங்கும் ஒரே உத்தியைத்தான் செய்கிறார்கள்; இதற்கு சமூகங்கள் தமக்குள்ளே முரண்படக்கூடிய, முன்னர் உருவாகிய சமூகத்திலிருக்கும் காயத்தைக் கண்டுபிடித்து, அதைக் குணப்படுத்தாமல் அதற்குள் விரல்களை விட்டுக் குடைந்து பெரிதாக்கி சமூகங்களுக்கு இடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப் பிரச்சனைக்கு அனுப்பப்பட்ட தீர்வாளர்களாக தம்மை முன்னிறுத்தும் விளம்பர உத்தியினை பாவித்து தாம்தான் உகந்த தலைவர் என்ற பிம்பத்தைப் பதிப்பிக்கின்றனர்.
இப்படியாகியவுடன் அதற்குப் பிறகு அங்கு சமூகம் இருப்பதில்லை! பிளவுபட்ட மக்கள் கூட்டத்திடம் மற்றைய கூட்டத்திடமிருந்து நான் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்ற வாக்குறுதியுடன் தேர்தலை வெல்கிறார்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.