புராண ஸத்தியவான் ஸாவித்ரியை மனதிற்கு உளவியல் குறியீட்டு மொழியாக்கினார் ஸ்ரீ அரவிந்தர்!
திருமணத்தால் ஸத்தியவான் மீது எல்லையற்ற அன்பைப் பொழிந்து காதலானாள் ஸாவித்ரி!
இதை பாமர மனம் கட்டிய கணவனிற்காக தன்னை அர்ப்பணித்த பெண் என்று கதை கட்டி மகிழ்ந்தது!
ஸ்ரீ அரவிந்தரின் யோக அனுபவம் ஸாவித்ரி என்பது மனிதனிற்கு ஆற்றல் தரும் ஸக்தியின் செயற்பாட்டு இரகசியம் என்ற குறியீட்டு மொழி புரிந்தது!
சத்தியத்தை வாங்கித் தாங்கியதால் ஸத்தியவான் ஆனான்; ஆனால் ஸத்தியத்தை வாங்கினாலும் பலமற்ற அற்ப ஆயுள்தாரி அவன்! மரணதேவனிடமும், அறியாமையிடமும் மாட்டிக்கொண்ட பலவீனன்!
இதுவே ஒவ்வொரு மனித ஆன்மாவின் நிலையும்! ஒவ்வொரு ஆன்மாவும் ஒளி மிகுந்த ஸத்தியத்தன்மை உடையது! அதேவேளை மரணமும், அறியாமையிடம் சிக்கிக்கொண்டும் இருக்கிறது.
நான் ஸத், சித், ஆனந்தன் என்ற உண்மையை உள்ளே தாங்கினாலும் மரணம், அறியாமை என்ற பலவீனத்தால் சூழ்ந்த ஸத்தியவான் என்பதை ஒவ்வொரு யோக ஸாதகனும் அறிதல், புரிதல் வேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தரின் நோக்கம்!
இந்த பலவீனத்திலிருந்து எப்படி மீள்வது?
கருணை கொண்டு பேரொளியான பரம்பொருளின் கீழிறங்கி வரும் ஸத்தியத்தைக் காக்கும் கருணை மிகு ஆற்றல் ஸாவித்ரி!
புராணத்தில் பிரம்மா தனது படைப்பினை செயற்படுத்தும் ஆற்றல்கள் இரண்டு!
ஸாவித்ரி
காயத்ரி
ஸாவித்ரி என்பது பேரொளியான இறைவனின் கீழிறங்கி பூமியில் மனித உடலில் செயல் கொள்ளும் ஆற்றலின் பெயர் என்றும், காயத்ரி என்பது நவகோள்களிற்கு ஆற்றல் மூலமாக இருந்து சூரியன் வழி இறங்கி வந்து நவகோள் மண்டலம் செயல் கொள்ளும் நிலை என்று விளக்கினார் ஸ்ரீ அரவிந்தர்!
மனிதனுக்குள் இருந்து செயற்படும் பேராற்றலின் வடிவம் ஸாவித்ரி
சூரியன் வழி எமது மண்டலத்தை இயக்கும் பேராற்றலின் வடிவம் காயத்ரி!
ஸாவித்ரி உதிக்க முன்னிருக்கும் அதிகாலை நேரத்து சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல்! இதனால் இவள் சூர்ய புத்திரி என்றார் ஸ்ரீ அரவிந்தர்!
ஸாவித்ரி பரம ஸத்தியத்தின் பூரண வடிவம்; மனித உடல் தாங்கி பூவுலகு வந்து பேரறிவினைத் தரக்கூடிய ஆற்றல்; இவையெல்லாம் சேர்ந்த பேராற்றலுடைய மனித உடல் தாங்கிய பராசக்தியின் குறியீடே ஸ்ரீ அரவிந்தரின் காவிய நாயகி!
இந்த பேரருள் ஏன் பூமிக்கு இறங்கி வரவேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அஸ்வபதி! அஸ்வம் என்றால் குதிரை என்று பொருள்! யோகத்தில் குதிரை என்றால் பிராணசக்தி என்று அர்த்தம்! தமிழ்ச் சித்தர்கள் பரி என்று இதைக் கூறுவர்! ஸாவித்ரி காவியத்தில் அஸ்வபதி ஒரு மகாதபஸ்வி! அவரின் தவத்தால் ஸாவித்ரி எனும் பேராற்றல் பூவுலகிற்கு இறங்கி வருகிறது! இதனால் அவர் பிராணனை அடக்கி ஆளும் அஸ்வபதியாக காவியத்தில் வருகிறார்!
ஆக பராஸக்தி இறங்கி செயல் கொள்ள சாதகன் பிராணனை அடக்கி தபஸு புரியும் அஸ்வபதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை சாதகனுக்குப் புரியவேண்டும்!
தமிழ் சித்தர்கள் தமது வாசி, சிவயோக சாதனையில் மூன்றுவயதுப் பெண்ணாக வாலைப் பெண் பிறப்பாள் என்று கூறுவதும் இதைத்தான்!
எந்த யோக சாதகனுக்கு தன் புலன்கள், பிராணன், மனம் மேல் கட்டுப்படுத்தும் பதியாகிய ஆற்றல் வாய்க்கிறதோ - அஸ்வபதியாக இருக்க முடிகிறதோ அவனிற்கு மகளாக அந்த பராசக்தி இறங்கி வந்து மனித உடலில் செயல்புரிவாள் என்பது ஸாவித்ரி காவியம் கூறும் இரகசியம்!
அன்னையின் அருளால் ஸ்ரீ அரவிந்தரின் மொழிபுரிந்து இந்த இரகசியம் தமிழில் விளக்கும் ஆற்றல் பெற்றான் ஸோமன்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.