வாழ்க்கையில் மனதின் இயக்கம் கடல் அலைகள் போன்றவை; இந்த அலைகள் கரையை அடைவதை நோக்கமாகக் கொண்டவை; ஒவ்வொரு அலையாக எழுந்து கரையை அடைய முயற்சி செய்து வெற்றி பெறுகிறது. இப்படி கரையாகிய இலக்கினை நிர்ணயித்த அலைகள் மகிழ்வாகவும், ஆட்டம் பாட்டத்துடனும் கரைகளைத் தழுவி இன்புறுகின்றன.
இப்படி கரையை - இலக்கினை நோக்கிய பயணத்தில் ஆகாயத்தின் வெப்ப அழுத்தம் உருவாக்கும் சுழலில் அலைகள் கரையை நோக்கிச் செல்லாமல் கடலினுள் செங்குத்தாக சுழியாக பயணிக்க கடலும் கொந்தளிக்க, வானமும் தத்தளிக்க சுழியும், புயலும் உருவாகிறது.
சிலர் ஆனந்தமாக திருமணம் செய்து பிள்ளைகள், பதவி, தொழில், மகிழ்ச்சி என்று மகிழ்ச்சி அலைகளை தம் வாழ்க்கையில் கொண்டாடத்தொடங்கும் போது உழைப்பின்மை, தொழில் இன்மை, வஞ்சகம், சூது, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழத்தல், இதனால் விரக்தி, அசூயை, பொறாமை, எரிச்சல், பழிவாங்கல் போன்ற கடல் சுழி, புயல் காரணிகளை தமது வாழ்க்கைக்குள் ஆகர்ஷித்து தமது வாழ்க்கையை புயல் நிறைந்த வாழ்க்கையாக தமது மனதினால் ஆக்கிக்கொள்கின்றனர்.
உண்மையில் புயலும், சூறாவளியும் நீண்ட நேரம் இருக்க முடியாதவை; அதேவேளை அவற்றில் மாட்டிக்கொண்டால் தப்பவும் முடியாதவை. இதுபோல் எமது வாழ்க்கையில் பொறாமை, அசூயை, பழிவாங்கள் போன்ற புயல்கள் நடைபெறும்போது, சூறாவளியின்போது எப்படி அமைதியாக பாதுகாப்பான இடத்தில் மறைந்திருந்துவிட்டு பின்னர் வெளிவருகிறோமோ அதுபோல் அமைதியாக இறைவனிடம் சரணடைந்து இருப்பது மிக உயர்ந்த பக்குவம்!
பலர் தமது வாழ்க்கையை கரையை நோக்கிச் செலுத்தாமல் சுழியையும், சூறாவளியையும் உருவாக்குவதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். இது ஒரு அறியாமை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.