ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தில் மனோ நாசம் - மனதை இல்லாமல் ஆக்குதல் என்ற கோட்பாடு இல்லை; மனதை இல்லாமலாக்கினால் எப்படி மனமுடைய மற்றைய மனிதர்களுக்கு உதவுவது. ஆகவே பதஞ்சலி கூறும் சித்த விருத்தி நிரோதகம் என்ற நிலை மூலம் உயர்ந்த மனதை (higher mind) அடைந்த பின்னர் படிப்படியாக முன்னேறிச் செல்ல வேண்டும். இப்படி உயர்ந்த மனதைப் பெறுவதினால் சாதகன் இன்னும் பலருக்கு ஒளி நிலையைத் தரமுடியும்.
அறியாமை, அகங்காரம், விருப்பு, வெறுப்பு, பயம், இந்த ஐந்தின் அடிப்படையில் மாத்திரம் சிந்தனையாக சித்த விருத்திகளுடன் இருக்கும் நிலை மனம் (mind) அல்லது தாழ் மனம் (lower mind) எனப்படுகிறது. இதுவே எம் எல்லோரது நிலையும். இந்த ஐந்தையும் பஞ்சகிலேசங்கள் என்கிறார் பதஞ்சலி.
இந்த நிலையில் இருந்து விருத்திகளடங்கிய ஏகாக்ர சித்தம் பெறுதல் உயர்ந்த மனதைப் (higher mind) பெறுதல் எனப்படும். இதைப் பதஞ்சலி தாரணா சித்தி என்கிறார். இப்படி தாரணா சித்தி அடைந்தவர்கள் மாத்திரமே நுண்மையான விஷயங்களைப் புரியவேண்டும்; பௌதீக அறிவியலில் புதிய அறிவினைக் கண்டுபிடிப்பவர்கள் இத்தகைய தாரணாஸக்தி உடையவர்கள்; யோகசூத்திரம், புராணங்கள், தந்திரங்கள் இவற்றைப் புரிந்துகொள்ள ஏகாக்ர சித்தம் தேவை; சர்வதர்மோத்ர ஆகமத்தில் ஞானபாதத்தைப் புரிந்துகொள்ள யோகத்தால் பெறப்பட்ட ஏகாக்ர சித்தம் தேவை என்பது முதல் நிபந்தனையாக வைக்கப்படுகிறது.
உயர்ந்த மனதைப் பெற்றால் அதை புத்தியைத் தூண்டும் பேரொளியினுடன் சேர்த்தால் ஒளிமிகுந்த மனதைப் (illumined mind) பெறலாம். இந்த ஒளிமிகுந்த மனம் வாய்த்தால் எந்த ஒருவிடயத்திலும் தெளிவு (clarity) பிறக்கும்.
ஒளிமிகுந்த மனம் உண்மையான தெய்வ ஞானத்தினை அடையத்தொடங்கும்; இதன் பிறகு தெய்வ ஞானமான மனமாக (intuitive mind) மாறும் இந்த மனம் பிரபஞ்சத்தின் சூஷ்ம தன்மைகளை விளக்கும். இந்த மனதை அடையாமல் ஞானபாதக் கருத்துக்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இன்று சித்தாந்தம், வேதாந்தம் பற்றி கருத்துத் தெரிவிக்கும் ஆற்றல் பெற இந்த தெய்வ ஞான மனம் அவசியம்.
தெய்வ ஞான மனம் கிடைத்தால் அது தெய்வ சக்தியுள்ள மனமாக (over mind) மாறத்தொடங்கும். இப்படி மாறிய மனம் தெய்வ ஆற்றல்களை ஈர்த்து செயற்படும் தெய்வ ஆற்றலுள்ள மனமாக செயற்படும்.
இதன் பிறகு இந்த தெய்வ சக்தியுள்ள மனம் முழுமையான ஸத்திய ஒளி, ஆனந்தம், சைதன்யம் நிறைந்த மனமாக சத்திய மனமாக (super mind) மாறினால் பரிப்பூரண தெய்வ நிலை பெறுகிறான் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.