நீங்கள் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்த விரும்புகிறீர்கள், இதற்கு ஒரு தொழில் சார்ந்த நிபுணரை அழைக்கிறீர்கள். அவரிடம் உங்கள் வீட்டைப் பற்றியோ, அதன் அமைப்பற்றியோ, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியோ எதையும் சொல்லாமல் வெறுமனே வீட்டை அழகுபடுத்தித் தரும் படி கேட்கிறீர்கள். இப்போது அந்த நிபுணர் அதிக நேரம் செலவிட்டு உங்கள் வீட்டை முழுமையாக படித்து அதன்படி திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இதற்கு அதிக நேரமும் கட்டணமும் செலவாகும்.
நீங்கள் உங்கள் வீட்டை முழுமையாகக் கற்று, எதைத் திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் பட்டியலிட்டு அதில் நீங்களே திருத்தக்கூடியவற்றை நீங்கள் செய்துகொண்டு மிகுதியை நிபுணரிடம் கையளித்தால் வேலை வேகமாகவும், செலவும் குறைவாகவும் இருக்கும்.
இதே தத்துவம்தான் நாம் மந்திர சாதனையில் எமது கர்மங்கள் நீங்க, விருப்பங்கள் நிறைவேறவும் பயன்படுகிறது. எம்மிடம் சங்கல்பமும், சுய ஆய்வும் அதன் மூலம் எமது பலகீனங்களை நீக்குவதற்கு உறுதியும் இல்லாத போது பலன் பெற அதிக மந்திர ஜெபமும், நீண்ட சாதனையும் தேவை. அதேவேளை உறுதியான சங்கல்பமும், தொடர்ச்சியான சாதனையும், எமது பலவீனங்களை ஆராய்ந்து அவை நீங்கவேண்டும் என்ற இச்சாசக்தியையும் செலுத்தும் போது சாதனை துரிதமாகப் பலனளிக்கும் !
ஆகவே துரிதமாகப் பலன் பெற நீங்கள் உறுதியாக உங்கள் சங்கல்பசக்தியை பிரயோகிப்பதும், அது நடைபெறுவதற்கு உங்களில் தடையாக இருக்கும் பண்புகளை நீக்குவதும் அவசியம்! இல்லாவிடில் நீண்டகாலம் தொடர்ச்சியாகச் சாதனை செய்ய வேண்டியிருக்கும். அடிப்படையில் தமாஸீக புத்தியில் இருப்பவர்கள் நீண்டகாலம் சாதனை செய்து பலன் கிடைக்கவில்லை என்றவுடன் ஸாதனையில் சோர்ந்து விலகிவிடுவார்கள்.