குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 22, 2023

சிவகீதையில் சூக்ஷ்ம தேகம் பற்றிய விளக்கம்

 

சூக்ஷ்ம தேகம்
________________

நேற்றைய சிவகீதைப் பதிவில் ஒரு அன்பர் சூக்ஷ்ம தேகம் என்றால் என்ன என்று கேட்டிருந்தார்; அதுபற்றிய ஒரு சிறுவிளக்கம்:

சித்தர்களும், ரிஷிகளிம் மனிதனை எப்படி ஒரு இயக்கமுள்ள ஒரு கருவியாகப் பார்த்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முதல் படியாகும்;

ஆன்மா என்ற உயிரைச் சூழ இருபத்தி நான்கு தத்துவங்கள் கருவிகள் எம்மை இயக்குகிறது. ஆன்மாவைச் சூழ இருப்பதால் இவை ஆன்ம தத்துவங்கள்.

இவையாவன
1. உடலைக் கட்டமைக்கும் பஞ்ச பூதங்கள் ஐந்து (05)
2. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற பஞ்ச ஞானேந்திரியங்கள் (05)
3. இந்த ஞானேந்திரியங்களால் பெறும் அனுபவங்களான பார்த்தல், கேட்டல், மணத்தல், சுவைத்தல், உணர்தல் என்ற பஞ்சபுலன்கள் (05)
4. வாக்கு, கை, கால், குறி, குதம் என்ற பஞ்ச கர்ம இந்திரியங்கள் (05)
5. மனம், புத்தி சித்தம் ஆங்காரம் என்ற அந்தக்கரணம் நான்கும் (04)

5+5+5+5+4 ஆக மொத்தம் ஆன்ம தத்துவம் 24 ஆகும்.

இந்த இருபத்தி நான்கு தத்துவங்களது இயக்கம் நடைபெறுவது பிராணன் எனும் உயிர் ஆற்றலால். இந்தப் பிராணன் உடலிற்குள் செயற்படும் போது ஐந்து விதமான நிலைகளால் பஞ்சப் பிராணன்கள் என்று அழைக்கப்படும். இவை கண்ணுக்குத் தெரியாதவை; இயக்கத்தால் மாத்திரம் அறியப்படுபவை. சூக்ஷ்மமானவை.

மேலேயுள்ள 24 ஆன்ம தத்துவங்களில் ஞானேந்திரியங்களும், அவற்றை உணரும் அந்தக்கரணங்களும் சூக்ஷ்மமானவை.

ஒரு மனிதனின் சூக்ஷ்ம தேகம் என்பது
பஞ்சபுலன்கள்+ அந்தக்கரணங்கள் + பஞ்சப்பிராணன்களின் கலவை.

கண்ணால் பார்க்கும் போது கண் ஸ்தூலம், கண்ணினுடைய பார்வை எங்கு பதியப்படுகிறதோ அந்தப்பகுதியின் "அனுபவம்" அந்தக்கரணங்களாலும், பிராணனாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையை சூக்ஷ்ம தேகம் என்று சொல்லப்படுகிறது.

எங்களுடைய சூக்ஷ்ம தேகம் எனப்படுவது நாம் எமது புலன்களால் பெறும் அனுபவமும், அந்த அனுபவம் எமது மனம் என்று பொதுவாகச் சொல்லப்படும் அந்தக்கரணம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதும், இதற்குரிய பிராண ஓட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதும் சேர்ந்த கலவையாகும்.

எனவே சூக்ஷ்ம தேகத்தைப் புரிந்துகொள்ள ஞானேந்திரியங்களால் பெறும் அனுபவங்களான பார்த்தல், கேட்டல், மணத்தல், சுவைத்தல், உணர்தல் என்ற பஞ்சபுலன்கள், மனம், புத்தி சித்தம் ஆங்காரம் என்ற அந்தக்கரணம் நான்கும், பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்ற பஞ்சப் பிராணன் கள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.

இலகுவாக விளங்கிக் கொள்வதானால் கனவு சூக்ஷ்ம தேக அனுபவம்; இந்த பஞ்ச ஞானேந்திரியம், அந்தக்கரணங்கள், பஞ்ச பிராணன் உடலிற்குள் ஏற்றுக்கொண்ட அனுபவனகளை மீட்டிப் பார்த்தல் கனவு! இதை செம்மைப்படுத்தி எமது இச்சாசக்தியால் பயணிக்க வைப்பது சூக்ஷ்ம தேக பயணம் - astral travelling.

இவை ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்த யோகசாதனையில் பயிற்சி உண்டு; எமது பாடத்திட்டங்களில் கற்பிக்கப்பட்டிருக்கிறது,

கேள்விக்கு நன்றி Periyar Selvan Pitchaimani

நல்ல சரியான கேள்விகள் மூலம் இன்னும் ஆழமான விஷயங்களை உரையாட முடியும்! 

See less

கால பைரவ உபாசனையும் கால ஞானமும்

 கடந்த நவராத்ரி முடித்துவிட்டு நீண்ட கொரோனாக் காலத்தின் பின்னர் பாரதத்திற்கு விஜயம் செய்ய வேண்டியிருந்தது. எனது குரு நாதர் கூறிய கடமைகளில் ஒன்றான பைரவ உபாசனை புரச்சரணம் காசியில் பூர்த்தி செய்யச் சொல்லியிருந்த ஒரு கடமை இனிதே பூர்த்தியாகியது.

அங்கிருந்து வந்தத்திலிருந்து என்னுடன் வந்த மாணவர்களுக்கு புறவயமாக காலச்சக்கரம் வேகமாக நகரத்தொடங்க எனக்கோ அகவயமாக நகரத்தொடங்கிவிட்டது.
தேவியின் வித்யா தத்துவத்தில் உள்ள கால நியதி தத்துவங்களைப் புரிந்துகொள்ளும் தளம் தான் ஜோதிஷ சாத்திரம் என்பது புரிய ஆரம்பித்தது.
ஜோதிடம் என்பது தமிழில் பலரும் நமக்கு நடப்பதைக் கணிப்பது என்று மாத்திரம் சிந்திக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரம் முற்காலத்தில் காலத்தையும் (time) & இடத்தையும் (Space) பொருத்தி சிந்திக்கும் ஒரு மெய்யியல் முறையாகும்.
காலத்தையும் நேரத்தையும் நேர்கோடாகக் கருதினால் அடிமுடி காணமுடியாத ஒன்றாகத் தான் இருக்கும். தோற்றமும் முடிவும் இல்லா, ஆதியும் அந்தமும் இல்லாத ஒளிப்பிழம்பாக ஆகி விடும். மனித மனத்தால் இதை அறிந்துகொள்ள முடியாது.
ஆனால் நாம் சூரிய, சந்திர, பூமி, நட்சத்திர இயக்கங்களை வைத்துக்கொண்டு நாம் புலன் களாலும் மனதாலும் உணர்ந்தறியக்கூடிய இரவு பகல், ருதுக்கள், அயனங்களை வட்டஇயக்கமாகமான சார்புக் காலத்தினை உணரக்கூடியதாக இருக்கிறது.
காலம் நேர்கோடாக இருக்கும் போது ஆதியும் அந்தமும் இல்லாத நிர்குணமான எல்லையற்ற பரம்பொருளான இறைவன் என் கிறோம்.
காலம் வட்டச் சுழற்சிக்குட்பட்ட மீண்டும் மீண்டும் தோன்றும் தன்மையுடைய இயக்கத்தை சூரியன் சார்பாக பார்க்கும் போது இரவு பகலாக, ருதுக்களாக, அயனங்களாக கருதுகிறோம்.
சூரியனைச் சார்பாக வைத்து காலத்தை பகல் இரவு, மாதம் வகுக்கிறோம்
சந்திரனைச் சார்பாக வைத்து காலத்தை வளர் பிறை, தேய்பிறை, மாதத்தை வகுக்கிறோம்.
யோகத்தில் புருவமத்தியைத் தாண்டி மனோன்மணி அவஸ்தைக்குள் செல்லும் போது யோகி காலத்தைக் கடக்கிறான் என்று சொல்லப்படுகிறது, இதன் அர்த்தம் அவன் கிரக, நட்சத்திரம் சார்பான வட்ட இயக்க காலத்தை கடந்து நேர்கோட்டு இயக்கமான காலத்திற்குள் பிரவேசிக்கிறான் என்று அர்த்தம். மனித உடலில் இந்த நேர்கோட்டு கால இயக்கம் சுழுமுனை நாடியாகக் குறிப்பிடப்படுகிறது. வட்ட இயக்க காலம் முலாதாரத்தில் தொடங்கி, புருவ மத்தியில் முடியும் ஒன்றுடன் ஒன்று இனைந்த மூன்று இடத்தில் (பிரம்ம, விஷ்ணு, ருத்ர) முடிச்சுகள் உள்ள இடகலை பிங்கலை நாடிகளாகக் குறிப்பிடப்படுகிறது. நட்சத்திர மண்டலத்தில் இந்த மூன்று கிரந்தி கண்டாந்தமாக நீர் இராசிகள், நெருப்பு ராசிகளைச் சந்திக்கும் புள்ளிகளாக குறிப்பிடப்படுகிறது.
முதல் முடிச்சு மீனராசியின் முடிவும் மேஷ ராசியின் தொடக்கத்திலும்
இரண்டாவது முடிச்சு கடகராசியின் முடிவும் சிம்ம ராசியின் தொடக்கமும்
மூன்றாவது முடிச்சு விருட்சிக ராசி முடிவிலும் தனுசு ராசி ஆரம்பத்திலும்
இருக்கின்றன.
பொதுவாக ஜோதிடத்தில் இந்தப் புள்ளிகளை இரண்டு நேரான கையிற்றைக் கட்டி மூன்று வட்டங்களை ஆக்கும் உருவமாக உருவக்கிக்கலாம். இப்படித்தான் இடலை பிங்கலை நாடிகள் உடலில் முடிச்சுக்களாவதாக யோக நூல்கள் குறிப்பிடுகின்றன.
உடலின் இந்த முடிச்சுத் தன்மையால் சாதாரண நிலையில் காலத்தை சூரிய சந்திர, நவக்கிரக, நட்சத்திரம் சார்பாகவே மனிதனால் உணர முடியும். ஆனால் புருவத்தியில் உணர்வை நிறுத்தக்கூடிய யோகி நேர்கோட்டுக் காலத்தை அனுபவிக்க முடியும்; உண்மையில் இந்த நிலையை காலாதீதம் என்றே எமது தத்துவங்கள் குறிப்பிடுகின்றன.
ஜோதிடம் என்பது சூரிய சந்திர, நவக்கிரக, நட்சத்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலான சார்புக் காலதத்துவங்கள்.
கணித்தல் என்பது சார்புத்தளத்திலேயே செய்ய முடியும்; x இன் சார்பாக Y இன் இயக்கத்தைக் கணிக்க முடியும். இப்படி 27 நட்சத்திரங்கள் என்ற ஆள்கூற்றுத் தளத்தில் பிரதானமாக பிறக்கும் போது கிழக்கு வானத்தில் உதயமாகும் ராசி மண்டலத்தினை ஆரம்ப புள்ளியாக லக்கினமாக வைத்துக்கொண்டும், சந்திரன் நின்ற புள்ளியை வைத்துக்கொண்டும் எமது அகக் காலம் (internal time) புறக்காலம் (external time) எப்படி இயங்குகிறது என்ற கணிதமே ஜோதிடம்.
கடவுள் என்ற கோட்பாட்டினை உணரும் போது அவன் நேர்கோட்டு நேரத்திற்குள் வந்து விடுகிறான்; அறிவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சம் வளைவானது என்று மட்டுமே அறிந்திருக்கிறார்கள்; அதனால் கடவுள் இருப்பதற்கான சாத்தியம் இல்லை! ஆனால் யோகம் காலாதீதமாக நேர்கோட்டு காலத்தை அனுபவிக்க முடியும் என் கிறது.
ஹர ஹர மஹா தேவ
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே!
கீழேயுள்ளது எமது மாணவர்கள் சார்பாக காசி காலபைரவருக்குரிய அலங்காரம்!

ஸோமனின் ஆன்ம அனுபவங்கள்

 இன்று ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள்!

ஸோமனுக்கு சிவராத்ரி மிகச்சிறப்பான நாள்! சிறுவயதில் குருவுடன் இருக்கும் காலத்தில் குருநாதர் ஸோமனை ஒரு எட்டு மாதங்கள் தன்னுடனே தங்கும் படி கூறி சிவராத்ரி தினத்தின் துரிய சந்தி பூஜையின் பின்னர் தீட்சையளித்தார். அந்தத் தீட்சையின் பின்னர் " தரவேண்டியதெல்லாம் விதைகளாக சித்தத்தில் பதிப்பித்தாகிவிட்டது; அவை வளர்ந்து விருட்சமாகி கனியாகும் போது பறவைகள் தேடிவரும், இனி இங்கு வரத்தேவையில்லை, எனது காலில் விழ்ந்து ஆசீர்வாதம் வாங்கத்தேவையில்லை, சென்று படிப்படைப் பார்க்கலாம்" என்று ஆசி கூறி அனுப்பிவிட்டார்.
இந்த சிவராத்ரி ஸோமன் குரு நாதர் அகத்தியரின் அருளால் சிவகீதை படித்து அதிலுள்ள யோக நுணுக்கங்கள் எல்லாம் தொகுப்பது என்ற குரு ஆணையை எடுத்துக்கொண்டு தனது நவாவரண பூஜை, சிவபூஜையைப் பூர்த்தி செய்து தியானத்திற்குச் சென்றான். தியானம் சற்று சமாதி நிலையை எட்டியபோது,
ஒரு புராதன் கோட்டையின் நந்தவனம் சூழ் முற்றத்தில் பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை அமர்ந்திருக்க வரிசையாக ஒவ்வொருவரும் ஆசி வாங்குகிறார்கள், ஸ்ரீ அன்னை தலையில் தனது கையை வைத்து புன்முறுவலுடன் ஆசீர்வதிக்கிறார். ஸோமனும் அந்த வரிசையில் நிற்கிறான். அவனுக்கு அன்னை கையை வைத்து ஆசீர்வதிக்க ஸோமன் அன்னையே எனக்கு ஒரு பிரத்தியேகமான ஆசி வேண்டும் என்று விண்ணப்பிக்க அன்னை அன்னை தலையை அசைத்து ஆமோதிக்கிறார்.
அன்னையே, நான் பூரண யோக சித்தி பெறவேண்டும் என்று விண்ணப்பிக்க,
அன்னை புன்முறுவலுடன், கூர்ந்து கவனி, உன் சஹஸ்ரார சக்கரத்திலிருந்து பொன்னொளி புருவமத்தியில் நிறைகிறது என்று கூறி மீண்டும் கையை தலையில் வைக்கிறார்.
தலையைத் திருப்பி பின்னிருக்கும் தன து உதவியாளரிடம் "இதோ இளவரசன் வந்துவிட்டான்" என்று சொல்ல அங்கிருப்பவர்கள் பரபரப்புடன் ஸோமனுக்கு வணக்கத்துடன் மரியாதை செலுத்துகிறார்கள்; பின்னர் மரியாதையுடன் கோட்டையினுள் அழைத்துச் செல்கிறார்கள்.
ஸோமனின் தியானக் காட்சி அனுபவம் கலைகிறது; சிவராத்ரி பிரம்ம முகூர்த்த நேரத்தை அண்டிவிட்டது; எழுந்து வில்வார்ச்சனையைப் பூர்த்தி செய்து தனது சிவராத்ரி அனுஷ்டனத்தைப் பூர்த்தி செய்தான்,
ஸோமனின் ஆன்ம அனுபவங்கள் தொடர்கிறது....

Saturday, February 18, 2023

 மூன்று தளங்களுடன் கூடிய வில்வம் இலை சாத்தி சிவராத்ரி அனுஷ்டானம் பூர்த்தி!

வில்வ அஷ்டோத்திரம் என்பது பிரிங்கிரிடி முனிவரால் அருளப்பட்டது! இவர் சிவனைத்தவிர யாரையும் வணங்க மாட்டேன் - சிவமாகிய சக்தியையும் வணங்கமாட்டேன் என்ற பிடிவாதம் உடையவர்; பிறகு சக்தியைத்தான் உபாசிக்க முடியும்; சக்தி இருந்தால்தான் எல்லாம் என்ற உண்மை உணரவைக்கப்பட்டவர்!
அவருடைய வில்வ் அஷ்டோத்திர சத நாமாவளி வில்வ அர்ச்சனையின் மூலம் தத்துவங்களை தியானிக்க நல்ல ஸ்தோத்திரம்!
சிவம் மாத்திரம் என்று உலகமாகிய பிரகிருதியை இயக்கும் சக்தியை மறக்காமல் இருக்க வில்வ அஷ்டோத்திர சதம் படிக்க வேண்டும்.
இதன் விளக்கம் நல்ல அரிய தகவல்களைத் தருகிறது.



Friday, February 17, 2023

சிவகீதை

 - சிவ சிவ -


சிவகீதை பற்றி எழுதத் தொடங்கி அனேகருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது. இந்த நூலை அச்சிட்ட சித்தம் சிவமய அறக்கட்டளையினருக்கு பல அன்பர்கள் நூல் பெற விண்ணப்பித்த வண்ணம் இருக்கிறார்கள்! இதன் தொடர்ச்சியாக சிவகீதையை நாம் சித்த யோக நூல்கள் படிப்பதுபோல் முறைப்படி உரையாடிக் கற்கலாமே என்ற யோசனை எமது மாணவர்களால் முன்வைக்கப்பட்டது!

நல்ல விஷயத்தை தாமதிக்கக் கூடாது! சிவராத்ரியிலேயே தொடங்கி விடலாம் என்று முடிவு எடுத்தாயிற்று!

திட்டம் இதுதான் -
சிவகீதையில் 16 அத்தியாயங்கள் இருக்கிறது; நாளை சிவராத்ரி நூலைப்பற்றிய முழு அறிமுகம் முதல் வகுப்பாக நடைபெறும். பிறகு மாதம் இருமுறை வரும் பிரதோஷங்களில் இரவு 0900 மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக உரையாடல் நடைபெறும்.

சிவ அருளைப் பருக எவருக்கு தடையில்லை! எல்லோரும் வரலாம்.

Zoom Meeting ID: 873 9681 6612
Passcode: 012478

ஆடிப்பாடி சிவராத்ரியை கொண்டாடுவது புலன்கள் வெளியே ஓடித்திரிபவர்களுக்கு! உள்ளே மனதினை ஒடுக்கி சிவ மௌனத்தில் அருள் பெற விரும்பவர்கள் அவரவர் வீட்டிலிருந்து ஜெப தபங்களுடன் சிவகீதை படிப்பது மிக ஆழ்ந்த அமைதியையும் ஆனந்தத்தினையும் உண்டாக்கும்.

நாளை சிவராத்ரி அன்று அகத்திய சித்த மரபுப் படி மூல குரு மந்திரம் - இதுவும் சிவ மந்திரம்தான் - ஸ்தூல, சூக்ஷ்ம, அதிசூக்ஷ்ம பஞ்சாஷரமும், ம்ருத்யுஞ்ஜெய மந்திர ஜெபத்துடன் வகுப்பு ஆரம்பமாகும். சாதனை பயில விரும்புவர்கள் நாளை தொடங்குவது மிகச் சிறப்பானது.

அகத்தூண்டல் உள்ள அனைவரும் வருக! 



Saturday, February 11, 2023

சிவசின்னமாகிய விபூதி எனும் உடலாரோக்கியம் தரும் அக்னி அஸ்திரம்

சிவ கீதையின் உரையாடல் எல்லாப் புராணங்களைப் போல் சுத மகரிஷி கூறியதாக ஆரம்பித்து, பிறகு அகத்திய மகரிஷி இராமருக்கு உபதேசித்ததைக் கூறி பிறகு இராமர் தன் தபஸால் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற அனுபவத்தை யோக இரகசியங்களாக உரைக்கிறது. 

இதில் மிக முக்கியமான ஒன்று விபூதி பற்றிய இரகசியம்; விபூதி - திரு நீறு என்பது என்பது சைவர்களால் நெற்றியில் அணியப்படும் சிவ சின்னங்களில் ஒன்று என்றும் இதற்கு விளக்கம் கேட்டால் சாதாரண மனிதன் பயப்படும் படி நாம் எல்லாம் ஒரு பிடிசாம்பலாகப் போகிறோம் என்று ஒரு தத்துவத்தைக் கூறி அறநெறியில் இறைச் சிந்தனையோடு வாழ வேண்டுமென உணர்த்துவதாக விளக்கம் சொல்லுகிறார்கள். 

ஆனால் சிவகீதை இப்படித் தத்துவமாக விபூதியைச் சொல்லவில்லை. சித்த மருத்துவத்தின் மிக உயர்ந்த மருந்துகளில் ஒன்று சுண்ணம் அல்லது பஸ்பம். இந்த மருந்துகளின் ஒரு உயர்ந்த தன்மை அதன் உயர் அக்னித் தன்மை. சித்த ஆயுர்வேத மருந்துகளின் அடிப்படை பஞ்சபூதக் கோட்பாடு; உடலியல் இயக்கம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு அக்னியின் அளவு சரியாக இருக்க வேண்டும். அக்னியின் அளவு கூடி உடலை சமப்படுத்தும் தன்மையினை நாம் காய்ச்சல் என்கிறோம். உடலில் ஏதாவது நோய்க்  கிருமிகள் நுழைந்தால் சுரம் அல்லது காய்ச்சல் உண்டாவதன் மூலம் அக்னி அதிகரித்து உடல் ஆரோக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆயுர்வேதத்தில் சுரம் என்பது உடலில் உறையும் சிவமாக்கிய அக்னியின் சீற்றம் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாட்சரத்தில் சிகாரம் அக்னி பூதத்தைக் குறிப்பிடுகிறது. 

இப்படிப்பட்ட அக்னியின் தன்மையை உடலில் அதிகரிக்கவே விபூதி பயன்படுத்தப்படுகிறது; தலையில் நீர்கோர்த்தால் விபூதிப்பத்து நீக்குகிறது என்பது விபூதியின் அக்னி அமிசத்தாலேயே. 

சிவகீதை அத்தியாயம் 03, சுலோகம் 31, 31 இல் விபூதி அணிபவன் அக்னித் தன்மை அதிகரிப்பதால் ஒருவன் வீரியவானாகிறான் என்று சொல்லப்படுகிறது. பஸ்ம ஸ்நானம் செய்வதால் உடல் அக்னி சிறந்து புலனடக்கம் வாய்க்கிறது என்ற உண்மையைச் சொல்லுகிறது. 

இந்த சுலோகம் சித்த மருந்துகளில் சுண்ணம்/பஸ்மம் ஆகியவற்றிற்குரிய பஞ்சபூதக் கோட்பாட்டினைப் புரிந்துக் கொள்ளவும் உதவுகிறது. 

சிவ சின்னங்களில் விபூதி என்ற ஐஸ்வரியம் ஒருவனில் அக்னித் தன்மையை சரிப்படுத்தி உடலாரோகியத்தைத் தருகிறது என்ற உண்மை சிவகீதையில் விளங்கப்படுத்தப்படுகிறது. 

விபூதி - திருநீறு உடலாரோக்கியம் தரும் அக்னி அஸ்திரம்.


Friday, February 10, 2023

சிவ ரகசியம்

சிவராத்திரியை முன்னிட்டு சிவ ரகசியம் என்று ஒரு தொடர் ஒவ்வொரு நாளும் எழுதலாம் என்று திருவருளால் எண்ணம் உண்டாயிற்று! 

எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் "சிவகீதை" யைக் கண்ணில் காட்டியது திருவருள்! 

சிவ கீதை பத்ம புராணத்தில் வரும் ஒரு யோக நூல்! மானிடத் தன்மையுள்ள ஸ்ரீ இராமருக்கு மூன்று ரிஷிகள் குருவாக வாய்த்து தெய்வத் தன்மையை விழிப்பிக்க உதவுகிறார்கள். 

முதலாவது குல குருவான வஷிஷ்டர் - மனம் பற்றிய யோக உண்மைகளை யோக வஷிஷ்டமாக உபதேசிக்கிறார். 

பின்னர் விஸ்வாமித்திரர் கற்ற அஸ்திர வித்தை முதல் கொண்டு field training கொடுக்கிறார். 

இறுதியாக ஸ்ரீ அகத்திய மகரிஷி விரஜா தீட்சை மூலம் சிவபரத்துவம் உண்டாக்கி, பின்னர் பலாதிபலா, ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்ரீ காயத்ரி சாதனையின் உயர்ந்த மந்திரங்களை உபதேசித்து சிவ உபாசனையுடைய இராவணனை வெல்லும் ஆற்றலை உருவாக்குகிறார். 

சிவகீதை படிக்கும் ஒருவனுக்கு இயல்பாகவே தமது மன, உடல் பலவீனங்களை உணர்ந்து அதிலிருந்து மீள குருவின் வழி தீட்சையால் உயரலாம் என்ற உண்மை ஆழமாகப் பதியும். 

வேதங்களின் சாரமான காயத்ரி எனப்படும் சாவித்ரி மந்திரம் எல்லாம் சிவபரமானது என்று அத்தியாயம் - 06, சுலோகம் 14 இல் சொல்லுகிறார். 

யாருக்கு சிவ உபாசனையில் மனம் செல்கிறதோ அவன் எத்தகையவனாக இருந்தாலும் அவனுக்கு மோட்சத்திற்குரிய அதிகாரத்துவம் வாய்க்கிறது என்று இறுதி அத்தியாயத்தின் முதல் மூன்று சுலோகங்கள் எடுத்துரைக்கிறது. சிவ தியானத்திற்கு பிறப்பு ஒரு தடையில்லை என் கிறது. 

இன்னும் பல யோக இரகசியங்களைப் பேசுகிறது! ஒவ்வொரு நாளும் சிறு சிறு பதிவுகளாகப் பார்ப்போம்.


Thursday, February 09, 2023

ஜோதிடம்

ஜோதிடம் பேசுவோம்... எனக்கு சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு ஜோதிடம் தீர்வு தருமா என்பது பற்றி ஆர்வமில்லை! ஆனால் மறையியல் தொடர்பான விதிகளில் ஆர்வமுண்டு. 

அத்தகைய சில விதிகள் கீழே பதிவிடுகிறேன்; ஜோதிட நிபுணர்கள் கருத்தாடலைச் செய்யலாம். 

ஒருவன் யோக சாதனையில் சித்தி பெற, மந்திர சித்திக்குரிய அமைப்பு கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது. 

ஞானயோக ராஜயோக சித்திக்கான அமைப்பு:

___________________________________

ஒன்பதாமிடம் சுக்கிரனாவது, வியாழனாவதிருந்தால் அவனுக்கு ஞான யோகம், ராஜ யோகம் லயிக்கும்; தீர்காயுசும் உண்டு.

அஷ்டாங்க யோகம் முடிப்பவன்

______________________________________

பத்தாமிடத்ததிபதி ஐந்தாமிடத்ததிபதி இவர்களுடன் வலிவு பெற்ற கிரகங்கள் கூடியிருந்தால் அவன் அஷ்டாங்க யோகம் முடிப்பான்.

மந்திர சித்தனுக்குரிய கிரக அமைப்பு

______________________________________________

இலக்கினாதிபதி இருக்கின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம், கேந்திரம் - திரிகோணம் - இப்பேர்கொத்த பதவிகளிலிருக்கப் பிறந்தவன் அவனுடய பருவ காலத்திலே மூலிகை - வசியம் - மாந்திரீகமறிந்து சித்த புருஷனாக இருப்பான்.

யோக சித்தி என்பது இறையருளும், குருவருளாலும் நிகழ்வது; இங்கு ஜோதிடம் என்ன சொல்கிறது என்பது பற்றிய உரையாடல் மாத்திரமே நாம் உரையாட எத்தனிக்கிறோம். 

ரொம்ம சீரியஸா ஜோதிடம் உண்மையா, பொய்யா? நான் நம்பவில்லை போன்றவர்கள் இந்தப் பதிவிற்குள் உள் நுழைந்து நேரத்தை வீணாக்க வேண்டாம். இதில் ஆர்வமும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கான உரையாடல்.


மாத்தளை

எமது வீட்டு மொட்டை மாடியிலிருந்து- 

மலைகள் நிறைந்த மாத்தளை - 

நக்கிள்ஸ் மலைத்தொடர்…

தமிழ் நாட்டில் குற்றாலம், செங்கோட்டை தாண்டி ஆரியங்காவு சென்ற போது ஊரில் இருக்கும் உணர்வு தந்தது! 

பொதுவாக இங்கு வரும் இந்திய நண்பர்கள் கேரளம் போல் இருக்கின்றது என்பார்கள். 

வெகு விரைவில் எனது அலுவலகம், Sri Shakthi Sumanan Institute - Ancient wisdom for modern minds Library ஆகியவையும் SRISTI யோகப் பள்ளியும் அமைய உள்ளது.

நான் எப்போதும் மலை உச்சியில் வசிப்பதை, பசுமையான மலைகள் நடுவில் இருப்பதை விரும்புவன். சிறுவயதில் எமது பாடசாலையில் பிள்ளையார் கோயிலை நோக்கி நின்று சிவபுராணம், தேவாரம் பாடும் போது பின்னால் இருக்கும் அழகு மலை கண்ணுக்குத் தெரியும்.


Tuesday, February 07, 2023

comments

நண்பர்களே, 

உங்கள் கருத்துக் கணிப்பிற்கு! பதிலை comment இல் இடுங்கள்! 

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு துறையில் மிகப் பிரபலமான ஒருவரின் மகன்; அவரும் மிக உயர்ந்த தொழிலில் இருப்பவர். நான் போடும் பதிவுகளுக்கு கருத்துத் தெரிவிப்பார். குறித்த சில கருத்துக்கள் அவருடைய அனுமானமாக இருக்கும்; அதில் தகுந்த வாசிப்பினை, புரிதலைக் கொண்டிராமல் தான் ஒரு துறையில் வித்தகர் ஆகவே நாம் உரையாடும் அந்தத் துறையிலும் தனக்கு வித்தகத் தன்மை உண்டு என்று உறுதியாக நம்பி கருத்துரைப்பார். 

ஒரு நாள் அவரின் கருத்தில் ஆழம் இல்லை; உண்மையிலேயே நீங்கள் வாசித்து விட்டுத் தான் உரையாடுகிறீர்களா என்று கேட்க அவரது ego சுட்டுவிட்டது; என்னை block செய்துவிட்டார். 

இன்னுமொருவர் பிரபலமானவர் இதே போல் இப்போது block செய்துள்ளார்.

இதே போல் தம்பியொருவர் எப்போதும் தனக்குள் ஒரு கோட்டை கட்டிக் கொண்டு அதற்கு மாத்திரம் சவாரி செய்ய விரும்புபவர்; அவர் கட்டிய கோட்டைக்குள் நானும் சவாரி செய்ய வேண்டும் என்று விரும்பி என்னை இழுக்க நான் கூறிய கருத்தைக் கேட்டு கோபமுற்று எனது தொடர்பினை தடைபடுத்திவிட்டார். 

நாம் நம்புபவற்றைப் நாம் பற்றுகிறோம்; பற்றியவை உடையும் போது தாங்கமுடியாமல் போகிறோம். 

என்ன நினைக்கிறீர்கள்? நான் அவ்வளவு கடுமையாகவா கருத்திடுகிறேன்?

லைக் - emoji ஐ விட உங்கள் கருத்துக்கள் பெறுமதியானவை?


Sunday, February 05, 2023

தைப்பூசம் நிறைந்த பௌர்ணமி

இன்று தைப்பூசம் நிறைந்த பௌர்ணமி!

செங்காந்தள் பூவுடன் அன்னைக்கு, மகா கணபதி, ஸ்ரீ குரு நாதர் அகத்திய மகரிஷிக்கு அலங்காரம், தர்ப்பணம்! 

இன்று அன்னையின் முதல் நாமமாக ஸ்ரீ லலித சஹஸ்ர நாமத்தில் கூறப்படும் நாமத்தின் விளக்கம் பார்ப்போம்!

ஸ்ரீ மாதா (01) 

உயர்வற உயர் நலமாகிய திருவடிவான தாய்

தாயினை நாம் மாதா என்கிறோம். மாதா என்றால் அம்மா. இங்கு ஸ்ரீ என்ற முன்னடைமொழி முக்கியமான ஒன்று. ஸ்ரீ என்பது தாய்மையின் உச்ச நிலையினை குறிப்பது. மனித தாய் தனது குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து அன்பையும் பாசத்தையும் புகட்டுபவள். ஆனால் பிள்ளைக்கு வரும் துபன்பங்களை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட துரதிஷ்டங்களை நீக்ககூடிய சக்தி உடையவள் அல்ல. லலிதாம்பிகை மனித தாயிற்கும் மேலானவள். அவள் தனது குழந்தைகளின் துன்பங்களை, துரதிஷ்டங்களை அகற்றும் வல்லமை உள்ளவள். குழந்தைகள் எனும் போது இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் அவளது குழந்தைகளே. அவளே இந்த முழுப்பிரபஞ்சத்திற்கும் அண்டங்கள் அனைத்திற்கும் தாயாவாள். அவள் மாதா என்று அழைக்கப்பட்டாளும் அவளே படைத்து, காத்து, அழிப்பவள். இந்த பிரபஞ்சம் அவளில் இருந்து உருவானது. அவளது ஆணைப்படியே உலகில் அனைத்தும் நடைபெறுகிறது. பிரபஞ்சம் அழியும் போது அவளிலேயே ஒடுங்குகின்றது. இந்த சம்ஸாரம் எனும் பிறவிச் சுழல் பிறப்பு, இருப்பு, இறப்பு என மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. சம்ஸாரம் ஒரு சமுத்திரம் போன்றது. அந்த சமுத்திரத்தின் அலைக்கு எதிராக நீந்துவது என்பது கடினமான ஒரு செயலாகும். இந்த சம்ஸாரத்தின் அலைகள் புலங்களின் செய்கையால் உருவாகிறது. புலன் கள் மனதின் மீது செல்வாக்கு செலுத்தி மனதினை ஆசையிலும் பற்றிலும் ஆழ்த்துகிறது. இந்த சம்ஸார ஸாகரத்தில் இருந்து எதிர் நீச்சல் போட்டு வெளியேறி இறுதி இலட்சியமான பிரம்மத்தியனை அடைவது ஸ்ரீ மாதாவின் ஆற்றலின் துணையால் மட்டுமே முடியும். அவளது அருளைப் பெறுவது அவளை வணங்குவதால் மட்டுமே சாத்தியமாகும். 

ஸ்ரீ மாதா என்பது ஸ்ரீ லக்ஷ்மி - எல்லவித செல்வங்களினதும் தெய்வம், சரஸ்வதி - எல்லாவித அறிவுகளின் தெய்வம், ருத்ராணி - அழிவை ஏற்படுத்தும் சக்தி ஆகிய மூவரின் தாய் எனவும் பொருள் கொள்ளலாம். 

துர்வாசகர் ஒரு உயர்ந்த ஞானியாவார், அவர் தேவியின் மேல் ஸ்ரீ சக்தி மஹிம்ன ஸ்தோத்திரம் எனும் அறுபது சுலோகங்கள் கொண்ட அவளை போற்றும் ஸ்தோத்திரம் ஒன்றினை செய்துள்ளார். அவர் ஸ்ரீ மாதாவினை சரணடைந்து கூறுகிறார் " ஹே மாதா! அதியுயர் இரக்க குணமுள்ளவளே! நான் பல பிறவிகளில் பலதாய்களுக்கு மகனாக பிறந்துள்ளேன், இன்னும் பல தாய்மாருக்கு மகனாக பிறப்பேன், எனது தாய்களின் எண்ணிக்கை அளவிடமுடியாது. பல பிறவிகளில் பல தாய்களை அடைகிறேன். நான் மீண்டும் பிறப்பெடுத்து துன்பத்தினை அடைவேனோ என்று பயமடைகிறேன். ஓ மாதா நான் உன்னை சரணடைந்தேன், நான் மீண்டும் பிறப்பெடுக்கும் நிலையில் இருந்து என்னை வெளிப்படுத்துவாய்" என பிரார்த்திக்கிறார். 

ஸ்ரீ என்ற வார்த்தை எந்தவொரு சொல்லுக்கு முன்னாலும் இடப்படும் போது அது மிக உயர்ந்த நிலையினை காட்டுகிறது. தேவியினை வழிபடுவதில் ஐந்து வார்த்தைகளில் ஸ்ரீ வருகிறது; இந்த ஐந்தும் சேர்ந்து "ஸ்ரீ பஞ்சகம்" என்று கூறுவார்கள். அவையாவன ஸ்ரீ புரம் (தேவி வசிக்கும் இடம்), ஸ்ரீ சக்கரம் (தேவியின் படை தேவியர் வசிக்கும் இடம்), ஸ்ரீ வித்யா - தேவியினை உபாசிக்கும் முறை, ஸ்ரீ சூக்தம் - அவளை பணியும் பாடல்கள், ஸ்ரீ குரு - யார் தேவியினை அடையும் வழியினை காட்டுபவர். இந்த ஐந்தும் ஸ்ரீ தேவியினை உபாசிப்பதில் முக்கியமான அமிசங்களாகும். 

ஸ்ரீ என்பது வேதத்தினையும் குறிக்கும். வேதம் பிரம்மத்தில் இருந்து உருவாகியது. லலிதாம்பிகையே பிரம்மம் என்பது இந்த சஹஸ்ர நாமத்தினால் உணரப்பட்டுள்ளது, சுவேதாஸ்வர உபனிடதம் (6-18) "அவனே பிரம்மனை படைத்து வேதங்களை அவனிடம் ஒப்படைத்தான், முக்தியினை விரும்பும் நான், தன்னை அறியும் ஞானத்தை மனதில் வெளிப்படுத்தும் அந்த ஒளிபொருந்திய கடவுளிடம் அடைக்கலமடைகிறேன்" என விளிக்கிறது.

அத்துடன் இந்த நாமம் பஞ்சதசி மந்திரத்தினை குறிப்பது என கூறப்பட்டுள்ளது.

இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகையினை அனைத்துக்கும் தாயாக விளித்தவண்ணம் ஆரம்பிக்கிறது என்பதனை அவதானிக்க வேண்டும். இது அவளுடைய பிரபஞ்ச உயிர்கள் மீதான இரக்கத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது, மாதா என்பவள் படைப்பவள், இது பிரம்மத்தின் முதலாவது தொழில் ஆகும்.


ஜோதிட விளக்கம்

ஜோதிடத்தை முழுமையாக விளக்கக் கூடிய ஒரு பதிவினை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! நான் ஜோதிடனா என்று எவராவது கேட்டால் அதற்கு பதில் இல்லை! ஏனென்றால் நான் ஒரு அறிவுத் தேடலுள்ள ஒரு பயணி! நான் ஜோதிடம், சித்த ஆயுள்வேத மருத்துவம், சூழலியல், யோக சாத்திரம், சித்த மார்க்கம் இன்னும் பல.. இவற்றுள் எந்தவொரு அறிவுத் துறையையும் எனக்கு அடையாளமாக்கி அதன் மேல் சவாரி செய்ய விரும்புவதில்லை!

சிறுவயதில் ஒரு சாத்திரியார் ஜோதிடம் என்ற பெயரில் என்னை பலருக்கு முன் வைத்து சொன்ன ஒரு கருத்து அவர் பொய்யன் என்று நிருபிக்க, அவருக்குத் தெரிந்தது எனக்கும் தெரிய வேண்டும் என்று ஒரு வீம்பிற்கு படிக்கப் போய் எதைத் தொடங்கினாலும் ஆழமாகவும், அகலமாகவும் வலை வீசுவது பழக்கமானதால் படிக்கத் தொடங்கியது, தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், சமஸ்க்ருத மூல நூல்களின் மொழிபெயர்ப்புகள், மேற்கத்தேய occlut astrology, esoteric astrology என்று நீண்டுகொண்டு சென்றது! 

அம்பாளை உபாசிக்கத் தொடங்கிய பின்னர் அவளது வித்யா தத்துவங்களின் கால, நியதி தத்துவங்களின் வெளிப்பாடு தான் கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று உணர்ந்த பின்னர் அவளைச் சரணடைந்து விட்டு நடப்பது நடக்கட்டும் என்ற மன நிலை வாய்த்தது. 

ஆனால் சில காலத்திற்கு முன்னர் ஒரு தேவி உபாசகர்; தலைமுறை தலைமுறையாக ஜோதிட ஞானம் உடையவர்கள்; எனது ஜாதகத்தைப் பார்த்து விட்டு எனக்கு மட்டும் தெரிந்த எனது ஆன்மீக வாழ்க்கை இரகசியங்களை புட்டுப் புட்டு வைத்ததால் மீண்டும் பழைய ஜோதிட ஆசை துளிர்த்துக் கொண்டது. 

என்னைப் பொறுத்த வரையில் எவரும் எதிர்காலத்தை அறிய ஜோதிடத்தைப் பயன்படுத்தக் கூடாது; அது எமது இச்சா சக்தியினதும், இறையருளினதும் வெளிப்பாடு. 

இனி ஜோதிட விருட்சம் என்ற இந்தப் பதிவிற்கு வருவோம்! 

பதினைந்தாம் நூற்றாண்டு சமஸ்க்ருத நூலான வைத்தியநாதர் எழுதிய ஜாதக பாரிஜாதம் என்ற நூல் ஜோதிட விருட்சம் என்ற ஒரு bigpicture concept ஐ ஜோதிடத்திற்கு கொடுக்கிறது. 

ஜோதிடம் என்பதனைத் தாங்கும் வேர்கள் எவை?

நிமிர்த்தும் தண்டுகள் என்ன? கிளைக்கும் கிளைகள் எவை? செழிக்கும் இலைகள் எவை என்று வகைப்படுத்துகிறார். 

ஜோதிடத்தின் வேர் ஏழு சாஸ்திரங்களின் மறையியல் அடிப்படையைக் கொண்டவை

1) ருக் வேதம்

2) அதர்வண வேதம்

3) சாமவேதம்

4) யஜூர் வேதம்

5) உப நிஷதம்

6) புராணங்கள்

7) தந்திர/ ஆகம சாஸ்திரம் 

மேற்குறித்த மறையியல், மெய்யியல் கோட்பாடுகளை வேராகக் கொண்டு உருவாகிய தண்டுதான் (trunk) ஜோதிடம். மேற்குறித்த எதையும் படிக்காமல், அதன் மெய்யியல் புரியாமல் ஜோதிடத்தின் விதிகள் எதையும் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியாது. வேத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையையோ, புராண, தந்திர சாஸ்திர அடிப்படியாகக் கொண்ட மெய்யியல் வாழ்க்கையில் இல்லாமல் ஜோதிட சாஸ்திரத்தைப் பயன்படுத்த முடியாது. ஆகவே மேற்குறிப்பிட்ட ஏழு சாஸ்திரங்களினை அடிப்படையாகக் கொண்ட மெய்யியலின் அடிப்படையிலேயே ஜோதிட சாஸ்திரத்தின் கோட்பாடுகள் புரிந்துக் கொள்ளப்படுகிறது. 

இந்த ஏழு சாத்திரங்களின் வேரில் முளைத்த தண்டு தான் ஜோதிடம்

இந்த தண்டு மூன்று கிளைகளாக பிரிகிறது. இந்தக் கிளைகள்

1) சம்ஹிதை - எதிர்காலப் பலன்களை, செயல்களைக் கூறும் விதிகள்

2) ஹோரா - ஜாதகம் கணித்தல் 

3) சித்தாந்தம் - வானியலும் கணித முறையும்

இவை மூன்றும் மேலும் சிறுகிளைகளாகி இலைகளாக பல்வேறு சாத்திரங்கள் உருவாகின்றன. 

சம்ஹிதை என்ற பெரும் கிளையிலிருந்து உருவாகிய 12 சிறுகிளைகள் வருமாறு: 

1)Treatises on breath - ஸ்வர ஜோதிடம்

2)Discussion of oneirology - கனவுகளின் பலன்

3) Examination of falling lizards - பல்லி சொல்லுதல், விழுதல் பலன்

4) Treatises on predicting rain - மழை கால நிலை கணித்தல்

5) Effects of good or evil omens as a result of trembling in different parts of the 

body - உடலின் பாகங்கள் துடித்தல் கொண்டு சுப அசுப நிலைப் பலன் காணுதல். 

6) Treatises on the examination of earth, sites, buildings, and so on - பூமி சுத்தி வாஸ்து கணிதம்

7) Collections of treatises on appeasement rituals - சாந்திக் கிரந்த ரகசியம்

 Collections of treatises on presages - சகுன நிமித்த சாஸ்திரம்.

9) Study of the auspicious and inauspicious influence of the movement of the planets 

- கிரக கோட்சாரத்தால் ஏற்படும் சுப அசுப பலன்கள்.

10) Treatises on signs, presages, and marvels (adbhuta-utpāta-lakṣaṇa-granthāḥ) - குறியீடு, சோழி, வெற்றிலைப் பிரசன்னங்கள்

11) Treatises on physiognomy - சாமுத்ரிகா லக்ஷணம் 

12) Study of the cost of cheap and expensive substances - லாப நஷ்ட கணிதம் 

ஹோரை என்ற பகுதிக்குள் ஆறு கிளைகள் இருக்கிறது

1) Collections of treatises on natal horoscopy - ஜாதகம் கணித்தல்

2) Collections of treatises on the Perso-Arabic art of casting horoscopes (tājika-grantha) - உருது பார்சிய ஜோதிட முறை 

3) Compilation of treatises on the horoscopy of queries - பிரசன்ன ஜோதிடம் 

4) Collection of horoscopy treatises on auspicious moments - முகூர்த்த ஜோதிடம் 

5) Studies of lost birth horoscopes - நஷ்ட ஜாதகம்

6) Treatises on the composition of almanacs - பஞ்சாங்க நிர்ணயம் 

சித்தாந்தம் எனும் கணிதப்பகுதியில் 10 கிளைகள் இருக்கிறது. 

1) Collections of concise astronomical manuals (karaṇa-grantha-rāśayaḥ). - சுருக்கமான வானியல் கையேடுகள்

2) Study of the “bowstring” or the sine (jyām-iti viṣayāḥ).- இந்திய முறையில் செங்கோணத்தின் விகிதங்களைக் - சைன் பெறுமானங்களைக் கொண்டு வானியலைக் கணிப்பிடும் கேத்திர கணித முறை 

3) Algebraic studies (bīja-gaṇita-viṣayāḥ).- அட்சரகணித முறைகள்

4) Studies of differential calculus (calana-kalana viṣayāḥ). - நுண்கணிதம் 

5) Studies of arithmetic (pāṭi-gaṇita-viṣayāḥ).

Studies of “arc trigonometry” (cāpīya-trikoṇam-iti viṣayāḥ).

6) Geometrical studies (rekhā-gaṇita-viṣayāḥ) - கேத்திர கணிதம் 

7) Lessons on the spheres (gola-adhyāyaḥ) - கோள கணிதம் 

 Studies of “triangles” (trikoṇam-iti viṣayāḥ). முக்கோண கணிதம் 

9) Studies of the geometry of the spheres (golīya-rekhā-gaṇita-viṣayāḥ) - கோளங்களின் கேத்திர கணித கணிதம் 

மேற்குறித்த பத்துக் கணித முறைகளையும் பாவித்துத் தான் ஜோதிடத்திற்குரிய கணிதங்கள் உருவாக்கப்படுகிறது. 

ஆக ஒருவன் ஜோதிடத்தைப் புரிய வேண்டும் என்றால் அதன் வேர்களில் சிலவற்றினது அடிப்படை மெய்யியலைப் புரிந்திருக்க வேண்டும்; அந்த மெய்யியல் அடிப்படையில் இருந்து தான் ஜோதிடத்தை உரையாட முடியும்! 

ஜோதிடத்தின் சித்தாந்த, ஹோரைப் பகுதிகள் முழுமையான கணித அடிப்படையைக் கொண்டவை; சம்ஹிதைப் பகுதி அனுபவ, meta physical nature உடையவை. 

பஞ்சாங்க கணிதம் கிரகணங்களைச் சரியாகக் கணிப்பது அது விஞ்ஞானப் பூர்வமானது என்பதை நிரூபணம் செய்கிறது. ஆனால் அதனால் ஏற்படும் விளைவு என்று சொல்லப்படும் சம்ஹிதைப் பலன்களை நாம் அறிவியல் என்று வகைப்படுத்த முடியாது.


Saturday, February 04, 2023

விநாயகர் உபாசனை

இன்றைய மகாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணத்தின் பின் பெருமானாருக்கு அலங்காரம்! 

பிரணவப் பொருளாகிய விநாயகரை உபாசனை செய்யும் வழி இரண்டு உள்ளது;

1) புறப்பூஜை: மலர், அலங்காரம், தூப, தீப நைவேத்தியங்கள் கொண்டு அழகுபடுத்தி உள்ளம் உருகிய அன்புடன் செய்யப்படும் பூஜை புறப்பூஜையாகும். 

2) அகப்பூஜை; பூத சுத்தி செய்து, பிராணாயமத்துடன் குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைக் கொண்டு புத்தியினை சலனிக்காமல் மனதில் விநாயகர் உருவத்தை நிறுத்தி தனது ஆதார சரீரத்தில் வழிபடும் யோக முறையும் உண்டு. 

முதலில் புறப்பூஜை தொடங்கி, அக்னி மூலம், தோத்திரங்களூடாக பக்தி உபாசனையாக புறப்பூஜை தொடங்கி அனைத்திலும் மகாகணபதியின் திருவருளைக் காணும் மனப் பக்குவம் வாய்த்த பின்னர் அகப்பூஜை தொடங்கவேண்டும். 

தனது இருதயத்தில் மகா கணபதியின் தெய்வீக வடிவத்தை ஒளிப் பிழம்பாக தியானித்து தனது இருபத்தி நான்கு தத்துவங்களால் ஆன க்ஷேத்திரத்தில் க்ஷேத்திரஜ்ஞனாக மகா கணபதியை இருத்தி தியான யோகம் பயில வேண்டும். இப்படி அப்பியாசிக்க மகாகணபதி உபாசனை யோக சாதனையாக மாறும். 

மகாகணபதியின் உபாசனையால் யோக சித்தி பெற்றவர்களில் முதன்மையானவர் ஔவையார்; அது பற்றி அடுத்துவரும் பதிவுகளில் பார்ப்போம்!


அமரத்துவத்தின் இயற்பியல்

தமிழில் இருக்கக் கூடிய so-called அறிவியல் பேசுகிறோம் என்பவர்களது சிந்தனைப்போக்கு அறவே அறிவியல் தன்மை அற்றது! வாசகர்களைக் கவர்வதற்கு, உசுப்பேத்துவதற்கு, உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு கடவுளை வம்பிழுப்பதும், நக்கலடிப்பது கொண்ட மமதைத்துவமானது. 

ஆனால் உண்மையான சிந்தனாவாதி தனது சிந்தனையின் உச்சத்தில் பௌதீகப் பிரபஞ்சத்தின் அனைத்து அமிசங்களையும் சிந்திக்க ஆரம்பிக்கும் போது அவன் ஒரு இயற்பியலாளனாக வந்து நிற்பான்! பொருண்மை நிறைந்த பௌதீக உலகத்தை தனது புலன்களால் அளந்து, பிறகு கருவிகளை நுண்மையாகி அளந்து அதனாலும் அளக்க முடியாமல் போகும் போது கணிதத்தின் துணை தேவைப்படுகிறது. 

மேற்கத்தேய இறையியலில் கடவுள் இருக்கிறார் என்பதை நிறுவுவது என்பது ஒரு இயற்பியலாளன் எப்படி கணிதத்தின் உதவி கொண்டு இலத்திரன் இருக்கிறது என்று நிறுவுகிறானோ அதற்கு ஒப்பான செயல் என்று இயற்பியல் விஞ் ஞானி Frank J. Tipler அழகாக Physics of immortality என்ற நூலில் விளக்கியுள்ளார். இந்த நூலின் ஆசிரியர் ஒரு cosmologist - அத்துடன் ஆரம்பகால நாத்திகர். 

இந்த நூலாசிரியர் தனது PhD இனை Stephan Hawking and Roger Penrose ஆகிய இருவராலும் ஆராயப்பட்ட Globel General Relativity இல் பெற்றிருக்கிறார். 

அறிவியல் என்பது எதையும் உண்மை என்று உறுதிபட உரைக்கும் ஒரு முறையன்று! அறிவியலின் அடிப்படையே இது மாறக்கூடியது. இந்த நிபந்தனைகளில் இந்த விளைவைக் காட்டக்கூடியது என்ற புரிதலைப் பெறுவதுதான். ஆகவே எப்போது அறுதியான உண்மை என்பதைப் பற்றி அறிந்துகொள்வது அறிவியலின் நோக்கம் அன்று. இந்திய மெய்யியலில் மாறக்கூடிய அனைத்தும் பிரக்ருதி அல்லது ஸக்தியின் அமிசம் என்று சொல்லப்படுகிறது. 

இந்த நூல் மேற்கத்தேய இறையியலின் கோட்பாடுகளின் ஒன்றான The Omega Point theory இனை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோட்பாட்டினை விளங்கிக்கொள்ள பெரிதாக மண்டையைக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. சிவத்திலிருந்து முப்பத்தாறு தத்துவமாக விரிந்த பிரபஞ்சம் மீண்டும் ஊழிக்காலத்தில் சிவத்தில் ஒடுங்கும் என்று எமது புராணங்களும், தத்துவங்களும் கூறுவதை கத்தோலிக்க மத வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்கள்; அவ்வளவுதான்! 

ஆர்வமுள்ளவர்களுக்கும், இறைவன் - அறிவியல் என்று தம்மை குழப்பிக் கொள்பவர்களுக்கும் நல்ல வாசிப்பு!




Friday, February 03, 2023

சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தி

இன்று இனிதே சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தியாகியது. 

இன்றைய கணபதி உபாசனையின் யோக விளக்கம் மூலாதாரத்து கணபதி என்று ஏன் அழைக்கப்படுகிறார் என்பது பற்றிப் பார்ப்போம். 

மகாகணபதியை ஔவைப் பாட்டி மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவிப்பவர் என்று கூறுகிறார். 

அதர்வரீஷ உப நிடதம் "த்வம்ʼ மூலாதா⁴ரஸ்தி²தோ(அ)ஸி நித்யம்" - நீர் மூலாதாரத்தில் எப்போதும் உறைந்திருப்பவர் என்று கூறுகிறது. 

மூலாதாரம் என்பது மனித வாழ்க்கைக்கும் ஆதாரமானது என்று பொருள். இதை யோக நூல்கள் குதத்திற்கும் குறிக்கும் இடையில் இருக்கும் இடமாக ஸ்தூல உடலில் குறிப்பிடப்பட்டாலும், மனதில் பஞ்ச கிலேசங்களாக வெளிப்ப்படும் நிலையே முக்கியமானது. 

மனித வாழ்வின் அடிப்படை ஐந்து வித உணர்ச்சிகளால் ஆளப்படுகிறது; 

அவித்தை என்ற அறியாமை

அஸ்மிதை என்ற அகங்காரம்

ராகம் என்ற உலகப் பொருட்கள் மேல் உள்ள பற்று

துவேஷம் என்ற வெறுப்பு

வாழ்க்கையை இழந்து விடுவோமோ என்ற மரணபயம்

இந்த ஐந்துமே ஒருவனின் வாழ்வை இயக்கும் மூலாதார சக்திகள். இந்தச் சக்திகள் ஒருவனிடத்தில் செயற்பட வாழ்கையே போராட்டமாக மாறிவிடுகிறது. இதை எப்படி மாற்றுவது?

இந்த மதம் பிடித்த தாழ் உணர்ச்சிகளையெல்லாம் தனது அங்குசம் கொண்டு அடக்கி வசப்படுத்தும் ஆற்றலைத் தருபவர் மகாகணபதி. இதனை ஔவைப் பாட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் என்று சொல்லுகிறார். 

கணபதியை மூலாதாரத்தில் ஸ்தாபித்து யோகம் புரிபவன் இந்தப் பஞ்ச கிலேசங்களையும் வென்று புலனடக்கமும், யோக சித்தியும் பெறுவான். புலன் களையும், அதனால் விளையும் பஞ்ச கிலேசங்களையும் வசப்படுத்தலே - மூலாதாரத்தை வசப்படுத்தல் - ஸர்வஜனம்மே வசமானாய என்ற கணபதி மந்திரத்தின் வாக்கியப் பொருள்.


Thursday, February 02, 2023

கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தி

இன்றைய கணபதி சதுராவர்த்தி தர்ப்பணம் பூர்த்தியானது! 

கணபதி உபாசனையின் தத்துவங்களை யோக விளக்கங்களாக ஒவ்வொன்றையும் சிறுகச் சிறுகச் சொல்வது இந்தப் பதிவுகளின் நோக்கம். 

மகாகணபதியினை பற்றி அதர்வ சீர்ஷ உப நிஷத் இப்படிக் கூறுகிறது; த்வம்ʼ சத்வாரி வாக்பதா³னி;

நீர் நான்கு வகை வாக்கினையும் அருள்பவர் என்று!

நான்கு வகை வாக்குகளும் எவை

வைகாரி - நாம் மொழியைப் பாவித்து உரையாடும் சப்தத்துடன் கூடிய பேச்சு. குரல்வளை உருவாக்கும் வாக்கு. செவியால் மற்றவர்கள் கேட்கும் வாக்கு

மத்திமை - இது மன உரையாடல்; எல்லோருக்கும் தமக்குள் சிந்தித்து உரையாடும் பழக்கம் இருக்கிறது. கணபதியை வணங்கி மூலாதார சித்தி பெறுவதால் ஒருவனால் மற்றவர் மனதிற்கு எண்ணத்தை வாயால் சொல்லாமல் எண்ணத்தால் கடத்தும் ஆற்றல் வாய்க்கும். சுருக்கமாகச் சொன்னால் டெலிபதி வாய்க்கும். 

பஸ்யந்தி - இந்த வாக்கு மனக்கண்ணில் காணும் ஆற்றல்; ரிஷிகள் இந்த ஆற்றல் மூலமே மந்திரங்களை திருஷ்டிக்கிறார்கள் - பார்க்கிறார்கள்; மனக்கண்களில் சூக்ஷ்ம தன்மைகளைக் காணும் ஆற்றல். 

சூக்ஷ்ம வாக்கு - சித்த விருத்திகள் அடங்கிய மௌனம்; இந்த அமைதியை அடைந்தால் மாத்திரமே இறை ஆற்றலை உணரமுடியும்.

மிக உயர்ந்த கணபதி உபாசகி யார் என்றால் ஔவைப் பாட்டி; 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் என்ற வரிகளில் வைகாரி, மத்திமை வாக்கினைப் பற்றியும், 

விநாயகர் அகவலில்

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரமும் வெளிப்பட உரைத்து என்ற வரிகளால் பஸ்யந்தி வாக்கினையும், 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம் என்ற வரிகளால் சூக்ஷ்ம வாக்குப் பற்றியும் கூறுகிறார். 

மகாகணபதி உபாசனை சதுர்வித வாக்குகளையும் எமக்குத் தரக்கூடிய பூர்ண சித்தி தரக்கூடிய உபாசனை.

யோக சித்திக்கு மூலம் மகாகணபதி உபாசனை


Wednesday, February 01, 2023

மகாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்

இன்று மகாகணபதிக்கு சதுராவர்த்தி தர்ப்பணமும், நீலோற்பல, செவ்வரத்தைப் பூக்கள் அலங்காரமும்! 

அதர்வசீர்ஷம் தரும் கணபதியின் தியானம் வருமாறு:

யானை முகம்; ஒற்றைத் தந்தம் உடையது; நான்கு கரம், பின் கை பாசம், அங்குசம் கொண்டிருக்கிறது, மூன்றாவது கை உடைந்த ஒற்றைத்தந்தத்தைக் கொண்டிருக்கிறது. நான் காவது கை வரத கரமாக இருக்கிறது. கொடியில் மூஷிகம் இருக்கிறது. பெருத்த வயிறு; விசிறி போன்ற பெரிய காதுகள் - சூர்ப்ப கர்ணம். அழகிய சிவந்த உடல்; செவ்வாடை; செந்தூரம் பூசிய உடல்; செம்மலர்கள் சாத்தி வணங்கப்படுகிறார். கருணை ததும்பும் முகம். பிரபஞ்ச இயக்கத்தின் மூலாதார சக்தி. கண்களுக்குத் தெரியும் பிரபஞ்சத்தின் மூலமாக இருக்கும் பிரபஞ்சத்தைத் தாண்டிய காரணவடிவானவர். 

இப்படி தினசரி கணபதியைத் தியானிப்பவன் யோகிகளில் சிறந்த யோகியாக இருக்கிறான். 

காண்பவர்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சியும், சந்தோஷமும், எல்லா வளங்களும் உண்டாகட்டும்! 


பரராசசேகரம்

வடமாகாண சுதேச வைத்திய திணைக்களம் பரராசசேகரம் கனகாலத்திற்கு முன்னர் வெளியிட்டிருக்கிறது, ஒரு செட் வாங்கி அனுப்புங்கள் என்று தம்பி Rûban Thànu கூற அரச நிறுவனங்களின் கறாரான நெறிமுறைகளை எல்லாம் பின்பற்றி ஒருமாதிரி வாங்கி கூரியருக்கு 800 கிராம் வீணாகுது என்று 

ஒடியல்

பாணிப் பினாட்டு

வேப்பம்பூ வடகம் 

சேர்த்து கொரியர் அனுப்பியிருக்கிறார். 

இனி விடயத்திற்கு வருவோம்; 

பரராசசேகரம் என்பது யாழ் இராசதானி மன்னர்களது வைத்தியக் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பு. தமிழ் அறிஞர்கள் ஆராயாமல் விடுபடும் தமிழ் மருத்துவ இலக்கிய வரிசையில் இந்த நூலும் ஒன்று. 

இதனை 1928 இலிருந்து 1935 இற்குள் ஏழாலை ஐ. பொன்னையாப் பிள்ளை அவர்கள் வெளியிட்டார்கள். 

பின்னர் 1998 - 99 களில் லங்கா சித்தாயுள்வேதக் கல்லூரி வைத்தியகலாநிதி க. வே துரைராசா அவர்கள் சில பாகங்களை வெளியிட்டார்கள். 

2016ம் ஆண்டு வடமாகாணசபை நிதியில் Shyama Thurairatnnam அவர்கள் மாகாணப் பணிப்பாளராக இருக்கும் போது வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மூன்றாம், நான்காம் பகுதிகள் தவிர்ந்த ஐந்து பகுதிகளையும் வெளியிட்டது. 

யாழ் சித்த மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி சிவசண்முகராஜா ஐயா அவர்கள் தனது சொந்த முயற்சியில் ஐ. பொன்னையா பிள்ளை அவர்களது பதிப்பில் வந்த அனைத்து பாடல்களை சிற்றுரையோடு சொந்தப் பதிப்பாகக் கொண்டு வந்தார். 

நான் ரோஜாமுத்தையா நூலகத்தின் சேகரிப்பில் இருந்து சில பாகங்களின் நிழற்பிரதிகள் சேகரித்து வைத்துள்ளேன். 

பித்த ரோகத்திற்கு உரை எழுதிவைத்துள்ளேன்; மீண்டும் ஒருக்கால் செம்மைப் படுத்த வேண்டும். 

இத்துடன் ஒன்பது விஷாருடம் எனும் ஒரு நூலும் கிடைத்தது; இதன் மதுரை குருசாமிக் கோனார் பதிப்பித்த 1922 பதிப்பு என்னிடம் மின்னூலாக இருந்ததாக ஞாபகம்.

இதற்குரிய ஏற்பாடுகளைச் செய்த Dr. Vicknaverny Selvanathan அம்மையார் அவர்களுக்கும் நன்றிகள்!


பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...