பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு
அயஓளி யாயிருந் தங்கே படைக்கும்
பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. (திருமந்திரம் - 392)
இந்த பாடல் இரண்டாம் தந்திரத்தில் சர்வ சிருஷ்டி எனும் தலைப்பின் கீழ் வருகிறது.
இதனை தமிழறிவு, சைவ சித்தாந்த அடிப்படை கொண்டு பொருள் நோக்கின் முதலில் சந்தி பிரிக்க
பயன் எளிதாம் பருமாமணி (செய்ய)
நயன் எளி(தாகிய) நம்ப ஒன்றுண்டு
வயன் ஒளியாயிருந் த(அ)ங்கே படைக்கும்
வயனெளி தாம் வயண(ம்)ந் தெளிந்தேனே.
பதப்பொருள்:
பருமாமணி=சிவபெருமான்
நயன்=இன்பம்
"ஆகிய" என்பது "செய்யிய" என்னும் வினையெச்சம்
நம்புதல்=விரும்புதல்
வயன்=வெற்றி
வயணம்=காரணம்
பொருள்:
படைக்கும் ஆற்றல் (பிரம்மா) வெற்றியுடன் செயலாற்றும் காரணத்தை நான உணர்ந்து தெளிந்தேன் (வயனெளி தாம் வயண(ம்)ந் தெளிந்தேனே) அது என்னவென்றால் படைப்பினை நடத்துவதற்கான மூல காரண ஒளி படைப்பிக்கும் இடத்தில் அந்த சக்தியாக திரிந்து நிற்கிறது. (வயன் ஒளியாயிருந் த(அ)ங்கே படைக்கும்) அதாவது சிவம் என்ற போராற்றலே பிரம்மா எனும் படைக்கும் சக்திக்கு மூலமாக இருக்கிறது என்கிறார் திருமூலர் பெருமான். அதற்கு மேல் உள்ள வரியில் அது என்னவென்று கூறுகிறார்; இன்பமான ஒன்று எல்லோராலும் விரும்பப்படுவது ஒன்று உண்டு (நயன் எளி(தாகிய) நம்ப ஒன்றுண்டு), அது யாரெனில் பருமாமணியான சிவனே!அவனைப் பற்ற எல்லாம் எளிதாகும்.
இந்தப்பாடலை பொருள் கொள்ள தனியே இந்த பாடலை மட்டும் கொண்டு விளங்கவியலாது என்பதறிதல் வேண்டும்.
சர்வ சிருஷ்டி அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து திருமூலர் சிவம் எப்படி ஒன்றாயிருந்து பலவாகி பராபரையாகி, பிரம்மாவாகி, விஷ்ணுவாகி ஆறாதாரங்களில் உறைந்து, பஞ்ச பூதங்களில் கலந்து செயல்கொள்கிறது என்பதனை விளங்குதல் வேண்டும்.
பழைய பதிவு
எழுதியது August 05, 2012
**************
#திருமந்திரம் #திருமூலர்