வாழ்க்கையில் நம்பிக்கை
என்பது மிகப்பெரிய சொத்து.
கணவன்- மனைவி
முதலாளி-தொழிலாளி
நண்பர்கள்
வியாபார பங்குதாரர்கள்
குரு - சிஷ்யன்
இப்படி எந்த உறவாக
இருந்தாலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே சிறக்க முடியும்.
பொதுவாக நான் நம்பிக்கை
வைத்திருந்தேன் ஆனால் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்வதை கேட்டிருக்கிறோம்.
இப்படிச் சொன்னால் அதன் அர்த்தம் நம்பிக்கை என்றால் என்ன? உண்மையான நம்பிக்கையின்
குறிகள் என்ன என்பதை அவர் அறியாமையே,
பலர் நம்பிக்கை
என்றவுடன் வாயால் வடை சுட்டு மற்றவர்களை ஒத்திசையச் செய்வது என்று நம்புகிறார்கள்.
இது ஒருவகை ஏமாற்று வித்தை.
உண்மையான நம்பிக்கை
என்பது பல குணம், தகுதி, நேர்மை, நோக்கம், அக்கறை, வெளிப்படைத்தன்மை, திறந்த மனம்,
திறன், அறிவு, அனுபவம், செயல்திறன், மதிப்பு போன்ற பல வேர்களைக்கொண்ட ஆலவிருட்சம்
போன்றது. இப்படி முறையாக கட்டியெழுப்பப்படும் நம்பிக்கை ஆலவிருட்சம் போன்று பல
ஆயிரம் பேரிற்கு நிழல்தரக்கூடியது.
நம்பிக்கையிற்கு இரண்டு
பிரதான கைகள். எம்முடையதும், நாம் நம்பிக்கை கொள்ளுபவரின் குணமும், தகுதியும்.
இருவரும் ஒத்த குணமோ அல்லது ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளும் குணமோ இல்லை எனில்
நம்பிக்கை வளர்வது கடினம். எடுத்ததெற்கெல்லாம் குறை கூறுவது, தவறாக பேசும் குணம்
இருந்தால் அந்த நபர் மீது எவருக்கும் நம்பிக்கை வராது.
நாம் ஒருவரை குணத்தின்
அடிப்படையில் நம்பினாலும் நாம் நம்பும் விஷயத்தை பூர்த்தி செய்யும் தகுதி அந்த
நபரிற்கு இருக்கிறதா என்பது அவசியமான ஒன்று. பொதுவாக நல்ல குணமுள்ளவர் என்று எமது
வியாபாரத்தில் அந்தப் பையனை வைத்தேன். இப்போது எவ்வளவு பணம் வந்தது, எவ்வளவு பணம்
சென்றது என்று தெரியவில்லை என்று தலையை பிய்த்துக்கொண்டு, எப்படி என்றாலும் கள்ளம்
கபடமில்லாத பையன் என்று கூறினால், அவர் தகுதியானவரை நம்பவில்லை என்று பொருள்.
குணத்தை மட்டுமே கருத்தில் எடுத்திருக்கிறார்.
அதேபோல் நன்றாக
படித்திருக்கிறான், அறிவாளி என்று தகுதி எல்லாம் பார்த்து வேலைக்கு எடுத்த பையன்
காசை சுருட்டிக்கொண்டு போய்விட்டான் என்றால் தகுதி இருந்தாலும் குணம் சரியில்லை
என்று பொருள்.
ஆக நம்பிக்கை வளர
குணமும், தகுதியும் மிக அவசியமான இரண்டு தூண்கள்.
குணத்தை எப்படி நல்ல
குணம் என்றும், எமது நம்பிக்கைக்கு பாத்திரமாவான் என்றும் அறிவது, அவனது நோக்கத்தை
அறிவதன் மூலம், நோக்கத்தை அறிவதற்கு மூன்று காரணிகள் உள்ளது. நாம் சொல்லும்
விஷயத்தை அக்கறையுடன் கேட்கிறானா, வெளிப்படையாக தனது நடத்தையிலும் பேச்சிலும்
இருக்கிறானா, கூறுபவற்றை திறந்த மனத்துடன் அணுகுகிறானா என்பதைக் கொண்டு ஒருவரின்
குணத்தை அறியலாம்.
குணத்தின் அடுத்த
குறியீடு நேர்மை, ஒரு விஷயத்தை அணுகும்போது நேர்மையுடன், பாரபட்சம் இன்றி,
நம்பகத்தன்மையுடன் அணுகினால் அவனது குணம் நல்ல குணம் என்று அனுமானிக்கலாம்.
தகுதியை அறிவதற்கு
இரண்டு விஷயங்களை அவதானிக்கலாம். குறித்த வேலைக்கான அவனது திறனும், அந்த வேலையில்
இதுவரை பெற்ற பெறுபேறுகளும்.
குறித்த விஷயத்தில்
திறன், அறிவு, அனுபவம் உண்டா என்பதைக்கொண்டு அவனது திறனை அனுமானிக்கலாம்.
பெறுபேறுகளை அவனது
மதிப்பையும், அவன் மீது மற்றவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையினைக் கொண்டும்,
செயல்திறன் கொண்டும் அறியலாம்.
நம்பிக்கை என்பது
என்னவென்று அறிந்து நம்பிக்கை வளர்ப்போம்.
Reposting the old writing:
17th August 2018