மாத்தளை மாவட்டத்தில் தமிழ் பாடசாலைகளில் கணிதத்திறனை விருத்தி செய்வதற்கு FTGM வகுத்த திட்டம் என்ன என்பது பற்றி நண்பன் Anand Ramalingam அவர்கள் கேட்டிருந்தார். அவர்களுடைய அயலக பழைய மாணவர் ஒன்றியம் பல்வேறு உயரிய பணிகளை மாத்தளை இந்துக் கல்லூரிக்குச் செய்து வருகிறது. வெளி நாட்டில் வாழும் சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் இணைந்து இந்தப் பணியைச் செய்து வருகிறார்கள். இவர்கள் கல்விப்பணி மேலும் ஆர்வம் கொண்டு இவர்கள் இத்தகைய கல்வி முன்னேற்றச் செயல்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நினைக்கிறேன்.
முன்னைய அனுபவப்படி பாடசாலையில் சாதித்த நல்ல திறமையான விளையாட்டு வீரர்கள் தகுந்த சித்தியை சாதாரண தரத்தில் பெறாமல், உயர்தரத்தில் சித்தி பெறாமல் ஊரிற்குள்ளேயே திறமை வெளிப்படாமல் முடங்கிய நிலை இருக்கிறது.
நல்ல விளையாட்டு வீரன் தனது சாதாரண தரத்தையும் பூர்த்தி செய்து, உயர்தரத்தையும் நன்கு பூர்த்தி செய்யும் படி வழிகாட்டல் செய்யப்பட்டால் அவர் உயர் தொழில்களுக்கு இலகுவாக செல்ல முடியும்.
ஆகவே பாடசாலையின் புகழிற்காக, முன்னேற்றத்திற்கு பாடுபடும் பழைய மாணவர்கள் கல்வி வளர்ச்சி தொடர்பாகவும் கவனம் எடுக்க வேண்டும். ஒவ்வொரு பழைய மாணவர் சங்கங்களும் தமது பாடசாலைக்குரிய கல்வி வளர்ச்சிக்குரிய முயற்சிக்குரிய செலவினை ஏற்றுக்கொள்ள முன்வந்தாலே நாம் பெரும் முன்னேற்றம் அடையலாம்.
சிறு துளி பெருவெள்ளம்
ஊர் கூடி தேரிழுத்தல்
கட்டிடங்கள், பௌதிக வளங்கள் என்பவற்றிற்கு மேலாக பாடசாலைகள் கல்வியில் சிறந்த ஆளுமைகளை வளர்க்க நாம் இலட்சியம் கொள்ள வேண்டும்.
இந்த வருடத்திற்குரிய அடிப்படையில் சாதாரண தர கணிதப் பாடத்திற்குரிய செயல் திட்டம் வருமாறு;
ஒவ்வொரு வருடமும் இந்தத்திட்டத்தை முன்னெடுக்க நாம் முயற்சிக்கிறோம்; இதற்கு இணைந்து செயற்பட விரும்பும் நல்லுள்ளங்கள் யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
திட்ட விபரம்
1.கல்வித் திணைக்களம், தகுதியான அனுபவமுள்ள ஆசிரியர்களின் உதவியுடன் S-Kalvi தொண்டு நிறுவனம் கணிதத்தில் சித்தி பெற ஒரு மாணவன் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை கணிதச் செயல் முறைகளை 24 வினாத்தாள்களாக வடிவமைத்திருக்கிறது. இந்த திட்டம் சில மாதங்களுக்கு முன்னரே செம்மையாக ஆரம்பிக்கப்பட்டதால் இதை நாம் அப்படியே நடைமுறைபடுத்துவது இலகுவானது; பரீட்சைக்கும் இன்னும் 04 மாதங்களே இருப்பதால் காலத்தை வீணாக்காமல் பிள்ளைகளுக்கு செய்விப்பதற்காக இந்த முடிவு;
2.இவற்றை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தகுந்த sponsor உடன் மாத்தளையில் உள்ள அனைத்து சாதாரண தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கும் அச்சிட்டு பாடசாலை அதிபர் ஊடாக வினியோகிக்கும். மாத்தளையில் உள்ள க. பொ. த சாதாரண மாணவர்கள் எண்ணிக்கை 700.
3.பாடசாலை தனது ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களை இந்த வினாத்தாள்களை செய்விக்கும்.
4.பெப்பிரவரி மாதத்தில் ஒன்றியம் கணித ஆசிரியர்களின் உதவியுடன் இந்த 24 வினாத்தாள்களையும் 700 மாணவர்களுக்கு விளக்கும் seminar நடாத்தும்.
5.இதன் பின்னர் பலவீனமான மாணவர்களுக்குரிய பயிற்சியை தேவைப்படுபவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் தனிப்பட்ட, குழு வகுப்புகளாக பயிற்சி கொடுத்து அவர்கள் சித்தியடைவதற்கு உதவும்.
இதைக்காணும் ஒவ்வொரு பாடசாலையின் பழைய மாணவரும் தமது பாடசாலையிற்கு இது நடைபெற வேண்டும் என்ற உணவு ஏற்பட்டாலே நாம் பெரிய மாற்றத்தை சமூகத்தில் காண முடியும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.