இன்று சுவாமி விவேகானந்தர் அவதரித்த நாள் - வீரமிகு இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்ற சங்கல்பம் கொண்ட ஒரு சிந்தனையாளரின் பிறந்த நாள்! படிக்கும் எவரையும் வசீகரிக்கும் ஆற்றலும், சிந்தனை மாற்றமும் செய்ய வல்ல ஆற்றல் மிகுந்தவர்.
சிறுவயதில் ஒரு விவாதப்போட்டியில் பெற்ற பரிசாக சுவாமி விவேகானந்தரின் நூல்களில் இரண்டு விடயங்கள் என்னை யோக சாஸ்திரத்தில் எனக்கிருந்த பூர்வ சம்ஸ்காரங்களை விழிப்படைய வைத்தது ஆர்வமுள்ளவனாக்கியது!
முதலாவது கல்வி என்பது மனித மனதின் இயக்கத்தையும், செம்மையையும், ஆற்றலையும் பற்றியது என்பதும்,
இரண்டாவது செம்மையுற்ற மனம் அனேகருக்கு ஓரிடத்திலிருந்து கொண்டு செயலாற்றலாம் என்ற விடயம். உடம்பால் செய்கின்ற உதவி ஒன்று தான் உதவி என்று நினைக்கிறாயா? உடம்பின் செயற்பாடுகள் எதுவும் இல்லாமல் சீரிய ஏகாக்கிரம் அடைந்த யோக சக்தி பெற்ற உயர்ந்த மனம் வேறு மனங்களுக்கு உதவ முடியும் என்ற உண்மை.
மனதைப் பற்றிய கேள்விக்கு எனது முதல் குருநாதர் ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் தனது குருவான ஸ்ரீ கண்ணைய யோகியாரின் மானச யோக விளக்கம், சித்தி மனிதன் பயிற்சி, பரிணாமத் துரித பிராண யோகம் என்றெல்லாம் விளக்கி நுணுக்கி வழிகாட்டினார்.
குருதேவர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர சரஸ்வதி, விசாகப்பட்டனத்தில் வசித்து வந்தவர்; ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் எனக்கு அடிக்கடி வரமுடியாது, எப்படி வழிகாட்டலைப் பெறலாம் என்ற கேள்விக்கு பதிலைத் தந்தார்.
ஸ்ரீ அரவிந்தர் சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கூறும் போது;
ஐரோப்பாவின் கலாச்சாரம் இந்தியரை வசப்படுத்தியதன் ஆழமான காரணம் அது புறவயமான பொருண்மைய உலகின் மீது வீரியம், செயல்திறன், படைப்பாற்றால் உடையதாக கவர்ச்சிகரமாக இருந்து; மறுபுறம் இந்திய தத்துவங்கள் ஜடத் தன்மையுடன், ஒவ்வொருவரையும் பலவீனமாக்கும், முடங்கிப் போன செயலற்ற தற்காப்பு உணர்வினை உருவாக்கி மனித ஆற்றலை புறவயமாகச் செயற்பட முடியாத மூட நம்பிக்கைகள் நிறைந்த சமூகம் ஆகிவிட்டிருந்தது.
முதல் முதலாக சுவாமி விவேகானந்தர் இந்தியத் தத்துவங்களில் இருந்து ஐரோப்பிய மனங்களுக்கும் பொருளுலக மனோபாவத்தைத் தாக்கி புது வெளிச்சம் சமைத்தார் என்கிறார்.
அகவயமாக மூழ்கிப்போன இந்திய தத்துவமும், முழுமையாக பொருள் முதன்மையாகிப் போன மேற்கத்தேய நிலையும் மனித குலத்தின் ஆற்றலை ஒருங்கிணைக்க முடியாத நிலையுண்டாகும் என்று அறிந்து இதைச் சமப்படுத்தும் நிலையை ஏற்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்!
#SwamiVivekananda #swamivivekanandaquotes #swamivivekanandainspires
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.