சைவ சித்தாந்தம் இறைவன் உயிர் ஜடம் (பதி பசு பாசம் என்பது சிந்தாந்த மொழி) ஆகிய மூன்றின் தன்மைகளை தெளிவாக ஆராயும் அளவை முறையைக் கூறுகிறது.
ஒரு அறிவினை மேலோட்டமாக மொத்தம் பொதுவாக பேசுவது, அதனை அனுபவமாக அறிவது, பின்னர் நுணுக்கி சூக்ஷ்மமாக அறிவது, அதனிலும் அதிசூக்ஷ்மமாக அறிவது என்று நுணுக்க முடியும்.
பொது மொழியில் தண்ணீர் என்பதை சிறப்பான அறிவியல் மொழியில் H20 என்று சொல்ல முடியும்; இதன் பௌதீக, இரசாயன இயல்புகளை நுணுக்கிச் சொல்லமுடியும்; பின்னர் அது ஆக்கப்பட்டிருக்கும் ஹைட்ரஜன், ஒட்சிசன் ஆகிய அணுக்களின் உள்ளமைப்பு வரை ஆராய முடியும்.
இப்படியொரு ஆய்வு முறைய சைவ சித்தாந்தம் முன்வைக்கிறது;
இறைவனை பொதுவாக இயற்கை என்றும், சூக்ஷ்ம சக்திகள் என்று வேதங்கள் துதிக்க; அதை அனுபவமாக ஒருவன் பெற ஒழுங்குபடுத்திய முறைகளை ஆகமங்களாகவும் (சக்தி வழியாக இருந்தால் தந்திரங்கள்) இவற்றினால் பெற்ற இறை அனுபவங்களின் தொகுப்பாக நால்வருடைய தேவார திருவாசகமும், இன்னதுதான் சிவத்தைப் பற்றிய ஞானம் என்பதை சரியாக வரையறுத்து அளவை, பிரமாணம், சாதனையுடன் கூற சிவ ஞான போதமும் என்று கீழ்வரும் செய்யுள் சொல்லுகிறது.
வேதம் பசுவதன்பால் மெய்யா கம நால்வர்
ஓதுந் தமிழினினுள்ளுறு நெய் - போதமிகு
நெய்யினுறு சுவையா நீள் வெண்ணெய் மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் நிறம்
வேதம் பசுவைப் போன்று பொதுவானது; இறைவனின் இலக்கணம் இன்னதென்று உறுதியாக அறியமுடியாது; ஆனால் கட்டாயம் பலன் தரக்கூடியது; பசுவில் இருந்து பலன் பெறவேவேண்டும் என்றால் பசுவை சரியாக வளர்த்து மடியில் பால் கறக்க வேண்டும். இந்த பால்கறக்கும் வழி ஆகமங்கள்; பசுவின் பால் போன்றது, சிறப்பானது; உடனடிப் பலன் தரக்கூடியது; சிவமாகிய இறைவனின் உண்மைத் தன்மையை அடையும் வழியை நன்கு தெரிவிப்பது; இப்படித் தெரிவித்த வழியால் வரும் அனுபவத்தின் கடைந்தெடுத்த அனுபவ பொக்கிஷம் நால்வரது தேவார திருவாசகம்; பாலில் இருந்து கடைந்த நெய்போன்றது; நெய்யில் இருக்கும் உறுசுவை போன்றது சிவ ஞான போதம்.
என்ன அருமையாக நுணுக்கி, ஞானத்தைப் பெறும் வழியை சைவசித்தாந்தம் தருகிறது.
சிவத்தைப் பற்றிய அறிவு ஞானம் நான்கு நிலை உடையது; பொதுவிற்குள் சிறப்பும் சிறப்பிற்குள் சூக்குமமும், சூக்குமத்தில் நன்கு வரையறுத்த அதிசூக்குமமும் இருக்கிறது; drilling down to subtlety - நுணுக்கம் வரை துளையிடுதல்
பொது அறிவு - பசு பலன் தரும்
சிறப்பு அறிவு- பசுவின் பால் தான் உடலிற்கு பலன் தரும்
சூக்குமம் - பசுவின் பாலின் நெய் தான் உடலிற்கு ஓஜஸினை ஒளியைத் தரும்.
அதிசூக்குமம் - இந்த பலன் கிடைப்பது நெய்யின் சுவையை உணர்வதினால்
என்று நான்கு நிலையில் நுண்மையாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறது சித்தாந்தம்
தற்போதைய சைவத்திற்கு தேவையான அருமையான சிந்தனை!
படம்: சிவத்தின் தன்மை பொன்னார் மேனியன் என்று அறிவதற்காம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.