மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale முறையான ஒரு கல்வியல் ஆய்வினை முன்னெடுக்கிறது. மாத்தளை மாவட்டத்தில் வசிக்கும் பெருந்தோட்ட, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் கல்வி முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது என்பதை க. பொ. த இந்த வருட (2021) பெறுபேறு அடிப்படையில் எப்படி வரைபு படுத்துவது என்பது இதன் நோக்கம். இதன் விரிவான அறிக்கைகள் உத்தியோக பூர்வமாக இவற்றுடன் தொடர்புடைய அதிபர், திணைக்களம், ஆசிரியர்களுடன் விரிவுரையாளர் Dr. Nishānthan Ganeshan தலைமையில் உரையாடப்படும். இந்தப் பதிவின் நோக்கம் சமூக விழிப்புணர்வாகும்.
மாத்தளை கல்வி வலயத்தில் மொத்தமாக 83 பாடசாலைகள் இருக்கிறது. இவற்றில் 59 சிங்கள மொழி மூல பாடசாலைகள்; தமிழ் மொழி மூல பாடசாலைகள் மொத்தம் 24; தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை நாம் மலையகத் தமிழர்களின் கல்வி முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தினால்
முஸ்லீம் பாடசாலைகள் - 10
தமிழ் (இந்து/கத்தோலிக்க/கிருஸ்தவ) பாடசாலைகள் - 14
அதாவது மலையக/பெருந்தோட்ட தமிழ் சமூகத்திற்கான பாடசாலைகளின் எண்ணிக்கை 14 ஆகும்,
இந்த 83 பாடசாலைகளிலிருந்தும் க.பொ. த சாதாரண தரத்திற்கு தோற்றிய மொத்த மாணவர்கள் 3918 ஆகும். இவற்றில்
சிங்கள மொழி மூல மாணவர்கள் 2796.
தமிழ் மாணவர்கள் - 539
முஸ்லீம் மாணவர்கள் - 583
இவற்றில் மொத்தமாக சித்தி அடைந்த மாணவர்கள்
சிங்கள மொழி மூல மாணவர்கள் 2198.
தமிழ் மாணவர்கள் - 278
முஸ்லீம் மாணவர்கள் - 391
சதவீதப்பிரகாரம் ஒப்பிட்டால்,
பரீட்சைக்குத் தோற்றிய மொத்த சிங்கள மாணவர்களில் 79% ஆன மாணவர்கள் உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
பரீட்சைக்குத் தோற்றிய மொத்த முஸ்லீம் மாணவர்களில் 67% ஆன மாணவர்கள் உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
பரீட்சைக்குத் தோற்றிய மொத்த தமிழ் மாணவர்களில் 52% ஆன மாணவர்கள் மாத்திரமே உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள்.
மாத்தளை தமிழ் சமூகம், பெருந்தோட்ட மலையகச் சமூகம் இந்தப் புள்ளி விபரவியலை நன்கு உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
"எமது சமூகத்தில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடிப்படைக் கல்வித் தகுதி அற்றவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்"
சித்தி விகிதத்தை அதிகரிக்க மாத்தளையில் இருக்கும் சைவ, இந்து அமைப்புக்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் எப்படி பாடசாலைகளுக்கு உதவலாம்?
சித்தி விகிதம் குறைவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பது பற்றிய action research உம் அவற்றிற்கான தீர்வினை எப்படி அடைவது என்ற திட்டங்கள் இவற்றை கலந்தாலோசிக்கலாம்.
இந்த ஆய்வு முற்றிலும் எமது சமூகத்தின் கல்வியில் நிலவரத்தை தெளிவுபடுத்துவதற்கான சமூக அக்கறைப் பதிவுகளாகும்.
கல்வி முன்னேற்றம் தொடர்பான திட்டங்களை மாத்தளையில் முன்னெடுக்க மாத்தளைப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி நிசாந்தனை அணுகலாம்.
சிறந்த புரிதலைப் பெறுவதற்கு தரவுகளைப் பகுக்கும் போது பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள்:
1) முஸ்லீம் பாடசாலைகள் என்பதன் அர்த்தம் அங்கு பெரும்பான்மையான மாணவர்களும், பாடசாலை நிர்வாகமும் இஸ்லாமிய மத முன்னுரிமை தரும் பாடசாலைகளாகும். அங்கு சிறு விகிதமான இந்து தமிழ் பிள்ளைகள் பயில்கிறார்கள்.
2) தமிழ் பாடசாலை எனும்போது அங்கு பெரும்பாலும் மலையகத் தமிழர்களும் மிகச் சிறியளவில் இஸ்லாமிய மாணவர்களும் இருப்பார்கள்.
3) சிங்களப்பாடசாலைகள் எனும்போது அங்கு மிகச்சிறிய அளவில் மலையகத் தமிழர்களும், இஸ்லாமியரும் கற்கிறார்கள்.
4) தமிழ் பாடசாலைகளில் கற்கும் அனைவரும் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் இல்லை; வட கிழக்கினைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் இதற்குள் அடங்குவார்கள்.
5) தமிழர்கள் எனும் போது கிருஸ்தவ, இந்துக்கள் தம்மைப் பிரித்துக்காட்டுவதில்லை என்பதும் இங்கு நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6) சமூகமாக கூட்டிணைந்து வளங்களைப் பெறுவதற்கு மிக அவசியமானது என்பதால் மேற்குறித்த பகுப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் தமது சமூகம் என்ற உத்வேகத்துடன் கல்வி வளர்ச்சிக்கு தம்மால் இயன்ற உதவியை நன்கு செய்கிறார்கள் என்பது மிகச்சிறப்பான விடயம்.
7) மேற்குறித்த சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற சொற்பதங்கள் 100% பகுப்பாய்விற்கானதும் சமூகமாக கல்வியில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என்பதை ஆராய்வதற்கான பகுப்பு என்பதையும், கல்வியில் விளிம்பு நிலையில் இருக்கும் மலையக தமிழ் சமூகத்தை உத்வேகப்படுத்தி தலைமைத்துவங்களை உருவாக்குவதற்குமான ஒரு கருவியாகவே புலமை அடிப்படையில் முன்வைத்துள்ளார்கள்; ஆய்வாளர்கள் எந்தவித இன, மதப் பாகுபாட்டினை தனிப்பட ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும், தமது ஆய்வுகளில் புலமைத்துவ அறத்தையும் முழுமையாகப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறார்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.