நேற்று
நீண்டகாலத்திற்கு பிறகு சரியாக 02 வருடங்களுக்கு பிறகு விவசாயக் களப்பணி! சிறு
விவசாயிகளைச் சந்தித்து அவர்களுக்குரிய அறிவுசார் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பது
திட்டம்!
தென்கிழக்கு
பல்கலைக்கழகத்தின் "Link to the community" திட்டத்தினை முன்னெடுக்கும்
Dr. Nishānthan
Ganeshan அழைத்துச் சென்றார்! இந்தப் பயணம் ஏற்படுத்திய மலையகத்தின்
பெருந்தோட்ட மக்கள் பற்றிய சிந்தனை.
மண்ணை டொலராக்கி உலக
பொருளாதாரத்தை இலங்கையுடன் இணைக்கத் தெரிந்த உழைப்பாளி மக்களை ஏழைகளாக
வைத்திருக்கும் காரணிகள் எவை?
அவர்களுக்கு தாமாக தமது
சுய பொருளாதாரத்தை உருவாக்கத் தேவையான கல்வியறிவு, பொருளாதார அறிவு, உழைக்கும்
உழைப்பு முழுமையாக அவர்களுக்கே கிடைக்கும்படி அவர்களது உழைப்பைத் திருடாத ஒரு
பொருளாதாரக் கட்டமைப்பு.
உழைப்பாளிகளை
சோம்பேறியாக்கும் இலவசங்கள், உடல், மன உறுதியை அழிக்கும் மதுபானம், போதைப்
பொருட்கள் இவை ஊடுருவாத சமூக அமைப்புகள்.
மலையகத்தின்
ஒருபகுதியில் பணக்கார இஸ்லாமிய பெரியவர் பல தோட்டங்களை வாங்கி ஏழை பெருந்தோட்ட
மக்களுக்கு இலவசமாக/சிறிய தொகையாக காணித்துண்டுகள் வழங்கியுள்ளார்.
பணக்கார
அரசியல்வாதிகள், மலையகத் தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் முதலிடாமல் இப்படியான
திட்டங்களை முன்னெடுக்கலாமே!
நாம் ஏன் இப்படியான
திட்டங்களை முன்னெடுப்பதில்லை என்றால் ஒவ்வொரு அரசியல்வாதிக்குள்ளும் உண்மையான
தீர்வினை தருவதை விட தம்மை ஹீரோக்களாகக் காட்டும் அல்லது அந்த மக்களை பணத்தில்,
அதிகாரத்தில், கல்வியில் அவர்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்று உள்ளூர நான் தலைவன்
நீ அடிமை என்ற எண்ணம் உள்ளே இருப்பதுதான்!
சமூகம் எப்போது
முன்னேறும்?
நான் பெற்றதை விட நீ
அதிகமாகப் பெறவேண்டும் என்ற மனமுள்ள தலைவர்கள் உருவாகும் போது!
என்னை விட எனது பிள்ளை
உயர் நிலையில் இருக்க வேண்டும் என்ற மனநிலை பெற்றோரிற்கு இருக்கும் போது!
என்னை விட எனது மாணவன்
நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற மனநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படும் போது!
நான் பட ஹீரோவாக எனது
மக்கள் மனதை மயக்கி தலைவனாக்காமல் எனது மக்களுக்குரிய கல்வியறிவு, பொருளாதாரச் சுதந்திரத்திற்கான
வாய்ப்பு இவற்றை உருவாக்கும் தலைவனாக நான் இருக்க வேண்டும் என்று அரசியல்வாதிக்கு
ஞானம் பிறக்கும் போது!
உபரியாக இருக்கும்
பணத்தை பதுக்காமல், ஏழைமக்கள் வாழ்க்கைத் தரம் உயர என்ன திட்டங்களில் நான்
முதலிடலாம் என்று தொழில் முனைவோன் சிந்திக்கத்தொடங்கும் போது!
யாரிடமும் கையேந்தாமல்
நாம் எமக்குரிய வாய்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும்
ஏற்படும் போது!
உளச்சுத்தியுடன் நமக்கு
இருக்கும் பணம், பட்டம், பதவிகள் போதும், மற்றவர்களை உயர்த்துவதற்கு நாம் பாடுபட
வேண்டும் என்ற எண்ணம் எமக்குள் ஆழமாகச் செயல் கொள்ளும் போது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.