புராணங்கள், இதிகாசங்கள் படிக்கும் போது தேவையில்லாமல் எம்மை நாமே
குழப்பி விசரர் ஆகக்கூடாது.
அவை தர்க்க மனம்
தாண்டிய ஆழ்மனம் உண்மையை கவ்விக்கொள்வற்காக எழுதப்பட்டிருக்கும் முறைகள். நேற்று
ஒரு நண்பர் சூரியன் பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் கொடுத்தார் என்றவுடன்,
ஆபுத்திரன் மணிமேகலைக்குத்தான் அட்சய பாத்திரம் கொடுத்தார் என்று கருத்துப்
போட்டார்.
உண்மையில் எம்மிடம்
இப்படியொரு அட்சய பாத்திரம் இப்போது இருக்கிறதா என்று யோசித்தால் இல்லை என்பதுதான்
பதில்! பிறகு எதற்கு இந்த வீண் ஆராய்ச்சி!
இந்தக்கதை எனக்கு ஒரு
உத்வேகத்தைத் தந்தது! பாண்டவர்கள் வனவாசத்தின் போது உணவிற்கு தவிக்க, கிருஷ்ணர்
சூரியனை நோக்கி தபஸ் செய்யச் சொல்கிறார். சூரியர் அள்ள அள்ளக்குறையாத அட்சய
பாத்திரத்தை தர்மருக்கு கொடுக்கிறார் என்பதும், அதன் மூலம் அவர்களுக்கு
"காட்டில்" குறைவின்றி உணவு கிடைத்தது என்பதும் மகாபாரதம்!
இதைப் படிக்கும்போது
உணவு உற்பத்திக்கு சூரியன் தான் மூலம், அதுபோல் மனிதனில் அறிவின் சிறப்பிற்கும்,
பிராண ஆற்றலிற்கும் சூரியன் தான் அடிப்படை என்று ஆயுர்வேதம், யோகம் அறிவியல்
எல்லாம் சொல்லுகிறது. மண்தான் அட்சய பாத்திரம்; வளமுடைய மண்ணில் எதை வைத்தாலும்
அது அள்ள அள்ளக் குறையாமல் உணவினைத் தரும். இயற்கைச் சமநிலையுடைய காட்டில்
எப்போதும் உணவிற்கு தட்டுப்பாடு வருவதில்லை.
ஆக நகரத்தில் வாழ்ந்த
பாண்டவர்களுக்கு காட்டில் உணவு எப்படிக் கிடைக்கிறது என்ற அறிவு இருக்கவில்லை; அதை
கிருஷ்ணனின் வழிகாட்டலில் சூரியன் எப்படி காட்டில் உற்பத்தியை, தாவர விலங்கு
வர்க்கத்தினை உருவாக்குகிறான் என்ற அறிவு பாண்டவர்களுக்கு வாய்த்தவுடன் காட்டில்
தேவையான உணவு கிடைக்கத் தொடங்கியது என்று அர்த்தம்!
இதுபோல் மண்ணின்
வளத்தினை, உற்பத்தியினை எப்படி மேம்படுத்துவது என்ற அறிவினைப் பெற்றால் பூமி அட்சய
பாத்திரமாக உணவினை உற்பத்தி செய்யும் என்பதுதான் எம்மை நாமே குழப்பிக்கொண்டு
புலம்பாமல் இருப்பதற்குரிய விளக்கம்!
புராணங்கள் ஆழ்மனத்தை
தூண்டி யதார்த்த உண்மையினைத் தரும்! மேற்குறித்த கதையிலிருந்து எமக்கு பொதுவாக
சூரியன் எப்படி உற்பத்தியை தருகிறது என்பது விவசாயத்தில் ஒரு தாவரத்தின் Leaf Area
Index (LAI) இனை வைத்துக்கொண்டு நாம் கணிக்கிறோம்; நாட்டில் வாழ்ந்த
பாண்டவர்களுக்கு நாட்டில் நடைபெறும் உணவுகள் பற்றிய அறிவே இருந்திருக்கும்!
காட்டின் LAI அதிகம்; காடு அள்ள அள்ளக்குறையாத உணவினைத் தரும் அட்சய பாத்திரம்! ஆக
தர்மர் காட்டிற்குள் சூரிய சக்தி அவ்வளவு பெரிய LAI இன் மூலம் நடைபெறும் உணவு
உற்பத்தியினை அறிந்துகொண்டதால் அட்சய பாத்திரத்தின் இரகசியத்தை அறிந்துகொண்டார்!
சூரியனிடமிருந்தும்,
மண்ணிடமிருந்தும் ஆற்றலைப் பெற்று உணவு உருவாகிறது. உதாரணமாக காட்டில் உணவு
உற்பத்தியைப் புரிந்துகொள்ள சூரிய ஒளி ஊடுபுகும் அளவிற்கு தக்க இருக்கும்
அடுக்குகளைப் புரிந்து கொள்ளவேண்டும். முதல் அடுக்கு சூரிய ஒளியிலிருந்து சிறிய
தாவரங்களை பாதுகாக்கும், மனிதனிற்கு தேவையான உணவு கிடைக்காது. மூன்றாம், நான்காம்,
ஐந்தாம் அடுக்குகளிலும், நிலத்திற்கு கீழும் மனிதனுக்குரிய கிழங்கு வகைகள்
கிடைக்கும். இதுதான் சூரியனை தியானித்து அட்சய பாத்திரம் தர்மர் பெற்றார் என்பதன்
விளக்கம்! சூரியன் காட்டில் உணவினை எப்படி உற்பத்தி செய்கிறார்? மண்ணில் தாம்
உண்ணக்கூடிய குறைவில்லாத உணவு எங்கிருந்து கிடைக்கும் என்ற அறிவு!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.