ஓஜஸ் அல்லது ஓஜா
என்றால் உயிர், வீரியம், பளபளப்பு, சக்தி, உடல் வலிமை, ஆற்றல் என்று சமஸ்க்ருத
அகராதி பொருள் தருகிறது. ஆயுர்வேதத்தில் உடலைக் கட்டமைக்கும் ஏழு தாதுக்களின் சாராம்சமான
செறிவு ஓஜஸ் எனப்படுகிறது. ஆயுர்வேத அறிஞர்கள் ஓஜஸ் என்பது ஒரு தனிநபரின் வலிமை,
வீரியம் மற்றும் உயிர்ச்சக்திக்கு பொறுப்பான, உடலின் சுறுசுறுப்பான மற்றும்
ஆற்றல்மிக்க ஒரு தாதுவாகக் கருதுகிறார்கள். ஓஜஸின் குறிப்பிட்ட பண்புகள், அதன்
சிறப்பியல்பு அம்சங்கள், அளவு, அதன் மூன்று நிலைகள், மருத்துவ அம்சங்கள் மற்றும்
அதன் சிகிச்சை ஆகியவை சரக சம்ஹிதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தின்
அடிப்படையில், ஆயுர்வேத மருத்துவர்கள் (வைத்யா) தற்போதைய மருத்துவ நடைமுறையில் ஓஜஸ்
அசாதாரண நிலைகளுக்கு செல்லும் அறிகுறிகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர்.
இருப்பினும், நவீன விஞ்ஞானிகள் இன்னும் இதற்குரிய சரியான உடலியல் கூறுகளைத்
தேடுகின்றனர்.
ஓஜஸ் என்பதை சுசுருதர்
ஏழு தாதுகளிலிருந்தும் உருவான தூய்மையான, மிகச்சிறந்த சாரம் என
வரைவிலக்கணப்படுத்துகிறார். (ஸுசுருத சம்ஹிதை, சூத்ர ஸ்தானம் 15/19); சரக சம்ஹிதை
உடலில் இருக்கும் சமநிலை கெடாத கபம் ஓஜஸ் என்கிறது.
ஸுசுருத சம்ஹிதைப்படி
ஒரு மனிதனின் அடிப்படை ஓஜஸ் சக்தி தந்தையின் சுக்கிலத்திலும், தாயின்
சுரோணிதத்திலிருந்தும் கருவானது தனது ஆரம்ப ஓஜஸினைப் பெறுகிறது. இருவரும்
அளிக்கும் ஓஜஸின் அளவிலிருந்தே கரு தனது உடல், அறிவு வளர்ச்சிக்கான ஆற்றலைப்
பெறுகிறது. அதாவது கரு தாயின் உடலிலிருந்து போசனையைப் பெற்று நலமாக வாழ தந்தையும்,
தாயும் தமது சுக்கில் சுரோணித ஆற்றல்களில் தேவையான அளவு ஓஜஸ் சக்தியினைக்
கொண்டிருக்க வேண்டும். பிறந்து உடல் வளரும் போது ஒவ்வொரு தாதிலிருந்தும் சாரமாக
ஓஜஸ் சக்தி ஒவ்வொரு மனிதனிலும் உருவாவதாக ஸுசுருதர் போன்ற ஆயுர்வேத அறிஞர்கள்
கருதுகிறார்கள். வாக்படர் போன்ற சில அறிஞர்கள் ஓஜஸ் என்பது சுக்கில தாதுவின் சாரம்
என்று கருதுகிறார்கள்.
ஸுசுருதர் ஓஜஸினை
விளக்க பாலிலிருந்து நெய் வருவதை உதாரணப்படுத்துகிறார்; பால் உறைகுத்தி தயிராகி,
தயிரை கடைய மோராகி, மோரிலிருந்து வரும் நெய் போன்றது; சப்ததாதுக்களிலிருந்து
சாரமாகி வரும் ஓஜஸ் எனும் தாது என்கிறார்.
சரகர் பூவில் வரும்
தேன் போன்றது என்று இந்த ஓஜஸ் தாதுவினைக் குறிப்பிடுகிறார்.
ஓஜஸ் என்பது உடல்
முழுவதும் ரக்த தாதுவில் நிறைந்து இதயத்தில் நிலைகொள்வதாக ஸுசுருதர்
குறிப்பிடுகிறார். இதன்படி உடலில் இருவகையான ஓஜஸ் சக்தி இருக்கிறது.
1) பரா ஓஜஸ் -
உயிரிற்கு ஆதாரமானது; தாய் தந்தையிடமிருந்து பெற்ற எட்டுத்துளிகள் இதயத்தில்
இருப்பதாக ஸுசுருதர் குறிப்பிடுகிறார். இதை இழக்கும் போதே மரணம் ஏற்படுகிறதாக
கூறுகிறார். உடல் பரா ஓஜஸினால்தான் சமநிலையில் ஆரோக்கியமாக இருக்கிறது.
2) அபரா ஓஜஸ் - இது
நாம் உண்ணும் உணவு அன்ன ரஸமாகி அதிலிருந்து உடல் ரஸமாக சப்த தாதுக்களாக மாறி அவை
ஒவ்வொன்றின் சாரமும் எமது இரத்தத்தைப் போசிப்பதால் எம்மில் உருவாகும் ஓஜஸ் சக்தி.
இது ரத்தத்தில் கலந்து உடலெங்கும் பரவி உடலை ஆரோக்கியமாகவும் ஒளிமிகுந்ததாகவும்
வைத்திருக்கிறது.
வைத்யாச்சாரியார்
ஸ்ரீ ஸக்தி சுமனன்
22/06/2022
#ojas #ayurveda #ayurvedicmedicine #ayurvedalife #yoga #yogalife #yogapractice #sadhana #tantra #health
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.