இன்று காலையில் அனேகரது
முக நூல் பக்கம் தேசபக்தியால் வழியத் தொடங்கியுள்ளது! இதற்கு 2400 வருடங்களுக்கு
முன்னர் சீனத்து ஞானி லாவோ ட்சு தனது தாவோ தே ஜிங் என்ற நூலில் 18 வது கவிதையில்
சுவாரசியமான ஒரு குறிப்பு கொடுக்கிறார்.
மாபெரும் தாவோ
மறக்கப்பட்ட போது
நற்பண்புகளும் தெய்வ
பக்தியும் தோன்றியது
பிறகு புத்தியும்
அறிவும் வெளிவந்தன
குடும்பத்தின் அமைதி
குலைந்தபோது
வாரிசுரிமைப் பற்று
தொடங்கியது
நாடு குழப்பத்தில்
ஆழ்ந்த போது
தேசபக்தி ஜனனமாயிற்று
{மொழிபெயர்ப்பு:
சந்தியா நடராஜன்}
இங்கு தாவோ என்றால்
விழிப்புணர்வு என்று அர்த்தம் கொள்ள வேண்டும். மனிதன் விழிப்புணர்வுடன் பிரபஞ்ச
நியதியைப் பின்பற்றும் வரை கடவுளோ, நல்லது கெட்டது என்ற ஒழுக்கத்தைப்
பின்பற்றத்தேவையில்லை. எப்போது விழிப்புணர்வினை இழக்கிறானோ அப்போது அவனுக்கு
நற்பண்புகள் போதிக்கவும், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று மனதிற்கு பயத்தின்
மூலம் விழிப்புணர்வு உருவாக்கத் தொடங்கினார்கள். இதிலிருந்து இது சரி, இது பிழை
என்ற அறிவு, புத்திகள் உருவாகத்தொடங்கின!
அதுபோல் ஒரு
குடும்பத்தில் அனைத்துப் பிள்ளைகளும் ஒத்திசைந்து, ஒற்றுமையாய் அமைதியுடன் வாழும்
போது குடும்பத்தின் வளம் எப்போதும் அழியாது! விழிப்புணர்வு அற்ற குழப்பம்
உருவாகும் போது யார் குடும்பத்தின் சொத்தினை, பெருமையினை வளர்ப்பானோ அவனை
வாரிசாக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகியது.
இதுபோல் நாட்டில் அமைதி
இருக்கும் போது எவருக்கும் தேசபக்தி பற்றி எண்ணம் வராது. குழம்பியவுடன் ஒன்று பட
தேச பக்தி உதயமாகிறது.
ஆகவே மக்களே
விழிப்புணர்வுடன், எது பிரபஞ்ச தர்மமோ, நியதியோ அதனுடன் செயலாற்றுங்கள்! அது
நன்மையைத் தரும்! விழிப்புணர்வு இல்லாமல், உங்களை உசுப்பேத்தும் அரசியல் வாதிகளை
தேர்ந்தெடுத்து குழப்பத்தை உருவாக்குவதும் நீங்கள் தான்! அந்தக்குழப்பத்தை
சமப்படுத்த தேசபக்தி என்று உரக்கக் கூறுவதும் நீங்கள்தான்!
ஆகவே விழிப்புணர்வுடன்
இருங்கள்! அது சமநிலையான சமூகத்தை, தேசத்தை உருவாக்கும்!
இதுவே தாவோ சொல்லும்
உபதேசம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.