குறிப்பு: இந்தக்கட்டுரையின்
நோக்கம் விவசாயத்துறையின் பிரச்சனைகளை தெளிவாக பொருளியல் அடிப்படையில்
சிந்திப்பதற்கான மனநிலையை உருவாக்குதல்; ஆகவே இந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு
நீங்கள் விவசாயத்துறை சார்ந்த உயர் பதவிகளில் இருப்பவராக இருந்தால் கூறவரும்
மையக்கருத்தை சரியாக உள்வாங்கி உங்கள் வாதங்களை முன்வைப்பது வரவேற்கப்படுகிறது.
****************************************
இலங்கை வங்குரோத்து
அடைந்துவிட்டதாக பல பொருளியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளர்கள்.
அதுபோல் இந்த நிலையால் உணவு உற்பத்தியும் சீர்கெட்டு உணவுப் பஞ்சம் வரும் என்பதாக
உலக உணவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த இரண்டு நிலையும்
ஏற்படுவதற்கான காரணங்களை நுணுக்கமாக ஆராய்ந்தால் அதற்கு காரணம் – “அபி தமை
ஹொந்தட்ட கரே - நாங்கள் தான் சிறப்பானவர்கள்” என்ற அறியாமையே காரணம். இந்த மமதை
வந்தவுடன் யதார்த்த சூழலைப் புரியும் தன்மையை நாம் இழந்து விடுவோம்!
அடிப்படைப் பொருளாதார
அறிவு இல்லாமல் நீண்டகாலப் போரை முடிவுக்கு கொண்டுவந்ததால் தம்மால் சாதிக்க
முடியாதது எதுவும் இல்லை என்ற மமதையுடன் தமக்கு ஒவ்வாத வேலையைச் செய்து
மாட்டிக்கொண்டிருக்கிறது அரசாங்கம்.
விவசாய நாடு என்று
வாயில் சொல்லிக்கொண்டு விவசாயத்திற்குரிய எந்தத் திட்டமும் பொருளியல் அடிப்படையில்
வகுக்கப்படவில்லை. உல்லாசப்பயணத்துறைதான் எமது வருமானத்திற்கான பெரும் பகுதி என்று
மூலோபாயம் வகுத்துவிட்டு கட்டாயம் வருமானம் வந்தே தீரும் என்று நம்பிக்கொண்டு
உலகம் எல்லாம் கடன் வாங்கிக்கொண்டு உழைக்காமல் இலவு காத்த கிளியாக காத்திருக்க
கோவிட், உக்ரைன் ரஷ்யா என்ற சுனாமி வந்து இலங்கையின் பொருளாதாரத்தைக் காலி
செய்துவிட்டது.
சேமிப்பு இல்லை, அதீத
கடன், உற்பத்தி இல்லை ஆகவே வங்குரோத்து!
EMI இல் உல்லாச
வாழ்க்கை வாழ்ந்த IT கம்பனியில் வேலை பார்த்தவனுக்கு You are fired என்று காலையில்
வேலைக்கு போகும்போது சொன்னால் என்ன நிலைமையோ அந்த நிலைமைதான் இலங்கை
அரசாங்கத்திற்கு!
இதே மாதிரியைத்தான்
விவசாயத்துறையும் பயன்படுத்துகிறது! அரசன் எவ்வழியோ துறைகளும் அவ்வழி!
மூன்று மாதங்களில்
பணக்காரன் ஆகுங்கள் சுய முன்னேற்ற நூல்கள் உசுப்பேத்துவது போல்,
அல்லது சீனாக்காரன்
இலங்கை அரசாங்கத்தை உசுப்பேத்தி கடன உடன வாங்கி துறைமுகம் கட்டுங்கள் கப்பல்
வரும், விமான நிலையத்தை கட்டுங்கள் வருமானம் முப்பதே நாட்களில் பிய்த்துக்கொண்டு
வரும் என்று உசுப்பேத்தி கடன் கொடுப்பதைப் போல்,
அப்பாவி விவசாயிகளை
உசுப்பேத்தி விவசாய ஆலோசனை என்ற பெயரில் உரம் போடுங்கள் விளைச்சல் அமோகமாக வரும்,
பீடைகொல்லி பாவியுங்கள் விவசாயம் அமோகமாக வரும் என்று நம்பிக்கை ஊட்டி செலவழிக்க
வைப்பார்கள். இதை எங்களுடைய ஆய்வுகளின் மூலம் நிரூபித்திருக்கிறோம் என்று அப்பாவி
விவசாயியிற்கு புரியாத அறிவியல் விஷயங்கள் சிலதைக் கூறிக் குழப்பி சரி சேர்
சொல்லுகிறார் செய்வோம் என்று விவசாயியும் செய்யத்தொடங்குவார்.
இலங்கை அரசாங்கத்தின்
கொள்கை முடிவுகளும் "சேர் சொல்கிறார், செய்ய வேண்டும்" என்று
விளைவுகளைச் சிந்திக்காமல் சொன்னபடி செய்யும் சுப்பர்களால் ஆனது என்பதும் இங்கு
கவனிக்கப்பட வேண்டும்.
சொல்லப்படும்
ஆலோசனைகளினால் வரக்கூடிய பொருளாதார சுமை விவசாயியை எப்படித் தாக்கும் என்பது பற்றி
கிஞ்சித்தும் சிந்தனை இல்லை!
இந்த அறிவுரை எல்லாம்
கேட்டு உசுப்பேறிய விவசாயி உற்பத்திச் செலவை பல மடங்காக்கியிருப்பார்; விளைச்சல்
அமோகமாக வந்துவிட்டது' விவசாய ஆலோசகருக்கு பெரிய மகிழ்ச்சி! தான் சாதித்துவிட்டேன்
என்று அறிக்கை எழுதி விடுவார்; அமோகமாக வந்த விளைச்சலுக்கு விவசாயியிற்கு கிடைத்த
நிகர இலாபம் எவ்வளவு என்பது பற்றி எந்த பேச்சும் இல்லை!
இலாபம் இல்லை என்றவுடன்
அவர்கள் தாம் ஏமாற்றமடைகிறோம் என்ற விரக்திக்குள் சென்று அடுத்தமுறை இவர்கள்
சொல்லுவதைக் கேட்க மறுக்கும் போது உடனே இலகுவாக இவர்கள் விவசாயிகள் ஒத்துழைக்க
மறுக்கிறார்கள் என்று கூறத்தொடங்குகிறார்கள்.
பிரச்சனையின் அடிப்படை
விவசாயத்தொழில் நுட்பங்களின் பயன்பாடு உற்பத்திச் செலவைக் கூட்டுவதாகவும், கூடிய
செலவை ஈடுகட்டும்படி சந்தை வாய்ப்பில்லாமலும் இருக்கிறது என்ற யதார்த்த
சிந்தனையுடன் விவசாயத்திணைக்களம் விவசாயிகளை வழி நடாத்துகிறதா என்பதே!
பொருளாதார அடிப்படையில்
ஒருவன் மீண்டும் மீண்டும் ஒரு தொழிலில் வங்குரோத்து அடையாமல் இருக்க வேண்டும்
என்றால் முதலில் அவன் தனது உற்பத்தியின் மூலம் நிகர இலாபத்தினை அதிகரித்து அதை
தனது சேமிப்பிற்கு கொண்டு செல்ல வேண்டும். எதிர்பாராத நட்டத்திலிருந்து மீள இந்த
சேமிப்புக்களே உதவும்! ஆனால் தற்போதைய விவசாய முறை எந்த விவசாயியும் நிகர வருமானம்
பெறும் வகையில் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கு தகுந்த சிந்தனை
முறை தேவை! எமது பட்டம், பதவி, அதிகார ஆணவங்களை விட்டுவிட்டு அடிப்படைப்
பிரச்சனையைச் சிந்திக்கும் எளிமையான மனம் தேவை! பொறுப்பில் இருப்பது பெருமைக்கு
அல்ல! மற்றவர்களுக்கு உதவுவதற்காக என்ற உணர்வு இருக்க வேண்டும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.