பல போர்களை வென்ற 24ம்
புலிகேசி மன்னருக்கு தனக்கு இப்படி எதிர்ப்பு வரும் என்பதை தாங்க முடியவில்லை!
நாங்கதானே நல்லாச் செய்தனாங்க! என்று அடிக்கடி மார்தட்டிக்கொண்டு குறுக்கும்
நெடுக்குமாக குட்டி போட்ட பூனை போல் மந்திரிமாரை சூழ வைத்துகொண்டு
நடந்துகொண்டிருந்தார்!
மந்திரியாரே,
நான் இப்படியான ஒரு
எதிர்ப்பை எதிர்பார்க்கவே இல்லையே! ஒற்றர்களாலும் அனுமானிக்க முடியவில்லையே!
இதற்கு காரணம் என்ன?
மன்னா, மேற்குலகம்
நுட்பமாக மனித மனதின் தன்மையைக் கண்டறிந்து, மனிதனை ஒரு மட்டத்திற்கு மேல்
சிந்திக்க விடாமல், இப்படி கிளர்ந்து எழாமல் இருப்பதற்கு அவனது நேரத்தை, சிந்தனை
செயலாக்காமல், அதிகாரத்தை ஆட்டம் காணாமல் வைத்திருக்க பேஸ்புக், யூடிப், இப்படி பல
சமாச்சாரங்களை உருவாக்கி வைத்திருக்கிறது! எல்லோரும் பிரச்சனை என்று வந்தவுடன்
அவற்றை வெளியேற்றி திருப்திப்படுத்த ஒரு
தளம் வேண்டும்! அது அரசை நோக்கி, அதிகாரத்தை நோக்கி இருக்கக்கூடாது; அஜீரணம்
வந்தால் வாந்தி எடுப்பதற்கு கொல்லைக்கு ஓடுவதைப் போல்! இப்படி புரட்சிகர
எண்ணங்களைக் கொட்டுவதற்கு ஒரு தளம் இருந்தால் அவர்கள் தமது எண்ணங்களைக் கொட்டும்
போது நாம் அங்கிருந்தே உளவுப் பணியை ஆரம்பித்து முளையிலேயே கிள்ளி எறியலாம்!
எமது மக்கள் படு
சோம்பேறிகள்! சனி ஞாயிறு என்றால் வாகனத்தில் டீசலும், பெற்றோலும் நிரப்பிக்கொண்டு
ஊர் சுற்றி, குடி கும்மாளம் நடத்திக்கொண்டு இருப்பார்கள்! எவருக்கும் உற்பத்தி
நடக்கிறதா? பொருளாதாரம் எழுகிறதா? வீழ்கிறதா என்ற சிந்தனையெல்லாம் மூளைக்கு நோகும்
விஷயங்கள்!
நீங்கள் மின்சாரம், டீசல்
இந்த இரண்டிற்கும் குறைபாடு வராமல் பார்த்துக்கொண்டிருந்தால் இவர்களுக்கு இப்படி
நாட்டின் பொருளாதாரம் என்ன ஆயிற்று? உங்கள் குடும்பம் என்ன செய்கிறது என்றெல்லாம்
நோண்டுவதற்கு நேரம் இருந்திருக்காது!
வீணாக இவை இரண்டிலும்
கைவைத்து மக்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள் மன்னா! அதற்கு ஒரு படி மேலே சென்று
சமூக ஊடகங்களினை தடுத்து வீணாக சொறிந்து விட்டிருக்கிறீர்கள்!
பலே மந்திரியாரே,
இன்றிலிருந்து மக்கள் அனைவருக்கும் மின்சாரமும், டீசலும் குறைவின்றி கிடைக்க எங்கே
கடன் வாங்கலாம் என்பதை முதலில் பாரும்! மூடப்பட்ட தெருவிளக்குகள் அனைத்தும்
இன்றிலிருந்து வேலை செய்யட்டும்! மின்வெட்டு இருக்கும் என்று முழங்குங்கள்! ஆனால்
மின்வெட்டு இருக்கவே கூடாது! மக்களை குஷிப்படுத்துங்கள்! அனைவரும் பேஸ்புக்கிலும்,
யூடியுபிலும், டிக் டொக்கிலும் மூழ்கட்டும்!
புரட்சிகள்
புஸ்வாணமாகட்டும்!
- யாவும் கற்பனை -
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.