ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களிடம் சாதனை பயிலும் ஒரு மாணவரின் அனுபவம்
*************************************************************
தேவியை உபாசிக்கிறோம், இனி எதற்கு ஸ்ரீ கணபதி? என்ற எண்ணம் மெல்ல வளர்ந்து அகங்காரமாக மாறிக் கொண்டிருந்த காலம் அது! தேவியை கோவிலில் தரிசிக்கச் சென்றாலும் ஸ்ரீ கணபதியைக் கணக்கெடுக்காமல் செல்லுமளவிற்குச் சித்தப் பதிவாகி விட்டிருந்தது.
இத்தனைக்கும் நவராத்திரியில் முதன் முதலாக
நான் காயத்திரி அனுஷ்டானம் தொடங்க அமர்ந்த
பொழுதில் வீட்டின் படலையில் மணியடித்து
கடிதம் ஒன்றைத் தந்துவிட்டுப் போனான் தபால் காரன்."From Sai விக்னேஸ்வரா"
(company name) என்று தலைப்பிட்டு வந்த கடிதம் அது! அப்போதே தன் கருணையால் அரவணைத்தவர் ஸ்ரீ கணபதி! இதை விட அது உயர்வு, அதைவிட இன்னொன்று உயர்வு,
என்று அங்கலாய்க்கும் மனது மூலாதாரத்து நாயகனை,
முழு முதலை மறந்தே போனது.
காலங்கள் நகர, திருமணத்திற்காக பெண் பார்த்தல் எதுவும் சரிவரவே இல்லை. சாதனை தொடர்ந்தாலும்,
காயத்திரி அனுஷ்டானங்களை முடித்தாலும், வரம்பில்லாது
கிளைத்து வனமாகி வளரும் என் சித்த விருத்தியை வேரறுக்கும் வழியறியாமல் நாட்களும் ஓடி மறைந்தன.
ஆகஸ்ட் 15, 2017 ஆண்டு குரு சுமனன் அண்ணாவுடன் திடீர் பயணம்! கொழும்பிலிருந்து நேரடியாக விசாகப்பட்டினம் தேவிபுரத்திற்கு! அங்கு கிடைத்த உத்தரவின்படி குரு சுமனன் அண்ணாவின் வழிகாட்டலில் நெறிப்படுத்தப்பட்ட முறைதான்
ஸ்ரீ மஹா கணபதி தர்ப்பணம்.
தடைகள் யாவையும் உடைத்து எம்மை முன்னேற்றும் அற்புத வாகனம்!
மூலாதாரத்தைச்
சரி செய்யாமல்
மேலே முயன்று பயனில்லை! அறிவுறுத்தலின்படி தொடங்கியது ஒரு மண்டல ஸ்ரீ மஹா கணபதி தர்ப்பணம்.
எனது திருமண நாள்தான் ஒரு மண்டல தர்ப்பண இறுதி
நாள்!
அதற்குள்பெண் பார்த்து கதைத்து
முற்றாக, திருமணமும் முடிந்ததே விட்டது.
கணபதி தர்ப்பணத்தின் மகிமைதான் என்னே! அதிகாலையில் தர்ப்பணத்தை முடித்துவிட தடங்கலின்றி நிறைவெய்தியது எனது திருமணம்.
காலங்கள் ஓட குருவருளாலும் ஸ்ரீ காயத்திரி தேவியின் அருளாலும் முதற் குழந்தை ஸ்ரீ காயத்திரி ஜெயந்தி தினத்தில்
பிறந்தது. மனமும் ஸ்ரீ
கணபதியை மறந்தது.
விக்கினங்களை உருவாக்குபவரும் அவரே!
விக்கினங்களை
நீக்குபவரும் அவரே! இடைப்பட்ட காலத்தில் கனவில் ஸ்ரீ கணபதி தோன்றியதை குரு சுமனன் அண்ணாவிடம்
கூறியபோது அவர் ஸ்ரீ கணபதி தர்ப்பணத்தைத் தொடங்கச் சொல்லியும் அதை நான் செய்தேனில்லை.
குருவின் சொல் கேட்டு ஒழுகும் சாதகர்கள் பலருக்கு
துன்பமோ தடையோ அவர்கள் அறிய முன்னரே விலகிவிடுகிறது. என் மனமோ மரத்தில் பிணைக்கப்பட்ட கன்றுக் குட்டி போன்று கயிற்றின் நீளம் அறிய விலகி ஓடப் பார்க்கிறது. மூலாதாரத்தை விட்டு
விலகும் ஒவ்வொரு முறையும் பலத்த அடி விழத்தான்
செய்யும். தடம் மாறும் ஒவ்வொரு முறையும் குருவின் அதட்டல் ஒலிக்கும்.
கர்மவினை மீண்டும் கபடியாடத் தொடங்கியது! குருவை விட்டு விலகும் சிறு இடைவெளிக்குள்ளும் புகுந்து விட பல சக்திகள் காத்துக் கொண்டுதான்
இருக்கின்றன போலும்!
இரண்டாவது குழந்தைக்கான எதிர்பார்ப்பு மனைவிக்கு மூன்று மாதங்களைக் கடந்து ஒப்பேறி
விட்டிருந்தது. வைத்திய பரிசோதனையில் தொப்புள் கொடி கீழே உள்ளதென்றும் அது சத்திர சிகிச்சை செய்யும் இடத்திற்கு அப்பால் செல்ல வேண்டும் என்றும்,
இனி இறைவனின்
பொறுப்பு என்றும் வைத்தியர் கூற, உடனடியாக
குரு சுமனன் அண்ணாவுக்கு அழைப்பு எடுத்தேன். குரு மீண்டும்
ஸ்ரீ மஹா கணபதி தர்ப்பணத்தைத் தொடங்குமாறு பணித்தார்.
அண்மித்த சதுர்த்தியில் தர்ப்பணத்தை ஆரம்பிக்க, இரண்டு கிழமையுள் மீண்டும் வைத்திய பரிசோதனை
செய்தோம் "இப்போது ஏன் வந்தீர்கள் இன்னும் இரண்டு கிழமைக்கு பிறகு தானே எல்லாம் தெரியும்" என்று சினந்து வைத்தியர் ஸ்கான் செய்து பார்த்தபோது திகைத்து விட்டார்!
தொப்புள் கொடி
பாதிப்பு இல்லாத வகையில் அப்பால் சென்றிருந்தது. “இவ்வளவு பெரிய
Gap, இவ்வளவு பெரிய Gap” என்று மீண்டும்
மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார் வைத்தியர்.
ஸ்ரீ
மஹா கணபதி தர்ப்பணம் குருவருளால் ஒரு மண்டலத்தையும் தாண்டி அதிகாலையில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
“எவரினது பாதுகைகளை நினைத்த மாத்திரத்தில் உள்ளம் அமைதியுறுகிறதோ அந்த ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம்! எவரினது தொடர்பு எல்லாத் தடைகளையும் நீக்க வல்லதோ அந்த ஸ்ரீ மஹா கணபதிக்கு
நமஸ்காரம்! யார் உத்தம சாதகர்களின் இதயக்கமலத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறாரோ, அந்த ஸ்ரீ தேவிக்கு நமஸ்காரம்!“
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.