_________________________________
முற்காலச் பழங்குடிச் சமூகங்களின் மையம் தன்னை மற்றைய சக மானிடர்களில் இருந்து உயர்வானதாகக் காட்டும் ஒரு தலைவன் - தெய்வத்திற்க்கொப்பான - எல்லையற்ற ஆற்றல் உள்ள ஒருவனால் வழி நடாத்தப்படுவதாக "அகங்கார" மையத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த அடிப்படையிலேயே அரசும், மதமும் கட்டமைக்கப்பட்டது. இவர்களே அரசர்கள் அல்லது மதத்தலைவர்கள்.
இந்த அமைப்பில் பிரமிக்கத்தக்க அரண்மனைகளும், கட்டுமானங்களும், தேவாலயங்களும், கோயில்களும் மனித ஆற்றலைக் கொண்டே அமைக்கப்பட்டன. பின்னர் இவற்றைக் கொண்டு மக்கள் மனதை பிரமிக்கத் தக்கதாக்கி அதனால் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குபடுத்தும் பொறிமுறை உருவாக்கப்பட்டது. இப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகள் ஒரு சிலரின் புகழை வளர்க்கவே பாடுபட்டது.
மதம் வளர்க்கிறோம் என்று போராடுபவர்கள் எல்லோருக்கும் உள்ளே இருக்கும் மையம் - மதத்தை வைத்து தனது அகங்காரத்தை, புகழை நிலை நிறுத்துவதுதான். சைவத்தை வளர்க்கிறோம் என்று அதன் உயர்ந்த தத்துவத்தை மக்களின் மனதிற்கு புகட்ட எந்த முயற்சியும் எடுக்காமல் துவேஷித்தலையும், குறைகூறலையும், மற்றவனால் எனது சமயம் அழிகிறது என்று "மாத்திரம்" புலம்பிக்கொண்டிருப்பது இவை எல்லாம் உள்ளிருந்து புகையும் அசூயை.
தேவஸ்தானங்கள், கோயில்கள் எல்லாம் சமூக இணைப்பு மையமாக பயன்பட்டால் மாத்திரமே பயனுள்ளவை. நிர்வாகத்தில் இருக்கும் சிலரின் அகங்காரங்களையும், புகழையும் விருத்தி செய்வதாக இருந்தால் அங்கு நோக்கம் தூய்மையற்றுப் போகிறது.
கோயில் கலாச்சாரத்தின் மையம்; அந்த மையத்திலிருந்து சமூகம் உயர்ந்த நிலைக்கு, உயர்ந்த பண்பிற்கு செல்ல வேண்டும்; திருவாசகத்தையும் திருமந்திரத்தையும் கல்லில் எழுதிக் கோயில் எழுப்பும் நாம் மக்கள் மனதில் எழுதுவதற்கு எந்த திட்டத்திற்கும் உதவத் தயாரில்லை! ஏனென்றால் கல்லில் எழுப்பினால் செல்பி எடுத்து புகழ் பாடலாம்;
கோயில் பூசை, அலங்காரம் எளிமையாக சிக்கனமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டு மிகுதிப் பணத்தை சமூகத்தின் கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். கோயிலிற்கு பூவென்பது பூந்தோட்டம் வைத்திருப்பவன் குடும்பத்தின் வயிற்றுப் பசிக்கு உணவு தரும் பொருளாதாரமாக இருக்க வேண்டும்.
நாவற்குழியில் ஐயா அவர்கள் திருவாசக அரண்மனை உருவாக்கி வைத்திருக்கிறார்; அங்கு வருபவர்கள் படம் எடுத்து பிரமித்துவிட்டுச் செல்வதில் என்ன பயன்! உள்ளே வரும் ஒவ்வொருவரும் மாணிக்கவாசகரின் ஒரு பாடலையாவது பொருள் உணர்ந்து அனுபவித்து அக அனுபவம் பெறக்கூடியவாறு அல்லவா அதன் ஒழுங்கு இருக்க வேண்டும்?
அவன் விகாரை கட்டுறான், நான் சிவன் கோயில் கட்டுவோம் என்று காசிருக்கிறவன் முட்டாள்தனமாகச் சொன்னால் சரி தம்பி அதைக் குறைந்த செலவில் செய்துவிட்டு இங்கிருக்கும் விவசாயிகளின் பொருட்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யவைத்து அங்கிருக்கும் எம்மவர்களை வாங்க வைத்து வரும் இலாபத்தில் ஒரு பங்கை அனைவரிடமும் சேர்த்து அனைவரும் பங்களித்த சமூகக் கோயிலாகக் கட்டுவோம்! அதுவரை சமூகம் முன்னேற இந்த நிதியைப் பாவிப்போம் என்று புத்திசாலித்தனம் வேண்டுமல்லவா எமக்கு!
பசியைத் தீர்க்காமல் பகட்டிற்கு ஆலயம் கட்டிக்கொண்டிருந்தால் பசியைத் தீர்ப்பவர்கள் பக்கம் மக்கள் செல்லத்தொடங்கியவுடன் பிறகு அவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்று நாம் துவேஷத்தைக் கிளப்பி அதை சமப்படுத்தப் பார்கிறோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.