4. சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தா
சாதனா மந்திரம்:
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை நம꞉ .
{இதனை இறை சாதனையாக்க விரும்புவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக}
வழிகாட்டல்:
****************************
இந்தப் பதிவை வாசிக்கும் போது அன்னையை உபாசிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றினால் எந்த மனத் தடங்கலும் இன்றி இங்கு தரப்பட்டுள்ள ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சித³க்³னிகுண்ட³ஸம்பூ⁴தாயை நம꞉ .
மந்திரத்தை தினசரி 108 ஜெபித்து வாருங்கள்! தகுந்த நேரம் வரும் போது அன்னை தனது குருபரம்பரையில் ஒருவரை குருவாக அனுப்பி முறையான உபாசனையைக் கற்பிப்பாள்! அதன் பின்னர் உங்கள் குரு முறைப்படி தீக்ஷை அருளி எதைச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளைச் சொல்லித்தருவார்!
ஸுதா ஸ்யந்திநீ பாஷ்யம்
_______________________________________
லலிதை உணர்வாகிய “சித்” இன் அக்கினியில் பிறந்தவள்; அக்கினி என்பது உராய்வுகளால் பெறபடுவது. ல லிதையின் உணர்வினைப் பெறுவதற்குரிய முறை, ஒருவன் தனக்குள் இறைவனைக் காண்பதற்கு அவனது உணர்வு அக்கினித் தன்மை அடைய வேண்டும். எப்படி உணர்வில் அக்கினித் தன்மை உருவாக முடியும்? மனதில் உராய்வினை உருவாக்குவதம் மூலம். மனதில் உராய்வினையும் அக்கினியையும் உருவாக்க மனதை அதன் வழமையாக அது தானாகச் செயற்படும் வழிமுறையிலிருந்து மனதை திருப்ப வேண்டும்.
மனம் எப்படி சாதாரண நிலையில் செயற்படுகிறது? மனம் தான் ஏற்கனவே சேர்த்துவைத்திருந்த ஞாபகம், தர்க்கப் புரிதல், தன்னை தொடர்பு படுத்தி வைத்திருந்த குறியீடுகளுடன், பிம்பங்களுடன், வழுக்களுடன் தொடர்பு படுத்தி எண்ணங்களை ஏற்படுத்துகிறது. ஞாபகம் என்பது கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் சேகரிப்பும் அதன் மீது எழுதப்பட்ட அண்மைக்கால நினைவுகளின் தொகுப்பு.
எனவே ஞாபகம் என்பது ஒரு பூரணமற்ற பதிவாகும். இத்தகைய பூரணமற்ற பதிவுகளில் இருந்து மனிதன் தன்னை வெளிப்படுத்தும் குறியீடுகள் உருவாகின்றது. அத்தகைய பல்வேறு பட்ட குறியீடுகளுக்கான உதாரணம் வருமாறு;
• மொழியியல், எழுத்துக்கள், ஒலிக்குறிப்புகள், சொற்கள், இலக்கணங்கள், வாக்கியங்கள் போன்ற குறியீடுகள்;
• • புள்ளி, கோடு, கோணம், முக்கோணம், சதுரம், வட்டம், கோளம், இடம், மேசை, மின்விசிறி, பனி, மரம், தேனீ போன்ற படங்கள் போன்ற குறியீடுகள்.
ஒருவனில் இருக்கும் ஞாபகப் பதிவுகளில் இருந்து ஒரு தொடர்ச்சி உருவாகி அவை ஒன்றிணைந்து ஒரு சுருக்க நிலைப் புரிதல் மூலம் குறியீடுகள் உருவாகிறது. பின்னர் இவை எண்ணங்களாக விரிந்து ஒப்பிட உதவுகிறது. மன ம் ஒன்றை அறியும் போது அது ஏற்கனவே இருந்த குறியீட்டுடன் ஒப்பிட்டு அதை உறுதிசெய்கிறது, மேலும் இன்னுமொரு முடிவினை, குறியீட்டினை உருவாக்கிறது. ஒரு குறியீடு இன்னுமொரு குறியீட்டினை உருவாக்குகிறது. இப்படி ஒரு குறியீட்டுடன் தொடர்புடைய பல்வேறு குறியீடுகள் ஒன்றிணைந்து உணர்வின் தளமாகவும், இவை எண்ண அலைகளாகவும், அறிவுத் தேக்கமாகவும் விரிவடைகிறது: அதனால்தான் நாம் ஒரு ஆணைப் பார்த்தவுடன் அந்த ஆணின் உருவம் எமது மனதில் இது ஒரு வளந்த ஆண் உருவம், குழந்தை அல்ல, இந்த ஆணின் முகம், கைகள், உடல் இப்படி இருக்கிறது என்ற மதிப்பீட்டை மெல்லியதாகத் தொடங்குகிறோம். இந்த மதிப்பீடு மெல்லியதான, உண்மையாக முழுமையாக அறியாமல் உணர்வின் விளிம்பினால் அறியப்படும் நிலையாகும். மனதின் பொதுவான இயக்கம் தான் ஏற்கனவே பதிவித்திருக்கும் ஆண் பற்றிய குறியீட்டுடன் தான் காணும் உருவத்தைப் பற்றிய எண்ணங்களை உருவாக்கும். உணர்ந்து அறிதல் என்பது மனமானது நிலையற்ற குழப்ப நிலையிலிருந்து ஸ்திரமான உறுதி நிலைக்குச் செல்வதற்கான பாதையாகும். இதன் மூலம் நாம் மனிதனைப் பார்த்தோம், அந்த மனிதனைப் பற்றிய பொதுவான அறிவினை புறவய உலகின் மூலம் அறிந்துகொண்டோம். மேற்கூறிய அனைத்தும் உணர்விற்கு கீழ் நிலையிலேயே நடைபெறுகிறது. அதனால் ஒரு ஆணைப் பார்த்து அவரை ஆண் என்று உறுதி செய்துகொண்டாலும் அங்கு அறியப்படாதவை இருக்கிறது.
நாம் சிந்தித்துக் கொண்டிருந்தாலும், பார்த்துக்கோண்டிருந்தாலும், புற உலகை அனுபவித்துக்கொண்டிருந்தாலும் எமக்குள் ஆழத்தில் சித்தத்தின் இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்திருப்பது அவசியமாகும். நாம் புறவயமாக எதைச் செய்தாலும் சித்த த்தில் இருக்கும் சம்ஸ்காரங்களைக் கொண்டு புறவயமாக நடப்பவற்றை பகுத்து அறிந்துகொண்டே இருக்கிறோம். ஆகவே நாம் காணும் உலகம் என்பது உண்மையிலேயே வெளியே இருக்கும் உலகத்தின் உண்மை நிலை அல்ல; அது உண்மையான யதார்த்த நிலையும் எமது சித்த்தில் ஏற்கனவே இருந்த பதிவுகளினதும் கலவை - யதார்த்தத்தின் அகநிலை கலவையாகும். இதில் எமது கற்பனையின் சாரமும் இருக்கும். இந்த நிலை . நம்மையறியாமலேயே தொலைக்காட்சித் திரையில் தொடர்ந்து வண்ணப்பூச்சினைத் தெளித்துக் கொண்டு, நம்மைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் தொலைகாட்சிப் படத்தைப் பற்றிய ஒரு திரிபுபடுத்தப்படாத பார்வையை நாம் எப்போதும் காண்கிறோம் என்று நம்புவது போன்றது. பார்ப்பது நம்புவதற்கு சமமானது. இதை விட உண்மைக்கு புறம்பான அறிக்கை எதுவும் இருக்க முடியாது.
நாம் மனித மனம் எப்படித் தொழிற்படுகிறது என்பதைப் பற்றிய ஒர் சுருக்கப் புரிதலைப் பார்த்தோம். உள்ளதை உள்ளபடி யதார்த்த்தை எமது அக நிலையுடன் கலந்து திரிவுபடுத்தாமல், ஏற்கனவே சித்த்தில் பதிக்கப்பட்ட குறியீடுகளுடன் கலக்காமல் உள்ளதை உள்ளபடி காண்பது எப்படி என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம், நமக்குள் தடையின்றிச் செல்லும் அகப் பேச்சுக்களை நிறுத்தி தூக்கி எறிவது; பெயரிடுவதை, அங்கீகரிப்பதை, முன்னிறுத்துவதை, பகுத்தறிவு செய்வதை நிறுத்த முயலுங்கள். இதன் அர்த்தம் என்னவென்றால் மனச் செயல்படுவதற்கு இன்றியமையாத கடின மையமானது இயற்கையில் பழைய சித்தப் பதிவுகளுடன் இணைந்திருப்பதால், நாம் பார்க்கும், உணரும் அல்லது கேட்கும் எதையும் பற்றிய புதிய சிந்தனையின் வரியைத் தொடங்க எந்த கடந்த காலப் பதிவையும் அனுமதிக்காமல் இருப்பது. ஒருவரைக் காணும் போது அவர் அந்த நேரத்தில் உரையாடும் இருக்கு நிலையை மாத்திரம் அவதானிக்க வேண்டுமே அன்றி அவரைப்பற்றி நாம் ஏற்கனவே அறிந்து சித்தத்தில் பதிவு செய்து வைத்திருந்த விஷயத்தை தூண்டி அதனுடன் தொடர்பு படுத்தி எண்ணங்களை ஏற்படுத்தக்கூடாது. வேறு வகையில் சொல்வதானால் நாம் ஒரு செயலைச் செய்யும் போது அதனுடன் தொடர்புடைய பழைய ஞாபகத்தைத் தொடர்பு படுத்தக்கூடாது. எமது பார்வையை பழைய ஞாபகம் குழப்பக் கூடாது.
நாம் உணர்வதை பெயரிடுதல், வகைப்படுத்தல், முத்திரையிடுதல் கூடாது. இந்த எழுத்தின் ஒரு எழுத்தை நீங்கள் அடையாளம் காண மாட்டீர்கள்; புரிதல் என்ற வார்த்தையில் நாம் சொல்வது போல் புரிதல் இருக்காது. புரிதல் என்ற வார்த்தையில் நாம் சொல்வது போல் புரிதல் இருக்காது. எந்தவிதமான உணர்ச்சிகளும் இருக்காது, எந்த அனுபவங்களும் இருக்காது; சுருக்கமாகச் சொன்னால் மனதில் எந்த வகையிலும் வேறுபாடு இருக்காது. காண்பவரும் காணப்பட்டுவதற்கு இடையிலும் எந்த வேறுபாடும் உணராத நிலையைப் பெறுவதே முக்கியமானது.
பிறந்த குழந்தை காண்பவற்றை இதுதான் என்று உணர்ந்து அறிவதில்லை. உணரத்தொடங்குவது என்ற புள்ளியில்தான் காண்பதும் காணப்படுவதும் வேறு என்ற பிரிவு உருவாகிறது. நினைவு இல்லை என்ற நிலை இருக்காது; ஆனால் உணரும் நபர் இருப்பார். இப்படியான அறியப்படுவதும் அறிவது ஒன்றறக் கலக்கும் நிலையை சாதகன் அடையும் போதே சிதக்னி விழிப்படைகிறது. சாதகனுடைய மனம் நிற்கும் போது காண்பவன் காணப்படுவதுடன் ஒன்றுகின்றான். இந்த நிலையை அடையும் போது காணப்படும் பொருளிப் பற்றிய பரிபூரண அறிவினை நேரடி அனுபவத்தின் மூலம் அறிகிறான்; அறியப்படும் பொருள் பற்றி ஆராய்ந்து, தர்க்கித்து, காரணப்படுத்தி, உருவகப்படுத்தி நேரத்தை வீணாக்கும் நிலை அங்கில்லை. இதனால் உணர்வு மிக வேகமாகப் பயணிக்கிறது.
இப்படியான சித்க்னி நிலையிலேயே ஸ்ரீ லிலிதை பிறக்கிறாள். இதை ஸமாதி என்று யோக மொழியில் குறிப்பிடுவோம். இந்த நிலை கண்கள் திறந்திருக்கிறதோ, மூடியிருக்கிறதோ என்ற நிபந்தனை எதுவும் இல்லை. இந்த நிலையை ஒருவர் கண்களை மூடிக்கொண்டு பார்க்கிறார், ஒருவர் திறந்த கண்களால் பார்க்கமாட்டார் என்று சொல்லாம். உப நிஷதங்களில் ஒரு ஞானி உலகம் தூங்கும் போது அவர் விழித்திருக்கிறார்; உலகம் விழித்திருக்கும் போது அவர் தூங்குகிறார் என்று சொல்கிறது;
"யா நிஷா சர்வ-பூதானாம் தஸ்யாம் ஜாக்ரதி சம்யமீ"
உலகம் தூங்குதல் என்பது உணர்வுவுடைய மனதால் அறியமுடியாத நிலை; அல்லது ஆழ்மனமாகிய சித்ததில் உலகை அறியும் நிலை.
ஸ்ரீ லலிதை என்பது இருமைத் தன்மை அற்ற பேருணர்வு, அத்வைதம்; அவள் மனம் அற்ற ஸமாதி நிலையான சிதக்னியில் தோன்றுபவள். இந்த நிலை ஸாம்பவி முத்திரை என்று சொல்லப்படுகிறது. இறைவனின் ஆற்ற்லின் வேகத்தை மனதின் இயக்கத்தை நிறுத்துவதன் மூலம் அறியலாம். பார்ப்பவர் இந்த உலகத்தை மாயையான மனக் கணிப்புகள் மற்றும் குறியீடுகள் மூலம் பார்ப்பதில்லை, ஆனால் அவர் தன்னையும் உலகையும் பிரிக்காத நிலையை அடைகிறார். எனவே அவர் உலகத்தின் மாயையான பார்வைக்கு தூங்குகிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.