2) ஶ்ரீமஹாராஜ்ஞீ
மங்களம் நிறைந்த மகாராணி
தேவி பிரபஞ்சத்த்தின் மகாராணி, பிரபஞ்சத்தின் முழுமையான மகாராணியாக இருப்பதால் அதன் முழு ஆற்றல்களையும் தன்னுள் கொண்டிருப்பதால் பெருமையும் கர்வமும் கொண்ட மகாராணி அவள். எப்படியிருப்பினும் இந்த ஆற்றல் மங்களகரமானது. ஆகவே இது நன்மை பயக்கும், வழிகாட்டும், பரிணாமத்தில் உயரச் செய்யும் ஆற்றலாகவே அன்னையின் ஆற்றல் அனைவரிலும் செயற்படும். பெருமையும், ஆணவமும் தனிப்பட்ட அகங்காரத்தைக் குறிப்பிடுகிறது.
முதல் நிலையில் அவள் உணர்வாகவும் - Consciousness
இரண்டாவது நிலையில் அகங்காரமாகவும் வெளிப்படுகிறாள்.
இந்த நாமத்திற்குரிய சாதனை
**************************************
ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஶ்ரீமஹாராஜ்ஞை நம꞉
{இந்த மந்திரத்தை ஜெபித்து கீழ்வரும் தத்துவத்தை தியானித்து வருக}
ஒரு அகங்காரம் தனிப்படுத்தப் பட்ட ஒன்றாக அல்லாத போது அஹம் எனபது மஹா என்ற தன்மையை அடைகிறது; அதாவது அகங்காரம் பிரபஞ்சமாக விரிவடைகிறது. இப்படி நடைபெறும் போதே ஒருவன் கடவுள்தன்மையை அடைகிறான். ரஜோகுணத்தினைச் செலுத்தி ஒருவன் தனது அகங்காரத்தை நீக்க வேண்டும் அல்லது தெய்வ உருமாற்ற்றம் செய்து இறைவனது பிரபஞ்ச அகங்காரமாக மாற்ற வேண்டும்.
அகங்காரமே எமது ஆளுமையாக வெளிப்பட்டு, நான் என்ற தன்மையாக எம்மில் அதிர்கிறது. இது கீழ்வரும் எட்டு பாசங்களாக எம்மில் வெளிப்பட்டு எம்மை செயலுடன் பிணைக்கிறது.
1. வெறுப்பு
2. சந்தேகம்,
3. பயம்,
4. வெட்கம்
5. குலம் - செயல்பாட்டின் அடிப்படையில் ஒரு குழுவுடன் பற்றுதல்
6. ஜாதி - (பிறப்பின் அடிப்படையில் ஒரு குழுவுடன் பற்றுதல்
7. அருவருத்தல்
8. நல்ல குணம் மற்றும் அடக்கம் இவற்றால் வரும் பெருமை
இந்த யோசனைகள் ஒவ்வொன்றும் ஒருவரைப் பிணைக்க முனைகின்றன, எல்லா நேரத்திலும் சாதகர்கள் தனது எதிர்காலத்தின் போக்கை தீர்மானிக்க கடந்த காலத்தை மட்டுமே பார்க்க இந்த அஷ்ட பாசங்கள் பிணைக்கின்றது, ஒருவன் ஒரு விடயத்தைச் சிந்திக்கும் போது மேற்குறித்த அஷ்ட பாசங்களை நினைவில் வைத்தே திட்டமிடுகிறார்கள். இந்த அஷ்டபாசங்களும் வைராக்கியத்தைப் பெறுவதற்குத் தடையானவை. ஒருவன் தனது சாதனை மூலம் ஆன்ம விடுதலை பெற வைராக்கியமே முதல் நிபந்தனை. இந்த அஷ்ட பாசங்கள் என்ற அடிமைத்தனங்கள் அனைத்தும் கடவுளுடன் தன்னை அடையாளப்படுத்துவதற்கான தனிமனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. இந்த பிணைப்புகளின் விளைவு என்னவென்றால், மனிதன் கடந்த காலத்தின் செயலற்ற தன்மையால் கட்டுப்படுத்தப்பட்ட நடத்தைக்கு எப்போதும் உட்படுத்தி அவனை நிகழ்காலத்தில் கடவுளை உணருவதை எப்போதும் இழக்கிறான்.
கவனமாக ஆராய்ந்தால் இவை எம்மில் இருமைத் தன்மையை ஏற்படுத்துவதையும், ஒருவன் பார்ப்பவற்றிலிருந்து பார்வையைப் பிரித்து மயக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம். உண்மையில் இருமைத் தன்மை என்பவை எல்லாம் உணர்வு என்ற மரத்தில் மலரும் மலர்களே!
உணர்வு என்பதே நான் என்ற உணர்வாகும்; இதுவே உண்மையான இருப்பாகும்; ஆனால் நாம் இந்த உண்மையை மறந்து காணப்படும் அனைத்தையும் நான் என்ற மயக்கத்திற்குள்ளாகிறோம். இது எம்மைச் தொடர்ச்சியாக அவித்தையான மயக்கத்தில் வைத்து இருமைத் தன்மையை உண்டு செய்கிறது.
இந்த இருமைத் தன்மையின் விளைவால் மனிதன் கீழ்வரும் அறுவகைக் குணங்களால் தொடர்ச்சியாக சலனிக்கச் செய்யப்படுகிறான்.
1. காமம்,
2. கோபம்,
3. பேராசை,
4. பற்று,
5. பெருமை அல்லது ஆணவம்,
6. பொறாமை.
இந்த அறுவகைக் குணங்களுடன் பயமும், மரணமும் அவனை பிரச்சனைக்கு உட்படுத்துகிறது. இந்த அகஎதிரிகளின் பிடியிலிருது வெளிவருவதற்கான ஒரேயொரு வழி இவற்றை நாம் கொண்டிருக்கும் பிழையான யோசனைகளாகக் கருதி அவற்றுக்கு மாற்றாக தெய்வீக எண்ணங்களை எம்முள் நிரப்புவதாகும். ஒருவனால் இதைச் செய்ய முடியுமாக இருந்தால் அவன் தனது ஆளுமை இத்தகைய தீய குணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது, நான் மரணிப்பேன், பயம் என்பதிலிருந்து வெளிப்பட்டு அகங்காரம் மஹத் அல்லது இறைவனுடைய ஆற்றலாக மாறும். ஆகவே இந்த நாமத்திற்குரிய சாதனை ஒருவன் தான் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெறுப்பு, சந்தேகம், போன்ற இந்த அறுவகை தீய குணங்களையும் நீக்க முயற்சித்த வன்னம் இருக்க வேண்டும்.
தனது பார்வையில்
1) அனைத்திலும் தெய்வத் தன்மை உறைந்திருக்கிறது என்பதையும்
2) எந்தவொரு விதிவிலக்கும் இல்லாமல் அனைத்திலிருக்கும் ஒரே தெய்வ உணர்வு இருக்கிறது என்பதைப் பார்த்து; மிகத் தாழ்ந்த து என்று நாம் எண்ணுவதிலும் உயர்ந்த து என்று எண்ணுவதிலும்; சிஷ்யனிலும், குருவிலும், நண்பனிலும் எதிரியிலும், உணர்வு உள்ளவற்றிலும, இல்லாதவற்றிலும் இடம், காலம், சடப்பொருட்கள் அனைத்திலும் இந்த தெய்வத் தன்மை இருக்கிறது என்பதைப் பார்க்கப் பழகுதல்.
அஹம் என்பதை மந்திரமாக பாவித்தால் தொடர்ச்சியாக உச்சரிக்க அது அஹம் – மஹா என்ற இரண்டு சொற்களாக ஊசலாடும். அஹம் என்பது தனி அகங்கார நிலையையும் மஹா என்பது விரிந்த பிரபஞ்ச உணர்வினையும் குறிப்பிடும். ஆகவே ஒருவன் தியானம் செய்யும் போது அவனது அஹமும் முன்னேறுகிறது; அதேவேளை உணர்வு விரிவதன் பயனாக அவன் பிரபஞ்சத்தினையும் முன்னேற்றுவதற்கு உதவுகிறான். . நன்மை என்பது நல்ல செயல்களில் மட்டும் இருப்பதில்லை; நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களே. ஏனெனில் உண்மையில் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் வித்தியாசம் இல்லை. எண்ணமற்ற செயல்கள் மாத்திரம் என்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லை; செயல்களின் எண்ணங்கள் என்பவை தற்காலிக யதார்த்தத்தைக் கொண்டுள்ளன.
உணர்வு என்பது ஒரு மகா சக்தி; அதுவே அவள்; தனக்கு மேல் எதுவும் இல்லாத மகாராணி; அதனாலேயே அவளில் இருந்து அனைத்து உலகங்களும் ஜனனிக்கின்றது. அவளே உலகனைத்தினதும் கருவறை; அதில் அனைத்தையும் அடக்குகிறாள். உலகில் நடைபெறும் அனைத்துச் செயல்களும் அந்தப் பேருணர்வின் வெளிப்பாடுதான். செயல்கள் என்பது ஆற்றலை வெளிப்படுத்தும் விதைகள். உணர்வின் ஆற்றலே அதியுயர்ந்த ஆற்றல். நாம் காணக்கூடிய ஒளிக்கெல்லாம் மேலான ஒளி! இது எல்லோராலும் காணமுடியாத பேரொளி. இந்த ஒளி காண்பவன், காணப்படுவது, பேரானந்தம் எல்லாவற்றையும் அடக்குகிறது. இந்த ஒளியை மீறி வேறென்ன இருக்கிறது.
அஹம் என்பதன் பொருள் சமஸ்க்ருத மாத்ருகா அக்ஷரத்தின் “அ” தொடங்கி “ஹ” வரையிலுள்ள அக்ஷரங்களைக் குறிக்கும். “ம்” என்ற மகாரம் அவற்றை நாம் உச்சரித்து தொடர்பு படுத்துவதற்கான எழுத்து; சிவ சூத்திரப் பிரகாரம் ஒருவன் “அ” வில் தொடங்கி “ஹ” இல் உச்சரிப்பை முடிக்கும் போது பிரபஞ்ச உணர்விலிருந்து தன்னுணர்விற்குச் செல்கிறான். பரிணாம ம் பிரபஞ்சத்திலிருந்து அகங்காரத்தை அடைகிறது. இதனால் சிவத்தன்மை அல்லது லிங்க நிலை உருவாகிறது; அதாவது அக்ஷர சக்தி அகாரத்திலிருந்து ஹகாரத்தை அடையும் போது அங்கு உணரக்கூடிய தோற்றம் உருவாகிறது. அதாவது தாயின் கருவிலிருந்து குழந்தை வெளிவரும் நிலை; இதனுடைய பாதை “அ” தொடங்கி “ஹ” மீண்டும் குழந்தை தாயை அடையவேண்டும் என்றால் அதற்குரிய அக்ஷரம் “ஹ” தொடங்கி “அ” வரையிலாகும்.
“அ” தொடங்கி “ஹ” வரையிலான அக்ஷரங்களை உடலில் பதிப்பித்தல் “மாத்ருகா சரஸ்வதி நியாசம்” எனப்படும். ஒருவன் தனது விழிப்புணர்வினை அசைத்து பிரவாகிப்பதன் மூலம் தன்னில் சரஸ்வதி தன்மையை உண்டாக்கலாம். ஒரு “அ” தொடங்கி “ஹ” வரை அக்ஷரங்களை உச்சரிப்பதன் மூலம் அவனது அஹகாரத்தினை நேர் படுத்தலாம். இதை மறுபுறமாக உடலில் அடையாளப்படுத்துவதன் மூலம் ஒருவன் தன்னை அன்னையான ஶ்ரீமஹாராஜ்ஞீயின் ஆற்றலுடன் ஒன்றுபடுத்த முடியும். இப்படி ஒருவன் சாதனை செய்வதன் மூலம் நிர்விகல்ப சமாதியை அடையமுடியும். இந்த சமாதி அனுவம் ஒருவனுக்கு முழுமையான ஞானத்தை – அறிவதும், அறியப்படுவதும், அறிவும் ஆகிய மூன்றும் ஒன்றே என்ற உயர்ந்த ஞானத்தை அனுபமாகப் பெறுவான்.
வழிகாட்டல்:
இந்தப் பதிவை வாசிக்கும் போது அன்னையை உபாசிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றினால் எந்த மனத் தடங்கலும் இன்றி இங்கு தரப்பட்டுள்ள ௐ ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஶ்ரீமஹாராஜ்ஞை நம꞉ என்ற
மந்திரத்தை தினசரி 108 ஜெபித்து வாருங்கள்! தகுந்த நேரம் வரும் போது அன்னை தனது குருபரம்பரையில் ஒருவரை குருவாக அனுப்பி முறையான உபாசனையைக் கற்பிப்பாள்! அதன் பின்னர் உங்கள் குரு முறைப்படி தீக்ஷை அருளி எதைச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளைச் சொல்லித்தருவார்!
{ எனது குரு நாதர் தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு எழுதிய "ஸுத்த ஸ்யந்தினி பாஷ்யம்" எனும் விளக்கவுரையின் தமிழாக்கம். யோக சாதனை, தேவி உபாசனை பயில விரும்புவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளவும்}
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.