இன்று தைப்பூசம் நிறைந்த பௌர்ணமி!
செங்காந்தள் பூவுடன் அன்னைக்கு, மகா கணபதி, ஸ்ரீ குரு நாதர் அகத்திய மகரிஷிக்கு அலங்காரம், தர்ப்பணம்!
இன்று அன்னையின் முதல் நாமமாக ஸ்ரீ லலித சஹஸ்ர நாமத்தில் கூறப்படும் நாமத்தின் விளக்கம் பார்ப்போம்!
ஸ்ரீ மாதா (01)
உயர்வற உயர் நலமாகிய திருவடிவான தாய்
தாயினை நாம் மாதா என்கிறோம். மாதா என்றால் அம்மா. இங்கு ஸ்ரீ என்ற முன்னடைமொழி முக்கியமான ஒன்று. ஸ்ரீ என்பது தாய்மையின் உச்ச நிலையினை குறிப்பது. மனித தாய் தனது குழந்தைகளின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து அன்பையும் பாசத்தையும் புகட்டுபவள். ஆனால் பிள்ளைக்கு வரும் துபன்பங்களை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட துரதிஷ்டங்களை நீக்ககூடிய சக்தி உடையவள் அல்ல. லலிதாம்பிகை மனித தாயிற்கும் மேலானவள். அவள் தனது குழந்தைகளின் துன்பங்களை, துரதிஷ்டங்களை அகற்றும் வல்லமை உள்ளவள். குழந்தைகள் எனும் போது இந்த பிரபஞ்சத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் அவளது குழந்தைகளே. அவளே இந்த முழுப்பிரபஞ்சத்திற்கும் அண்டங்கள் அனைத்திற்கும் தாயாவாள். அவள் மாதா என்று அழைக்கப்பட்டாளும் அவளே படைத்து, காத்து, அழிப்பவள். இந்த பிரபஞ்சம் அவளில் இருந்து உருவானது. அவளது ஆணைப்படியே உலகில் அனைத்தும் நடைபெறுகிறது. பிரபஞ்சம் அழியும் போது அவளிலேயே ஒடுங்குகின்றது. இந்த சம்ஸாரம் எனும் பிறவிச் சுழல் பிறப்பு, இருப்பு, இறப்பு என மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. சம்ஸாரம் ஒரு சமுத்திரம் போன்றது. அந்த சமுத்திரத்தின் அலைக்கு எதிராக நீந்துவது என்பது கடினமான ஒரு செயலாகும். இந்த சம்ஸாரத்தின் அலைகள் புலங்களின் செய்கையால் உருவாகிறது. புலன் கள் மனதின் மீது செல்வாக்கு செலுத்தி மனதினை ஆசையிலும் பற்றிலும் ஆழ்த்துகிறது. இந்த சம்ஸார ஸாகரத்தில் இருந்து எதிர் நீச்சல் போட்டு வெளியேறி இறுதி இலட்சியமான பிரம்மத்தியனை அடைவது ஸ்ரீ மாதாவின் ஆற்றலின் துணையால் மட்டுமே முடியும். அவளது அருளைப் பெறுவது அவளை வணங்குவதால் மட்டுமே சாத்தியமாகும்.
ஸ்ரீ மாதா என்பது ஸ்ரீ லக்ஷ்மி - எல்லவித செல்வங்களினதும் தெய்வம், சரஸ்வதி - எல்லாவித அறிவுகளின் தெய்வம், ருத்ராணி - அழிவை ஏற்படுத்தும் சக்தி ஆகிய மூவரின் தாய் எனவும் பொருள் கொள்ளலாம்.
துர்வாசகர் ஒரு உயர்ந்த ஞானியாவார், அவர் தேவியின் மேல் ஸ்ரீ சக்தி மஹிம்ன ஸ்தோத்திரம் எனும் அறுபது சுலோகங்கள் கொண்ட அவளை போற்றும் ஸ்தோத்திரம் ஒன்றினை செய்துள்ளார். அவர் ஸ்ரீ மாதாவினை சரணடைந்து கூறுகிறார் " ஹே மாதா! அதியுயர் இரக்க குணமுள்ளவளே! நான் பல பிறவிகளில் பலதாய்களுக்கு மகனாக பிறந்துள்ளேன், இன்னும் பல தாய்மாருக்கு மகனாக பிறப்பேன், எனது தாய்களின் எண்ணிக்கை அளவிடமுடியாது. பல பிறவிகளில் பல தாய்களை அடைகிறேன். நான் மீண்டும் பிறப்பெடுத்து துன்பத்தினை அடைவேனோ என்று பயமடைகிறேன். ஓ மாதா நான் உன்னை சரணடைந்தேன், நான் மீண்டும் பிறப்பெடுக்கும் நிலையில் இருந்து என்னை வெளிப்படுத்துவாய்" என பிரார்த்திக்கிறார்.
ஸ்ரீ என்ற வார்த்தை எந்தவொரு சொல்லுக்கு முன்னாலும் இடப்படும் போது அது மிக உயர்ந்த நிலையினை காட்டுகிறது. தேவியினை வழிபடுவதில் ஐந்து வார்த்தைகளில் ஸ்ரீ வருகிறது; இந்த ஐந்தும் சேர்ந்து "ஸ்ரீ பஞ்சகம்" என்று கூறுவார்கள். அவையாவன ஸ்ரீ புரம் (தேவி வசிக்கும் இடம்), ஸ்ரீ சக்கரம் (தேவியின் படை தேவியர் வசிக்கும் இடம்), ஸ்ரீ வித்யா - தேவியினை உபாசிக்கும் முறை, ஸ்ரீ சூக்தம் - அவளை பணியும் பாடல்கள், ஸ்ரீ குரு - யார் தேவியினை அடையும் வழியினை காட்டுபவர். இந்த ஐந்தும் ஸ்ரீ தேவியினை உபாசிப்பதில் முக்கியமான அமிசங்களாகும்.
ஸ்ரீ என்பது வேதத்தினையும் குறிக்கும். வேதம் பிரம்மத்தில் இருந்து உருவாகியது. லலிதாம்பிகையே பிரம்மம் என்பது இந்த சஹஸ்ர நாமத்தினால் உணரப்பட்டுள்ளது, சுவேதாஸ்வர உபனிடதம் (6-18) "அவனே பிரம்மனை படைத்து வேதங்களை அவனிடம் ஒப்படைத்தான், முக்தியினை விரும்பும் நான், தன்னை அறியும் ஞானத்தை மனதில் வெளிப்படுத்தும் அந்த ஒளிபொருந்திய கடவுளிடம் அடைக்கலமடைகிறேன்" என விளிக்கிறது.
அத்துடன் இந்த நாமம் பஞ்சதசி மந்திரத்தினை குறிப்பது என கூறப்பட்டுள்ளது.
இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகையினை அனைத்துக்கும் தாயாக விளித்தவண்ணம் ஆரம்பிக்கிறது என்பதனை அவதானிக்க வேண்டும். இது அவளுடைய பிரபஞ்ச உயிர்கள் மீதான இரக்கத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது, மாதா என்பவள் படைப்பவள், இது பிரம்மத்தின் முதலாவது தொழில் ஆகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.