சூக்ஷ்ம தேகம்
________________
நேற்றைய சிவகீதைப் பதிவில் ஒரு அன்பர் சூக்ஷ்ம தேகம் என்றால் என்ன என்று கேட்டிருந்தார்; அதுபற்றிய ஒரு சிறுவிளக்கம்:
சித்தர்களும், ரிஷிகளிம் மனிதனை எப்படி ஒரு இயக்கமுள்ள ஒரு கருவியாகப் பார்த்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முதல் படியாகும்;
ஆன்மா என்ற உயிரைச் சூழ இருபத்தி நான்கு தத்துவங்கள் கருவிகள் எம்மை இயக்குகிறது. ஆன்மாவைச் சூழ இருப்பதால் இவை ஆன்ம தத்துவங்கள்.
இவையாவன
1. உடலைக் கட்டமைக்கும் பஞ்ச பூதங்கள் ஐந்து (05)
2. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற பஞ்ச ஞானேந்திரியங்கள் (05)
3. இந்த ஞானேந்திரியங்களால் பெறும் அனுபவங்களான பார்த்தல், கேட்டல், மணத்தல், சுவைத்தல், உணர்தல் என்ற பஞ்சபுலன்கள் (05)
4. வாக்கு, கை, கால், குறி, குதம் என்ற பஞ்ச கர்ம இந்திரியங்கள் (05)
5. மனம், புத்தி சித்தம் ஆங்காரம் என்ற அந்தக்கரணம் நான்கும் (04)
5+5+5+5+4 ஆக மொத்தம் ஆன்ம தத்துவம் 24 ஆகும்.
இந்த இருபத்தி நான்கு தத்துவங்களது இயக்கம் நடைபெறுவது பிராணன் எனும் உயிர் ஆற்றலால். இந்தப் பிராணன் உடலிற்குள் செயற்படும் போது ஐந்து விதமான நிலைகளால் பஞ்சப் பிராணன்கள் என்று அழைக்கப்படும். இவை கண்ணுக்குத் தெரியாதவை; இயக்கத்தால் மாத்திரம் அறியப்படுபவை. சூக்ஷ்மமானவை.
மேலேயுள்ள 24 ஆன்ம தத்துவங்களில் ஞானேந்திரியங்களும், அவற்றை உணரும் அந்தக்கரணங்களும் சூக்ஷ்மமானவை.
ஒரு மனிதனின் சூக்ஷ்ம தேகம் என்பது
பஞ்சபுலன்கள்+ அந்தக்கரணங்கள் + பஞ்சப்பிராணன்களின் கலவை.
கண்ணால் பார்க்கும் போது கண் ஸ்தூலம், கண்ணினுடைய பார்வை எங்கு பதியப்படுகிறதோ அந்தப்பகுதியின் "அனுபவம்" அந்தக்கரணங்களாலும், பிராணனாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையை சூக்ஷ்ம தேகம் என்று சொல்லப்படுகிறது.
எங்களுடைய சூக்ஷ்ம தேகம் எனப்படுவது நாம் எமது புலன்களால் பெறும் அனுபவமும், அந்த அனுபவம் எமது மனம் என்று பொதுவாகச் சொல்லப்படும் அந்தக்கரணம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதும், இதற்குரிய பிராண ஓட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதும் சேர்ந்த கலவையாகும்.
எனவே சூக்ஷ்ம தேகத்தைப் புரிந்துகொள்ள ஞானேந்திரியங்களால் பெறும் அனுபவங்களான பார்த்தல், கேட்டல், மணத்தல், சுவைத்தல், உணர்தல் என்ற பஞ்சபுலன்கள், மனம், புத்தி சித்தம் ஆங்காரம் என்ற அந்தக்கரணம் நான்கும், பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்ற பஞ்சப் பிராணன் கள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.
இலகுவாக விளங்கிக் கொள்வதானால் கனவு சூக்ஷ்ம தேக அனுபவம்; இந்த பஞ்ச ஞானேந்திரியம், அந்தக்கரணங்கள், பஞ்ச பிராணன் உடலிற்குள் ஏற்றுக்கொண்ட அனுபவனகளை மீட்டிப் பார்த்தல் கனவு! இதை செம்மைப்படுத்தி எமது இச்சாசக்தியால் பயணிக்க வைப்பது சூக்ஷ்ம தேக பயணம் - astral travelling.
இவை ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்த யோகசாதனையில் பயிற்சி உண்டு; எமது பாடத்திட்டங்களில் கற்பிக்கப்பட்டிருக்கிறது,
கேள்விக்கு நன்றி Periyar Selvan Pitchaimani
நல்ல சரியான கேள்விகள் மூலம் இன்னும் ஆழமான விஷயங்களை உரையாட முடியும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.