சிவ கீதையின் உரையாடல் எல்லாப் புராணங்களைப் போல் சுத மகரிஷி கூறியதாக ஆரம்பித்து, பிறகு அகத்திய மகரிஷி இராமருக்கு உபதேசித்ததைக் கூறி பிறகு இராமர் தன் தபஸால் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற அனுபவத்தை யோக இரகசியங்களாக உரைக்கிறது.
இதில் மிக முக்கியமான ஒன்று விபூதி பற்றிய இரகசியம்; விபூதி - திரு நீறு என்பது என்பது சைவர்களால் நெற்றியில் அணியப்படும் சிவ சின்னங்களில் ஒன்று என்றும் இதற்கு விளக்கம் கேட்டால் சாதாரண மனிதன் பயப்படும் படி நாம் எல்லாம் ஒரு பிடிசாம்பலாகப் போகிறோம் என்று ஒரு தத்துவத்தைக் கூறி அறநெறியில் இறைச் சிந்தனையோடு வாழ வேண்டுமென உணர்த்துவதாக விளக்கம் சொல்லுகிறார்கள்.
ஆனால் சிவகீதை இப்படித் தத்துவமாக விபூதியைச் சொல்லவில்லை. சித்த மருத்துவத்தின் மிக உயர்ந்த மருந்துகளில் ஒன்று சுண்ணம் அல்லது பஸ்பம். இந்த மருந்துகளின் ஒரு உயர்ந்த தன்மை அதன் உயர் அக்னித் தன்மை. சித்த ஆயுர்வேத மருந்துகளின் அடிப்படை பஞ்சபூதக் கோட்பாடு; உடலியல் இயக்கம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு அக்னியின் அளவு சரியாக இருக்க வேண்டும். அக்னியின் அளவு கூடி உடலை சமப்படுத்தும் தன்மையினை நாம் காய்ச்சல் என்கிறோம். உடலில் ஏதாவது நோய்க் கிருமிகள் நுழைந்தால் சுரம் அல்லது காய்ச்சல் உண்டாவதன் மூலம் அக்னி அதிகரித்து உடல் ஆரோக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆயுர்வேதத்தில் சுரம் என்பது உடலில் உறையும் சிவமாக்கிய அக்னியின் சீற்றம் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாட்சரத்தில் சிகாரம் அக்னி பூதத்தைக் குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட அக்னியின் தன்மையை உடலில் அதிகரிக்கவே விபூதி பயன்படுத்தப்படுகிறது; தலையில் நீர்கோர்த்தால் விபூதிப்பத்து நீக்குகிறது என்பது விபூதியின் அக்னி அமிசத்தாலேயே.
சிவகீதை அத்தியாயம் 03, சுலோகம் 31, 31 இல் விபூதி அணிபவன் அக்னித் தன்மை அதிகரிப்பதால் ஒருவன் வீரியவானாகிறான் என்று சொல்லப்படுகிறது. பஸ்ம ஸ்நானம் செய்வதால் உடல் அக்னி சிறந்து புலனடக்கம் வாய்க்கிறது என்ற உண்மையைச் சொல்லுகிறது.
இந்த சுலோகம் சித்த மருந்துகளில் சுண்ணம்/பஸ்மம் ஆகியவற்றிற்குரிய பஞ்சபூதக் கோட்பாட்டினைப் புரிந்துக் கொள்ளவும் உதவுகிறது.
சிவ சின்னங்களில் விபூதி என்ற ஐஸ்வரியம் ஒருவனில் அக்னித் தன்மையை சரிப்படுத்தி உடலாரோகியத்தைத் தருகிறது என்ற உண்மை சிவகீதையில் விளங்கப்படுத்தப்படுகிறது.
விபூதி - திருநீறு உடலாரோக்கியம் தரும் அக்னி அஸ்திரம்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.