குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 01, 2012

துரித மந்திர சக்தி விழிப்பு பெற காயத்ரி சாதனை உயர் சாதனைமுறைகள் - பகுதி 01

முன்னைய பதிவுகளில் நாளாந்த எளிய முறை காயத்ரி சாதனைகளை செய்யும் முறைகளை கூறி வந்தோம். இவை நாளாந்தம் அனைவரும் செய்யக்கூடியவை. சிலர் சாதனையிற்காக அதிக நேரம் ஒதுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு பெரியளவிலான சாதனையின் வடிவினை இங்கே கூறுவோம்.

இந்த சாதனையின் முக்கியத்துவம் யாதெனில் ஒருவர் தனது ஆத்ம சக்தியின் அளவினை துரிதமாக கூட்டிக்கொள்ள விரும்பின், ஏதாவது உடனடியாக நிறைவேற வேண்டிய விருப்புகள் இருப்பின் இந்த முறையினை பின்பற்றி துரித முன்னேற்றம் காணலாம். இது ஒரு நோக்கம் கருதி செய்யப்படும் உபாசனையாகும். இதனை அனுஷ்டானம் எனபர். இதனைச் செய்வதால் சாதகன் தனது கிரகப்பாதிப்புகள், வேலையின்மை, பணப்பற்றக்குறை போன்ற உலகியல் பிரச்சனைகளை தீர்ப்பதுடன் ஆன்மீக முன்னேற்றமும் துரிதமாக ஏற்படக்காண்பான்.

இந்த‌ முறையில் ஒருமுறை அனுஷ்டான‌த்தினை பூர்த்தி செய்து விட்டீர்க‌ளானால் பின்ன‌ர் எளிய‌ உபாச‌னையில் சிறிய‌ள‌வில் நாளாந்த‌ம் செய்யும் போது அதிக‌ ப‌லனைப் பெற‌முடியும். இது கிட்ட‌த்த‌ட்ட‌ வெளிநாடு சென்று அதிக‌ள‌வு ப‌ண‌த்தினை குறுகிய‌ கால‌ம் வெலைசெய்து சேமித்து பின்ன‌ர் வ‌ங்கியில் இட்டுவிட்டு உள்நாட்டில் ச‌ம்ப‌ள‌ம் குறைவான‌ தொழிலானாலும் வ‌ங்கியில் இட்ட‌ ப‌ண‌த்திற்கு வ‌ட்டி வ‌ருவ‌தால் கையில் இருக்கும் ப‌ண‌ம் அதிக‌மாக‌ இருக்கும‌ல்ல‌வா! இந்த‌ நிலையினை ஒத்த‌தே இந்த‌ அனுஷ்டான‌மும்!

பொதுவாக‌ வாழ்க்கையில் பிர‌ச்ச‌னையினை எதிர்நோக்கும் போது ம‌ன‌ம் கல‌ங்கி ச‌ரியா எதிர்கொள்ள‌முடியாத‌ப‌டி புத்தி த‌டுமாறி நிற்கும். இந்த‌ துரித‌ அனுஷ்டான‌ம் ம‌ன‌தினை, புத்தியினை சுத்தி செய்து தெய்வ‌ ஒளியினை ம‌ன‌திற்கும் புத்தியிற்கும் பாய்ச்சி சாத‌க‌னை சரியான‌ பாதையில் செல்ல‌ வைக்கும். உண்மையில் காய‌த்ரி சாத‌னை சாத‌க‌ன‌து அக‌த்தினை மாற்றி புது வ‌ழிகாட்டும்.

அனுஷ்டான‌ம் என்ப‌து 125,000 ஜெப‌த்தினை பூர்த்தி செய்யும் செய‌ன்முறையாகும். எந்த‌வொன்றும் ப‌ல‌ன் த‌ர‌வேண்டுமானால் அத‌ன் விதை இட‌ப்ப‌ட்டு, க‌ருவாகி, வ‌ள‌ர்ந்து, ம‌ர‌மாகி ப‌ல‌ன்த‌ரும‌ல்ல‌வா! அதுபோல் காய‌த்ரி ம‌ந்திர‌த்தின் மூல‌ம் ப‌ல‌ன் பெற‌ விரும்புப‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ம் இந்த‌ எண்ணிக்கியினை குறித்த காலத்தினுள் பூர்த்தி செய்ய‌ வேண்டும்.

இந்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்தபின் உங்களது நாளாந்த உபாசனை இலகுவாக சித்திக்கும். அதாவது உங்கள் நேரிய பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும்.

இவற்றை தொடங்குமுன் கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் படிக்கவும்.



ஔவையாரும் கணபதியும் - குண்டலினி யோகத்திறவுகோல்




ஔவைப்பிராட்டியை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது, நீதி நூற்களும் பாலருக்கு உகந்த பாடல்களும் எழுதி சிறுவயது முதல் எம்முடன் என்றும் வாழ்ந்துவரும் சிரஞ்சீவி ஔவைப்பிராட்டி. இந்தப் பதிவின் விடயம் ஔவையார் கைலாயம் சென்ற கதையின் யோக இரகசியத்தினை விளக்குவதாகும். அனைவரும் அறிந்த கதைதான். 

சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமானாரும் கையிலையிற்கு இந்திரன் அனுப்பிய ஐராவதம் எனும் தேவலோக யானையில் செல்லும் வழியில் ஔவைப்பிராட்டி கணபதிக்கு பூஜை செய்தவண்ணம் இருக்கிறார். அவரைக் கண்ட சுந்தரர் தம்முடன் கையிலையிற்கு வரும் படி அழைக்க பாட்டியோ கணபதி பூஜையினையின் நடுவே செல்ல விருப்பமில்லாமல் கணபதியிடம்  "பெருமானே நீர் விரும்பினால் நீரே என்னை கையிலையில் சேர்த்துவிடும்" என கூறுகிறார். அதற்கு கணபதி பிராட்டியாரை நோக்கி அகவல் ஒன்று கூறும்படி கேட்க அவர் குண்டலினி யோகமுறைகளை எல்லாம் உள்ளடக்கு பாடியதுதான் இன்று பாராயண நூலாக விளங்கும் "விநாயகர் அகவல்". இது குண்டலினி யோக இரகசியங்கள் அடங்கியது. அது பற்றி வெறொரு சமயத்தில் பார்ப்போம். இந்தப்பதிவில் இந்த கதையின் குறியிட்டு விளக்கம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம். இதன் பின்னர் கணபதி தனது தும்பிக்கையின் மூலம் ஔவைப்பிராட்டியாரை சுந்தரரும் சேரமான் பெருமானாரும் கையிலை செல்லும் முன் கொண்டு சேர்க்கிறார். 

கணபதி குண்டலினி யோகத்தில் மூலாதரச் சக்கரத்தின் அதிபதி, மனித பரிணாமத்தின் அனைத்துக் கர்மங்களினதும் சேமிப்பு இடம் மூலாதரச் சக்கரம். இந்த இடத்தினை கட்டுப்படுத்தும் தெய்வ சக்தியே கணபதி. இந்த சக்கரம் விழிப்படையாமல் ஆன்மா மேல் சக்கரங்க்களை நோக்கி பயணிக்க முடியாது. இந்த சக்கரம் சமனிலையில் இருந்தால் தான் அந்த மனிதனது உணர்ச்சிகளும் மனதும் சரியான வகையில் வேலை செய்யும். இல்லாவிட்டால் மனம் பெரும்பாலும் பயத்திலும், குழப்பத்திலும் இருக்கும். ஆக சமூகம் சமனிலையில் இருக்க இந்த மூலாதாரச் சக்கரம் சமனிலையில் இருக்கவேண்டும். இதை அறிந்தே எமது முன்னோர்கள் எல்லா ஆற்றங்க்கரையில், அரச மரத்தடியில் கணபதியினை ஸ்தாபித்து தலையில் குட்டி தோப்புக்கரணம் போடும் படி செய்வித்தார்கள். தலையில் சரியாக புருவ முடிவின் பகுதியின் அழுத்துவதன் மூலம் இடகலை, பிங்கலை நாடிகளை சிறிய அளவில் செயற்படுத்த முடியும், இப்படி செயற்படுத்திவிட்டும் தோப்புக்கரணம் போடும் போது மூலாதாரம் சலனித்து சிறிதளவில் மற்றைய சக்கரங்களுக்கு குண்டலினி சக்தியினை பாயவைக்கும். இந்த ஆற்றல் ஒவ்வொரு சக்கரத்திற்கும் செல்லும் அளவில் நீங்கள் நினைத்த காரியம் சித்தியாகும், அது போல் இந்த செய்முறையினால் யோக நாடிகள் சுத்தமாகி மனம் ஏகாக்கிரப்படும். ஆக கணபதி என்ற சக்தியின் செயற்பாட்டை செய்விக்கவே இந்த ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார்கள் எமது முன்னோர்கள். 

இனி ஔவைப்பிராட்டியாரின் கதைக்கு வருவோம், சுந்தரமூர்த்தி நாயனார் பரியங்க யோகத்த்தின் மூலம் குண்டலினியை விழிப்பித்து கையிலை எனப்படும்  சகஸ்ராரத்தினை அடைந்தவர், சேரமான் பெருமானார் தானும் கையிலைக்கு வரவேண்டும் எனும் போது சுந்தரர் அவருக்கு பஞ்சாட்சர மந்திர தீட்சை அளித்து அவரை கூட்டிச் செல்கிறார். பஞ்சட்சர ஜெபத்தில் உள்ள ந, ம, சி, வா, ய என்பது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி முதலான ஆதாரஙகளின் பீஜ - வித்து மந்திரச் சொல், இதன் மூலமும் கையிலையாகிய சஹஸ்ராரத்தினை அடையலாம். அவர்கள் கையிலையிற்கு செல்வதற்கு முன்னர் விநாயகர் அருளால் ஔவைப்பிராட்டி கயிலை அடைந்தார் என்பது கணபதியின் சாதனா மகிமையினைக் குறிக்கிறது. அதாவது கணபதி சாதனை ஒன்றே குண்டலினையை விரைவாக சஹஸ்ராரத்திற்கு அடையவைக்கும் என்பதனைக் குறிக்கவே இந்தக்கதையினை உருவகப்படுத்தினர். 

இதனாலேயே ஸ்ரீ வித்தையில் கணபதி சாதனை முதன்மையாக வைக்கப்பட்டிருக்கிறது, அனைத்து விடயங்களிலும் கணபதி முதன்மைப்படுத்துவதன் ரகசியம் எந்தக்காரியத்தினை செய்யும் முன்னும் மூலாதாரம் சமனிலையில் இருந்தால் மட்டுமே பிரபஞ்ச ஆற்றல் எதுவித தடங்கலும் இல்லாமல் மன திலும், உடலிலும் பாயும், இந்த நிலையில் எந்த தடங்கலும் இல்லாமல் காரியம் முடியும் என்பதனாலேயே. ஆகவே இந்த இரகசியத்தினை விளங்கிகொண்டு இனிமேல் எந்தக்காரியத்தினை செய்யும் முன்னும் மூலாதாரத்தில் கணபதியினை வணங்கி செய்தால் வெற்றி கிட்டும் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.

ஸத் குரு பாதம் போற்றி

Sunday, September 30, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 05)


கிழ்வரும்  பதிவுகளை வாசித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கவும். 

*********************************************************************************************************************
கடந்த பதிவில் நியாச முறை பற்றிப் பார்த்தோம்.  இந்தப் பதிவில் எங்கும் நிறைந்த பராசக்தியான காயத்ரி தேவியை நாம் வணங்கும் தேவியின் படத்திலோ அல்லது விளக்கொளியிலோ ஆவாஹனம் செய்து ஸ்தாபிக்கும் முறையினைப் பார்ப்போம். தெய்வ சக்தி எங்கும் நிறைந்திருந்தாலும் எமது மனதால் ஆகர்ஷிக்ககூடிய வண்ணம் ஒரிடத்தில் குவித்து அதன் மூலம் பயன் பெறும் செய்முறையே பூஜை என்பது. இதனை விரிவாக செய்வதற்கு பலமுறைகள் இருக்கின்றன, அவற்றை எல்லாராலும் செய்யமுடியாதென்பதால் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அழகுதமிழில் தேவியின் பூஜைமுறையினை வகுத்து தந்துள்ளனர். இந்த தமிழ் பத்ததி கடந்த நாற்பது வருடங்களாக காயத்ரி சித்தர் முருகேசு ஸ்வாமிகளால் இலங்கை நுவரெலியா காயத்ரி பீடத்தில் இன்று வரை பூஜை முறையாக இருந்து வருகிறது. இதன் மூலம் சமஸ்கிருதம் அறியாதவர்களும் இலகுவாக தேவியின் அருளை பெற்றிருக்கிறார்கள். 

இந்த பூஜை பத்ததி ஆவாஹனம், ஸ்தாபனம், சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை, தியானம், ஜெபம், ஹோமம் என்ற 17 அங்க்கங்களுடைய பத்ததியாகும். இவற்றை முழுமையாக செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை ஆகும். இதனை தனிப்பட ஜெபசாதனை செய்துகொள்ள விரும்புபவர்கள் செய்துகொள்ளக்கூடிய வகையில் சுருக்கி இங்கு தருகிறோம். முழுமையாக காயத்ரி பூஜா பத்ததி தமிழில் கற்று பூஜை புரிய விரும்புபவர்களுக்குரிய விபரம் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் சுருக்கமாக பூஜை முறை வருமாறு; முதலாவது ஆவாஹனம், 

ஆவாஹனம்: கீழ்வரும் மந்திரத்தினை பக்தியுடன் கூறி, படத்தில், விளக்கு ஒளியில் காயத்ரியினை அழைப்பதாக பாவிக்கவும்

அந்தமும ஆதியில்லா, அருட்பெருஞ் ஜோதி மாயே, வந்திடாய் வந்திடாய், நீ வந்தெங்கள் பூஜையேற்பாய், 

ஸ்தாபனம்: அழைத்த காயத்ரி தேவியை படத்தில், விளக்கொளியில் உறைவதாக பாவிக்கவும்.

வந்தனை வந்தனை நீ வரதே வான்முகிலேயம்மா, சிந்தனை களித்துயிங்கே சிறப்புடன் வீற்றிருப்பாய். 

இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட உபசாரங்களை (சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை) விரும்பின் செய்யலாம். அல்லது நேரடியாக தியான ஸ்லோகத்தினை கூறி தேவியை மனத்திரையில் உருவகப்படுத்தலாம். 

தியானம்: கீழ்வரும் தியான ஸ்லோகத்தினை பக்தியுடன் மெல்லிய குரலில் கூறவும்.

முக்த வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீஷ்ணைர் யுக்தா மிந்து நிபத்த ரத்ன முகுடாம் தத்வார்த வர்ணாத்மிகாம், காய்த்ரீம் வரதா பயாங்குச கஸா பாஸம் கபாலம் குணம் ஸங்கம் சக்ர மதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

இதன் பொருள் சுருக்கமாக வருமாறு: முத்து, பவளம், பொன், நீலம், வெண்மை ஆகிய நிறங்களுடைய ஐந்து முகங்களுடனும், முக்கண்கள், சந்திரகலை பொருந்திய கிரீடம், தத்துவார்த்தத்தை விளக்கும் எழுத்துக்களின் வடிவாகவும், வர முத்திரை, அபய முத்திரை, அங்குசம், கசை, வெள்ளைக் கபாலம் (இது தற்போது வரும் காயத்ரி படங்களில் காணப்படுவதில்லை, அவற்றில் பாத்திரம் ஒன்று இருப்பதாகவே வரைகின்றனர்) பாசக்கையிறு, சங்கு, சக்ரம், இரண்டு தாமரைப்பூக்கள் ஆகியவற்றை கைகளில் தாங்குபவளான காயத்ரி தேவியினை வணங்குகிறேன். 

இதன் தத்வார்த்த விளக்கம் உயர்சாதனைகள் செய்ய விரும்புபவர்களுக்குரியது, அவற்றை வேறொரு பதிவில் தேவை வேண்டிவிளக்குவோம். 

இப்படி தேவியை மனத்திரையில் பிரத்யட்சமாக உண்மையில் இருப்பதாக பாவித்து அவளது வரம் தரும் கைகளில் இருந்து ஒளிவடிவாக அவளது அருட்கிரகணங்கள் உங்களில் வந்து சேர்வதாக பாவிக்கவும். இப்படி பாவித்தபடி ஜெபமாலையினை கையில் எடுத்து அதே பாவனையில் மந்திர ஜெபத்தினை தொடரவும். ஆரம்பத்தில் 09 முறை ஜெபத்தினை தொடங்கி வாரத்திற்கு ஒன்பது ஒன்பதாக கூட்டி வந்து அதாவது முதல் வாரம் 09. இரண்டாவது வாரம் 18, மூன்றாவது வாரம் 27 என்றவாறு 108 ஆக்கி தினசரி 108 செய்யும் படி பழகிக்கொள்ளுங்கள். இந்த பாவத்தில் ஜெபத்தினை முடித்தபின்னர் கடைசியில் கீழ்வரும் பிரார்தனையினை செய்யவும். 

பிரார்த்தனை: 
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!

என பணிந்து தேவியிடமிருந்து வரமாக இவற்றை பெற்றுக்கொள்வதாக பாவிக்கவும். 

இதன் பின்னர் சிறிதளவு தீர்க்க சுவாசம் (ஆழமான மெதுவான மூச்சு) அல்லது நாடி சுத்திப்பிரணாயாமம் செய்துகொள்ளவும். 

இதன் பின்னர் தீர்த்தப்பாத்திரத்தில் உள்ள உத்தரணியில் நீரை வலது கையில் எடுத்து தேவியின் பாதத்தில் " எனது உபாசனையில் ஏதும் குறைகள் இருந்தால், ஜெகன்மாதாவான நீ சிறுபிள்ளையாகிய எனது பிழைகளை பொருத்தருளி எனது பிரார்த்தனையினை நிறைவேற்று தாயே' என மானசீகமாக பிரார்த்திது நீரை கீழே விடவும். இந்த செயன்முறை கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். 

இதுவரை ஐந்து பதிவுகளாக காயத்ரி உபாசனையினை எளிய முறையில் செய்யக்கூடிய முறையினை விளக்கியுள்ளோம். இதனை வாசித்தவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக கற்காமல் எப்படிச் செய்வது என்ற மனத்தடங்கல் இருப்பதை நாம் உணர்ந்துள்ளோம். இதனை தீர்ப்பதற்கு இரண்டு வழிகளில் நாம் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளோம். 

முதலாவது: நீங்கள் இலங்கையில் வசிப்பவராக இருந்தால் மாதாந்தம் பௌர்ணமி தினங்களிலும், வாரந்தம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நுவரெலியா காயத்ரி பீடத்தில் இந்தப்பூஜை முறையின் முழுமையான பத்ததி தமிழில் நடாத்தப்படுகிறது. ஒருமுறை சென்று நேரில் பங்கு பெற்றி கற்றுக்கொள்ளலாம். அங்கு காயத்ரி தேவியின் விரிவான தமிழ் பூஜைப் பத்ததி அச்சிட்டும், காயத்ரி சித்தரின் குரலிலும் சீ.டீக்களாக தருவார்கள். அவற்றை வாங்கி பலமுறை கேட்டு நீங்களே கற்றுக்கொள்ளலாம். பூஜையில் வத்த காயத்ரி படம் ஒன்றினை வாங்கிவந்து உங்கள் உபாசனையினை தொடரலாம். 
இரண்டாவது: நீங்கள் வெளி நாடுகளில் வசிப்பவராக இருந்தால் காயத்ரி பீடத்தினை தொடர்பு கொண்டு காயத்ரி உபாசனா பத்ததி நூலையும், காயத்ரி சித்தரின் குரலில் உள்ள பூஜை சீ.டி ஒன்றினையும் அனுப்பும்படி கேட்டுக்கொண்டால் அனுப்பி வைப்பார்கள், அவற்றை பெற்று உங்கள் உபாசனையினை தொடரலாம். 

மேற்கூறிய தொடர்புகளுக்கு,
திரு. ச, சந்திரமோகன்
நிர்வாக அறங்காவலர்
ஸ்ரீ காயத்ரி பீடம் இண்டர் நஷனல் ட்ரஸ்ட்
82, லேடி மக்கலம்ஸ் ட்ரைவ்
நுவரெலியா.
தொலைபேசி:+94-52-2222609
அலைபேசி: +94-773249554
ஈமெயில்: srigayathripeetam@gmail.com  

முக்கிய குறிப்பு: எமக்கும் காயத்ரி பீடத்திற்கும் நிர்வாக ரீதியாக, சட்ட ரீதியாக எதுவித தொடர்பும் இல்லை. காயத்ரி உபாசனையினை தமிழில் செய்வதற்குரிய வளங்களை, முறைகளை, தகவல்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவதே இந்த தகவலின் நோக்கம், 

இந்த தகவல்களால் ஆர்வமுடைய யாராவது பயன் பெறுவார்கள் என உறுதியாக நம்புகிறோம். 

ஸத் குருபாதம் போற்றி!

Saturday, September 29, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 04)


சென்ற பகுதிகளில் முறையே அறிமுகம், குருவணக்கத்தின் முக்கியத்துவமும் செயன்முறையும், பிரணாயாமத்தின் முக்கியத்துவம் ஆகியன பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்தப் பதிவில் காயத்ரி மந்திரத்தின் நியாச முறையும் அதன் அவசியம் பற்றியும் பார்ப்போம். 

முந்தைய பதிவுகளைப் பார்க்க கீழே அழுத்தவும்;

நியாசம் என்றால் வைத்தல் எனப் பொருள் படும். அதாவது ஒரு பொருளை/சக்தியை  குறித்த இடத்தில் வைக்கும் செயன்முறையே நியாசம் எனப்படும். மந்திர சாதனையில் நியாசம் முதன்மையான ஒன்றாகும். ஒரு மந்திரத்திற்கு ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி, கீலகம், நியாசம் என ஏழுபாகங்கள் காணப்படும். இவற்றைப்பற்றி விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இங்கு நியாசத்தின் அடிப்படை பற்றிப் பார்ப்போம். நியாசம் என்பது தெய்வ சக்திகளை உடலில் வைக்கும் செயன்முறையாகும். அதாவது ஜெபிக்கப்படும் மந்திரத்தினை ஆறு பகுதிகளாக பகுத்து அதனை உடலில் ஒவ்வொரு இடத்தில் வைக்கும் செயல் முறையே நியாசம் எனப்படும். நியாசங்கள் பலவகை உண்டு. மந்திர சாதனை செய்பவர்களுக்கு அதன் விபரங்கள் நன் கு அறிவர். இங்கு குறிப்பாக மூன்று நியாசங்களை கூறுவோம். 

முதலாவது: ரிஷ்யாதி நியாசம், இது மந்திரத்தின ரிஷி, தேவதை, அளவு என்பவற்றினை உடலில் பதித்து சாதனையின் நோக்கத்தினை உடல் முழுவதும் பதிப்பிக்கும் செயன்முறையாகும். 

இரண்டாவது: கர நியாசம், அதாவது கைகளில் தெய்வ சக்தியினை இருத்தி விழிப்பித்தல் எனப்பொருள்படும். இது இருகரங்களிலும் உள்ள ஐந்து விரல்களும் உள்ளங்கையும் சேர்த்த ஆறு அங்கங்க்களில் செய்யப்படும். இதனால் குறித்த மந்திரத்தின் தெய்வ சக்தி கைகளில் விழிப்படைந்து உடலில் ஆகர்ஷிக்கத்தொடங்கும். அக்யுபிரஷர், வர்மம் தெரிந்தவர்கள் உடலில் பிராண ஓட்ட செயன்முறையினை அறிவர். கைகளில் அனைத்து அங்கங்க்களுக்குமான பிராண சக்தி செலுத்தும் புள்ளிகள் உள்ளன. அவற்றில் தெய்வசக்தியினை விழிப்பிக்க உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராண சக்தியினூடு தெய்வ சக்தி செலுத்தப்படும். 

அடுத்தது: ஹ்ருதயாதி நியாசம், இது ஹ்ருதயம், தலை உச்சி, பிடரி, தோற்பட்டைகள் இரண்டும், மூன்று கண்கள் (வலது, இடது, நெற்றிக்கண்), உடலைச் சூழ கவசமாக என செய்யவேண்டும். இந்த இடங்கள் சூஷ்ம சரீரத்தின் முக்கியமான சக்கரங்களை இணைக்கும் இடங்களாகும். இவை முறையே அநாகதம், சகஸ்ராரம், பிடரிச் சக்கரம் (பிராண அலைவேகத்தினை கட்டுப்படுத்தி பரிணாமத்தினை துரிதப்படுத்தும் சக்கரம் அமைந்துள்ளது) விசுத்தி சக்கரம், ஆக்ஞா சக்கரம் ஆகிய உயர் பரிணாமச் சக்கரங்களில் உள்ள இடங்களாகும், இந்த இடங்களில் தெய்வ சக்தியினை பதிப்பிப்பதால் மனிதனது பரிணாமம் தெய்வ பரிணாமத்தினை நோக்கி முன்னேறும். 

முதலாவது கர நியாசம் ஸ்தூல உடல் அங்கங்களுக்கு தெய்வ சக்தியினையும் ஹ்ருதயாதி நியாசங்கள் சூஷ்ம உடல் சக்கரங்களிலும் தெய்வ சக்தி பதிப்பிக்கும் செயன்முறையாகும். அன்பர்களே இப்போது உங்களுக்கு இவற்றினை செய்யவேண்டிய அவசியம் பற்றி விரிவாக விளங்க்கியிருக்கும். இது பற்றி விரிவாக விளக்க வேண்டுமானால் பல பக்கங்கள் எழுதவேண்டி இருக்கும், அவற்றை வாசித்து தெரிந்துகொள்வதை விட அனுபவத்தில் தெரிந்துகொள்வதே சிறந்த வழி ஆதலால் விளக்கங்களை இத்துடன் நிறுத்தி செயன்முறைக்குச் செல்கிறோம். 

இந்த செயன்முறைக்குரிய மந்திரங்கள் வருமாறு:

ஆசமனம்: வலது உள்ளங்க்கையில் நீர் விட்டு ஒவ்வொரு மந்திரமும் சொல்லும் போது உறிஞ்சிக் குடிக்கவும். விரல்களைப்பிரித்து ஆட்காட்டி விரலை உயர்த்தி மற்றைய விரலை தாழ்த்தி வைக்கவும். 
  • ஓம் ஸ்ரீ ஜகன் மாத்ரே நமஹ
  • ஓம் ஸ்ரீ பராம்பிகாயை நமஹ
  • ஓம் ஸ்ரீ பராஸக்த்யை நமஹ

சங்கல்பம் அல்லது வினியோகம்: ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு காரிய சித்தி வேண்டி செய்யப்படுவதாக இருக்கும், அதனை ரிஷி, சந்தஸ், தேவதா, பீஜம், சக்தி, கீலகம் ஆகியவற்றுடன் இணைத்து கூறும் பகுதி விநியோகம் எனப்படும். காயத்ரி மந்திரத்தின் விநியோக பகுதி கீழ்வருமாறு; 

தீர்த்தப்பாத்திரத்தில் உள்ள உத்தரணியில் நீரை எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கீழ்வரும் மந்திரத்தினைச் சொல்லி கீழே விட்டுவிடவும். 

ஓம் அஸ்யஸ்ரீ காயத்ரி மஹா மந்திரஸ்ய விஸ்வாமித்திர ரிஷிஹி தேவி காயத்ரி சந்த; ஸவிதா தேவதா ஜபோபாஸனே வினியோக

ரிஷியாதி நியாசம்: வலது கைவிரல்களை நீரில் தொட்டுவிட்டும் கிழே உள்ள மந்திரங்களை சொல்லி அந்தந்த அங்க்கங்களுக்கு நடுவிரல் மோதிரவிரல் சேர்த்து தொடவும்
  • ஓம் விஸ்வாமித்திர ரிஷியே நம - தலை
  • ஓம் காயத்ரீ சந்தஸே நம - முகம்
  • ஓம் ஸவிது தேவதாய நம - இருதயம்
  • ஓம் ஜபோபாஸனே விநியோகாய நம - உடல் முழுவதும். 

கர நியாசம்: 
  • ஓம் தத்ஸவிதுர் ப்ரஹ்மனே - அங்குஷாடாப்யாம் நம - இரு கை ஆள்காட்டி விரல்களால் பெருவிரலின் அடியிலிருந்து முனைவரை தடவவும்
  • ஓம் வரேண்யம் விஷ்ணவே - தர்ஜனீப்யாம் நம - இருகை பெருவிரலையும் ஆட்காட்டி விரல்களில் அடியிலிருந்து நுனிவரை தடவவும். 
  • ஓம் பர்கோதேவஸ்ய ருத்ராய - மத்யமாப்யாம் நம = இரு கை பெருவிரலையும் நடு விரல்களின் அடியிலிருந்து நுனிவரை தடவவும்
  • ஓம் தீமஹி ஈஸ்வராய - அநாமிகாப்யாம் நம - பெருவிரல்களால் மோதிரவிரல் அடியிலிருந்து நுனிவரை
  • ஓம் தியோ யோன - ஸதாஸிவாய - கனிஷ்டிகாப்யாம் நம - பெருவிரல்களால் அடியிலிருந்து நுனிவரை
  • ஓம் ப்ரசோதயாத் - ஸர்வாத்மனே - கரதல கரப்ருஷ்டாப்யாம் நம - இரு உள்ளங்கைகளையும் சேர்த்து தேய்த்து இரு புறங்கைகளையும் சேர்த்து தேய்க்கவும். 

ஷடங்க நியாசம் 
  • ஓம் தத்ஸவிதுர் ப்ரஹ்மனே - ஹ்ருதயாய நம - வலது கைவிரல்களால் இருதயத்தை தொடவும்
  • ஓம் வரேண்யம் விஷ்ணவே - ஸிரசே ஸ்வாஹா - வலதுகைவிரல்களை மடக்கி முன் தலையினை தொடவும்.
  • ஓம் பர்கோதேவஸ்ய ருத்ராய - ஸிகாய வஷட் - மேலே மடக்கிய முட்டியின் பெருவிரலை நீட்டி உச்சந்தலையினை தொடவும். 
  • ஓம் தீமஹி ஈஸ்வராய - கவசாய ஹும் - வலது கையால் இடது தோளையும் இடது கையால் வலது தோளையும் தொடவும். 
  • ஓம் தியோ யோன ஸதாஸிவாய - நேத்திரத்ராய வௌஷட் - வலது கை பெருவிரலால் வலது கண்ணையும் நடுவிரலால் இடது கண்ணையும், ஆட்காட்டி விரலால் நெற்றிக்கண்ணையும் தொடவும். 
  • ஓம் ப்ரசோதயாத் ஸர்வாத்மனே - அஸ்திரய பட் - இரு உள்ளங்க்கைகளாலும் தாளம் போடுவது போல் தட்டவும். 

இதுவே காயத்ரி மந்திரத்திற்கான நியாச முறை, மேலே கூறிய விளக்கங்களை நன் கு மனதில் பதிவித்துக்கொண்டு மந்திரங்களை மனனம் செய்து, குறித்த பாவனையில் செய்துவர உங்கள் சூஷ்ம உடலிலும், ஸ்தூல உடலிலும் காயத்ரி மந்திர சக்தி விழிப்படைய ஆரம்பிக்கும். 

அடுத்த பகுதியில் தேவியை ஆவாஹனம் செய்யும் மந்திரத்தினை தமிழிலும், தியான மந்திரத்தின் விளக்கத்தினைப்பற்றியும் பார்ப்போம். 

ஸத்குரு பாதம் போற்றி!

Friday, September 28, 2012

சூஷ்மதிருஷ்டி சாதகன் பெறும் ஆற்றல்கள் (பகுதி 07)


சூஷ்ம திருஷ்டி பற்றி முன்னைய பதிவுகளில் விளக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படிக்க கீழ்வரும் பகுதிகளைப் பார்க்கவும். 
பகுதி 06

இந்தபதிவில் சூஷ்மதிருஷ்டி சாதகன் பெறும் ஆற்றல்கள் பற்றிப் பார்ப்போம். 

சூஷ்மசாதனையில் சித்திபெற்ற மாணவன் முதலில் பெறும் ஆற்றல் ஆகாயப்பார்வை எனப்படும். இது சூஷ்ம கண்களால் பார்க்கப்படும் பொருட்களில், இடங்களில் வெறுமையாக வேறும் கண்ணிற்கு தோற்றமளிக்கும் இடங்கள் கூட புகை மண்டலங்களாக காட்சி அளிக்கத்தொடங்கும். பௌதீகப்பொருட்களை சூழ தடிப்பான ஒரு மண்டலம் இருக்கக்காண்பான். உதாரணமாக ஒருவரை நீங்கள் சூஷ்ம திருஷ்டியில் உருவகப்படுத்தும் போது முதலில் அவரது பௌதீக உருவம் மறைந்து படிப்படியாக அவரது பிராண சரீரம் தெரிய ஆரம்பிக்கும். அதை மேலும் ஏகாக்கிரமாக பார்க்கும் போது மேலும் அதன் தன்மைகள் பற்றிதெரிய வரும். இப்படி எந்தப்பொருளினதும் சூஷ்ம பிராண சரீரத்தினை காணும் ஆற்றல் வரும். இது சூஷ்ம திருஷ்டி சாதகன் பெறும் முதலாவது ஆற்றலாகும். இதன் படி சூஷ்ம உலகில் வாழும் தேவதைகள், இறந்த உடலைச் சூழ உள்ள ஆவிகள் என்பனவும் அவனது காட்சிக்கு தெரியும். 

அடுத்த ஆற்றல் தூரத்தில் உள்ள பொருட்களை உருவகப்படுத்தும் போது அவை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மிக அருகில் கண்களால் காணும் ஆற்றல் வரும். அதாவது தூரதிருஷ்டி கண்ணாடி - பைனார்குலர் மூலம் காணுவது போல் காட்சிகள் தெரியும். அணுக்களின் அசைவும் தெரியும். இதுவும் சூஷ்ம திருஷ்டி சாதகன் பெறும் ஒரு ஆற்றலாகும். 

அடுத்த ஆற்றல் பிராண உலகத்தினையும் மானச உலகத்தினையும் காணும் ஆற்றலாகும். இந்த ஆற்றலைப் பெற்றுவிட்டால் தேவருலகில் உள்ள ஆன்மாக்களுடன், தேவதைகளுடன் நேருக்கும் நேர் தொடர்பு கொள்ளும் ஆற்றலை சாதகன் பெறுவான். இப்படி பிராண மானச உலகங்களை காணும் ஆற்றல் பெற்றவர்களே பிரபஞ்ச பேரேடான ஆகாய மனத்துடன் தொடர்புகொள்ளும் ஆற்றலைப் பெறுவான். குறிப்பாக மானச உலகினை கண்டு அதில் குறித்த ஒருவரை ஏகாக்கிரம் செய்து அவரது கடந்த காலத்தினை அறியவேண்டும் என்று சகஸ்ரார ஜோதியினை செலுத்த அவரது கடந்த காலம், கடந்த பிறவி வரை திரைப்படக்காட்சி போல் தெரிய ஆரம்பிக்கும். 

இதைப்போல் எதிர்காலத்தினையும் அறிந்து கொள்ளலாம், இதுவே திரிகால ஞானம் எனப்படும் சித்தியாகும். திரிகாலஞானம் சூஷ்ம திருஷ்டியின் முன்னேறிய சாதனையாகும். 

இதைப்போல் கிரகங்களின் அமைப்பும் செயற்பாடு என பலவிடயங்களை சாதகன் தனது குருமூலமும் சிந்தித்தறிந்தும் தெரிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் திரிகால ஞான சாதனை எப்படி செயற்படுகிறது என்பதனை சாதனை முறையுடன் பார்ப்போம். 

Thursday, September 27, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 03)


சென்ற பதிவில் குருவணக்கம் பற்றிப் பார்த்தோம், இந்தப்பதிவில் பிரணாயமத்தின் அவசியமும் செய்முறையினைப் பற்றியும் பார்ப்போம்.

காயத்ரி உபாசனையில் பிரணாயாமத்தின் முக்கியத்துவம்

காயத்ரி என்பதே பிராணனை காப்பாற்றும் உபாசனைதான். இந்த விளக்கமே பிரணாயாமத்தின் அவசியத்தினை விளக்கும். எந்த உபாசனையாக இருந்தாலும் மனதிலும், பிராணனிலும் செயற்பட வேண்டும். பிராண ஓட்டம் சரியாக இருந்தால் மட்டுமே மந்திர அலைகளால் உருவாகும் தெய்வ சக்தி சூஷ்ம உடலில் சேமித்து வைக்கப்படும். இதனால் பிராணனை ஒழுங்கு படுத்துதல் மிகமுக்கியமான ஒரு அங்கமாகும். பிரணாயாமம் என்றவுடன் பலவாறான மூச்சுப்பயிற்சி என்று அவசரப்பட்டு முயற்சிக்க ஆரம்பித்து விடாதீர்கள். உபாசனையில் பிரணாயமத்தின் அடிப்படை நோக்கத்தினை புரிந்து கொண்டால் பயிற்சி இலகுவாகிவிடும்.

பிரணாயாமத்தினை இருவகையான சாதகர்களை மனதில் கொண்டு கீழ்வரும் பயிற்சிகளை கூறுகிறோம்.

முதலாவது பிரணாயாம பயிற்சியில் நன்கு தேர்ச்சிபெற்ற, கும்பகப்பிரணாயம் கைவந்த சாதகர்கள். இவர்கள் மூன்று தடவைகள் கும்பகப்பிரணாயாமம் செய்து இந்தப்பயிற்சியினை பூர்த்தி செய்யலாம்.

மற்றையவர்கள் பிரணாயாம பயிற்சியில் அதிகம் பரிட்சயமில்லாதவர்கள், இவர்கள் முதுகெலும்பினை நேராக வளையாமல்  நுரையீரல் முழுமையாக நிரம்பும் வண்ணம் மெதுவாக மூச்சினை இழுத்து சில நொடிகள் மாத்திரம் மூச்சினை நிறுத்தி (02-03 செக்கன்) மெதுவாக விடவும். இப்படி 05 - 10 தடவைகள் மெதுவாக செய்து மூச்சு சீராக செல்லத்தொடங்கிய பின்னர் அதே நிலையில் இருந்து உபாசனையின் அடுத்த பகுதியினை செய்யவும்.

இங்கு சாதகர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயம் பிராணனின் ஓட்டமே மனதின் ஓட்டம் , அது ஒருங்கிணைக்கப் பட்டால் மாத்திரமே ஜெபசக்தி மனதில் ஆகர்ஷிக்கப்படும். ஆகவே ஜெப சாதனைக்கு முன்னர் பிராணனை ஒழுங்குபடுத்த இந்த எளிய சாதனையினை செய்து வாருங்கள். 

அடுத்த பதிவில் உபாசனையின் அடுத்த அங்கமான காயத்ரி நியாசம் பற்றி பார்ப்போம். 

ஸத்குருபாதம் போற்றி

Wednesday, September 26, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 02)


சென்ற பகுதியில் இந்த எளிய காயத்ரி உபாசனையின் அங்கங்களைப் பார்த்தோம். இந்தப்பதிவில் அவை ஒவ்வொன்றினதும் விரிவான விளக்கத்தினையும் செய்முறையினையும் பார்ப்போம். இந்த பதிவில் முதலாவது அங்கம் குருவணக்கம்;

குருவணக்கம்: 

குருதத்துவம் பற்றி எமது மற்றைய பதிவுகளில் படித்தறியலாம். உபாசனையில் குருவணக்கத்தின் அவசியம் யாதெனில் குருபரம்பரையினூடாகவே மந்திர சக்தி கடத்தப்பட்டு வருகிறது. அதாவது மந்திர சித்தி பெற்ற குருவுடன் நாம் சூட்சுமமாக தொடர்பினை ஏற்படுத்தி அந்த நிலையினை எம்மில் ஏற்படுத்திக்கொள்ளும் வழிமுறையே குருவணக்கம். உதாரணமாக பௌதீகவியலில் காணப்படும் அலைகளது செயற்பாட்டு தத்துவத்தின் மூலம் இதனை விளங்க்கி கொள்ளலாம். குரு தனது சாதனையின் மூலம் தனது சூஷ்ம உடலினை மந்திர சக்தியின் வடிவாக ஆக்கு வைத்திருப்பார். அவர் தனது சூஷ்ம உடலிலிருந்து எப்போதும் இந்த தெய்வ கதிர்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார். இது சக்தியினை வெளிப்படுத்தியவண்ணம் இருக்கும். நாம் அந்த சக்தியினை பெறும் உத்திதான் இந்த குருவணக்கம். அதாவது ஒருவகை டியூனிங்க் எனக்கூறலாம். இது சித்தர்களின் வழிமுறையில் சித்தி பெற்றவர்களின் மூலம் செய்யவேண்டியது. இனி செய்முறை;

செய்முறை: 
இந்த வலைப்பின்னல் மூலம் சாதனையினை தொடங்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையில் தொடங்கலாம். இந்த குருவணக்கத்தில் முதல் பகுதி எமது வாழ்வில் நாம் அறிவு ஞானம் என்பவற்றில் முன்னேறி இந்த பூவுலகில் இன்பமாய் காரணமாய் இருந்த ஆரம்பகர்த்தாகளின் ஆசியினை பெறுவது. இரண்டாவது பகுதி குரு தத்துவத்தின் இலட்சணம் எமது மனதில் பதிவித்துக்கொள்ள பொருளறிந்து பாடப்படுகிறது. மூன்றாவது பகுதியிலுள்ள குருமார் இந்த சாதனைமுறைகளை உங்களுக்கு இந்த வலைப்பின்னலூடாக அறியத்தரும் குரு பரம்பரையினர். இவர்களது ஆசியும் வழிகாட்டலும் சரியான சூஷ்ம தொடர்பு இருந்தால் மட்டுமே சாதனையில் முன்னேற முடியும். நாங்காவது பகுதியில் உள்ள ரிஷிமார் இந்த மந்திரத்தின் சித்தி, சக்திகளை கட்டுப்படுத்துபவர்கள், ஜெபிக்கும் எல்லாருக்கும் அனைத்து ஆற்றல்களும் வந்து விடாது, தவறான வழியில் பயன்படுத்த நினைப்பவர்களை கட்டுப்படுத்தி, அனுபவங்கள் மூலம் நல்வழிப்படுத்தி படிப்படியாக உங்களில் காயத்ரி மந்திரசக்தியினை செயற்படுத்தும் அதிகாரிகள். இவர்களது ஆசிகள் மந்திர சித்தியிற்கு முதன்மையானது.

முதல் பகுதியில் கூறியது போல் உருவவழிபாடு செய்ய விரும்புபவர்களாக இருந்தால் சாதனா குருமார்களில் படங்களை எமக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேட்கலாம். அல்லது நீங்கள் சாதனையின் போது ஏற்றும் விளக்கிலேயே ஒளி ரூபமாக அனைவரையும் ஆவஹிக்கலாம். 

முதல் பகுதி:
  • ஓம் தாயே நமஹ அல்லது போற்றி - சாதகன் பெற்ற தாயினை நினைத்து அவரின் ஆசியினை மானசீகமாக பெறுவதாக பாவிக்கவும், பெற்ற தாயே ஒருவனின் முதல் குரு, 
  • ஓம் தந்தையே நமஹ அல்லது போற்றி -  தந்தையினை நினைத்து அவரின் ஆசியினை மானசீகமாக பெறுவதாக பாவிக்கவும், தகப்பன் இரண்டாவது குரு. 
  • ஓம் ஸத்குருவே நமஹ அல்லது போற்றி - உங்களை ஞானப்பாதையில் வழிகாட்டிய அனைத்து குருமாரையும் நினைத்து அவர்களின் மானசீக ஆசியினை பெறுவதாக பாவிக்கவும்.
இரண்டாவது பகுதி:
பின்னர் கீழ்வரும் குருமந்திரத்தினை ஒரு முறை கூறவும்
  • குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ குரு சாஷ்ஷாத் பரப்பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ - இதன் பொருள் சுருக்கமாக குருவே பிரம்மா, விஷ்ணு, சிவ ஸ்வரூபமாக எனக்கு பிரத்தியட்சமாக இருப்பவர், அவரே பரப்பிரம்ம ஸ்வரூபம் இத்தகைய குருவை நான் வணங்குகிறேன். 
  • ஆனந்தம் ஆனந்தகரம் ப்ரசன்னம் ஞானஸ்வரூபம் நிஜபோத ரூபம் யோகேந்திர மீட்யம் பவரோஹ வைத்தியம் ஸ்ரீம் ஸத்குரும் நித்யம் அஹம் பஜாமி
என குருவின் சக்தி உங்கள் உடலில் மனதில் வந்து சேர்வதாக பாவிக்கவும். உங்களில் உள்ள பாவங்கள் 

மூன்றாவது பகுதி:
பின்னர் 
  • ஓம் காயத்ரி சித்தரே நமஹ - சூஷ்ம உடலில் இருந்து பூவுலகில் காயத்ரி சாதனை செய்பவர்களுக்கு வழிகாட்டி வரும் குரு
  • ஓம் கண்ணைய யோகீஸ்வரரே நமஹ 
  • ஓம் அகஸ்திய மகரிஷியே நமஹ - இந்த குருபரம்பரையின் ஆதிகுரு, கண்ணைய யோகீஸ்வரரின் குரு. 
நான்காவது பகுதி 
  • ஓம் விஸ்வாமித்திர மஹரிஷியே நமஹ - காயத்ரி மந்திரத்தினை முதலில் உணர்ந்து உலகம் பயன் பெறவேண்டும் என வழங்கியவர்
  • ஓம் வஷிஷ்ட மஹரிஷியே நமஹ - காயத்ரி மந்திரத்தின் சக்தி தகுந்த பக்கும் அற்றவர்களுக்கு செயற்படக்கூடாது என சாபம் வழங்க்கியவர்
  • ஓம் பிரம்மாவே நமஹ -  காயத்ரி மந்திரத்தின் சக்தி தகுந்த பக்கும் அற்றவர்களுக்கு செயற்படக்கூடாது என சாபம் வழங்க்கியவர்

ஆக அன்பர்களே தற்போது நீங்கள் இந்த எளியமுறை காயத்ரி உபாசனையில் நன்மையினை தவிர எதுவித தீங்க்கும் நிகழாது என்பதில் மனத்தெளிவு அடைந்திருப்பீர்கள். எனெனில் உங்களை சரியான வழியில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் இந்த குருவணக்கத்தின் மூலம் சாதிக்கிறீர்கள். ஆதலால் கட்டாயம் இந்த முறையில் குருவணக்கம் செய்வது முக்கியமான ஒன்று.


அடுத்த பகுதியில் பிரணாயாமம் பற்றி பார்ப்போம்...

Tuesday, September 25, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை -‍ (பகுதி 01)


காயத்ரி மந்திரத்தினை அனைவரும் மானசீகமாக எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்க முடியும், அதற்கு எந்த வித கட்டுப்பாடோ நிபந்தனைகளோ, புறச்சுத்த நிபந்தனையோ தேவையில்லை. ஆனால் குறித்த நேரத்தில் ஒழுங்குமுறையாக அனுதினமும் செய்துவருவதால் பெறும் நன்மைகள் ஏராளம். இது மனதினை ஒழுங்குபடுத்தி எமது அந்தக்கரணங்களை படிப்படியாக் சுத்தி செய்து கர்மாவினை வெல்லும் வழியில் செலுத்தும். பலரும் பூஜை புனஸ்காரம்  என ஒரு கடமைக்காக இயந்திரத்தனமாக வழிபாடுகளை நடாத்தி வருவர் இதனால் எந்தவித பயனும் கிடைப்பதில்லை.

தெய்வ உபாசனை என்பது எமது உணர்வு மனத்தினை சுத்திசெய்து அந்த தெய்வத்தின் குணங்களை எம்மில் உருவாக்கும் ஒரு சாதனை ஆகும். அதாவது ஒவ்வொரு அங்கத்தினையும் ஆழ்மாக புரிந்து அந்த செயல்முறை எமது சூஷ்ம உடலில் எந்தவித மாற்றத்தினை செய்கிறது என்பதனை அறிந்து செய்யவேண்டும். இப்படிச் செய்யும் போதே உண்மையான மாற்றத்தினை, பலனினை அறிய முடியும்.

முதலில் காயத்ரி உபாசனை செய்யவிரும்பும் சாதகன் தனது மன அமைப்புக்கு உகந்த உபாசனை முறை எது என்பதினை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும். உபாசனை முறை இரு வகைப்படும். ரூப உபாசனை, அருவுருவ உபாசனை,

ரூப உபாசனை செய்யவிரும்புபவர்கள் பிராணபிரதிஷ்டை செய்த காயத்ரி தேவியின் படம் ஒன்றினை தமது சாதனா இடத்தில் பிரதிஷ்டை செய்துகொள்ளவேண்டும். அதற்கு மலர்கள் சாற்றி, ஊதுபத்தி, விளக்கேற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அருவுருவ உபாசனை செய்ய விரும்புவபர்கள் விளக்கு ஒன்றினை ஏற்றிக்கொண்டு அந்த சுடரில் ஆவாஹனம் செய்யலாம். அல்லது மனதில்சூரியன், மற்றைய சூட்சும ஒளியில் தேவியின் சக்தியினை ஆவஹிக்கலாம். சிலருக்கு உருவங்களை மனதில் காண்பதற்கு கடினமாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள் இந்த வித உபாசனையினை செய்யலாம்.

அதிகாலையே உபாசனைக்கு சிறந்த நேரம், வசதிப்படாவிட்டால் சூரிய அஸ்தமன நேரத்திலும் செய்யலாம், முன்னர் சாதனா ஒழுக்க பகுதியில் கூறப்பட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இந்த எளிய உபாசனை கீழ்வரும் பகுதிகளை உடையது;
  • குரு வணக்கம்
  • பிரணாயாமம்
  • காயத்ரி நியாசம்
  • தேவி ஆவாஹனம்
  • தியானம்
  • ஜெபம்
  • ஜெபசமர்ப்பணமும் பிரார்த்தனையும்
இப்பொழுது இதனை வாசிக்கும் அன்பர்கள் எப்படி இவற்றையெல்லாம் செய்வது எமக்கு சமஸ்கிருதம் தெரியாதே! என்று உங்கள் மனம் கூறுவது தெரிகின்றது.

இதே கேள்வி எமக்கும் எமது குருதேவரை அண்டி காயத்ரி சாதனை பற்றி முதலில் கேட்டபொழுது ஏற்பட்டது, அதற்கு அவர் (காயத்ரி சித்தர்) அளித்த பதில் "காயத்ரி தேவி எல்லா அறிவுகளினதும் தாய், அவளை வழிபட மொழி ஒரு தடையில்லை, எந்த மொழியிலும் வழிபடலாம், உபாசனையில் தெய்வத்துடன் அன்பை வெளிப்படுத்தும் பகுதிகளை தமிழிலும், மந்திரசக்தி மூலம் தெய்வ சக்தியை கவரவேண்டிய இடத்தில் சம்ஸ்கிருத மந்திரங்களையும் பயன்படுத்தலாம், இதனால் எந்த குறையும் வராது, மந்திரங்களை சமஸ்கிருதத்திலேயே பயன்படுத்த வேண்டியதன் காரணம் அவற்றின் ஒலியமைப்பும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை தொடர்ச்சியாக ஜெபிக்கப்பட்டு வருவதால் அதனை பயன்படுத்துபவர்களது ஆத்மசக்தியும் அதில் பதிப்பிக்கப்பட்டு வரும், அதனை நாமும் ஜெபிக்கும் போது அதன் சக்தி பன்மடங்காகும்" என விளக்கம் அளித்தார்.

இதன் படி இந்த உபாசனை முறையின் அங்கங்களும் தமிழிலேயே காணப்படும், மந்திரங்கள் மட்டும் சமஸ்கிருத ஒலியமைப்பில் காணப்படும். இந்த முறை அகஸ்திய மகரிஷியிடம் நேரில் வித்தை பயின்ற மஹாயோகி கண்ணைய யோகீஸ்வரரால் உருவாக்கப்பட்ட சித்தர் முறை பத்ததி. ஆகவே சமஸ்கிருதம் பற்றி நன்கு அறியாதவர்களும் காயத்ரி உபாசனையின் முழுமையான பலனைப் பெறலாம்.

அடுத்த பதிவில் உபாசனையின் அங்கங்கள் பற்றி பார்ப்போம்.

Monday, September 24, 2012

காயத்ரி சாதனையின் மூலம் தெய்வீக ஞானத்தினை அடையும் வழி

காயத்ரி மந்திரம் அறிவினை தூண்டி நல்வழியில் செலுத்தும் ஆற்றலைத்தருகின்றது என்பதனை மந்திரப் பொருளினை விளக்கும் போது கூறியுள்ளோம். இது அந்தக்கரணங்களான மனம், புத்தி, சித்த அகங்காரம் ஆகிய நான்கினிலும் தனது தெய்வ காந்த சக்தியின் மூலம் சத்வ குணத்தினை பாய்ச்சுகிறது. இதற்கு சாதகன் மந்திரப் பொருளினை ஜெபத்துடன் பாவனை மூலம் செய்து வரவேண்டும். அந்த முறை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இப்படிச் செய்து வரும்போது அவனது விஞ்ஞானமய கோசத்தில் மனதுடனும், உடலுடனும் தொடர்புகொள்ள ஆரம்பிக்கிறது. சாதாரண மனிதரில் மனமு,ஆழ்மனமுமே செயற்படும். இது தமக்கு ஏற்பட்ட முன் அனுபவங்களின் படி முடிவெடுக்கும் தன்மை உடையது. இதனாலேயே துன்பம் ஏற்படுகிறது. ஆனால் மனதிலும் மேலான ஒன்று புத்தி, புத்தி எது சரி, எது பிழை என சரியாக முடிவெடுக்கும் தன்மை உடையது, ஆனால் பலர் புத்தியினை தமது மனதுடன் இணைப்பதில்லை. அதனாலேயே பலரும் துன்பத்தினை அனுபவிக்கின்றனர். பாவனையுடன் கூடிய காயத்ரி மந்திர ஜெபம் புத்தியினை மனதுடன் இணைக்கும்.

இதன் பயனாக மனம் நல்ல எண்ணங்களை ஆகர்ஷிக்க தொடங்கும். மனதின் செயல்முறை அறிந்தவர்களுக்கு தெரியும் எண்ணங்கள் அதனை ஒத்த சமஅலை வேகமுடைய எண்ணங்களை ஈர்க்கும் என்பது. அதனால் காயத்ரி மந்திர ஜெபத்துடன் தகுந்த பாவனையினை செய்து வந்தால் மனம் தெய்வ சக்தியினை ஈர்க்கும் தன்மை உண்டாகிவரும். இப்படி பலகாலம் மனம் தெய்வ சக்தியினை ஈர்த்து வர படிப்படியாக அது உடலிலும் செயற்பட ஆரம்பிக்கும். இந்த மாற்றங்கள் அந்தக்கரணங்களில் நடைபெறுவதால் உடனடியாக வெற்றுக்கண்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களின் தன்மை மாற்றங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மனிதன் முக்குணங்களால் ஆக்கப்பட்டவன் என்பதனை அறிந்திருப்பீர்கள், அதாவது சத்வம், ரஜோ, தமோ குணங்களே அவை. இந்த மூன்றின் அளவு வேறுபடுவதற்கேற்பவே ஒருவரது வாழ்க்கையின் தன்மை இருக்கும்.

அமைதி, ஆனந்தம், இறைசாதனையில் விருப்பம்,ஆன்ம ஞானவிழிப்பு என்பன சத்வ குணத்தின் அடையாளங்கள்.

போராட்டம், அதிகாரம், எப்போதும் தன்னை ஏதாவது வேலைகளி ஈடுபடுத்தியவண்ணம் இருத்தல், ஆணவம் என்பன ரஜோகுணத்தின் தன்மை.

தமோகுணத்தின் தன்மைகள் இவை சோம்பல், உற்சாகம் இன்மை, தன்னம்பிக்கை இன்மை, பயம் என்பன.

ஒருமனிதனில் இவை மூன்றும் கலந்தே இருக்கின்றன. இதன் அளவு வேறுபாட்டிற்கமைய ஒருவரின் ஆன்ம பரிணாமமுமிருக்கும். அதாவது சத்வகுண வளர்ச்சி அதிகம் ஏற்பட ஆன்மீகத்தில் தன்னை அறிந்து இறைவனை அறிய வேண்டும் என்ற விருப்பு ஏற்படும்.

ரஜோகுணம் அதிகரிக்க ஏதாவது வாழ்வில் சாதிக்கவேண்டும், தனது பெயரை நிறுத்தவேண்டும், நன்றாக உழைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும்.

தமோகுணம் அதிகரிக்க எதையும் செய்ய இயலாம், எப்போதும் விரக்தியும், உலகமே துன்பமயமானதாக தோன்ற ஆரம்பிக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள் தம்மால் எதையும் செய்ய இயலாதவர்களாவே உணர்வார்கள்.

ஆகா ஆன்ம வளர்ச்சி என்பது இந்த குணங்களின் வளர்ச்சியுடனும் தொடர்புடையது. மனதில் உள்ள தமோ குணத்திலிருந்து வாழ்க்கையினை ரஜோ குணத்திற்கு கொண்டுவந்து, பின்பு சத்துவ குணமாக்கி பின் அந்த குணங்களிலிருந்தும் விடுபட்டு குணமற்ற ஜோதி ஸ்வரூபமான இறையினை அடைதலே இறுதி இலட்சியம்.

இதனை சாதிப்பதே காயத்ரி சாதனையின் முதல் படி, அதாவது நீங்கள் முக்குணங்களில் எது அதிகமாக இருந்தாலும் அந்த குணத்திலிருந்து அடுத்த குணத்திற்கு உங்களை தனது தெய்வ காந்த சகதியால் படிப்படியாக மாற்றும், இதனால் உங்கள் வாழ்வு பிரகாசமடையத் தொடங்கும்.

உதாரணமாக நீங்கள் பூஜை, சாதனை என்பவற்றை மட்டும் செய்துகொண்டு உலக காரியங்களான வேலை, உழைப்பு, குடும்பத்தினை புறக்கணித்து வருவீர்களானால் உங்களில் தகுந்த ரஜோகுண வளர்ச்சி இல்லை என்று அர்த்தம். அந்த நிலையில் காயத்ரி சதனை செய்தீர்களானால் அவற்றை சரி வர செய்யும் ரஜோகுண ஆற்றலைப் பெறுவீர்கள்.

அதுபோல் எப்போது உழைப்பு, பணம், பெயர்,புகழ் என மன நிம்மதி இன்றி உழைப்பவராக இருந்தால் காயத்ரி சாதனை செய்யத்தொடங்க சத்துவ வளர்ச்சியினை அதிகரிக்கும்.

அதுபோல் சோம்பித்திரிந்து ஒரு வேலையும்செய்யாமல் சதா தமோகுணத்தில் மூழ்கியிருந்தல் காயத்ரி சாதனை ரஜோகுண வளர்ச்சியினை ஏற்படுத்தும்.
இது எப்படி நடக்கிறது?

காயத்ரி மந்திரத்தின் ஒலி அமைப்பு பிரபஞ்ச ஞானத்துடன் (Cosmic Inteligence) தொடர்புடையது, அதாவது பிரபஞ்ச ஞானத்தினை மனித ஞானத்துடன் இணைக்கும் இணைப்பு பாலமே காயத்ரி மந்திரம். பிரபஞ்ச ஞானம் உங்களை எந்த பாதையில் செலுத்த வேண்டும் என அறிந்து அந்த வழியில் செலுத்தும்.

இத்தனை மகிமை உடைய காயத்ரி சாதனையினைப் பற்றி மேலும் சில குறிப்புகள் குருவருளால் பகிர்வோம்.
ஸத்குரு பாதம் போற்றி

சூஷ்ம பார்வையில் இச்சா சக்தியின் பயன்பாடு (பகுதி 06)


இந்த பதிவினை வாசிக்கும் முன் புரிதலுக்கு கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் வாசித்தபின் வாசிக்கவும்.


சென்ற பதிவுகளில் சூஷ்ம பார்வை சஹஸ்ரார கோளத்தில் உள்ள ஒளியாலும் ஆக்ஞா சக்கரத்தின் மீது செலுத்துவதால் சூஷ்ம பார்வை உண்டாகிறது என்பது பற்றிப் பார்த்தோம். இந்தப்பதிவில் இதனை எப்படி சாதிப்பது என்று பார்ப்போம். 

சகஸ்ரார ஒளியின் அலைவேகங்களின் வேற்றுமைதான் வெவ்வேறு உலகங்கள், மன உலகங்கள் என்பது சகஸ்ரார ஒளியலையின் அதிக வேகமுடைய உலகம், பிராண உலகம் என்றால் அலைவேகம் குறைந்த உலகம். ஆக இந்த ஒளியின் அலை வேகத்தினை கட்டுப்படுத்த வெவ்வேறு உலகங்களுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஏற்படும். இதை எப்படி சாதிப்பது. அதற்கு மனிதனிடம் காணப்படும் சாதனம் தன் இச்சாசக்தி (WILL POWER). 

இறைவன் இந்த உலகை தனது இச்சா சக்தியால் படைத்தான் என கேள்விப்படுகிறோம், இச்சித்தால் நினைப்பது கிடைக்கும் எனக் கூறுவார்கள். இதை பலர் தவறாக ஏக்கத்துடன் ஆசைப்படுவது எனப் பொருள் கொண்டு அதிகம் அதிகம் ஆக ஆசைப்பட்டி இறுதியில் ஒன்றுமே கிடைக்காமல் போகின்றனர். இச்சாசக்தி என்பது மனதில் எழும் எண்ண அலைகளை படிப்படியாக கட்டுப்படுத்தி, பதஞ்சலியார் கூறுவது போல் சித்த விருத்தி நிரோத நிலை அடைந்த பின்னர் மனதினை ஏகாக்ரப்படுத்தி ஒரு எண்ணத்தில் மாத்திரம் மனதினை இயங்கவைக்கும் நிலை. இது வார்த்தைகளில் இலகுவாக கூறப்பட்டாலும் கடுமையான பயிற்சியின் மூலம் அடையும் நிலை, ஆனால் சிரத்தையுடன் பயிற்சித்தால் யாரும் அடையக்கூடிய நிலை. இந்த நிலையில் எமது இச்சா சக்தியினை ஆக்ஞா கோளத்தில் நிறுத்தி பிராண உலகில் செலுத்தினால் பிராண உலகு காட்சிகள் மனத்திரையில் தெரியும், மன உலகில் செலுத்தினால் மன உலகு காட்சிகள் தெரியும். இந்த முறையின் மூலம் நீங்கள் அறிய வேண்டிய விடயங்களில் உங்கள் இச்சா சக்தியினை செலுத்தி அறிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் சூஷ்ம திருஷ்டியின் வகைகள் பயன்பாடு பற்றி சிறிது பார்ப்போம்,

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...