கிருபை எனும்
வார்த்தைக்கு ஒரு விஷேட பொருள் உண்டு! எந்த எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்கள் மேல்
கருணையுடன் இருத்தல்!
இன்று நாம் தனிமனித, சமூகப்
பிரச்சனைகளைப் பற்றி உரையாடுகிறோம்! இவற்றில் எப்போதும் மற்றவரை ஒரு
வட்டத்திற்குள் முத்திரை குத்தவே விரும்புகிறோம். முத்திரை குத்துதலும்,
தண்டனைக்கு உட்படுத்துதலும் ஒருவித மனவக்கிரத்தை தண்டனைக்குள்ளானவர் மேல் காட்டும்
செய்கையாகத்தான் தற்போது நடைபெறுகிறது.
ஆனால் தண்டனையின் தத்துவம்
ஆழமானது; கிருபை நிறைந்தது! ஒருவன் தான் என்ன செய்கிறேன், அதன் விளைவு என்ன என்று
அறியாத அளவிற்கு அவனது மனதை, எண்ணத்தை உணர மறந்த மனிதன், விழிப்புணர்வு இல்லாமல்
குற்றத்தை (சமூகம் வெறுக்கும், சட்ட ஒழுங்கு அனுமதிக்காத செயலைச்) செய்கிறான்.
அவன் அவசரப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதால் அவனை நிறுத்தி, சீர்தூக்கி சிந்திக்க
தனிமைப்படுத்தி, அவன் தனது சொந்த மனதின் இயல்பின்படி செயல்பட முடியாமல் குறித்த
ஒழுங்கின்படி சிந்திக்க பயிற்றுவிக்கும் ஒரு களமாகவே தண்டனை பார்க்கப்பட வேண்டும்.
ஆகவே தண்டனை என்பது சத்தியத்தை நோக்கி ஒருவன் தனது விழிப்புணர்வினை
செலுத்துவதற்கான வாய்ப்பாகவே கணிக்கப்படவேண்டும்.
இதுவே ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கையில் நடைபெற்றது ரஜோ குணமிகுதியால் தீவிரவாதமும், போருமே விடுதலைக்குரிய கருவிகள் என்று எண்ணிச் செயல்பட்ட இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அத்திவார நாயகன் ஸ்ரீமான் அரவிந்த கோஸ் தனது அலிப்பூர் சிறைவாசத்தினால் அகமுகமாகி, யோகியாகி புதிய மனித குலத்திற்குரிய விதிகளை உலகிற்குத் தரும் பரம்பொருளின் பணியை ஏற்று புதுச்சேரி வந்து ஸ்ரீ அரவிந்தர் ஆகினார்!
வாழ்வு எம்மை எல்லைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் - பிரச்சனைகள், அடக்குமுறை, பாரபட்சம், அவமதிப்புகள் - இயற்கை எம்மை அகமுகமாக்கி தனது கிருபையை, ஆற்றலை, விதிகளை பயிற்றுவிக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் என்று கொள்ளப்படவேண்டும்.
இதற்கு மேல் தண்டனை பெறுபவன், அவமானப்படுபவனை முத்திரை குத்தும் முயற்சி மிகவும் ஞானமற்ற செயல்! சமூக முன்னேற்றம் வேண்டிச் செயற்படுபவர்கள் தவறு இழைப்பவர்களை அடையாளம் காட்டும்போது அவர்கள் அந்தத் தவறிலிருந்து மீண்டு புதுமனிதர்களாக, சமூகத்திற்கு பயனுடையவர்களாக, தமது பலவீனங்களை வெற்றி கொண்டவர்களாக வெளிவரும்படி தண்டனைகளும், நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.
தண்டனையின் நோக்கம் இன்னும் உன்னதமானவனாக்குதலாக இருக்க வேண்டும்!
இப்படி இல்லாமல் அவர்களின் ஆளுமைகளைச் சிதைப்பவர்களாக, அவமானப்படுத்துவதாக, அவனது அவமானம் கண்டு உள்ளூர இரசிப்பவர்களாக சமூகம் இருக்கக் கூடாது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.