நண்பர் ஒருவர் அழைத்திருந்தார்; தான் "ஓம் சிவயநம – யநமசிவ –
மசிவயந – வயநமசி – நமசிவய" என்ற மந்திரத்தை தினசரி உச்சரிப்பதாகக்
கூறியிருந்தார்! இது சரியா? பிழையா என்ற குழப்பம்!
அதற்கு நாம் கூறிய பதில்:
நமக்கு குருமுகமாக உபதேசிக்கப்பட்டால் தாராளமாக எந்த சந்தேகமும் இன்றி உச்சரிக்கலாம்! இல்லாமல் எங்காவது வலைத்தளத்தில் கூறப்பட்டதைக் கண்டு உச்சரிக்கத் தொடங்குவதாக இருந்தால் இப்படியான "தலைமாறல்" உள்ள மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்காமல் எளிமையான "ஓம் நமசிவய" என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்திலிருந்து தொடங்குவது நன்மை தரும்!
மந்திரங்கள் என்பது வெறும் சப்தமல்ல; அதற்குள் சைதன்யம் - பிராணன் உறைந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை நாம் ஒரு சொல்லை உச்சரிக்கும் போதும் அது உடலில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. மந்திரங்கள் எமது ஸ்தூல சூக்ஷ்ம சரீரங்களை தாக்கக் கூடியவை. ஆகவே அவற்றைப் பயிற்சிப்பதில் கவனம் தேவை.
சரியாக சாதனை செய்து சித்திபெற்ற குருவிடம் பெறுதலே சரியானது! அப்படி எவரும் கிடைக்காவிட்டால் அதிக சிக்கலான பீஜங்கள் அடங்கிய, தலைமாறிய - யநமசிவ – மசிவயந – வயநமசி போன்ற - மந்திரங்களை எடுத்து முயற்சிக்காமல் ஸ்துல பஞ்சாக்ஷரம் - ஓம் நமசிவய எடுத்துக்கொண்டு ஒரு சிறு துண்டில் எழுதி சிவன் கோயில் மூலவரிடம் அர்ச்சித்து, நந்திதேவரிடம் மானசீகமாக அனுமதி வாங்கிக்கொண்டு தினசரி ஒரே அளவாக நிர்ணயித்துக்கொண்டு (108/1008) தினசரி ஒரே நேரத்தில் சிரத்தையாக ஜெபித்து வரவேண்டும். ஒரு இலட்சம் வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முறையான குரு உபதேசம் கிட்டவேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் ஜெபித்துவரவேண்டும். இப்படிச் செய்ய, இறைவன் எந்த வடிவிலாவது முறையான உபதேசத்தை ஏற்பாடு செய்வான்.
இப்படி ஒரு லக்ஷம் எண்ணிக்கை சிரத்தையாக பூர்த்தி செய்யக்கூடியவன் மாத்திரமே மந்திர சாதனைக்கு தகுதியானவன். அப்படியில்லாமல் இந்த மந்திரத்தை ஜெபித்தால் இந்தப்பலன், அந்தப்பலன் என்ற செய்திகளைப் பார்த்துவிட்டு பௌதீக நன்மை கிடைக்கும், சித்திகள் கிடைக்கும், ஆற்றல் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மந்திரம் என்று சாதனை செய்யப்போகவேண்டாம்!
மந்திர சாதனை குருமுக
மார்க்கம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.