ஸ்ரீ வித்யா தீக்ஷை என்றால் என்ன? அதன் படிமுறைகள் என்ன? அது என்னை எங்கு கொண்டு செல்லும்?
______________________________________________________
ஸ்ரீ வித்யா தீக்ஷை என்றால் என்ன? அதன் படிமுறைகள் என்ன? அது என்னை எங்கு கொண்டு செல்லும்?
தீக்ஷை என்பது ஒரு சக்திப்பரிமாற்றம்; எதற்கான சக்திப் பரிமாற்றம் ஒருவன் தனது உண்மையான அக ஆற்றலையும் உணர்ந்து அறிந்து, வளர்த்து அகத்தில் பாவனை சக்தியை அதிகரித்து வெளிப்படுத்துவதற்கான ஆற்றலைப் பெறும் ஒரு பொறிமுறை தீக்ஷை எனப்படுகிறது. ஒருவன் தன்னில் உறங்கும் அக ஆற்றல்களை விழிப்பிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் வாழ்க்கையில் உயர்ந்த நோக்கமாக இருக்க முடியாது. இப்படி உறங்கிக்கொண்டிருக்கும் ஆற்றலை விழிப்பித்து ஒருவன் தன்னை பிரபஞ்ச மனதுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒருவன் தனது தலைவிதியை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆற்றலைத் தருபவர் குரு என்றும் பெறுபவர் சீடன் என்றும் அழைகப்படுவர்.
ஸ்ரீ வித்யா க்ரமத்தின் அடிப்படை நாதம் என்ன? எமது ஸ்தூல நிலையின் பிடியில் இருந்து விடுபட்டு நாம் ஆன்மா என்ற உணர்வு பெறுதல். இதன் ஆரம்பம் திடமான வடிவம் என்று எமது அடையாளங்களாக நாம் சுமந்து கொண்டிருக்குக்கும் அனுமானங்களான அகங்காரங்களைக் கரைப்பதே ஸ்ரீ வித்யா சாதனையின் அடிப்படை நோக்கம். இந்த அகங்காரங்களைக் கரைக்கும் செயல் ஏழு படிகளில் நடக்கிறது.
1. ப்ருதிவி எனும் திட நிலை நில தத்துவம்
2. அப்பு எனும் திரவ நிலை நீர் தத்துவம்
3. அக்கினி எனும் நெருப்பு நிலைத் தத்துவம்
4. வாயு எனும் அசைவு இயக்க நிலைத் தத்துவம்.
5. ஆகாயம் எனும் இட (the identity) தத்துவம்
6. காலம் எனும் நேர (Time) தத்துவம்
7. சூன்யம் எனப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய தத்துவம்
இதில் முதலாவது படி, இறுகிய திட நிலையில் இருந்து எப்படி திரவ நிலைக்கு நாம் மாறுவது என்பது, எமது பிருதிவி தத்துவத்தை எப்படி அப்பு தத்துவமாக மாற்றுவது என்பது; வடிவத்திலிருந்து வடிவமற்ற நிலைக்கு எப்படிச் செல்வது என்பது;
இந்தச் சாதனை ஸ்ரீ வித்யா க்ரமத்தில் மகாகணபதி உபாசனையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மகாகணபதி உபாசனையின் நோக்கம் நான் உடல் மாத்திரம் என்று எண்ணுவதால் எம்மில் இருக்கும் சித்த மலங்களை கரைப்பதாகும். இதனாலேயே மகாகணபதி உபாசனையில் சதுராவர்த்தி தர்ப்பணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சதுராவர்த்தி தர்ப்பணத்தின் போது வாசனைத் திரவியம் சேர்த்த சுத்த ஜலத்தினை மஞ்சளால் பிடித்த பிரமிட் வடிவ கணபதியின் மீது மந்திரங்களுடன் சொல்லி அந்த திண்ம நிலையை கரைந்த திரவ நிலையாகுவது பயிற்சிக்கச் சொல்லப்படுகிறது. இங்கு பிடித்துவைக்கப்பட்ட மஞ்சள் ப்ருதிவி தத்துவத்தால் ஆன உடலையும் நீரைக் கொண்டு மந்திர அலைகளால் உடல் தாண்டிய நிலையை அனுபவிக்கும் தன்மையும் பெறப்படுகிறது. உடலில் இருந்த வண்ணம் உங்கள் உணர்வினை கூட்டு தெய்வ உணர்வுடன் கரைக்கும் ஒரு செயல் மகாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்.
இதை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்வோம். ஒரே தட்டில் நான்கு மஞ்சளால் உருவாக்கப்பட்ட பிரமிட்டுகளை வைத்து நால்வர் தங்களது தர்ப்பண அனுஷ்டானத்தை ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியான பிரமிட் இருக்கிறது. இது இவர்கள் ஒவ்வொருவரினது பிரிக்கப்பட்ட உணர்வின் குறியீடு. தர்ப்பணத்தின் மூலம் இந்த பிரமிட்டுகள் கரைக்கப்படுவது நால்வரது உணர்வும் ஒன்றுபட்ட நிலை.
சதுராவர்த்தி தர்ப்பணத்தினால் நாம் என்ன பலனை அடைகிறோம்? நான்கு தனித்த உணர்வு நிலையுடையவர்கள் தனித்த ஒருமித்த ஒருவராக உணர்வில் ஒன்றுபட்டுள்ளார்கள். இதன் மூலம் நாம் மற்றைய மூவரின் எண்ணத்தினையும் எமது எண்ணமாக உணரக்கூடிய சக்தி பெறுவோம். இது அவர்களிடம் சொல்ல வேண்டியது என்பதில்லை.
ஸ்ரீ வித்யா க்ரமத்தில் முதல் தீக்க்ஷை மகாகணபதி தரப்படுவது ஏன்? நான் இந்த உடல் என்ற குறுகிய எண்ணத்திலிருந்து விடுபட்டு விரிந்து பரந்த நிலையைப் பெறுவதற்காக. ஒரு ஸ்ரீ வித்யா உபாசகன் தன்னுடைய எண்ணங்களை ஆமோதித்து செயற்படும் மற்றவர்களை தன்னுடன் இணைப்பதற்காகவும் மற்றவர்களுடைய எண்ணம் நிறைவேற தன்னுடைய பங்களிப்பினைச் செய்யும் பரந்து விரிந்த மன நிலை பெறுவதற்காகவும் மகா கணபதி உபாசனையின் சித்தி பயன்படுகிறது.
N எண்ணிக்கையான நபர்கள் ஒன்றுபட்டால் அங்கு உருவாகும் சக்திய N (N – 1) என்று நாம் குறிப்பிடலாம். 10 நபர்கள் ஒன்றுபட்டு ஒரு செயலைச் செய்ய முற்பட்டால் அங்கு 90 மடங்கு ஆற்றல் உருவாகும். இந்த ஆற்றல் அதிவேகமாக வளரும். அதுபோல் அனைவரிலும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் இப்படி வளரும். இதனால் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்துக்கொள்ளலாம். பெரிதாகத் தோன்றும் பிரச்சனைகள் அற்பமாகிவிடும். இங்கு அதி முக்கியமான விடயம் அனைவரும் நாம் அனைவரும் ஒன்றுபட்ட ஆன்ம சக்தி என்ற நிலைபெறுதல். இதன் மூலம் இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலை புரிந்துகொள்ளும் நிலையை நாம் பெறுவோம்.
கூட்டாகச் சேர்ந்த மனதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் யோசனைகள் தனிப்பட்ட பிளவுபட்ட மனதிலிருந்து தோன்றும் எண்ணங்களை விட வித்தியாசமானவை. அது எப்போதும் பிரபஞ்ச உணர்வுடன் ஒத்திசைவாக இருப்பதால் எங்கும் தவறானவை நடக்க முடியாது.
இதுபோல் நாம் 5000 நபர்களை உருமாற்ற வேண்டும் என்றால் இதன் வர்க்க மூல எண்ணிக்கையுடைய நபர்களை (70 பேர்) ஒருங்கிணைத்து ஒரு ஆற்றலாக்கினால் தானாக 5000 நபர்கள் சமூகத்தில் மாற்றத்தினை உண்டாக்குவார்கள். தனி நபராக எம்மால் சமூகத்தை மாற்ற முடியாது. ஆனால் ஒரு சமூகமாக நாம் இப்படி மாற்றத்தை உருவாக்க முடியும்.
_____________________________
இது எனது குருநாதர் தேவிபுரம் ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி ஆற்றிய ஆங்கில உரையின் செம்மைப்படுத்தப்பட்ட தமிழ் வடிவம்.
Dr. N. பிரகலாத சாஸ்திரி என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஒரு அணு இயற்பியல் விஞ்ஞானி மற்றும் பேராசிரியராக கடமையாற்றியவர்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.