ஒவ்வொரு பாடசாலை நிர்வாகமும் உயர்தரப் பெறுபேறுகளை ஆராயும்போது சரியான புள்ளிவிபரவியல் முறையினைப் பயன்படுத்த வேண்டும்.
சில பாடசாலைகள் தாம் உயர்தரத்தில் அதிகப் பேரைச் சித்தியடைய வைக்கிறோம் என்பதில் பூரிப்படைவைதைக் காண்கிறோம்.
ஒரு மனிதன் திருப்தியடையக்கூடாத ஒரே விஷயம் அறிவும் கல்வியும்! ஆகவே நாம் உயர்தரம் சித்தியடைய வைக்கிறோம் என்பது பெருமையல்ல!
சித்தியடையும் உயர்தர மாணவர்கள் எத்தனை பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிறார்கள்? அப்படித் தெரிவாகும் எத்தனை பேர் பல்கலைக்கழகத்தின் கற்கையைத் தொடர்ந்து பட்டதாரியாகிறார்கள்? அப்படி பட்டதாரி ஆகியவர்களில் எத்தனை பேர் உயர்தொழிலில் இருக்கிறார்கள்? அத்தகைய உயர்தொழிலில் இருக்கும் பழைய மாணவர்களை பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்கு எப்படி பயன்படுத்துவது? இவை எல்லாம் பாடசாலை நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டிய அதிமுக்கிய விடயம்!
உயர்தரம் என்பது ஒரு போட்டிப் பரீட்சை; அந்தப்போட்டியில் நமது பாடசாலை எங்கிருக்கிறது என்பது பற்றி பார்க்கக்கூட விருப்பமில்லாமல் கதவுகளை மூடிக்கொண்டு நல்லதொரு கல்விச் சமூகத்தை உருவாக்க முடியாது.
குறிப்பாக மலையகத்தில் தமிழ்ப் பாடசாலைகள் – சிங்களப் பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது எங்கிருக்கிறது? முஸ்லிம் பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது எங்கிருக்கிறது? இவையெல்லாம் ஆராயப்பட வேண்டும்.
கட்டிடங்களைக் கட்டி, வசதிகளை ஏற்படுத்தினாலும் உயர்தரத்தில் எவ்வளவு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள், அதன் மூலம் உயர் தொழிலைப் (higher professions) பெறுகிறார்கள் என்பதுதான் உண்மையான கல்வி வளர்ச்சி!
கீழ்வரும் தரவினை தெளிவாக, அர்த்தமுள்ளதாக இப்படி ஒழுங்குபடுத்தலாம்.
ஒட்டுமொத்த மத்திய மாகாணத்தில் 14 தமிழ் பாடசாலைக் கல்வி வலயங்கள் இருக்கின்றன.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலேவெல, நாவுல ஆகிய இரண்டும் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது. மாத்தளை பிரதான நகர்ப்புற கல்வி வலயம் 11 வது இடத்தில் இருக்கிறது.
பிரதான நகராகிய கண்டியும் மாத்தளையும் பின்தங்கியிருக்கிறது.
பொதுவாக பிரதான நகரைவிட கிராமப்புற கல்விவலய பாடசாலைகள் பெறுபேறுகளில் நல்ல பெறுபேறுகளைக் காட்டுவதை அவதானிக்க வேண்டும். இந்தப் பாடசாலைப் பெற்றோரின் பொருளாதார மட்டம் நகர்ப்புற பெற்றோரின் பொருளாதார மட்டத்தை விட குறைவானதாகும்.
இந்த ஒப்பீடு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் தனித்தமிழ் வலய பெறுபேறு ஒப்பீடு! உண்மையில் பிரயோசனமில்லாதது; உண்மையான பந்தயத்தில் ஓடும் குதிரையாக ஒப்பிட வேண்டும் என்றால் நாம் சிங்கள - முஸ்லிம் பாடசாலைகளுடன் ஒப்பிட்டால் மிகவும் பின் தங்கியே இருக்கிறோம் என்பது தெரியும்.
இதனால் எதிர்காலத்தில் சமூகப்பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வழக்கறிஞரோ, வைத்தியரோ, பொறியலாளரோ, கணக்காளரோ, பட்டதாரி ஆசிரியரோ சமூகத்தில் இருக்க மாட்டார்கள் என்பதை மாத்தளைச் சமூகம் விளங்கவேண்டும்.
பொறுப்புத் துறப்பு: கீழே படத்தில் உள்ள தரவு அட்டவணை சமூக வலைத்தளத்தில் பெறப்பட்டது; ஆகவே இது உத்தியோகப் பூர்வ தரவினூடான ஆய்வு அல்ல; இந்த ஆய்வு கல்வித்திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பவர்கள் செய்யவேண்டிய உத்தியோகபூர்வ பணி; அவர்களிடமிருந்து இப்படித் தெளிவான ஆய்வுகள் சமூகத்திற்கு வெளிவர வேண்டும். இந்தப்பதிவின் நோக்கம், எது சரியான இலக்கு? அதை அடைவதற்கான சரியான ஆய்வு முறை எது? என்பதற்கான பரிந்துரையைக் கூறுவதாகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.