ஒரே யோகத்தைப் பற்றி எழுதாமல் சற்று போகத்தைப் பற்றியும் எழுதுவோமே! வாழ்வின் நோக்கம் இன்பத்தினைப் பெறுதல்; இன்பத்தினைப் புலன்களால் பெற்றால் போகம்; புலனடங்கி மனம் உணர்வில் அடங்கிப் பெற்றால் யோகம்.
எப்போதும் மனம் புலன்களூடாக போகத்தின் வழி நிற்பதால் மனதை உணர்வில் உடனடியாக அடக்குதல் கஷ்டம். ஆகவே போகத்தை புலன்கள்வழி நாடும் மனம் எப்படிக் குழப்பமுறுகிறது என்று ஒருவன் அறிந்தால் மாத்திரமே அவன் அந்தப்பிரச்சனையிலிருந்து வெளிவரலாம்.
ஒரு பெண்ணை முதன் முதலில் பார்த்து மயக்கமடைந்து, புத்தி குழம்பும் ஒரு ஆணின் மனநிலை எத்தகைய படி நிலைக்கூடாகச் செல்லும் என்பதை திருவள்ளுவர் தகையணங்குறுத்தல் என்ற அதிகாரத்தில் தந்திருக்கிறார்.
இந்தப்பகுதி களவியல் என்று கூறப்படுவதன் காரணம் ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே மட்டும் கொள்ளும் ஒழுக்கம் என்பதால். ஆகவே இதில் கூறப்படும் உணர்வுகள் எல்லாம் உறவு கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரம் இருக்க வேண்டியவை; அப்படியில்லாமல் வெளிப்படுத்தப்பட்டால் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும்.
களவியலை ஒழுங்காகக் கற்றுக்கொள்வதால் ஒருவன் தனது காதலில் வரும் மனச்சிக்கல்களை இயல்பாகப் புரிந்துகொண்டு தீர்த்துக்கொள்ளலாம்.
முதல் குறள்;
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
ஒரு ஆண் தனக்குரிய பெண் என்று ஒருத்தியைக் காணும்போது அவள் அணங்கு - தேவலோகத்தில் இருக்கும் பேரழகியான அப்ஸரஸ் - என்றோ? அழகிய வண்ண மயிலோ என்று சந்தேகப்பட்டு தடுமாறி பிறகு இல்லை இல்லை இவள் கனமான குண்டலம் அணிந்த மானிடப்பெண் என்று தடுமாறி ஒருகணம் தனது நெஞ்சு குழம்பி நிற்பான்!
இது மனக்கலக்கத்தின் முதற்படி!
தனது மனதிற்குப் பிடித்த பெண்ணைக் கண்டு இந்தக் கலக்கம் ஏற்படாத ஆண் எவரும் உண்டோ?
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.