குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 08, 2012

மனதினை அறிவோம் - (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்-01)


சித்தர்கள் மனதினை அறிதலே தன்னை அறிதலுக்கான முதற்படி என்பதனை உறுதியாக வலியுறுத்தியுள்ளார்கள். சித்தர்களில் குருநாதர் அகஸ்தியர் பெருமளவான இடங்களில் மனதினைப்பற்றி கூறியுள்ளார். மனதின் செயற்பாட்டினை அறிதலே உண்மையான கல்வி, சிறுவயதில் சுவாமி விவேகானந்தரது "வீர இளைஞர்களுக்கு" என்ற புத்தகத்தில் 'உண்மையான கல்வி என்பது ஒருவன் தனது மனதினைப் பற்றிய கல்வியே" என்ற வரிகள் ஆழமாக பதிந்ததால் மனம் என்றால் என்ன? என்ற தேடல் எம்மை குருவை அடையவைத்தது. எமது குருபரம்பரையிலும் கண்ணையயோகீஸ்வரர் மனதினை அறிவதே இறை சாதனையின் முதல் படி என தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார்கள். அவரது மானச யோகம் எனும் நூல் மனதினைப் பற்றி அடிப்படையினை புரிந்து கொள்ள தமிழிலில் உள்ள மிகச் சிறந்த நூல் என்றால் மிகையில்லை. இந்த வகையில் மனதினைப் பற்றி திருமூலர், அகத்தியர் முதலான பல சித்தர்கள் கூறியிருந்தாலும் விஞ்ஞான ரீதியாக தெளிவாக கூறிய சித்தர் பதஞ்சலி முனிவராவார். அவரளவிற்கு அறிவியலாய் மனதினை விளக்கியவர் எவரும் இருக்க முடியாது என்பது யோக ஆசிரியர்களது கருத்து. 

பதஞ்சலி பல்லாயிரக்கணக்கான மனங்களை ஆராய்ந்து இறுதியாக கூறிய முடிவுகளில் தொகுப்பே "யோக சூத்திரம்" எனப்படும் நூலாகும். இது மொத்தம் நான்கு பகுதிகளாகவும் 196 சூத்திரங்களையும் உடையதாகும். சமாதி பாதம், சாதனா பாதம், விபூதி பாதம், கைவல்ய பாதம் எனற நான்குமே இவையாகும். இதுவே அஷ்டாங்க யோகம் எனப்படும் ராஜயோகத்திற்கு அடிப்படை நூலாகும். இதற்கு சுவாமி விவேகானந்தர் முதற்கொண்டு பலரும் விளக்கவுரை எழுதியுள்ளனர். இந்த தொடரின்  நோக்கம் விளக்கவுரை அல்ல, எல்லவற்றிற்கும் அடிப்படையான மனதினை புரிந்து கொள்ள யோக சூத்திரங்களை எப்படி உபயோகிப்பது எனபதாகும். 

ஆகவே உங்களுடைய மனதினை புரிந்து கொண்டு பயன்படுத்த விரும்பும் அன்பர்கள் இந்த தொடரை படித்து இன்புற வாருங்கள். 

அடுத்த பதிவிலிருந்து அவற்றினை ஒழுங்கு முறையாகப் பார்ப்போம். 

ஸத்குரு பாதம் போற்றி!

இந்த தளத்தினை வாசிக்கப்புகமுன் சில வார்த்தைகள்

நண்பர்களே இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் சித்தர்கள், யோகம், ஞானம், என்னுடைய தனிப்பட்ட புரிதல்கள், கடந்த 14 வருடகால எனது தனிப்பட்ட தேடலில், குருபரம்பரை கற்கையில் சேகரித்த, புரிந்த விடயங்களின் தொகுப்பு. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எதுவும் கருத்து திணிப்பான மதப்பிரச்சாரமோ, விற்பனையோ அல்ல! எமது கலாச்சாரத்தின் ஆணிவேராக இருக்கும் யோகம், ஞானம், தத்துவவியலின் என் சார்ந்த புரிதல்கள். எழுதுவதன் நோக்கம் என் புரிதல்களை வார்த்தைகளில் ஒழுங்குபடுத்துவதற்கும் என் மன நிலையினைசார்ந்தவர்களுடனான கருத்துப்பதிவிற்குமே அன்றி அது தவிர்ந்த வேறு நோக்கங்களுக்காக அல்ல! வேறு நோக்கம் எனப்படும் போது எது சரி, எது பிழை என்ற வீண்வாதங்கள், மதச் சண்டை, கருத்துச் சண்டைகள் போன்றவை! ஆதலால் இதனைப்படிக்க உட்புகுபவர்கள் திறந்த மன நிலையில் உட்புகும் படி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மன நிலைக்கு ஒவ்வாத கருத்து இருப்பின் தயவு செய்து விலகிவிடுங்கள், இது உங்களுக்கான தளம் அல்ல!

பிடித்திருந்தால் உங்களைப்போன்ற மன நிலை உடையவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

நட்புடன்
சுமனன்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே! (திருமூலர்)

Saturday, October 06, 2012

காயத்ரி மந்திரமும் சர்வ தேவதா சித்தியும் - காயத்ரி சாதனை மூலம் அனைத்து தெய்வங்களின் சக்திகளையும் பெறும் முறை (பகுதி 01)

எமது காயத்ரி சாதனை தொடர்பான முன்னைய பதிவுகளை படித்து வந்தவர்கள் காயத்ரி உபாசனையின் பலனை நன்கு உணர்ந்திருப்பீர்கள். எனினும் பலர் நாம் ஏற்கனவே முருகனை உபாசிக்கிறோம், கணபதிதான் எனக்கு பிடித்த தெய்வம், எனக்கு காளியைத்தான் பிடிக்கும் எனக் கூறுகிறீரகளா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குகானது.

நாம் எமது முந்தைய பதிவுகளிலும் விளக்கியுள்ளோம், காயத்ரி சாதனை என்பது ஒரு தனிப்பட்ட தெய்வத்திற்குரிய சாதனை அல்ல, அது பிரம்ம சாதனை, பிரம்மம் என்றால் உலகின் ஒட்டுமொத்த (நிலைப்பண்பு+இயக்க) சக்திகளைக் குறிக்கும் சொல்லாகும். ஆக பிரம்மத்தினை உபாசிக்கும் சாதகன் பிரபஞ்சத்திலுள்ள மற்றைய சக்திகளையும் கவரும் ஆற்றல் பெறுகிறான். இதனை மேலும் விளங்கிக்கொள்ள ஒரு உவமான உதாரணம் மூலம் விளக்குவோம்.

ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தியினை ஒரு நாட்டின் நிர்வாகம் என எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நிர்வாகத்தின் அதியுயர் சக்தி பீடம் ஜனாதிபதி, இதுவே பிரபஞ்ச சக்தியில் காயத்ரி எனக்குறிக்கப்படுகிறது. நீங்கள் முறையான பரிவார‌ உபாசகர்கள் என்றால் உங்களுக்கு யந்திர பூஜையில் உள்ள பரிவார தெய்வங்கள் பற்றி தெரிந்திருக்கும். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் அலுவலக அதிகாரிகள் தொடக்கம் ஊழியர் வரை இருப்பார்கள்.

இதுபோல் அந்த நிர்வாகத்திற்கு அமைச்சுகள் இருக்கும், கல்வி அமைச்சு, பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு என இவை முறையே சரஸ்வதி, லஷ்மி, துர்க்கா என பலவாறாக விரியும். இப்படியே நிர்வாக அலகு கிராம அளவில் வரும் போது கிராம அலுவலகர் அல்லது பஞ்சாயத்து வரை வரும். அந்த அளவில் பிரபஞ்சத்தில் சக்தி அளவு நவக்கிரகங்களால் கட்டுப்படுத்தப்படும்.

இப்போது அன்பர்களுக்கு நாம் கூறிய உதாரணம் நன்கு விளங்கியிருக்கும் என நம்புகிறோம். காயத்ரி உபாசனை எனபது ஒரு நாட்டின் ஜனாதிபதியின் நட்பிற்கு பாத்திரமாக இருப்பது போன்றது. இதனால் கிடைக்க கூடிய நன்மைகளை கூறவும் முடியுமா? ஜனாதிபதியின் அன்பும், நட்பும் இருப்பின் மற்ர்றைய அமைச்சுகளின் ஆதரவினைப்பெறுவது மிகச் சுலபமல்லவா! அதுபோலதான் காயத்ரி உபாசனை செய்பவர்கள் மற்றைய தெய்வ சக்தியினை கவரும் முறையினையே இங்கே தரப்போகிறோம்.

நாம் உதாரணம் கூறிய அரசியல் கட்டமைப்பினை தற்காலத்து சுயநல அரசியலாக எண்ணி தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. அதாவது ஜனாதிபதியின் அன்பு இருப்பதால்
இலஞ்சம் கொடுத்து  எல்லாவித தீய செயல்களையும் செய்து விட்டு தப்பிவிடலாம் என்று, பிரபஞ்ச சக்தி பேரொழுங்கு முறையானது, அதன் நியதியிலிருந்து சற்றேனும் விலகி உங்களுக்கு நன்மை செய்யாது, முதலாவது அதன் ஒழுங்கு முறைக்கு நீங்கள் உங்களை சரி செய்துகொள்ளவேண்டும். அதுவே ஒழுக்கம், இயமம், நியமம் எனப் போதிக்கப்பட்டது. அத‌ன் பின் ச‌ரியான‌ முறையில் நீங்க‌ள் அந்த‌ ச‌க்தியினை அணுக‌வேண்டும், அதுவே உபாச‌னை, பின்ன‌ர் கிடைத்த‌ ச‌க்தியினை ச‌ரியான‌ வ‌ழியில் ப‌ய‌ன்ப‌டுத்த‌வேண்டும். இந்த‌ நிய‌தியில் எதுவித‌ அதிகார‌ துஷ்பிர‌யோக‌மும் செய்ய‌முடியாது என்ப‌த‌னை ந‌ன்கு ம‌ன‌தில் கொள்ள‌வேண்டும்.

இத‌னை ச‌ற்று மேலும் விள‌ங்கிக்கொள்வோம். நீங்க‌ள் ஜ‌னாதிப‌தியுட‌ன் ந‌ட்பு இருக்கின்ற‌து என்ப‌த‌ற்காக‌ த‌குதிய‌ற்ற‌ ஒன்றை, உதார‌ண‌மாக‌ ப‌த‌விக்கேற்ற‌ த‌குதி இல்லாம‌ல் குறித்த‌ ப‌த‌வியினை அடைய‌ வேண்டும் என‌ விருப்புகிரீர்க‌ள். இத‌னை நீங்க‌ள் காய‌த்ரி உபாச‌னையில் தேவியிட‌ம் செய்யும் வேண்டுத‌லாக‌ வைத்துக்கொள்வோம். உட‌னே தேவி க‌ண்ணை மூடிக்கொண்டு அத‌னை உங்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி விட‌மாட்டாள், த‌ன‌து பிர‌ப‌ஞ்ச‌ ஞான‌ச‌க்தியினூடாக‌ அத‌னை அடைவ‌த‌ற்குரிய‌ த‌குதியினை பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழியில் உங்க‌ளை செலுத்துவாள். இத‌னை புரிந்து கொள்ளாம‌ல் ப‌ல‌ர் நான் வேண்டிய‌து கிடைக்க‌வில்லை அத‌னால் என‌து உபாச‌னை ப‌லிக்க‌வில்லை, தெய்வ‌மே பொய் என்ற‌ முடிவிற்கு வ‌ந்து வழியை விட்டு வில‌கிய‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர். ஆக‌வே எப்போதும் தெய்வ‌ உபாச‌னையில் நீங்க‌ள் இருக்கும்  நிலக்கு அடுத்த‌ நிலையினை அடைவ‌த‌ற்கு பிரார்த்திதால் உட‌ன‌டியாக நிறைவேற‌க்காணுவீர்க‌ள். உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் ஒரு சாதார‌ண உத்தியோக‌த்த‌ர் என்றால் அடுத்த‌ நிலை முகாமையாள‌ர் என்றால் அத‌னை அடைவ‌த‌ற்கு பிரார்த்தித்தால் உங்க‌ள் த‌குதிக்கேற்ப‌ சிறிது கால‌த்திற்குள் நிறைவேறக்காணுவீர்க‌ள். அல்லாம‌ல் க‌ம்ப‌னியின் நிர்வாக‌ முகாமையாள‌ராக‌ வ‌ர‌வேண்டும் என‌ பிரார்த்தித்தால் உங்கள் தகுதி காரணமாக‌ சில‌வேளை அங்கிருந்து வில‌க‌வேண்டிய‌ சூழ‌லும் ஏற்ப‌ட‌லாம்.

இந்த அடிப்படைகளை மனதில் வைத்துக்கொண்டு இந்தப்பதிவின் விடயதானத்திற்கு வருவோம். காயத்ரி என்பதி இந்தப்பிரபஞ்சத்தின ஒட்டுமொத்த சக்தியான பிரம்மம் என்று பார்த்தோம். நீங்கள் காயத்ரி உபாசனை மூலம் இந்த பிரம்மத்தின் அருளைப் பெற்றுவிட்டால் மற்றைய சக்திகளின் அருள் இலகுவாக கிடைக்கும். ஆனால் அதற்கும் நீங்கள் சில ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் ஜனாதிபதியின் விசேட அனுமதி பெற்ற நபர் என்ற சான்றிதழ் வேண்டும், இந்த அட்டையுடன் மற்றைய அமைச்சுகளுக்கு சென்றால் உடனடியாக உங்களது வேலைகள் முன்னெடுக்கப்படும். அத்தகைய ஒரு முறைதான் மற்றைய தெய்வங்களின் காயத்ரி மந்திரங்கள்.

நீங்கள் பொதுவாக அவதானித்தால் அனைத்து தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் இருக்க காண்பீர்கள். இதன் ரகசியம் இதுதான், முற்காலத்தில் ரிஷி பரம்பரையினர், சித்தர்கள் முதலாவதாக பிரம்ம காயத்ரி உபாசனை செய்து மூலசக்தியினை வசப்படுத்திக்கொண்டு பின்னர் அதன் உதவியுடன் மற்றைய தெய்வ சக்திகளை தமது தேவைக்கு ஏற்ப, உதாரணமாக செல்வம் என்றல் லஷ்மி காயத்ரி, தடைகள் நீங்க விநாயக காயத்ரி,கல்வியிற்கு சரஸ்வதி என உபாசித்து வந்தார்கள். இந்த முறையின் சிறப்பு என்னவெனில் பிரம்ம காயத்ரி உபாசனையினை முறைப்படி (அதாவது பூரணமாக 125,000 ஜெபம் பூர்த்தி செய்து, பின்னர் நித்திய உபாசனை செய்து வந்தால்) செய்துவந்தால் இவற்றை தமது தேவையின் போது அதிக அளவு ஜெபிக்க தேவையில்லை.

ஆகவே மற்றைய தெய்வங்களை உபாசனை செய்பவர்களும் மூல காயத்ரி உபாசனையினை செய்யத்தொடங்குவீர்களானால் துரித பலனைப்பெறுவீர்கள். வாசகர்களே காயத்ரி உபாசனை எந்த விதத்தில் உங்களுக்கு உதவ முடியும் என்பதனை நன்கு உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.


Friday, October 05, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 03 - காயத்ரி சாதனை மூலம் பிள்ளைப்பேறு, குழந்தைகளை நல்வழிப்படுத்தல் )


ஒரு மனிதனை உருவாக்குவது பெண், அதனாலேயே பெண் தாய் எனும் ஸ்தானத்தினனை அடைகிறாள். ஒரு பெண் தாயாக பல கடமைகளை செய்யவேண்டி இருக்கிறது. குழந்தைகளை பெறுவதிலிருந்து, வளர்த்து நல்வழிப்படுத்தும் வரை தாயின் பங்கே முழுமையானது. இந்த ஆற்றலை உலகையே ஈன்று, பராமரிக்கும் ஜெகன்மாதாவின் சிறு செயல் வடிவத்தையே ஒரு பெண் தாயாக செய்கிறாள். அந்த பெண் ஜெகன்மாதாவின் ஆற்றலை பெற்றால் இந்தப்பணியினை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். ஒரு குழந்தையின் அறிவு, பண்பு, ஆற்றல் என்பவை தாயினுடைய பிரதிபலிப்பாகவே அமையும். இந்தவகையில் மகப்பேற்றுடன் தொடர்பான சில காயத்ரி சாதனைகளை கீழே தருகிறோம்.

சாதனை - 01
கருவுற்றிருக்கும் தாய் சந்தியா வேளைகளில் (காலை சூரியோதயம், மாலை சூரிய அஸ்தமனம்) காயத்ரி மந்திரத்தினை ஜெபித்த வண்ணம் சூரியனிலிருந்து அறிவுமயமான ஒளி கருப்பையினூடாக வந்து கருவை அடைவதாக பாவிக்கவும். இப்படிப்பட்ட சாதனையினால் பிறக்கும் பிள்ளை அறிவாற்றல் நிறைந்ததாகவும், ஞானமுடையதாகவும், நீண்ட ஆயுள் உடையதாகவும் இருக்கும். 

சாதனை - 02
கருப்பையில் பிரச்சனை உடையவர்கள் மேற்குறித்த நேரங்களில் நீராடி இடுப்பில் ஈர ஆடையுடன் கிழக்கு நோக்கி அமர்ந்து காயத்ரியினை சூரியனின் ஒளிவடிவாக தியானித்து யோனி வழியாக அந்த சூரியன் ஒளி சென்று கருப்பையினை அடைவதாகவும் கருப்பையில் உள்ள குறைபாடுகள் மாதாந்த தீட்டுடன் செல்வதாகவும் பாவித்து வரவேண்டும். இதனை கண்களை மூடி மனதில் தியானித்து வரவேண்டும். இது கருப்பையினை பலப்படுத்தி கருவுறக்கூடிய தன்மையினை ஏற்படுத்தும். இந்த சாதனை முடிந்தபின்னர் கைகளில் நீரை எடுத்து சூரியனுக்கு அர்க்கிக்க வேண்டும். அதன் பின்னர் உள்ளங்கைகளில் நீரை விட்டு குடிக்கவேண்டும்.  இதே சாதனைதான் குந்திதேவி கர்ணனை பெற்றெடுக்க செய்த சாதனையாகும். இந்த சாதனையினை கன்னிப்பெண்கள் செய்யக்கூடாது. இது குழந்தை இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்தவர்கள், கருவழிவு ஏற்படுவது ஆகியவற்றிலிருந்து காப்பாற்றும் அரிய சாதனையாகும். 

சாதனை - 03
சோம்பல், படிக்க விருப்பமில்லாத, அடிக்கடி நோய் வரும் குழந்தைகளுக்கு தாய் குழந்தையினை மடியில் வைத்து மனதில் காயத்ரி தேவி அன்னப்பறவையில் இருப்பதாக கைகளில் சங்கு சக்கரம் வைத்திருப்பதாக பாவித்து காயத்ரி மந்திரத்தினை மானசீகமாக ஜெபித்த வண்ணம் தலையினை தடவியவாறு சில நிமிடங்கள் செய்யவும். குறிப்பாக குழந்தைகள் நித்திரைக்கு செல்லும்போது செய்யலாம். இது குழந்தையின் அறிவு, புத்தி, மனம், உடல் ஆகியவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்தி நல்ல வழியில் செல்லவைக்கும். இதே சாதனையினை பாலூட்டும் தாய்மார் குழந்தைக்கு பாலுட்டும் போதும் செய்யலாம். வியாழக்கிழமைகளில் ஒருவேளை உணவுடன் விரதமிருந்து சூரிய அஸ்தமனத்தில் குழந்தையுடன் சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்து, குழந்தையின் தலையில் சிறிதளவு நீர் தெளிக்கவும். 

அன்பான தாய்மார்களே, மேற்கூறிய முறைகள் விரைவாக சித்திப்பதற்கு நீங்கள் கட்டாயம் 125 000 ஜெபம் முடித்து தினசரி எளிய முறை காயத்ரி உபாசனை செய்து வரவேண்டும் என்பதனை மறக்கவேண்டாம்.

அனைவரும் இன்புற்றிருக்க ஜெகன் மாதா காயத்ரியை பிரார்த்திக்கிறோம். 

ஸத்குருபாதம் போற்றி!

Thursday, October 04, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 02 - திருமணமாகாத பெண்களுக்கான சாதனை,குடும்ப வாழ்க்கை மகிழ்வாக இருக்க)


திருமணமாகாத பெண்களுக்கான சாதனை

எமது எளிய முறை காயத்ரி உபாசனை பகுதியில் கூறியபடி உபாசனையினை செய்து, தினசரி 24 தடவைகள் (அதிகமாக 108) ஜெபம் செய்து நல்ல மணாளன் அமைய பிரார்த்திது வரவேண்டும். இது எப்படி செயற்படுகிறது என்பதனை ஏற்கனவே முன்னைய பதிவுகளில் விளக்கியுள்ளோம். 

குடும்ப வாழ்க்கை மகிழ்வாக இருக்க

திருமணமான பெண்கள் காயத்ரி சாதனையினை கீழ்வருமாறு செய்வதால் ஆனந்தம், செல்வம், ஆயுள், ஆரோக்கியம் போன்றவற்றை தமது பிள்ளைகள், கணவனுடன் பெற்று மகிழ்வாக வாழ்வார்கள். சில குடும்பங்களில் கணவன்மார் பொறுப்பற்று தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பார்கள், அப்படிப்பட்ட குடும்பங்களில் இந்த சாதனையினை மனைவி செய்து வருவாராக இருந்தால் அந்த கணவன் நல்வழிப்படுத்தப்படுவார். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்து காணப்படும். 

இந்த சாதனை காலையில் செய்ய வேண்டியது, மதியத்திற்கு முதல் முடித்துவிடவேண்டும், அதுவரை திரவ ஆகாரம் தவிர உணவு உட்கொள்ளக்கூடாது. நீராடி சாதகி கிழக்கும் நோக்கி அமர்ந்து கொள்ளவேண்டும். பின்னர் நாளாந்த உபாசனையினை முறைப்படி முடித்துக்கொள்ளவேண்டும். இந்த உபாசனையில் மஞ்சள் நிறம் இடம் பெற்றிருக்க வேண்டும், பூக்கள் மஞ்சள் நிறமுடையவையாக இருக்க வேண்டும், சந்தனப் பூச்சினை பயன்படுத்த வேண்டும், பிரசாதம் கடலை மாவில் செய்து படைக்கவேண்டும். மஞ்சள் நிறமாக பசு நெய் பயன் படுத்தவேண்டும். இப்படி இயலுமான வரை மஞ்சள் நிறத்தினை பயன்படுத்தி வரவேண்டும். 

இதன் பின்னர் தேவியயை கண்மூடி தியானிக்கும் போது தேவி மஞ்சள் நிற ஆடை அணிந்திருப்பதாக, மஞ்சள் நிற வரிப்புலியில் அமைந்திருப்பதாக, அதன் பின்புற ஆகாயம் மஞ்சள் நிறமாக இருப்பதாக பாவிக்கவும். அத்துடன் நீங்கள் அணிந்திருக்கும் உடையும் மஞ்சள் நிறமாக இருக்கவேண்டும். இந்த பாவனையில் 24 தடவைகள் காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும். இப்படி அமைதியாக இருக்கும் போது தேவியை மனதில் பாவித்து காயத்ரி மந்திரத்தினை ஜெபித்து வரவும். இந்த சாதனை செய்பவர்கள் பௌர்ணமி தினங்களில் உபவாசன் இருக்கவேண்டும். அத்துடன் தினசரி உணவுகளில் மஞ்சள் சேர்த்துக்கொள்வதும், தினசரி குளிக்கும் போது மஞ்சள் பூசுவதும் அவசியமாகும்.

இந்த சாதனை உங்களுக்கு, கணவனுக்கு ஆயுள் ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை என்பவற்றைக் கொடுக்கும். 

Wednesday, October 03, 2012

பெண்களுக்கான சிறப்பு காயத்ரி சாதனைகள் ( பகுதி 01 - தன்னறிவுச் சாதனை)

 பெண்கள் பலகாலம் காயத்ரி சாதனை செய்யக்கூடாது என சமய சுயநலவாதிகளால் மறுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய பார்வையில் எதுவித உண்மையும் இல்லை என்பதும், பெண்களே தெய்வசக்தியின் வடிவானவர்கள் என்பதுமே உண்மையாகும். ஆண் பெண் சேர்க்கையே இந்த உலகாகும், இந்த பிரபஞ்சத்தினை எடுத்து நோக்கினால் அதில் எப்போதும் இருமை காணப்படும். இந்த இருமைகளின் சேர்க்கையே பூரணம், ஆகவே ஆண் இல்லாமல் பெண்ணோ, பெண்ணிலாமல் ஆணோ பூரணமடைய முடியாது. இந்த இரண்டு சக்திகளும் சேருவதிலேயே உலகம் வளர்கிறது, இன்பமடைகிறது. ஆகவே இறை சாதனையில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் பார்ப்பது அறியாமையின் வெளிப்பாடே என எமது குருநாதர் கூறுவார். அதுவும் இறைசக்தியின் பிரம்மமான ஞான ஒளியினை உபாசிப்பதில் பேதம் காண்பது ஏற்க முடியாது என்பதனை பல மஹான்களும்  வலியுறுத்தியே உள்ளனர். இந்த‌ வ‌கையில் இந்த‌ப் ப‌திவுத்தொட‌ரில் பெண்க‌ள் ப‌ய‌னுறும் வ‌கையில் சில‌ சாத‌னா முறைக‌ளை கூற‌ உள்ளோம்.

ம‌னித‌னை உருவாக்குப‌வ‌ள் பெண்ணே! ஆக‌வே பெண்க‌ள் ஞான‌ம் பெற்றால்தான் இந்த‌ பூவுல‌கில் ம‌னித‌ர்க‌ள் அனைவ‌ரும் ஞான‌ம் பெற‌முடியும். அந்த‌வ‌கையில் பெண்க‌ள் அனைவ‌ரும் காய‌த்ரி சாத‌னையால் பெறும் ச‌க்தி அவ‌ர்க‌ளூடாக‌ அவ‌ர்க‌ள‌து ச‌ந்த‌திக்கும் க‌ட‌த்த‌ப்ப‌டும். அதாவ‌து காய‌த்ரி சாத‌னை செய்யும் பெண்ணிற்கு பிற‌க்கும் குழ‌ந்தை பிற‌ப்பிலேயே அந்த‌ ஞான‌த்தினையும் ச‌க்தியினையும் பெறும்.

இந்த‌ சாத‌னைக‌ள் எதுவித‌ க‌ட்டுப்பாடுக‌ளோ, நிய‌ம‌ங்க‌ளோ அற்ற‌வை, உங்க‌ள‌து நாளாந்த‌ க‌ட‌மைக‌ள் போல‌ செய்துவ‌ர‌லாம், தீட்டு, பிர‌ம்ம‌ச்ச‌ரிய‌ம் என்ப‌வை அவ‌சிய‌ம‌ற்ற‌வை. இவை மான‌சீக‌ சாத‌னைக‌ள், அத‌னால் எதுவித‌ புற‌ நிய‌ம‌ங்க‌ளையும் வ‌லிந்து க‌டைப்பிடிக்க‌த்தேவையில்லை. அவை அனுஷ்டான‌த்தின் போது க‌டைப்பிடிக்க‌வேண்டிய‌வை. ந‌வ‌ராத்ரி காய‌த்ரி சாத‌னையின் பின்ன‌ரோ, ம‌ஹா அனுஷ்டான‌த்தின் பின்ன‌ரோ இவ‌ற்றை செய்தீர்க‌ளானால் உட‌ன‌டிப் ப‌ல‌ன் கிட்டும்.

இவை இலகுவான மானச சாதனைகள் அதிக நேரமோ அல்லது கட்டுப்பாடுகளோ அற்றவை. ஆனால் பலன்கள் அளவிடமுடியாதவை. செய்து பார்த்து உங்கள் அனுபவத்தினை கூறவும்.

முதலாவது


மன ஒருமைப்பாட்டிற்கும் ஆன்மாவினை அறியும் தன்னறிவுச் சாதனை

இந்த சாதனைக்கு முன்னர் குளித்து தோய்த்துலர்ந்த ஆடை  அணிந்து தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தீர்த்தப்பாத்திரத்தில் நீர் வைத்துக்கொள்ள வேண்டும், உங்கள் ஜெபமாலையினை எடுத்துக்கொண்டு ஆசமனம், நியாசம், ஆவாஹனம், ஸ்தாபனம் செய்து தியான சுலோகத்தினை கூறிய பின்னர் தேவியை கீழ் வருமாறு தியானிக்கவும். நடுத்தர வயதுள்ள அழகிய பெண், புன்சிரிப்புடன், வெள்ளை ஆடையுடுத்தி எருதின் மீது அமர்ந்தவளாகவும், நான் கு கரங்களும் அவற்றில் ஜெபமாலை, கமண்டலம், புத்தகம், தாமரை இலை ஏந்தியவளாக தியானிக்கவும். இந்த தியான பாவத்தில் இருந்த வண்ணம் உங்கள் வழமையான ஜெப எண்ணிக்கையினை பூர்த்தி செய்யவும். ஜெபம் மனதிற்குள்ளேயோ, அல்லது உதடு மட்டும் அசைவதாகவே செய்யலாம். 

இந்த தியானம் மனதினை கட்டுப்படுத்தி சத்வ குணத்தினை அதிகரிக்கும். பொதுவாக இந்த தியானம் தமது வாழ்க்கையில் கடமைகளை முடித்தவர்கள், விதவைகள், கணவனை இழந்த பெண்கள் தம்மை ஆன்மீக வாழ்வில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள விரும்பும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டியது. இந்த சாதனையால் சாதகி சுயகட்டுப்பாடு, ஞானம், அமைதி, மனவலிமை ஆகியன வளரத்தொடங்கி சாதகி ஒரு முழுமையான யோகினி நிலைக்கு உயர்வார். அவருடைய உணர்வுகள், செயல்கள், வாழ்க்கை முறை தூய சத்வ குணத்திற்கு வந்து ஒரு தபஸ்வினியாக வாழத்தொடங்குவார்.




Tuesday, October 02, 2012

துரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)

கால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாகும். இந்த இரு காலப்பகுதிகளிலும் செய்யும் உபாசனை சாதாரண காலத்தில் செய்யும் உபாசனைகளைப்பார்க்கிலும் சக்தி வாய்ந்ததும், உடனடியாக பலன் அளிக்ககூடியதுமாகும். அதாவது சித்தரை, ஐப்பசி மாதங்களில் வரும் பிரதமை முதல் நவமி வரையிலான ஒன்பது நாட்களில் இந்த அனுஷ்டானத்தினை முடிக்க வேண்டும்.

இதற்குரிய விதிமுறைகள் முன்னைய பதிவுகளில் விளக்கிய பெரிய அனுஷ்டானம், எளிய உபாசனை முறை, சாதனை ஒழுக்கங்கள் என்பன வற்றை போன்றதே, ஆக ஜெபத்தின அளவு வித்தியாசம் மட்டுமே மாறுபாடாகும். இந்த ஒன்பது நாட்களில் 24000 ஜெபத்தினை முடித்து முன்னைய பதிவுகளில் கூறியபடி யாகம், தானம் செய்யவேண்டும். இதற்கு ஒரு நாளைக்கு 27 மாலைகள் ஜெபிக்க வேண்டும். உணவு ஒருவேளைமட்டும் மற்ற வேளைகளில் பால், பழம், கஞ்சி என்பன உட்கொள்ளலாம்.

இது லகு அனுஷ்டானம் எனப்படும், அதாவது எளிய அனுஷ்டானம் எனப்பொருள் படும். இந்த நவராத்ரி காலத்தில் செய்யும் 24000 ஜெபமானது சாதாரண காலத்தில் செய்யும் மஹா அனுஷ்டாந்திற்கு (125000 ஜெபம் 45/90 நாட்களில்) சமமானதாகும். இதுவும் உங்களுக்கு துரித மந்திர சித்தியினையும் பலனையும் தரும்.

இந்த வருட ஐப்பசி நவராத்ரி 16 அக்டோபரிலிருந்து 24 அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் வருகிறது. இந்தக் காலப்பகுதியில் நீங்கள் சாதனையினை தொடங்கி சித்திபெற எல்லாம் வல்ல காயத்ரி தேவியினையும் குருவருளையும் வேண்டுகிறோம்.

இவற்றை தொடங்குமுன் கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் படிக்கவும்.

Monday, October 01, 2012

துரித மந்திர சக்தி விழிப்பு பெற காயத்ரி சாதனை உயர் சாதனைமுறைகள் - பகுதி 01

முன்னைய பதிவுகளில் நாளாந்த எளிய முறை காயத்ரி சாதனைகளை செய்யும் முறைகளை கூறி வந்தோம். இவை நாளாந்தம் அனைவரும் செய்யக்கூடியவை. சிலர் சாதனையிற்காக அதிக நேரம் ஒதுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு பெரியளவிலான சாதனையின் வடிவினை இங்கே கூறுவோம்.

இந்த சாதனையின் முக்கியத்துவம் யாதெனில் ஒருவர் தனது ஆத்ம சக்தியின் அளவினை துரிதமாக கூட்டிக்கொள்ள விரும்பின், ஏதாவது உடனடியாக நிறைவேற வேண்டிய விருப்புகள் இருப்பின் இந்த முறையினை பின்பற்றி துரித முன்னேற்றம் காணலாம். இது ஒரு நோக்கம் கருதி செய்யப்படும் உபாசனையாகும். இதனை அனுஷ்டானம் எனபர். இதனைச் செய்வதால் சாதகன் தனது கிரகப்பாதிப்புகள், வேலையின்மை, பணப்பற்றக்குறை போன்ற உலகியல் பிரச்சனைகளை தீர்ப்பதுடன் ஆன்மீக முன்னேற்றமும் துரிதமாக ஏற்படக்காண்பான்.

இந்த‌ முறையில் ஒருமுறை அனுஷ்டான‌த்தினை பூர்த்தி செய்து விட்டீர்க‌ளானால் பின்ன‌ர் எளிய‌ உபாச‌னையில் சிறிய‌ள‌வில் நாளாந்த‌ம் செய்யும் போது அதிக‌ ப‌லனைப் பெற‌முடியும். இது கிட்ட‌த்த‌ட்ட‌ வெளிநாடு சென்று அதிக‌ள‌வு ப‌ண‌த்தினை குறுகிய‌ கால‌ம் வெலைசெய்து சேமித்து பின்ன‌ர் வ‌ங்கியில் இட்டுவிட்டு உள்நாட்டில் ச‌ம்ப‌ள‌ம் குறைவான‌ தொழிலானாலும் வ‌ங்கியில் இட்ட‌ ப‌ண‌த்திற்கு வ‌ட்டி வ‌ருவ‌தால் கையில் இருக்கும் ப‌ண‌ம் அதிக‌மாக‌ இருக்கும‌ல்ல‌வா! இந்த‌ நிலையினை ஒத்த‌தே இந்த‌ அனுஷ்டான‌மும்!

பொதுவாக‌ வாழ்க்கையில் பிர‌ச்ச‌னையினை எதிர்நோக்கும் போது ம‌ன‌ம் கல‌ங்கி ச‌ரியா எதிர்கொள்ள‌முடியாத‌ப‌டி புத்தி த‌டுமாறி நிற்கும். இந்த‌ துரித‌ அனுஷ்டான‌ம் ம‌ன‌தினை, புத்தியினை சுத்தி செய்து தெய்வ‌ ஒளியினை ம‌ன‌திற்கும் புத்தியிற்கும் பாய்ச்சி சாத‌க‌னை சரியான‌ பாதையில் செல்ல‌ வைக்கும். உண்மையில் காய‌த்ரி சாத‌னை சாத‌க‌ன‌து அக‌த்தினை மாற்றி புது வ‌ழிகாட்டும்.

அனுஷ்டான‌ம் என்ப‌து 125,000 ஜெப‌த்தினை பூர்த்தி செய்யும் செய‌ன்முறையாகும். எந்த‌வொன்றும் ப‌ல‌ன் த‌ர‌வேண்டுமானால் அத‌ன் விதை இட‌ப்ப‌ட்டு, க‌ருவாகி, வ‌ள‌ர்ந்து, ம‌ர‌மாகி ப‌ல‌ன்த‌ரும‌ல்ல‌வா! அதுபோல் காய‌த்ரி ம‌ந்திர‌த்தின் மூல‌ம் ப‌ல‌ன் பெற‌ விரும்புப‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ம் இந்த‌ எண்ணிக்கியினை குறித்த காலத்தினுள் பூர்த்தி செய்ய‌ வேண்டும்.

இந்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்தபின் உங்களது நாளாந்த உபாசனை இலகுவாக சித்திக்கும். அதாவது உங்கள் நேரிய பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும்.

இவற்றை தொடங்குமுன் கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் படிக்கவும்.



ஔவையாரும் கணபதியும் - குண்டலினி யோகத்திறவுகோல்




ஔவைப்பிராட்டியை அறியாத தமிழர்கள் இருக்க முடியாது, நீதி நூற்களும் பாலருக்கு உகந்த பாடல்களும் எழுதி சிறுவயது முதல் எம்முடன் என்றும் வாழ்ந்துவரும் சிரஞ்சீவி ஔவைப்பிராட்டி. இந்தப் பதிவின் விடயம் ஔவையார் கைலாயம் சென்ற கதையின் யோக இரகசியத்தினை விளக்குவதாகும். அனைவரும் அறிந்த கதைதான். 

சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமானாரும் கையிலையிற்கு இந்திரன் அனுப்பிய ஐராவதம் எனும் தேவலோக யானையில் செல்லும் வழியில் ஔவைப்பிராட்டி கணபதிக்கு பூஜை செய்தவண்ணம் இருக்கிறார். அவரைக் கண்ட சுந்தரர் தம்முடன் கையிலையிற்கு வரும் படி அழைக்க பாட்டியோ கணபதி பூஜையினையின் நடுவே செல்ல விருப்பமில்லாமல் கணபதியிடம்  "பெருமானே நீர் விரும்பினால் நீரே என்னை கையிலையில் சேர்த்துவிடும்" என கூறுகிறார். அதற்கு கணபதி பிராட்டியாரை நோக்கி அகவல் ஒன்று கூறும்படி கேட்க அவர் குண்டலினி யோகமுறைகளை எல்லாம் உள்ளடக்கு பாடியதுதான் இன்று பாராயண நூலாக விளங்கும் "விநாயகர் அகவல்". இது குண்டலினி யோக இரகசியங்கள் அடங்கியது. அது பற்றி வெறொரு சமயத்தில் பார்ப்போம். இந்தப்பதிவில் இந்த கதையின் குறியிட்டு விளக்கம் என்ன என்பது பற்றிப் பார்ப்போம். இதன் பின்னர் கணபதி தனது தும்பிக்கையின் மூலம் ஔவைப்பிராட்டியாரை சுந்தரரும் சேரமான் பெருமானாரும் கையிலை செல்லும் முன் கொண்டு சேர்க்கிறார். 

கணபதி குண்டலினி யோகத்தில் மூலாதரச் சக்கரத்தின் அதிபதி, மனித பரிணாமத்தின் அனைத்துக் கர்மங்களினதும் சேமிப்பு இடம் மூலாதரச் சக்கரம். இந்த இடத்தினை கட்டுப்படுத்தும் தெய்வ சக்தியே கணபதி. இந்த சக்கரம் விழிப்படையாமல் ஆன்மா மேல் சக்கரங்க்களை நோக்கி பயணிக்க முடியாது. இந்த சக்கரம் சமனிலையில் இருந்தால் தான் அந்த மனிதனது உணர்ச்சிகளும் மனதும் சரியான வகையில் வேலை செய்யும். இல்லாவிட்டால் மனம் பெரும்பாலும் பயத்திலும், குழப்பத்திலும் இருக்கும். ஆக சமூகம் சமனிலையில் இருக்க இந்த மூலாதாரச் சக்கரம் சமனிலையில் இருக்கவேண்டும். இதை அறிந்தே எமது முன்னோர்கள் எல்லா ஆற்றங்க்கரையில், அரச மரத்தடியில் கணபதியினை ஸ்தாபித்து தலையில் குட்டி தோப்புக்கரணம் போடும் படி செய்வித்தார்கள். தலையில் சரியாக புருவ முடிவின் பகுதியின் அழுத்துவதன் மூலம் இடகலை, பிங்கலை நாடிகளை சிறிய அளவில் செயற்படுத்த முடியும், இப்படி செயற்படுத்திவிட்டும் தோப்புக்கரணம் போடும் போது மூலாதாரம் சலனித்து சிறிதளவில் மற்றைய சக்கரங்களுக்கு குண்டலினி சக்தியினை பாயவைக்கும். இந்த ஆற்றல் ஒவ்வொரு சக்கரத்திற்கும் செல்லும் அளவில் நீங்கள் நினைத்த காரியம் சித்தியாகும், அது போல் இந்த செய்முறையினால் யோக நாடிகள் சுத்தமாகி மனம் ஏகாக்கிரப்படும். ஆக கணபதி என்ற சக்தியின் செயற்பாட்டை செய்விக்கவே இந்த ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளார்கள் எமது முன்னோர்கள். 

இனி ஔவைப்பிராட்டியாரின் கதைக்கு வருவோம், சுந்தரமூர்த்தி நாயனார் பரியங்க யோகத்த்தின் மூலம் குண்டலினியை விழிப்பித்து கையிலை எனப்படும்  சகஸ்ராரத்தினை அடைந்தவர், சேரமான் பெருமானார் தானும் கையிலைக்கு வரவேண்டும் எனும் போது சுந்தரர் அவருக்கு பஞ்சாட்சர மந்திர தீட்சை அளித்து அவரை கூட்டிச் செல்கிறார். பஞ்சட்சர ஜெபத்தில் உள்ள ந, ம, சி, வா, ய என்பது மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி முதலான ஆதாரஙகளின் பீஜ - வித்து மந்திரச் சொல், இதன் மூலமும் கையிலையாகிய சஹஸ்ராரத்தினை அடையலாம். அவர்கள் கையிலையிற்கு செல்வதற்கு முன்னர் விநாயகர் அருளால் ஔவைப்பிராட்டி கயிலை அடைந்தார் என்பது கணபதியின் சாதனா மகிமையினைக் குறிக்கிறது. அதாவது கணபதி சாதனை ஒன்றே குண்டலினையை விரைவாக சஹஸ்ராரத்திற்கு அடையவைக்கும் என்பதனைக் குறிக்கவே இந்தக்கதையினை உருவகப்படுத்தினர். 

இதனாலேயே ஸ்ரீ வித்தையில் கணபதி சாதனை முதன்மையாக வைக்கப்பட்டிருக்கிறது, அனைத்து விடயங்களிலும் கணபதி முதன்மைப்படுத்துவதன் ரகசியம் எந்தக்காரியத்தினை செய்யும் முன்னும் மூலாதாரம் சமனிலையில் இருந்தால் மட்டுமே பிரபஞ்ச ஆற்றல் எதுவித தடங்கலும் இல்லாமல் மன திலும், உடலிலும் பாயும், இந்த நிலையில் எந்த தடங்கலும் இல்லாமல் காரியம் முடியும் என்பதனாலேயே. ஆகவே இந்த இரகசியத்தினை விளங்கிகொண்டு இனிமேல் எந்தக்காரியத்தினை செய்யும் முன்னும் மூலாதாரத்தில் கணபதியினை வணங்கி செய்தால் வெற்றி கிட்டும் என்பதனை அறிந்துகொள்ளுங்கள்.

ஸத் குரு பாதம் போற்றி

Sunday, September 30, 2012

அனைவரும் செய்யக்கூடிய எளிய காயத்ரி உபாசனை (பகுதி 05)


கிழ்வரும்  பதிவுகளை வாசித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கவும். 

*********************************************************************************************************************
கடந்த பதிவில் நியாச முறை பற்றிப் பார்த்தோம்.  இந்தப் பதிவில் எங்கும் நிறைந்த பராசக்தியான காயத்ரி தேவியை நாம் வணங்கும் தேவியின் படத்திலோ அல்லது விளக்கொளியிலோ ஆவாஹனம் செய்து ஸ்தாபிக்கும் முறையினைப் பார்ப்போம். தெய்வ சக்தி எங்கும் நிறைந்திருந்தாலும் எமது மனதால் ஆகர்ஷிக்ககூடிய வண்ணம் ஒரிடத்தில் குவித்து அதன் மூலம் பயன் பெறும் செய்முறையே பூஜை என்பது. இதனை விரிவாக செய்வதற்கு பலமுறைகள் இருக்கின்றன, அவற்றை எல்லாராலும் செய்யமுடியாதென்பதால் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அழகுதமிழில் தேவியின் பூஜைமுறையினை வகுத்து தந்துள்ளனர். இந்த தமிழ் பத்ததி கடந்த நாற்பது வருடங்களாக காயத்ரி சித்தர் முருகேசு ஸ்வாமிகளால் இலங்கை நுவரெலியா காயத்ரி பீடத்தில் இன்று வரை பூஜை முறையாக இருந்து வருகிறது. இதன் மூலம் சமஸ்கிருதம் அறியாதவர்களும் இலகுவாக தேவியின் அருளை பெற்றிருக்கிறார்கள். 

இந்த பூஜை பத்ததி ஆவாஹனம், ஸ்தாபனம், சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை, தியானம், ஜெபம், ஹோமம் என்ற 17 அங்க்கங்களுடைய பத்ததியாகும். இவற்றை முழுமையாக செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வரை ஆகும். இதனை தனிப்பட ஜெபசாதனை செய்துகொள்ள விரும்புபவர்கள் செய்துகொள்ளக்கூடிய வகையில் சுருக்கி இங்கு தருகிறோம். முழுமையாக காயத்ரி பூஜா பத்ததி தமிழில் கற்று பூஜை புரிய விரும்புபவர்களுக்குரிய விபரம் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் சுருக்கமாக பூஜை முறை வருமாறு; முதலாவது ஆவாஹனம், 

ஆவாஹனம்: கீழ்வரும் மந்திரத்தினை பக்தியுடன் கூறி, படத்தில், விளக்கு ஒளியில் காயத்ரியினை அழைப்பதாக பாவிக்கவும்

அந்தமும ஆதியில்லா, அருட்பெருஞ் ஜோதி மாயே, வந்திடாய் வந்திடாய், நீ வந்தெங்கள் பூஜையேற்பாய், 

ஸ்தாபனம்: அழைத்த காயத்ரி தேவியை படத்தில், விளக்கொளியில் உறைவதாக பாவிக்கவும்.

வந்தனை வந்தனை நீ வரதே வான்முகிலேயம்மா, சிந்தனை களித்துயிங்கே சிறப்புடன் வீற்றிருப்பாய். 

இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட உபசாரங்களை (சந்தனம், குங்குமம், புஷ்பம், அஷதை, தாம்பூலம், பழம், தூபம், தீபம், நைவேத்யம், கர்ப்பூரம், பிரார்த்தனை, அர்ச்சனை) விரும்பின் செய்யலாம். அல்லது நேரடியாக தியான ஸ்லோகத்தினை கூறி தேவியை மனத்திரையில் உருவகப்படுத்தலாம். 

தியானம்: கீழ்வரும் தியான ஸ்லோகத்தினை பக்தியுடன் மெல்லிய குரலில் கூறவும்.

முக்த வித்ரும ஹேம நீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீஷ்ணைர் யுக்தா மிந்து நிபத்த ரத்ன முகுடாம் தத்வார்த வர்ணாத்மிகாம், காய்த்ரீம் வரதா பயாங்குச கஸா பாஸம் கபாலம் குணம் ஸங்கம் சக்ர மதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

இதன் பொருள் சுருக்கமாக வருமாறு: முத்து, பவளம், பொன், நீலம், வெண்மை ஆகிய நிறங்களுடைய ஐந்து முகங்களுடனும், முக்கண்கள், சந்திரகலை பொருந்திய கிரீடம், தத்துவார்த்தத்தை விளக்கும் எழுத்துக்களின் வடிவாகவும், வர முத்திரை, அபய முத்திரை, அங்குசம், கசை, வெள்ளைக் கபாலம் (இது தற்போது வரும் காயத்ரி படங்களில் காணப்படுவதில்லை, அவற்றில் பாத்திரம் ஒன்று இருப்பதாகவே வரைகின்றனர்) பாசக்கையிறு, சங்கு, சக்ரம், இரண்டு தாமரைப்பூக்கள் ஆகியவற்றை கைகளில் தாங்குபவளான காயத்ரி தேவியினை வணங்குகிறேன். 

இதன் தத்வார்த்த விளக்கம் உயர்சாதனைகள் செய்ய விரும்புபவர்களுக்குரியது, அவற்றை வேறொரு பதிவில் தேவை வேண்டிவிளக்குவோம். 

இப்படி தேவியை மனத்திரையில் பிரத்யட்சமாக உண்மையில் இருப்பதாக பாவித்து அவளது வரம் தரும் கைகளில் இருந்து ஒளிவடிவாக அவளது அருட்கிரகணங்கள் உங்களில் வந்து சேர்வதாக பாவிக்கவும். இப்படி பாவித்தபடி ஜெபமாலையினை கையில் எடுத்து அதே பாவனையில் மந்திர ஜெபத்தினை தொடரவும். ஆரம்பத்தில் 09 முறை ஜெபத்தினை தொடங்கி வாரத்திற்கு ஒன்பது ஒன்பதாக கூட்டி வந்து அதாவது முதல் வாரம் 09. இரண்டாவது வாரம் 18, மூன்றாவது வாரம் 27 என்றவாறு 108 ஆக்கி தினசரி 108 செய்யும் படி பழகிக்கொள்ளுங்கள். இந்த பாவத்தில் ஜெபத்தினை முடித்தபின்னர் கடைசியில் கீழ்வரும் பிரார்தனையினை செய்யவும். 

பிரார்த்தனை: 
அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா;
ஆயுள் ஆரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தியன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா!

என பணிந்து தேவியிடமிருந்து வரமாக இவற்றை பெற்றுக்கொள்வதாக பாவிக்கவும். 

இதன் பின்னர் சிறிதளவு தீர்க்க சுவாசம் (ஆழமான மெதுவான மூச்சு) அல்லது நாடி சுத்திப்பிரணாயாமம் செய்துகொள்ளவும். 

இதன் பின்னர் தீர்த்தப்பாத்திரத்தில் உள்ள உத்தரணியில் நீரை வலது கையில் எடுத்து தேவியின் பாதத்தில் " எனது உபாசனையில் ஏதும் குறைகள் இருந்தால், ஜெகன்மாதாவான நீ சிறுபிள்ளையாகிய எனது பிழைகளை பொருத்தருளி எனது பிரார்த்தனையினை நிறைவேற்று தாயே' என மானசீகமாக பிரார்த்திது நீரை கீழே விடவும். இந்த செயன்முறை கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். 

இதுவரை ஐந்து பதிவுகளாக காயத்ரி உபாசனையினை எளிய முறையில் செய்யக்கூடிய முறையினை விளக்கியுள்ளோம். இதனை வாசித்தவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்றாலும் நேரடியாக கற்காமல் எப்படிச் செய்வது என்ற மனத்தடங்கல் இருப்பதை நாம் உணர்ந்துள்ளோம். இதனை தீர்ப்பதற்கு இரண்டு வழிகளில் நாம் உங்களுக்கு உதவ முன்வந்துள்ளோம். 

முதலாவது: நீங்கள் இலங்கையில் வசிப்பவராக இருந்தால் மாதாந்தம் பௌர்ணமி தினங்களிலும், வாரந்தம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நுவரெலியா காயத்ரி பீடத்தில் இந்தப்பூஜை முறையின் முழுமையான பத்ததி தமிழில் நடாத்தப்படுகிறது. ஒருமுறை சென்று நேரில் பங்கு பெற்றி கற்றுக்கொள்ளலாம். அங்கு காயத்ரி தேவியின் விரிவான தமிழ் பூஜைப் பத்ததி அச்சிட்டும், காயத்ரி சித்தரின் குரலிலும் சீ.டீக்களாக தருவார்கள். அவற்றை வாங்கி பலமுறை கேட்டு நீங்களே கற்றுக்கொள்ளலாம். பூஜையில் வத்த காயத்ரி படம் ஒன்றினை வாங்கிவந்து உங்கள் உபாசனையினை தொடரலாம். 
இரண்டாவது: நீங்கள் வெளி நாடுகளில் வசிப்பவராக இருந்தால் காயத்ரி பீடத்தினை தொடர்பு கொண்டு காயத்ரி உபாசனா பத்ததி நூலையும், காயத்ரி சித்தரின் குரலில் உள்ள பூஜை சீ.டி ஒன்றினையும் அனுப்பும்படி கேட்டுக்கொண்டால் அனுப்பி வைப்பார்கள், அவற்றை பெற்று உங்கள் உபாசனையினை தொடரலாம். 

மேற்கூறிய தொடர்புகளுக்கு,
திரு. ச, சந்திரமோகன்
நிர்வாக அறங்காவலர்
ஸ்ரீ காயத்ரி பீடம் இண்டர் நஷனல் ட்ரஸ்ட்
82, லேடி மக்கலம்ஸ் ட்ரைவ்
நுவரெலியா.
தொலைபேசி:+94-52-2222609
அலைபேசி: +94-773249554
ஈமெயில்: srigayathripeetam@gmail.com  

முக்கிய குறிப்பு: எமக்கும் காயத்ரி பீடத்திற்கும் நிர்வாக ரீதியாக, சட்ட ரீதியாக எதுவித தொடர்பும் இல்லை. காயத்ரி உபாசனையினை தமிழில் செய்வதற்குரிய வளங்களை, முறைகளை, தகவல்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டுவதே இந்த தகவலின் நோக்கம், 

இந்த தகவல்களால் ஆர்வமுடைய யாராவது பயன் பெறுவார்கள் என உறுதியாக நம்புகிறோம். 

ஸத் குருபாதம் போற்றி!

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...