குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 29, 2018

தீபாவளி ஸ்பெஷல்: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய மகாலக்ஷ்மி தத்துவம்




குரு நாதரின் உரையில் கற்ற படி மகாலக்ஷ்மி அருள் தேவைப்படுவதன் காரணங்களை நிரற்படுத்தியுள்ளோம்.


1. தேவர்கள், மனிதர்கள், சித்தர்கள், யோகிகள் என அனைவரது குறிக்கோளும் “இன்பத்தை அனுபவித்தல்” என்பதே. 

2. தியாகம், தானம், ஆன்மீக பயிற்சி, உழைப்பு, வியாபாரம் என்ற எல்லா முயற்சிகளும் இன்பத்தை அடைவதற்கான முயற்சிகளே. 

3. தெய்வ வழிபாடு செய்வது, யோக சாதனை செய்வதும் இன்பத்தை அடையவே. 

4. ஆன்மாக்கள் தமது உண்மை உருவில் இன்பமே வடிவானவர்களாக இருந்தாலும், மாயையின் தொடர்பால், தன்னிலை மறைய, தன்னைப்பற்றியிருக்கும், கவசங்களால் வெளிப்படாமல் உறைந்திருக்கும் இன்பத்தை வெளிப்படுத்தி அனுபவிக்க முயலும் போராட்டமே இந்த உயிர்வாழ்க்கை. 

5. மண்ணுலக மக்கள் பெறும் இன்பத்தை விட அதிக இன்பத்தைபெறும் தேவர்கள் கூட அதனிலும் மேலான இன்பத்தை அன்பவிக்க பலவித முயற் சிகள் செய்வத வண்ணமே உள்ளனர். 

6. உயிர் வாழ்க்கையின் குறிக்கோள் இன்பமயமான வாழ்க்கையை பெறுதல். 

7. இப்படி இன்ப மயமான வாழ்க்கையை குறுகிய காலத்திற்குள் பெறுவதற்காக அறியாமையில் பாப காரியங்களை செய்து அந்த சிறிய இன்ப அனுபவத்திற்காக பின்னர் பெரும் துன்ப சுழலில் உழலுபவர்கள் பலர். 

8. இன்பம்தான் குறிக்கோள் என்று தெரிந்தும் அதைப்பெற என்ன செய்யவேண்டு என்று தெரியாமல் எதையாவது செய்து பின்னர் துன்பத்தில் உழலுபவர்கள் அனேகர். 

9. கர்ம வினைகளில் உழன்று விதியின் கைப்பாவையாக செயற்படும் மனிதன் தனது கர்ம வினைகளுக்குட்பட்ட மனம் சொல்லும் படி நடந்து இன்பமடைய முடியாது என்பது வெளிப்படையான உண்மை. 

10. சாதாரண மனிதன் விதியின் விளையாட்டில் கைப்பொம்மைதான். அவனால் துன்பத்திலிருந்து தனியாக மேலேறி வரமுடியாது. 

11. மனிதன் தனது சொந்த முயற்சியால் நிலையான இன்ப நிலையை அடைய முடியாது. அதற்கு அவனிலும் மேம்பட்ட உயர்ந்த தெய்வ சக்தி இருத்தல் வேண்டும் 

12. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொன்று இன்பத்தை தருவதாக இருக்கும்; அழகு, ஆரோக்கியம், பலம், செல்வம், நன்மக்கள், வீடு, வாசல், கீழ்ப்படிதலுள்ள மனைவி, பசுக்கள், வாகனம் போன்ற செல்வங்கள் இவற்றுள் அடங்கும். 

13. இவற்றை பெறுவதற்கு மனிதனில் ஒருவகை தெய்வ சக்தி அவனில் செயற்பட வேண்டும். 

14. இப்படி சகல சம்பத்துகளையும் மனிதனுக்கு அளிக்கவல்ல தெய்வ சக்தியையே நாம் “ஸ்ரீ மகாலக்ஷ்மி” என்று அழைக்கிறோம். 

15. லக்ஷ்மி என்ற சொல்லுக்கே இன்பம் சந்தோஷம் என்று பொருள்.

மேற்கூறிய 15 குறிப்புகளும் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரால் உபதேசிக்கப்பட்ட மகா லக்ஷ்மி தத்துவத்தின் சுருக்கமாகும்.
இந்த தத்துவத்தை எம்மில் செயற்படுத்துவதே ஸ்ரீ மகாலக்ஷ்மி சாதனா ஆகும்.

தீபாவளி ஸ்பெஷல்: ஸ்ரீ அரவிந்தர் அருளிய மகா லக்ஷ்மி தத்துவம்

Image result for Mahalakshmi Sadhana



ஸ்ரீ அரவிந்தர் அருளிய மகா லக்ஷ்மி தத்துவம்
ஞானமும் சக்தியும் மட்டுமே பராசக்தி அன்னையின் வெளிப்பாடுகளல்ல. அதி நுண்ணிய இரகசியம் ஒன்று அவளது இயல்பில் உளது. அஃது இன்றேல் ஞானமும் சக்தியும் முழுமை பெறா, பூரணம் பரிபூரணமாயிராது. அவற்றிற்கு மேல் என்றுமுள் எழிலின் அற்புதம், தெய்வீக இசைவுகளின் பற்ற முடியாத இரகசியம், தடுக்க முடியாத மோகன வசீகரத்தின் பரந்த மாயாஜாலம் உள்ளது. அது உலகளாவிய பொருட்களையும், சக்திகளையும் ஈர்த்துப் பிடித்து அவற்றை கூட்டி இணைத்து, மறைவிலுள்ள ஓர் ஆனந்தம் திரைக்குப் பின்னின்று தன் லீலைகளை நடத்தவும், அவற்றைத் தனது சந்தங்களாக்கவும் தனது வடிவங்களை ஆக்கவும் உதவுகிறது. இதுவே மகாலக்ஷ்மியின் மாட்சி.
உடல் கொண்ட ஆன்மாக்களின் இதயத்திற்கு இவளைவிட வசீகரமான தெய்வ சக்தி வடிவம் வேறு இல்லை. மகாலக்ஷ்மியை அனைவரும் மகிழ்ந்து விரும்பி நாடுகின்றனர். ஏனெனில் அவள் இறைவனின் இனிமையை போதை தரும் அந்த ஜாலத்தை வீசுகிறாள். அவளருகில் இருப்பது ஆழ்ந்த ஆனந்தமாகும். அவளை இதயத்தில் உணர்வது வாழ்வை ஓர் ஆனந்தப்பரவசமாக, அற்புதமாக ஆக்குவதாகும். வனப்பும் வசீகரமும், மென்மையும் கதிரவனிலிருந்து ஒளி வருவது போல் அவளிடமிருந்து பெருகி வருகின்றன. அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம் புன்னை எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு, அவளுக்கே ஆட்பட்டு அளவில்ல ஆனந்தத்தின்  ஆழங்களில் அமிழ்த்தப்படுகிறது. அவள் கரங்களின் ஸ்பரிஸம் காந்தம் போன்றது. அவற்றின் இரகசிய நுண்ணிய பிரபாவம் மனத்தையும், பிராணனையும், உடலையும் மாசு நீக்கி நயமாக்குகிறது. அவள் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன.
ஆயினும் இந்த மோகன சக்தி கோருவதை நிறைவேற்றுவதும், அவளது சாந்நித்யத்தை தரிப்பதும் எளிதன்று. மனத்திலும் ஆன்மாவிலும் அழகு, இசைவு, எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் அழகு, இசைவு, ஒவ்வொரு புறச்செயலிலும் அழகு, இசைவு, வாழ்விலும் சூழலிலும் அழகு, இசைவு ஆகியவற்றி மகாலக்ஷ்மி கோருகின்றாள்.
எங்கே உலகானந்தத்தில் உள்ளார்ந்த சந்தங்களுக்கு உறவு உள்ளதோ, எங்கே சர்வ சௌந்தர்யத்தின் அழைப்பிற்குப் பதில் உள்ளதோ, எங்கே இறைவன்பால் திரும்பிய பல வாழ்க்கைகளின் இணக்கமும், ஒருமைப்பாடும், இன்ப ஓட்டமும் உள்ளதோ,அத்தூய சூழலில் அவள் எழுந்தருத் திருவுளம் கொள்கிறாள்.
அவலட்சணமானவை, சிறுமையுடையவை, அற்பத்தனமானவை, தரித்திரம் பிடித்தவை, கீழானவை, அழுக்கானவை, முரட்டுத்தனம் கொண்டவை,  பண்பு நயமற்றவை ஆகியவையெல்லாம் அவள் வருகையை தடுக்கின்றன.
அன்பும் அழகும் இல்லாத அல்லது அவை பிறக்க விரும்பாத இடத்தில் அவள் வருவதில்லை. அவை இழிவானவற்றுடன் கலந்து உருத்திரிந்திருந்தால் அவள் விரைவில் திரும்பிப்போய் விடுகிறாள் அல்லது தனது செல்வங்களை பொழிய விரும்புவதில்லை. மனித இதயங்களில் அவள் இறங்கும்போது அங்கு சுய நலம், பகைமை, பொறாமை, குரோதம், அசூயை, பூசல் இவை சூழ்ந்திருந்தாலும் துரோகம், பேராசையும், நன்றின்மையும் புனித பாத்திரத்தில் கலந்திருந்தால் முரட்டு வெறியும் பண்பற்ற ஆசையும் பக்தியும் மாசுபடுத்தினால் அத்தகைய உள்ளங்களில் அழகும் அருளும் பொலியும் தேவி தங்குவதில்லை.
ஒரு தெய்வீக அருவருப்புடன் அவள் விலகிச் சென்றுவிடுகிறாள். ஏனெனில் அவள் வறுபுறுத்தி வருந்தி முயல்பவள் அல்ல. அல்லது தனது முகத்தை மறைத்துக்கொண்டு இந்த சைத்தானின் கசப்பான விஷப்பொருட்கள் வெளிற்றப்படும் வரை காத்திருந்து அதன் பிறகே தனது இனிய உறவை மீண்டும் நாட்டுவாள்.
சந்தியாச வரட்சியும், கடுமையையும் அவள் வரும்புவதில்லை. அதைப்போல் இதயத்தின் ஆழ்ந்த உணர்ச்சிகளை அடக்குதலையும், ஆன்மாவின் வாழ்வின் அழகு அமிசங்களை ஒடுக்குவதும் அவளிற்கு சம்மதமில்லை. ஏனெனில் அன்பு, அழகு இவை மூலமே அவள் மனதரை கடவுளின் செல்வாக்கின் கீழ் கொண்டு வருகிறாள். அவளுடைய மகோன்னதப் படைப்புகளில் வாழ்வு ஒரு தெய்வீக கலைச் செல்வமாக மாறுகிறது. உலகம் ஒரு திவ்யானந்தத்தை கவிதையாக்குகிறது. உலகின் செல்வங்களெல்லாம் மிக உயர்ந்ததோர் ஒழுங்கமைப்பிற்கென ஒன்று சேர்க்கப்படுகிறன. அவளது ஐக்கிய திருஷ்டியாலும் ஆத்ம வீச்சினாலும் மிக எளிய சாதாரணப்பொருள்களும் அதிசயமானவையாகிவிடுகின்றன. அவளை இதயத்தில் ஏற்றால் ஞானத்தை அற்புதச் சிகரங்களுக்கு உயர்த்தி அறிவையெல்லாம் கடந்த ஆனந்த பரவசத்தின் ஆழ்ந்த மறைபொருள்களை அதற்கு வெளிப்படுத்துகிறாள். பக்தியைத் தீவிர தெய்வீக வசீகரத்துடன் இணைக்கிறாள். வலிமைக்கும் சக்திக்கும் அளவுடன் இசைந்து செயல்படுவதற்கான சந்தத்தைக் கற்பிக்கிறாள். சித்தியின் மீது அதை என்றும் நிலைத்து நிற்கச் செய்யும் மோகனத்தை வீசுகிறாள்.

Sunday, October 28, 2018

ஹடயோகிகளுக்கு காகபுஜண்டர் கூறும் எச்சரிக்கை

ஹடயோகிகளுக்கு காகபுஜண்டர் கூறும் எச்சரிக்கை

பாரப்பா தன்மயத்தை அறியாமல்
பக்தியுடன் ஹடயோகம் செய்வான் பாவி
வீரப்பா மூச்சடக்கி செவி வாய் மூடி
வேகமுடன் பூரிக்கில் மேனி தன்னில்
சாரப்பா மூலமதில் சொருகிக் கொண்டு
தலைவலித்து காதடைத்து முகம் கோணி
நேரப்பா கண்தெறித்து மதிகலங்கும்
நேர்மை கெட்ட ஹடயோகம் தள்ளு தள்ளே"

இதம் பொருளறிவதற்கும் முதல் வரியை சரியாக புரிந்து கொள்வது அவசியமானது.

இன்று பலர் உடல் நோய் தீர பிரணாயாமம் பழகுகிறார்கள். உண்மையில் யோக நூற்களில் கூறப்படும் பிரணாயாமம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக கூறப்பட்டதல்ல. அவை உயிரை ஒளியாக்கி அம்ருதத்துவம் பெறுவதற்காக உடலை பக்குவப்படுத்தும் மிக நுட்பமான இரகசியங்கள். இதைச் செய்வதற்கு ஒருவன் தன்னை பற்றி தான் ஆக்கப்பட்டுள்ள தத்துவங்கள் பற்றி தெளிவாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். அப்படி தனது உடலையும், உடலை ஆளும் சூக்ஷ்ம கருவிகளையும் தெளிவாக புரிந்து கொள்ளாமல் உடலை வளைக்கும் ஹடயோகத்தை செய்து நன்மை பெறலாம் என்ற அறியாமையில் எவராவது ஹடயோகம் செய்தால் அதனால் நடக்கு விளைவை இந்தப் பாடல் சொல்லுகிறது.

மனதினை சரியான இயம நியமத்தில் இருத்தாமல், சுத்தி செய்யாமல், மூச்சை பூரித்து கும்பித்தால், மனம் சுத்தி பெறாத காரணத்தால் மூலதாரத்தின் பிராணன் இறுகி உடல் மனக்கோளாறுகள் உண்டாகும் என்பதை விளக்கிறார்.

பிரணாயாமம், ஹடயோகம் செய்கிறோம் என்று மனக்கொந்தளிப்பு கூடி வாழ்க்கை சம நிலை அற்றுப்போகும்.

எமது அனுபவத்தில் வாசியோகம், ஹடயோகம் செய்கிறோம் என்று இப்படி துன்பப்பட்டவர்களை நிறையவே கண்டிருக்கிறோம்.

ஆக இந்த சாதனைகள் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தகுந்த குருவின் மூலம் கற்றுக்கொண்டு செய்யவேண்டும்

வளர்ச்சி என்பது...

னித மனத்தின், சிந்தனையின் முன்னேற்றமே ஒரு சமூகத்தின் முன்னேற்றம். ஒரு மனிதன் தனியனாகவும், சமூகமாகவும் எப்படி சிந்திக்கிறான் என்பதைப்பொறுத்தே அந்த சமூகத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
மனித மனம் உயர்ந்த நோக்கத்தில் ஆர்வம் வைக்காமல் தனது பயம், பலவீனத்தினை உண்மை என்று நம்பி எடுக்கும் முடிவுகள் முன்னேற்றத்தை தடைப்படுத்தும் காரணிகளாகவும் சமுகத்தின் பரிணாம வளர்ச்சியை பாதிக்கும் சம்பவங்களாகவும் மாறிவிடுகின்றன.
சிறுவயதில் தமிழ் பாடத்தில் படித்த ஔவையார் தனிப்பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது:
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்
இந்தப்பாடல் ஒரு பொருளியல் சூத்திரம் (Economic formula) என்றே சொல்லுவேன்.
ஒரு நாட்டின் வளர்ச்சியின் படிமுறையை சரியாக ஔவையார் படிமுறைப்படுத்தியுள்ளார்.
தனிமனிதனது வரப்பு எனும் விளைச்சல் நிலத்தில் சரியான விளைச்சல் வர அவன் தனது வளத்தை சரியாக பாதுகாத்து விளைச்சலைப் பெறவேண்டும். இப்படி வரப்பினை (வளத்தினை) சரியாக பாவித்தால் வளம் பெருகும் ( நெல்லுயுரும்), இப்படி நெல்லுயர்ந்தால் சமூகம் வளம் பெறும். சமூகம் வளம் பெற்றால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் (செங்கோல்) உயரும். இப்படி உயர்ந்தால் நாட்டின் ஆட்சி சரியாக இருக்கும்.

கல்வி என்பது...

கல்வி என்பது மனத்திற்கானது. எனவே கல்வியலின் அடிப்படைத் தத்துவம் மனதின் இயல்பிலிருந்து தொடங்கவேண்டும்.
மனதின் அமைப்பை மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான்கு பகுதிகளாக பகுக்கலாம்.
மனம் - வெளி உலக அனுபவத்தை கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என்ற ஐந்து புலன் களாலும் உள்ளே வாங்குவது.
புத்தி - சித்தத்தில் சேர்த்த தொகுத்த அனுபவங்களைக் கொண்டு தற்போதைய சந்தர்ப்பத்தில் இது சரியா பிழையா என அனுமானிக்கும் மனதின் பாகம்.
சித்தம் - ஆழ்மனம் எனப்படுவது உணர்ச்சிகளுடன், தர்க்கத்துடன் கூடிய எண்ணங்களின் சேகரிப்பு கிடங்கு.
ஆங்காரம் - இதுவே மையம், ஆங்காராம் உருவாகாமல் மனம் செயற்பட முடியாது.
ஆகவே கல்வி எனப்படுவது புலன் அறிவுகளை பெறும் முன் மனத்தை சீர்செய்வதாகவும், எது சரி எது பிழை என்ற விதிகளை சரியாக தொகுக்கும் புத்தியை தெளிவுபடுத்துவதாகவும், வாழ்க்கைக்கு பயன் தரும் அனுபவங்களை சேகரித்து நல்ல சித்தத்தை உருவாக்குவதாகவும், உலகின் இன்பமாக வாழத்தேவையான ஆங்காரத்தை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

Monday, October 22, 2018

பிரணாயாமம் பற்றி ஸ்ரீ அரவிந்தர்

பிரணாயாமம் பற்றி இன்று யோகம் பயிபவர்கள் எல்லோரும் ஆர்வமுடன் பயின்று வருகிறார்கள். பல பல brand களில் பிரணாயாமம் கற்பிக்கப்படுகிறது.
சித்தர்கள் பிரணாயாமம் பற்றிக்கூறிய உண்மைகளை அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலில் வெளிப்படுத்தியுள்ளோம். தேவையானவர்கள் அங்கு காண்க!
பிரணாயாமத்தின் பலன் பற்றி ஸ்ரீ அரவிந்தர் 1938களில் சீடர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்;
"பிரணாயாமத்தையும் இதர பயிற்சிகளையும் என் சொந்த வழியில் நான் காண்டுகள் பயின்ற பின்பு நான் அடைந்தனவெல்லாம் உடலாரோக்கிய மிகுதி, வழிந்தோடும் ஆற்றல், உடலுளத் தொடர்புகள் பற்றிய குறிப்பிடத்தக்க அனுபவம், கவிதைப்படைப்பின் பெரும்பெருக்கு, பெரும்பாலும் விழிப்புடையை கண்கள் பெறும் அளவுள்ள ஒரு சக்தியுள்ள சூக்குமப்பார்வை ஆகியவைதாம். இவற்றிற்கு மேல் ஒன்றுமில்லை"
இதன் கருத்து யோகத்தின் உண்மை இலக்கை அடைவதற்கு ஒருவன் வலிமையுடையவனாக பிரணாயாமம் ஆக்கும் என்பதே!

சித்தர்களும் மஹாயான பௌத்தமும்



************************************************

அண்மையில் இலங்கையின் ஆர்வமுள்ள இளம் சரித்திர ஆராச்சியாளர் துவாரகன் அவர்கள் வீரசோழியத்தின் பாயிரச் செய்யுள் பகிர்ந்திருந்தார். 

ஆயுங் குணத்தவ லோகிதன் 
பக்க லகத்தியன் கேட்
டேயும் புவனிக் கியம்பிய
தண்டமி ழீங்குரைக்க

என்ற செய்யுளடிகளை பகிர்ந்திருந்தார். இதன் படி அகத்தியர் தமிழிற்கு இலக்கணம் வகுத்தது அவலோகித புத்தரின் வேண்டுகோளின் படி என்று குறிப்பிடப்படுகிறது. 

அடடே நாமெல்லாம் அகத்தியர் தமிழிற்கு இலக்கணம் வகுத்தது சிவனின் ஆணையால், முருகனின் துணையால் என்றெல்லவா நம்பியிருந்தோம். இவர் என்ன புதுக்கதை விடுகிறார் என்று பலர் எண்ணியிருக்க கூடும். 

இனி அவலோகிதர் பற்றி சற்றுப்பார்ப்போம். அவலோகிதர் அல்லது அவலோகிதீஸ்வரர் அல்லது பத்மபாணி என்பது மஹாயான பௌத்தத்தில் சிவன் அல்லது பரம்பொருள் எனக்குறிப்பிடப்படும் தன்மைக்கு நிகரான தெய்வமாகும். 

மஹாயான பௌத்தகோட்பாட்டின் படி எல்லா உயிர்களும் அவலோகித புத்தரிடமிருந்தே வருகிறது. பின்னர் புத்தர் கூறிய விதிப்படி நடக்க போதிசத்துவன் ஆகி மீண்டும் புத்தருடன் கலக்கிறான். 

இதுவே அத்வைதமும் கூறுகிறது. 

இதையே சித்தர்களும் பேரொளி நிலையான சிவத்திலிருந்து 96 தத்துவங்கள் சூழ மனினாகிய உயிர் மீண்டும் சிவ வாசியோகத்தை கைக்கொள்ள மகாக்காரண சரீரமடைந்து சிவமாகிறான் என்கிறார்கள். 

மேலும் மஹாயான பௌத்தத்தில் சாதனைக்கு உபயோகிக்கப்படும் மூச்சு, மந்திரம், தெய்வங்கள் என்பவையே சித்தர் மார்க்கத்தில் வாசி, மந்திரம், உபாசனை தெய்வங்களாகின்றது. 

புத்தமித்திரனார் கூறியுள்ள "ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன் கேட்டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க" என்ற இந்த செய்யுள் அடிகள் சித்தர் மார்க்கத்திற்கும் மஹாயான பௌத்தத்திற்கும் சாதனை (spiritual practice) ரீதியாக உள்ள தொடர்புகளுக்கு எடுத்துக்காட்டாகும். 

யோக சாதனையில் ஒருவனின் மனநிலைக்கு தக்க குருவின் துணையுடன் தெய்வங்களை உருவாக்கிக்கொண்டு தன்னில் இறைத்தன்மையை அடையக்கூடிய சுதந்திரம் உள்ளது. புத்த மித்திரனார் மஹாயான பௌத்த யோகப்பயிற்சி முறைகளான ஆனாப்பானா சதி, விபசனா என்பவையும் மந்திர யோகமும் பயின்றிருக்க கூடியவராக இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை என்பதுடன் தமிழ் நாட்டில் வழக்கில் இருந்த அகத்திய மகரிஷியின் வாசி சிவ யோகங்கள் சரியாக புத்தர் உபதேசித்ததுடன் ஒத்துப்போவதைக் கொண்டு அகத்தியரும் சிவனார் ஆணைக்கு இணங்க வாசி சிவயோகத்தை பயிற்சித்து தமிழ் இயற்றியதையும் அறிந்து தமது பயிற்சி சாதனை நெறியும் அகத்தியர் கூறிய சாதனை நெறியும் அடிப்படையில் ஒன்றாக இருப்பது கண்டு அகத்தியர் அவலோகிதரின் ஆணைக்கு இணங்க தமிழ் இலக்கணம் வகுத்தார் என்று கூறியிருக்கலாம் என்பதே எமது துணிபு. 

அகத்தியரும் புத்த மித்திரனாரும் ஒரே யோக முறைகளை பயின்றிருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் வீரசோழியத்தின் முதலாவது பாயிரச்செய்யுளில் இருக்கிறது. 

மிக்கவன், போதியின் மேதக்
கிருந்தவன், மெய்த்தவத்தால்
தொக்கவன், யார்க்குந் தொடரவொண்
ணாதவன், தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற்
புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி
மன்புத்த மித்திரனே.

இந்தப்பாயிரத்தில் "பாதந் தலைமேற் புனைந்து" என்ற வரிகள் முக்கியமானவை. இது பொதுவாக சித்தர் மரபில் குருபாதுகையை சஹஸ்ராரம் எனும் தலை உச்சியில் தியானிக்கும் மரபு! இதுபற்றிய விளக்கம் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் பாடல்களில் விரிவாக காணலாம். மேலும் மஹாயான தியான முறைகளை சித்தர்களின் தியான சாதனை முறைகளுடன் ஒப்பிட்டு அறிந்து கோள்ளலாம். 

ஆக புத்த மித்திரனார் தனது ஆழமான யோகப்பயிற்சியால் தமிழ் சித்தர் மரபில் அகத்தியர் சிவன் எனப்போற்றிய அந்த மூல பரம்பொருளை தான் பயிற்சிக்கும் மஹாயன பௌத்த மரபின் மூல பரம்பொருளான அவலோகிதீஸ்வரராக உணர்ந்து தான் கற்ற தமிழும் அவரிடமிருந்து வெளிவந்தாக உருவகித்து பாடியுள்ளார். 

மேற்பரப்பு ஆய்வில் புத்தமித்திரனார் கற்பனையில் ஏற்றிப்பாடியது போல் இருந்தாலும் ஆழத்தில் உண்மையை அனுபவத்தில் உணர்ந்து பாடியுள்ளார் என்பதை சித்தர் மார்க்க சாதனை புரிபவர்களும், மஹாயான பௌத்த தியானப்பயிற்சி அறிந்தவர்களுக்கும் உணர்வர்!

Monday, October 15, 2018

தாமரை கூறும் வாழ்க்கை தத்துவம்

இந்தப்படம் காலி நகரத்தில் உள்ள புத்த விகாரை ஒன்றில் எடுக்கப்பட்டது.
Image may contain: flower, plant and nature
வீட்டில் தாமரை வளர்க்க என்று கிழங்குடன் எடுத்து வந்து ஒரு சீமெந்து தொட்டியில் போட்டு சில வாரங்களுக்கு முன்னர் வளர்க்க ஆரம்பித்தேன். இரண்டு வாரம் சென்று பார்க்கும்போது இலைகள் கருகி, தாமரை இலைகள் சுருங்கி விட்டிருந்து. எடுத்துப்பார்க்கும் போது வேர்கள் கிழங்களில் பாசி படர்ந்து மூடியிருந்தது. இதுவே அதன் இறப்பிற்கு காரணமாயிருந்தது.
இங்கு பதிவிட்டிருக்கும் படம் அளவான களியும் மண்ணும் சேர்ந்த சேற்றுடன், அளவான நீர் விடப்பட்ட சீமெந்து தொட்டியில் வளர்க்கப்பட்டிருந்தது. மூன்றடிகளுக்கு மேல் இலைகள் செழித்து அழகிய தாமரை மலர்ந்திருந்தது.
இரண்டையும் பார்த்து சிந்தித்த போது உதித்த சிந்தனை;
தாமரை ஞானத்தின் குறியீடு, இந்தியத்தத்துவ மரபில் தாமரை என்பது உயர்ந்த ஞானத்தின் குறியீடு. இந்த தாமாரை மலர்வதற்கு குளம் என்ற அமைப்பும், அதனுள் நீரும், சேறும் அளவாக இருந்தால் தாமரை செழித்து வளர்கிறது.
அதுபோல் உடல் என்ற தொட்டியில் உலக வாழ்க்கை என்ற சேற்றில் நிலைகொண்டு, பிராணன் அல்லது உயிர் சக்தியின் துணைகொண்டு வாழ்வின் அனுபவத்தை வளர்த்தால் ஞானம் என்ற தாமரை மலர்கிறது.
எனது தொட்டியில் தாமரை பாசி படர்ந்து இறக்க காரணம் மண்ணும் களியும் போடாதது, இதுபோலவே இன்று பலரும் உயர்ந்த விஷயத்தைப்பெற உலகை விட்டு ஓடவேண்டும் என்று நினைத்து மிதக்கும்போது பாசி பிடித்து இறந்து விடுகிறார்கள்.
ஆக சேற்றில் இருந்துதான் செந்தாமரை மலர்கிறது,
துன்பம் நிறைந்த உலகிலிருந்துதான் இன்பம் மலர்கிறது, 
சிறிய இந்த உடலில்தான் இறை சக்தி வசிக்கிறது!

சித்த வித்யா குருமண்டலத்தின் ஸ்ரீ காயத்ரி உபாசனா பத்ததி - 01


இதுவரை காலமும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசப்படி தினசரி ஜெப சாதனை செய்து வந்தவர்கள் உபாசனை எனும் படியிற்குள் நுழையலாம். இதுவரை செய்து வந்த ஜெபசாதனை மனதினை ஒழுங்குபடுத்தி ஒரு ஒழுக்கத்தில் கொண்டுவருவதற்குரிய ஒரு பயிற்சியாக செயற்பட்டிருக்கும்.

நாம் ஏன் காயத்ரி சாதனை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சுருக்கமான பதிலாக வாழ்வினை ஒழுங்கு படுத்தி சரியான இலட்சியத்தில் நிறுத்தி இந்த வாழ்வை இன்பமயமாக மாற்றி வாழ்வில் இறுதி இலக்கான இறையை எம்மில் காணல் என்பதை அடைவதற்குரிய பயிற்சிதான் காயத்ரி சாதனை.
இந்த நோக்கத்தை சாதிப்பதற்கு உலக வாழ்க்கையுடன் இருந்து அனுபவத்தைப் பெற்று அந்த அனுபவத்தில் மயங்கிடாமல் அறிவின் துணை கொண்டு ஞானமாக்க அன்னை காயத்ரியின் பேரொளி எமக்கு துணை புரியும். இந்தப்பேரொளியை எமது மனம், உடல், பிராணன், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, உலக வாழ்க்கை ஆகியவற்றில் கொண்டுவரும் முயற்சியே காயத்ரி சாதனை.

இதன் முதற்படியாக குறித்தளவு காலம் குரு-அகத்திய-காயத்ரி சாதனையை செய்துவரும்படி கூறுகிறோம். இப்படி செய்துவருவதால் உங்கள் உடல், மனம், புத்திகளில் அடுத்த நிலைகளை புரிந்து கொள்வதற்குரிய பக்குவம், தன்மை மனதிலும், புத்தியிலும் ஏற்படும். மேலும் தொடர்ச்சியாக செய்துவரும்போது உங்கள் உடல், மனம், குடும்ப வாழ்க்கை என்பவை ஒரு ஒழுங்கிற்குள் வருவதை அவதானிக்கலாம்.

பலசாதகர்கள் ஜெப எண்ணிக்கையில் தமது பக்குவத்தை நிர்ணயிக்க முயல்கிறார்கள். இது தவறான எண்ணம்; அதிக எண்ணிக்கை ஜெபம் செய்வதால் தாம் அதிக முன்னேற்றம் அடைந்தவர்கள் எனக்கருதுவது முற்றிலும் தவறான எண்ணம். ஆன்ம முன்னேற்றம் என்பது அடிப்படையில் பண்பு மாற்றம்.  நாம் முன்னேறி இருக்கிறோம் என்பது எமது குணங்களும், பண்புகளும் செயல்களும் மாறி இருப்பதைக் கொண்டே அறியலாம். குருவிற்கு அருகில் இருப்பதாலோ, சாதனா தொடர்பான அதிக விஷ்யங்களை அறிந்திருப்பதாலோ, அதிக எண்ணிக்கை காயத்ரி ஜெபம் செய்திருப்பதாலோ ஒருவர் ஆன்ம முன்னேற்றம் பெறுவதில்லை. ஒருவர் பக்கும் பெற அதிக எண்ணிக்கை ஜெபம் செய்ய வேண்டி இருந்தால் அவரது கடன் பாக்கி அதிகமாக இருக்கிறது என்பதுதான் பொருள்.

அடுத்து நாம் ஆன்ம முன்னேற்றம் பெற்றுவிட்டோம் என்பதை குருவிடமோ, எவரிடமோ சான்று பெறவேண்டிய அவசியம் இல்லை. அது மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தி தம்மை உயர்வாக காட்ட வேண்டிய வியாபார உத்தி இல்லை. நாம் உண்மையில் ஆன்ம முன்னேற்றம் பெற அந்த பண்பு எம்மைச் சூழ ஒரு காந்தமாக சூழந்து எம்மைச் சுற்றியுள்ளவர்களை உயர்த்தும்.  எவருக்கும் நாம் ஆன்ம முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்று வாயால் சொல்லி விளங்கப்படுத்த தேவையில்லாமல் போகும்.

ஆக இப்படி ஒருவரின் ஆன்ம முன்னேற்றத்திற்கு துணைபுரியும் சாதனங்களே இந்த சாதனை, உபாசனை எல்லாம். இந்த நூலில் காயத்ரி உபாசனையினைப்பற்றி கூறுவோம்.

உபாசனை என்றவுடன் பலரும் பூஜையும் தியானமும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். உபாசனை என்ற சமஸ்க்ருத சொல்லின் பொருள் உப + ஆசனம் = அருகில் அமருதல் என்று பொருள்படும். ஆக நாம் ஒரு தெய்வத்தை உபாசிக்கிறோம் என்றால் அந்த தெய்வத்திற்கு அருகில் அமர்கிறோம் என்று பொருள்.  பொதுவாக ஒரு கம்பனியில் தலமை நிர்வாகிக்கு அருகில் அமர்ந்து செயல்புரியும் நிலை பெறவேண்டும் என்றால் அதற்குரிய தகுதிகளும், செயல்திறனும் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பினைப் பெறமுடியும் என்ற நிலை இருக்கும்போது தெய்வ சக்தியின் அருகில் அமர வேண்டுமானால் எமக்கு அதற்கான தகுதி இருக்க வேண்டும் அல்லவா? அதுவும் உலகின், அறிவின், பிராணனின் தாயாகிய காயத்ரியிற்கு அருகில் இருக்க வேண்டுமென்றால் அந்ததகுதி கட்டாயம் இருக்க வேண்டுமன்றோ?

சரி இனி எமது உதாரணத்திற்கு வருவோம், கம்பனியின் தலமை நிர்வாகியுடன் வேலை செய்ய, உதவி செய்ய எமக்கு விருப்பம், ஆனால் அதற்குரிய போதிய அனுபவமும், திறனும் எம்மிடம் இல்லை. எனினும் எனது ஆர்வமும், உத்வேகமும் உண்மையானது என்று தெரிந்த தலமை நிர்வாகி என்ன செய்வார், சரி உன்னை நான் எனது தற்காலிக உதவியாளனாக சேர்த்துக்கொள்கிறேன், வேலையை கற்றுக்கொள், குறித்த காலத்திற்குள் தகுந்த பண்பும், திறனும் வந்தால் உன்னை நிரந்தரமாக பதவியுயர்வு தருகிறேன் என்று சொல்லி பயிற்சிக்காலம் தருவார்கள் அல்லவா? இதைப்போன்றதே நாம் இப்போது கற்கப்போகும் ஸ்ரீ காயத்ரி உபாசனா பத்ததி.

அன்னை ஸ்ரீ காயத்ரியின் பண்பினை, ஆற்றலை, அருளை எம்மில் ஈர்த்து வளர்க்க நாம் பக்குவப்பட வேண்டும். அதற்கான பக்குவத்தை அவளைத்தவிர வேறு எவரிடமும் நாம் பெற முடியாது. ஆகவே எமது இந்த உலகவாழ்க்கையில் எம்மை துன்பத்தில் ஆழ்த்தும், புலன் களையும், அதன் இன்பங்களையும் அவளிடம் சமர்ப்பித்து அதை தெய்வத்தன்மை ஆக்கிக்கொள்ளும் பயிற்சியே காயத்ரி உபாசனை.

ஒரு விதத்தில் தற்காலத்தில் ஆளுமைத்திறன் வளர்ச்சி (Personality development) என்று சொல்லப்படுவதன் மிக உயர்ந்த வடிவம்தான் உபாசனை. ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சி என்பது ஒருவன் தனது வாழ்வை பார்க்கும் மனப்பாங்கு (Attitude) சார்ந்தது. அவன் தனது வாழ்க்கையில் எதுவெல்லாம் தாக்கம் புரிகிறது, தன்மீது தாக்கம் புரியும் காரணிகளை அனவது மனம் எப்படி ஏற்றுக்கொள்ளுகிறது. எப்படி எதிர்க்கிறது? எந்தக்காரணிகளை அவன் மதிப்பீடாக கொள்கிறான் என்பதைப் பொறுத்து அவனது வாழ்வின் இன்ப துன்பங்கள் தீர்மானிக்கப்படுகிறது.

வாழ்வின் பாகங்களை தெய்வத்தின் வெளிப்பாடாக பார்க்க பழகிக்கொண்டவனது வாழ்க்கை இன்பமானதாகவும், வாழ்வின் பாகங்களை துன்பமும் தீமையும் நிறைந்ததாக பார்க்க பழகிக்கொண்டவனது வாழ்க்கை துன்பமானதாகவும் மாறுகிறது. ஒவ்வொன்றின் மீதும் எத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டை காட்டுகிறான் எனபதைப்பொறுத்து அவனது ஆளுமைத்திறன் வளர்ச்சி பெறுகிறது.

இந்த அடிப்படையில் வாழ்க்கையின் தெய்வீக பாகங்களை பார்க்க மனதை பழக்கும் ஒரு ஆளுமைத்திறன் விருத்தியே உபாசனை.

ஒருவன் தனது உபாசனையின் ஆரம்பத்தில் தான் உபாசிக்கும் தெய்வத்தின் பண்புகளை தனது மனதில் இருத்தி நினைவு படுத்த முயற்சித்து, பின்னர் நீண்டகாலப் பயிற்சியில் அந்தப்பண்புகளை தனது வாழ்வில் செயல்படுத்தும் போது அவனது வாழ்க்கை தெய்வீகம் நிறைந்ததாகிறது.

எமது சித்த வித்யா குருமண்டலம் கற்பிக்கும் காயத்ரி உபாசனையில் மொத்தமாக  50 படிமுறைகள் உள்ளன. இந்த 50 படிமுறைகளையும் கீழ்வரும் பெரும் பிரிவுகளாக பகுக்கலாம்
  1. தெய்வசக்தியை எம்முடன் இணைக்கும் சித்த வித்யா குருமண்டல வணக்கம்
  2. எமது சாதனையின் நோக்கத்தை உறுதிப்படுத்தும் ஸ்ரீ காயத்ரி சங்கல்பம்
  3. தெய்வசக்தியை உடலில் இருத்தும் நியாசம்
  4. பிராணனை சரி செய்யும் தீர்க்க சுவாசம், கும்பகப்பிரணாயாமம்
  5. தெய்வப்பண்புகளை எம்மில் விழிப்பிக்கும் பூஜை
  6. தெய்வ சக்தியை எம்மிலும் சூழலியும் விழிப்பிக்கும் யக்ஞம்
  7. செய்த பூஜையினது யக்ஞத்தினது பலனை எம்மில் இருத்தும் துதி, பிரார்த்தனை, காயத்ரி சித்த சாதனை.
  8. மனம் குவிந்து தெய்வப்பிராணனை ஏற்கும் பிராணாயாமம்
  9. தியானம்
  10. இறுதியாக எமது செயலில் இருந்த குற்றங்குறைகளை பொறுத்து எமக்கு நன்மையை மட்டும் வருவிக்கும் பிரார்த்தனைகள். 



அடுத்து வரும் அத்தியாயங்களில் ஒவ்வொரு படிகளினது நோக்கம், பயிற்சிக்கும் முறை என்பவற்றைப் பற்றி தெளிவான விளக்கங்களை பார்ப்போம்.

காயத்ரி சாதகன் கடைப்பிடிக்க வேண்டிய தினசரி வாழ்வின் பஞ்ச சீலங்கள்



ஒருவன் வெறுமனே காயத்ரி மந்திரத்தை உருப்போட்டுக்கொண்டிருந்தாலும் அதனால் உருவாகும் சக்தியை தேக்கி வைக்க தன்னில் சில ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் எவ்வளவு சாதனை செய்தாலும் ஓட்டைக்குடத்தில் இட்ட நீர் போன்று வழிந்து ஓடிக்கொண்டிருக்கும். ஒரு காயத்ரி சாதகனின் வாழ்க்கையை ஏழு நிலைகளில் பிரிக்கலாம். அவை உடல், மனம், குடும்பம், சமூகம், வாழ்க்கையின் தர்மம், வாழும் உலகம், ஆன்மாவை அறிதல்.
இந்த ஏழு நிலைகளையும் சம நிலையில் வைத்திருக்க ஒருவன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கை குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மாச்சார்யா ஒழுங்கு படுத்தியுள்ளார்.
எமது காயத்ரி சாதகர்களுக்கு பயன்படும் என்பதற்காக இங்கு தொகுத்து தந்துள்ளோம். ஒவ்வொன்றையும் ஆழ்ந்து சிந்தித்து மனதில் பதிவித்து செயலில் கொண்டுவர ஒவ்வொரு சாதகரும் முயற்சிக்க வேண்டும்.

1. உடல் நலத்திற்கான பஞ்சசீலங்கள்
1.      அளவான சாத்வீக சைவ உணவு உண்ணல்
2.      சுத்தமான தண்ணீர் போதுமான அளவு அருந்தல்
3.      சுத்தமான காற்றுள்ள இடத்தில் பிரணாயாமம் அல்லது தீர்க்க சுவாசம்
4.      சக்திக்கு இயன்ற அளவு உடல் உழைப்பு
5.      இரவில் எல்லாவற்றையும் மறந்து எந்த சிந்தனையுமின்றி கவலையற்று உறங்குதல்
இந்த ஐந்து ஒழுக்கங்களும் ஒருவனுக்கு உடலாரோக்கியத்தை தரும்.

2.மன நலம் பேண்டும் பஞ்ச சீலங்கள்
1.      விளையாட்டு வீரனின் உற்சாகமும், வெற்றியை நோக்கிய மனவுணர்வு
2.      எப்போது புன்முறுவலுடன் இருக்கும் மனமும் முகமும்
3.      உழைப்பின் உயர்வை மனதில் கொண்டு முழுமனதோடு உழைக்கும் பண்பு
4.      தன்னடக்கம்
5.      வளர்ச்சியில் ஆர்வமும் திருப்தியும் அடையும் மனப்பாங்கு

3.சமூக பஞ்ச சீலங்கள்
1.       நேர்மை
2.      பொறுப்புணர்ச்சி
3.      பணிவும் இன்சொல்
4.      பிறர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தல்
5.      கூட்டுறவு மனப்பான்மை

4.குடும்ப பஞ்ச சீலங்கள்
1.      பெரியோரை மதித்தல், தொண்டு செய்தல், உழைப்பில் பங்குகொள்ளல்.
2.      இளையவர்களிடம் அன்பு கொண்டு ஒற்றுமையாக வாழல்
3.      கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்த அன்புடன் நேசித்தல்
4.      நேர்மையான பண்பினை உயர்ந்த செல்வமாக மதித்து நடத்தல்
5.      குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழல்.

5.தர்ம பஞ்சசீலங்கள்
1.      அற நூல்களை கற்றல் அதன் படி நடத்தல்
2.      தீய நெறிகளையும் நடைமுறைகளையும் எதிர்த்து போராடல்
3.      மற்றவர்களின் துன்பங்களைப்போக்க முழுமனதுடன் பாடுபடல்
4.      இறையை தன்னுள் உணரும் உயர்ந்த குறிக்கோளில் உறுதியாக இருத்தல்.
5.      கடமையும் கண்ணியமும் வாழ்வில் குறிக்கோளாக இருத்தல்.

6.அகில உலக பஞ்சசீலம்
1.      ஒற்றுமை
2.      சமத்துவம்
3.      கூட்டாட்சி
4.      மற்ற இனத்தவருடன் பொறுமையும் சகிப்பும்
5.      பெருந்தன்மையும் ஈடுபாடும்

7.ஆன்மீக பஞ்ச சீலம்
1.      செய்யும் செயலின் விளைவுதான் எமது வாழ்க்கை என்ற கர்மா கோட்பாட்டில் நம்பிக்கை.
2.      கர்மாவை இறை குரு அருளால் எதிர்கொண்டு மீளமுடியும் என்ற தன்னம்பிக்கை.
3.      வரவுக்கு மீறிய செலவு செய்து எளிய வாழ்க்கையும், மீதிப்படுத்தி பிறருக்கு உதவி செய்தல்.
4.      ஆன்ம சாதனை நெறியில் ஆர்வமும் ஈடுபாடும்,
5.      எல்லாவற்றிலும் பரம்பொருளைக் காணும் பரந்த மனப்பான்மை

Thursday, October 11, 2018

நவராத்ரி சிந்தனைகள்


வழிபாட்டு முறைகள் இந்திரன் முதலான தெய்வ வழிபாடுகள் வேதம் சார்ந்ததாகவோ, சிவ விஷ்ணு வழிபாடுகள் ஆகமம் சார்ந்ததாவோ காணப்படும், தேவியை வழிபடும் முறைக்கு தாந்திரீகம் என்று பெயர்,
இந்த வழிபாடுகள் எல்லாவற்றினது நோக்கம் மனிதன் தனக்குள் உள்ள பலகீனங்களை வென்று பலமுடைய தெய்வகுணங்களும் பண்புகளும் பெறவேண்டுமென்பதே. பண்பு மாற்றமே தெய்வ வழிபாட்டின் நோக்கம்!
தேவி வழிபாட்டைப்பற்றி ஸ்ரீ அரவிந்தர் கூறும்போது இப்படிக்கூறுகிறார்:
"(தாந்திரீகம்) அதன் ஆரம்பத்தில் தேவி என்ற அதியுயர் குறியீட்டின் அதியுச்ச விளக்கத்தை கூறி ஆரம்பித்து, பின்னர் முடிக்கும்போது எல்லா சுய அறிதலையும் கைவிட்டு அனைத்தையும் அன்னைக்கு அர்ப்பணிக்கிறது. இந்தப் பரந்த மனபாங்கு தாந்திரீக மார்க்கத்தின் முழுமைக்குமான பொதுப்பண்பாகும். இது வெளிப்பட்ட தெய்வசக்திகளையும், வெளிப்படாது அர்ப்பணிக்கப்பட்ட தெய்வசக்திகள், மனிதனின் சுயகட்டுப்பாடு மற்றும் சொந்த அறிவு ஆகிய அனைத்தையும் ஆரத்தழுவி ஒன்றிணைக்கும் அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சி.
தேவிவழிபாடு என்பது ஒருவன் தன்னை அறிந்து தனது ஆற்றலை அறிந்து, உயர்ந்த தன்மை உள்ளவனாக்கிக்கொள்ளும் பயிற்சி!

தேவி மகாத்மியமும் தெய்வ குண வளர்ச்சியும்


***************************************************************

நவராத்ரியில் பிரபலமான உபாசனை முறை தேவி மஹாத்மியம் படித்தல், இதை சண்டி ஸப்தஸதி என்று கூறுவார்கள். இது மார்க்கண்டேய புராணத்தில் 76 தொடக்கும 88 வரையிலான அத்தியாயங்களில் வரும் 700 சுலோகங்கள் கொண்டது. இதை ஒரு சடங்காக செய்தலினும் மேலானது அதன் நோக்கத்தை அர்த்தத்தை புரிதல்.
அதன் தொடக்கம் இவ்வாறு அமையும்: சுரந்தா என்ற நாட்டை இழந்த அரசனும், சமதி என்று வியாபாரத்தில் தோல்வியுற்று குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட வியாபாரியும் மனவிரக்தியுற்று காட்டிற்கு சென்று தமது மனக்கவலைகளை பகிர்ந்து அங்கு தவம் புரியும் மேதஸ் எனும் முனிவரிடம் தமது துன்பங்களைப்பகிர்ந்து அதனிலிருந்து வெளிவரும் வழிவகையை கேட்க அதற்கு உபதேசிக்கப்படும் வழிமுறையே தேவி மகாத்மியம் ஆக பரிணமிக்கிறது.
அந்த மகாத்மியத்தை கேட்டு பின்னர் மூன்று வருடங்கள் சாதனை புரிந்து அரசன் தனது இராச்சியத்தை மீளப்பெறுகிறான், வியாபாரி தனது செல்வத்தை மீளப்பெறுகிறான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது, தேவி மகாத்மியம் அரசை இழந்த அரசனிற்கு மீண்டும் அரசை பெறுவதற்கு வழிகாட்டியுள்ளது, வியாபாரிக்கும் செல்வத்தை பெற வழிகாட்டியுள்ளது.
ஆக இது வெறும் கற்பனைப்புராணமல்ல, மனிதனின் மனதின் ஆழத்தில் வேரூன்றி ஆற்றலை வீணடிக்கும் தான் என்ற ஆணவம், அதி காமம், பேராசை, துர்குணங்கள் யாவற்றையும் அசுரர்களாக வர்ணித்து அந்த அசுரர்களை வெல்லுவதற்கு மனிதர்களுக்கு தேவையான குணங்களையும், பண்புகளையும் மகாகாளி, மகாலக்ஷ்மி, மகாசரஸ்வதியாக வர்ணித்து அவற்றை அடையும் வழியையும் காட்டி மனிதனை உயர்த்தும் ஓர் உயர்ந்த இரகசியம் தேவி மகாத்மியம்!
இந்த நவராத்ரியில் இயலுமான வரை தேவிமகாத்மியத்தினை பொருளறிந்து சிந்திப்பது மனதில் பண்பில் உயர்வை ஏற்படுத்தும்.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...