குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, August 11, 2012

சூஷ்ம பார்வையில் ஆக்ஞா சக்கரத்தின் செயல் முறை (சூட்சும பார்வை பகுதி 05)



சென்ற பதிவில் தெய்வ ஜோதி வடிவாக காணப்படும் சகஸ்ரார சக்கரம் பற்றிப் பார்த்தோம். இந்த சக்கரமே சக்தியின் மூலம். இந்த பதிவில் இந்த சக்கரத்தின் ஒளி பரவுவதன் மூலம் சூட்சும பார்வையினை மனிதனிற்கு வழங்கும் சக்கரமான ஆக்ஞா சக்கரம் பற்றி பார்ப்போம். சகஸ்ரார ஒளி ஒவ்வொரு சக்கரங்களில் பாயும் போதும் அந்த சக்கரத்திற்குரிய சூஷ்ம சக்திகளை பெறுவோம் என்பதே இதன் அடிப்படை. அந்த வகையில் ஆக்ஞா சக்கரம் சூஷ்ம பார்வையினைத் தரக்கூடியது. 

இது மனிதனின் இரு புருவங்களுக்கு நடுவே நெற்றியில் இருக்கிறது. மனிதனது மன எண்ணங்களின் வேகங்களுக்கு உத்வேகங்களுக்கு ஆதாரமாக உள்ளது இந்த சக்கரமே. ஒருவன் ஆழ்ந்து சிந்திக்கும்போது புருவமத்தி சுருங்கி மடிவதனை அவதானிக்கலாம். ஒருவன் மனதினை ஏகாக்கிரப்படுத்தும் போது இந்த சக்கரம் செயல்படவேண்டும். அதன் மறுதலையாக இந்த சக்கரத்தினை செயற்படுத்தினால் மனம் ஏகாக்கிரமடையும். ஒருவன் தனது கண்களை உட்புறமாக திருப்பு புருவத்தினை நோக்கு செலுத்தி ஒரு விடயத்தினை சிந்திக்கும் போது ஆழமாக சிந்திக்கலாம். இதனை நீங்கள் உங்கள் அனுபத்திலேயே உணரலாம். ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு நெற்றிப்பொட்டில் சிறிது நம நமப்பு உணர்ச்சி தோன்றும். இந்த சக்கரத்தின் மீது ஒருவர் கவனிப்பதன் மூலம் ஒருவர் தனது மனதின் மீது பரிபூரண கட்டுப்பாட்டினை அடையலாம். 

யோக சாதனையிலும் யோக நூற்களிலும் புருவ மத்தியில் பார்வையினை செலுத்தி தியான, ஏகாக்கிர சாதனைகள் செய்யும் படி கூறப்படுவதன் காரணம் இதுதான். 

கண்களை உள்முகப்படுத்தி (அதாவது கண்ணை மூடி, விழிகளை )ஆக்ஞா சக்கரத்தின் பால் செலுத்தி நெற்றிக்குள் இருக்கும் இருட்டை கவனிக்கத்தொடங்கினால் சற்று நேரத்தில் இருள் நீங்கி ஒளி தோன்றத்தொடங்கும். மேலும் சற்று நேரம் அவதானிக்க படிப்படியாக காட்சிகள் தோன்றத்தொடங்கும். எங்கிருந்து இந்த ஒளி வருகிறது. சகஸ்ரார சக்கரத்திலுள்ள ஒளி மனதினை ஆக்ஞா சக்கரத்தில் ஒருமுகப்படுத்தும் போது வருகிறது. இந்த நிலையினால் சகஸ்ரார சக்கரத்திற்கும் ஆக்ஞா சக்கரத்திற்கும் தோடர்பு ஏற்பட்டு ஆக்ஞா சக்கரம் செயற்படத்தொடங்குகிறது. இந்த மன ஏகாக்கிரம் கூட கூட இந்த ஜோதி ஆக்ஞா சக்கரத்தினூடாக எமது இச்சா சக்தி கொண்டு வெளிப்படுத்தினால் எம்மைச் சுற்றியுள்ள சூஷ்ம உலகம் அந்த ஒளிப்பிரவாகத்தில் தோன்றத் தொடங்கும். இதன் பின் எமது இச்சா சக்தி மூலம் எந்த சூஷ்ம விடயங்களை காணவேண்டும் என சங்கல்பிக்கின்றோமோ அந்த விடயம் நேரடியாக நடப்பது போல் காட்சிகளாக தோன்றும்.  

இதுவே சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுறது என்பதற்கு விளக்கமாகும், வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக இதன் சுருக்கத்தினை கீழே தந்துள்ளோம். 

மனிதனின் சூஷ்ம உடலில் உள்ள சக்கரங்களை விழிப்பித்து சூஷ்ம சக்திகளை அடைலாம்.

இந்த சூஷ்ம் சக்திகளுக்கு ஆதாரம் சகஸ்ரார சக்கரத்தில் உள்ள தெய்வ ஒளியில் உள்ளது.  அந்த தெய்வ ஒளியினை குறித்த சக்கரத்தில் எமது இச்சா சக்தி மூலம் பரவச் செய்தால் சூஷ்ம புலனறிவுகளையும் சக்திகளையும் பெறலாம்.

அந்த அடிப்படையில் சூஷ்ம பார்வையிற்கு ஆக்ஞா சக்கரத்தினை செயற்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம். 

இந்த பதிவின் இறுதியில் வாசிக்கும் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் இந்த குறிப்புகள் யோகசாதனையின் வழி சாதனை புரிபவர்களுக்கானது. சக்கரங்கள், சூஷ்ம உடல், சூஷ்ம உலகம் பற்றி நன்கு கற்றறிந்து அனுபவமுடைய குருவின் வழி அனுமதி பெற்றே இதனை செய்தல் வேண்டும். இந்த பதிவு தகவலுக்கு மட்டுமே. முயற்சித்து பலனடைய வேண்டுபவர்கள் தக்க குருவை அடைந்து முயற்சிகவும். நாம் இருக்கும் சூழல், வாழ்க்கை முறைக்கு அமைய இந்த ஆற்றல் ஆன்ம வாழ்க்கைக்கும், உலக வாழ்க்கையும் இடையூறானதாக கூட அமையலாம். 

ஸத்குரு பாதம் போற்றி!

சூட்சும பார்வை (பகுதி 04)- சில யோக இரகசியங்கள் - சகஸ்ரார சக்கரத்தின் செயல் முறை




மனிதன் சூட்சுமத் தன்மைகளை அறியும் ஆற்றல் உள்ளவன் என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் மனிதனது சூட்சும தன்மை எப்படி செயற்படுகிறது என்று பார்ப்போம். பொதுவாக யோகம், சித்தர்கள் பற்றி அறிந்தவர்களுக்கு மனிதனில் ஆறு ஆதாரங்கள், குண்டலினி என்பன இருப்பது பற்றி அறிந்திருப்பார்கள். இது பற்றி விரிவாக நாம் இந்த பதிவில் கூறப்போவதில்லை, அது இதன் நோக்கத்திற்கு அமைவானது இல்லை. சூட்சும பார்வையுடன் நேரடியாக தொடர்புடைய சக்கரம் சகஸ்ராரமும் ஆக்ஞா சக்கரமும் ஆகும். 

இதுபற்றிய ஒரு யோக இரகசியத்தினை குருவருளால் கூறுவோம். 

இதில் சகஸ்ரார சக்கரம் என்பது உடலில் தலை உச்சியிற்கு மேல் பரவியுள்ள சூஷ்ம உடலில் காணப்படும் சக்கரமாகும். இதுவே மனிதனில் ஆன்ம ஒளியினை பிரகாசிக்க செய்யும் சக்கரமாகும். பொதுவாக கீழ் சக்கரங்கள் செயற்படும் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சகஸ்ராரத்தின் ஒளி குறைந்த அளவிலும், ஒழுக்கம், தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு அதிகளவிலும் காணப்படும். தன்னை அறிந்து இறைவனை அறிந்தவர்களுக்கு இது வெளிப்படையாகவே தெரியும். இதனை குறிக்கவே சித்தியடைந்த மகான் களின் தலையின் பின்னால் ஒளிவடிவம் குறிக்கப்படுகிறது. இந்த மனிதனின் எண்ணங்களுக்கு தக்க வலிமையானதாக இருக்கம். தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு தெய்வ சக்தியுடையதாக இருக்கும். ஒருவன் தனது இச்சா சக்தியினை பிரயோகிக்கும் போது அந்த இடத்தை நோக்கி பாயும் தன்மையுடையது இந்த ஒளி. மனதினை ஏகாக்கிரப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சினால் சலனிக்காமல் வலிமையுடையதாகும். தியான சாதனையின் போது இந்த ஒளி அசையாத சுடர் போல் சகஸ்ரார சக்கரத்தில் ஒன்றி மன இயக்கத்தினை கட்டுப்படுத்தும். இந்த ஒளி பிராண சக்தியுடன் கலந்து மற்றைய சக்கரங்களினூடாக பௌதீக உடலில் பாயும் போது உடல் சரிவர வேலை செய்கிறது.  அதேபோல் இந்த ஒளியினை எமது சூஷ்ம உடலினை தாக்கி விழிப்படையவைத்தால் சூஷ்ம உலகங்களை காணலாம். இதை எப்படி செய்வது?

முதலில் மனதின் இயக்கத்தில் செலவழியும் இந்த சகஸ்ரார ஒளியினை தியான சாதனையினால் ஒடுங்கச் செய்ய வேண்டும். பின் ஒடுங்கிய ஒளியினை இச்சா சக்தியினால் மன உடலிலும், பிராண உடலிலும் செலுத்த அந்தந்த கவசங்க்களுக்கு ஏற்ப சூட்சும பார்வை ஏற்படும். மனதின் உணர்வு இந்த சகஸ்ரார சக்கர ஒளியில்தான் உள்ளது. இந்த ஒளி பௌதீக கவசங்களை தாக்கும் போது பௌதீக உணர்வினை பெறுவது போல் சூட்சும கவசங்களை தாக்கும் போது சூட்சும உணர்வுகளை பெறலாம் என்பதே இதன் அடிப்படை. பௌதீகத்தில் தெய்வ சக்தி உறையும் இடம் சகஸ்ராரமாகும். 

அடுத்த பதிவில் சூட்சும பார்வையுடன் தொடர்புடைய ஆக்ஞா சக்கரத்தின் செயல்முறை பற்றி பார்ப்போம். 

Saturday, August 04, 2012

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள் - 01


எமது பதிவுகளைப்படிக்கும் பலர் ஆர்வத்துடன் யோக, மன, சித்த ரகசியங்களை பதிவிடும்படியும் மேலதிக விபரங்களைதரும்படியும் மின்னஞ்சல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரது ஆவலையும் தாகத்தினையும் தீர்க்கும் வண்ணம் எம்மால் எழுதுவதற்கு காலதேவனும், எமது நாளந்த கடமைகளும் அனுமதிப்பதில்லை. இந்தபதிவுகளில் வரும் விடயங்கள் அனைத்தும் எமது தேடலிலும் குருநாதரிடம் பயின்றவற்றையும் சுருக்கு இந்த துறையில் ஆர்வம் உடைய அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிடப்படுகிறது. ஆர்வம் உடையவர்களுக்கு சரியான பாதை தெளிவு எமது பதிவுகளால் கிடைக்குமானால் குருஅருள் எனக்கொள்க!

எமது நேரக்குறைவு காரணமாக மிகச்சொற்பமான அளவே எம்மால் இதற்காக அர்ப்பணிக்க முடிகிறது என்பதில் மனவருத்தமே! யோக வித்தையில், சித்த வித்தையில் ஆர்வம் உடையவர்களுக்கு பயன்படக் கூடிய அரிய நூல்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.

அந்த வரிசையில் முதலாவது நூல் 

மானச யோகம்

ஆசிரியர்: டாக்டர். பண்டிட். ஜீ. கண்ணைய யோகி.


ஆசிரியர் பற்றிய அறிமுகம்

கண்ணைய யோகியார் ஐந்தாவது வயதிலேயே அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பொதிகை, நீலகிரிப்பகுதிகளில் உள்ள சூஷ்ம சித்தாஸ்ரமத்தில் ஆன்ம, யோக, ஞான, மானச, சித்த பயிற்சிகள், மந்திர, யந்திர, சாஸ்திரங்கள், மூலிகை மர்மர், சித்த வைத்தியம், இரசவாதங்கள் என்பன பயிற்று வித்து தனது கர்ம பலனை அனுபவித்து தீர்த்து வரும்படி குரு உத்தரவிட்டதன் பெயரில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரண பாமரன் போல் சென்னை அம்பத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்தவர், அவர் எக்காரணம் கொண்டும் தந்து ஆற்றலை, சித்திகளை தனது பெயரிற்கோ, புகழிற்காகவோ வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அகஸ்திய மகரிஷியின் உத்தரவின் பெயரில் புலிப்பாணிச் சித்தரிடமும் வித்தை பயின்றவர். குரு நாதரின் ஆணையில் தனது கர்மவினையினை அனுபவித்து வந்த அதே வேளை உண்மையான சித்தர் வழி சாதனை புரிபவர்களுக்காக இக்கால மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சித்தர்களின் கலைகளை சிறு சிறு பாடங்களாக தமது கைப்பட எழுதி தம்மை அண்டி வந்த மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். அவரது மாணவர்கள் மிகச்சிலரே! அதைக்கொண்டே உண்மை யோகியின் இலட்சணம் அறியலாம்! இன்று ஒரு சில புத்தகங்களை படித்து விட்டு தங்களை யோகி எனக் கூறிக்கொள்பவர்கள் இருக்கையில் தமது மாணவர்களுக்காக மிக எளிய முறையில் எழுதி அவற்றை பயிற்சி செய்ய வைத்து இடையில் வரும் சந்தேகங்களை தீர்த்து அவர்களையும் உன்னத இறை நிலைக்கு அடைய வைக்கும் உண்மை குருவாக திகழ்ந்தவர்கள். "நூறாண்டு காலம் வாழ வழி" என மாணவர்களுக்கு கற்பித்த வாரே 108 ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து காட்டியவர். கற்பிக்கும் அனைத்து வித்தைகளையும் ஆதாரப்பூர்வமாக விஞ்ஞான விளக்கங்களுடன் கற்பித்தவர். 

மேலும் கண்ணைய யோகியார் பற்றி வேறு பதிவுகளில் பார்ப்போம். 

கண்ணைய யோகியாரின் மாணவர்களில் முதன்மையானவரும் குரு பணிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் எமது குரு நாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், காயத்ரி சித்தர் இலங்கையில் சாதாரண தொழிலாளி ஒருவரின் மகனாக பிறந்து, குருவருளால் அகஸ்தியமகரிஷியின் தொடர்பு பெற்று அவர் வழிகாட்டலில் கண்ணைய யோகியரிடம் சென்று கிட்டத்தட்ட 44 வருடங்கள் குரு சேவை செய்து கண்ணைய யோகியாரின் பரிபூரண ஞான அருள் பெற்றவர். கண்ணைய யோகியாரிடம் பெற்ற காயத்ரி குப்த விஞ்ஞான சாதனை பயிற்சி மூலம் அருள் நிலை அடைந்தவர். 

மற்றவர் தமிழ் நாடு இரயில் திணைக்களத்தின் உயர் பதவி வகித்து, தந்து இல்வாழ்க்கையினையையே யோக வாழ்க்கை ஆக்கி கண்ணைய யோகியாரிடம் இராஜ யோக பயிற்சி (அக்காலத்தில் ஜனக மஹாராஜா வாழ்ந்த நிலையே உண்மையான இராஜ யோகம்) என்னும் உயர் பயிற்சி பெற்ற அருட் திரு. இராஜமோகன் அவர்கள். இராஜ மோகன் ஐயா அவர்கள் தமது பணி ஓய்வின் பின் தமது குரு நாதர் தமக்கு கற்பித்த ஞானத்தினை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அத்துடன் குரு நாதர் கையெழுத்துப்பிரதிகளாக கற்பித்த வித்தைகளை புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்கள். அத்தகைய ஒரு பாடமே மானச யோகம் எனும் இந்த நூலாகும். 

மானச யோகம் ஏன் வெளியிடப்பட்டது?

யோகம், ஞானம், பக்தி, கர்மம், நாத்திகம், விஞ்ஞானம் மற்றும் எந்த கொள்கையாயினும், சமயம், வழிபாடு அரசியல் என்று இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்தும் மனதின் வழியாகவே செயற்படுகிறது. மனதின் வழியில்லாமல் மனிதனிற்கு இகவாழ்வுமில்லை பரவாழ்வுமில்லை. இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் மனமே! மனதினை கட்டுப்படுத்தினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். இதுவே அகத்திய மகரிஷியின் மூல உபதேசம். 

இதை எப்படி செயல்முறையில் செய்வது என்பதனைக் கூறுவதுதான் மானச யோகம். 

குரு நாதர் கீழ்வரும் தலைப்புகளில் மனதின் செயல் முறையினை மிக எளிய முறையில் நுண்மையாக விளக்கியுள்ளார். இந்த நூலினை கற்ற பின் (முழுமையாக புரிந்து கொள்ள பல முறை வாசிப்பு தேவை) ஒருவன் மனம் பற்றியும் அதன் செயல்முறை, அதனால் ஏற்படும் விளைவிகள் என்பவற்றை தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

பொருளடக்கம்
  1. வாழ்க்கையின் குறிக்கோள்
  2. வாழ்க்கையின் வேற்றுமைகள்
  3. மனமும் வாழ்க்கையும்
  4. மனதின் இலக்கணம்
  5. மனதின் இயக்கம்
  6. சங்கற்ப விகற்பங்கள்
  7. மனமும் உடலும்
  8. மனமும் கர்மாவும்
  9. மனமும் சித்தமும்
  10. மனமும் சோதிடமும்
  11. மனமும் கடவுளும்
  12. மனமும் ஒழுக்கமும்
  13. மனமும் சூழ் நிலைகளும்
  14. மனசிருஷ்டி விஞ்ஞானம்
  15. மன சக்தி
  16. மன அலையின் தத்தும்
  17. மனமும் தெய்வ ஞானமும்
  18. மானத தந்தி விஞ்ஞானம்
  19. சூஷ்ம திருஷ்டி விஞ்ஞானம்
  20. சூஷ்ம யாத்திரை
  21. சூஷ்ம தரிசனம்
  22. மனமும் பேய் பிசாசுகளும்
  23. மனமும் ஏகாக்கிரமும்
  24. மனமும் தியானமும்
  25. மனமும் அட்டமாசித்திகளும்
  26. மனமும் ஹிப்னாடிசமும்
  27. எளிய மனச் சாதனைகள்
  28. மனமும் முக்தியும் 
  29. முடிவுரை 

அனைத்து அத்தியாயங்களும் இரத்தின சுருக்கமாக விடயத்தினை தெளிவாக கூறி அதனை செயன் முறைப்படுத்தும் வழியினையும் கூறுகிறது. 

மனதினைப்பற்றி அறிந்து கொள்ளவிரும்புபவர்கள், யோக சாதனை செய்பவர்கள் எந்த மார்க்கத்தினை சேர்ந்தவர்களாயிருந்தாலும் இந்த நூலினை வாசித்தல் அவர்களது வாழ்வினை மாற்றும் என்பதற்கு நாம் உறுதி கூறிகிறோம். 

பெற விரும்புபவர்கள் கீழ்வரும் முகவரியில் தொடபு கொண்டு விபரங்களை பெறமுடியும்:
  • ஆத்ம ஞான யோகசபை, சென்னை : 044-26531166/09840987338/09383531166
  • ஆத்ம ஞான யோக சபை, கொழும்பு: 0094-75-7287151/0094-77-6271292

வெளி நாட்டு அன்பர்கள் மின்னஞ்சல் மூலம் விபரம் தெரிவிக்கலாம்.  

Wednesday, July 04, 2012

மனிதனின் சூட்சும தன்மை - மனிதன் சூட்சும பொறிகளை உடையவன் (சூட்சுமப் பார்வை - பகுதி 03)

உலகில் உள்ள நமது பௌதீக உணர்வுகளால் அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சூட்சுமம் செயற்படுகிறது என்பது பற்றிசென்ற பதிவில் பார்த்தோம். இன்று மனிதனில் இந்த சூட்சுமத்தினை உணரக்கூடிய தன்மை உண்டா? என்பது பற்றிப் பார்ப்போம். 

சென்ற பதிவின் அடிப்படையில் மனிதனின் எந்தவொரு ஸ்தூல உணர்விற்கும் நிகரான சூட்சும உணர்வு இருத்தல் வேண்டும் என்பதனை அனுமானித்திருப்பீர்கள். 

மனிதன் உணர்வு எதன் மூலம் செயல் கொள்ளுகிறது, அதாவது கண் மூலம் பார்க்கிறோம் என்றால் கண் ஒளியினை ஏற்று மூளையில் செலுத்த மூளை அதனை படமாக்க அதனை உணர்வது மனம். மனதிற்கு உணர்வினை தருவது எது? ஆன்மா. 

மனமும் ஆன்மாவும் எமது பௌதீக கருவிகளால் உணரமுடியாதவை, அவை எப்படி தோற்றம் பெற்றது என்பது பற்றி எமது முன்னோர்கள் கூறுகிறார்கள். 

"மனித உடல் மூலப்பிரகிருதியால் ஆனது போல மனித மனமும் பிரபஞ்ச மனமாகிய மூலத்திலிருந்தே தோற்றம் பெற்றது, அதுபோல் ஆன்மா பரமான்மா எனப்படும் இறைவனில் இருந்து தோற்றம் பெற்றிருக்க வேண்டும். அதாவது சுருக்கமாக சொன்னால் எமது பௌதீக, சூட்சும கரணங்களுக்கு சரியான பிரபஞ்ச கரணங்கள் எம்மைச் சூழ, எம்மில் கலந்து உள்ளது என்று உணர்ந்திருந்தனர். இதையே "அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு" என்று சித்தர்கள் கூறிவைத்தார்கள். இந்த சூஷ்ம நிலையினை உணர்ந்த முன்னோர்கள் இது ஏழு படிமுறைகளில் செயல் கொள்வதாக அறிந்துள்ளனர். இவற்றையே ஏழு உலகங்கள் என வர்ணித்து வைத்தார்கள், அவற்றின் தொடர்பினை ஏற்படுத்தும் மையங்கலே உடலில் உள்ள மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரையிலான ஏழு ஆதாரங்களாகும். 

சாதாரணமாக மனிதனிற்கு பௌதீக உலகத்துடன் தொடர்பு கொள்ள கூடிய புலன்கள் மட்டுமே வளர்ச்சியடைந்திருக்கும். குண்டலினி யோக மொழியில் சொல்வதானால் மூலாதார சக்கரம் மட்டுமே விழிப்படைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் பலர் தமது மூலாதாரசக்கரத்தினை பாழ்படுத்திய நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இது பற்றி தனிக்கட்டுரைத் தொடரில் ஆராய்வோம். இங்கு கூறவருவது மனிதனில் சூட்சுமப் பொறிகள் உண்டு என்பதே!

சுருக்கமாக கூறுவதானால் 
  • மனிதனது பௌதீக உடலையும் தாண்டி மனிதனுக்கு சூட்சும உலகுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் உள்ளது.
  • அந்த ஆற்றல் மனதாலும், ஆன்மாவாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • இந்த சூட்சும உலகு ஏழு படி நிலையில் உள்ளது, இதனையே ஏழு உலகங்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏழு உலகங்களே காயத்ரி மந்திரத்தின் வ்யாக்ருதிகள் எனப்படும் பூர், புவஹ, ஸ்வஹ, மஹ, ஜன, தப, ஸத்யம் எனப்படுவன. சாதாரண காயத்ரியில் முதல் மூன்று வ்யாக்ருதிகளே உச்சரிக்கப்படும், காயத்ரி மந்திரத்தின் உண்மையான பயன்பாடே மனித பரிணாமத்தினை ஒவ்வொரு உலகமாக உயர்த்தி ஸத்யமாகிய பரமான்வுடன் ஒன்றுவதுதான் அல்லது சூட்சும உலகுடன் தொடர்புகொள்ளும் முறையினைக் கூறுவது.  சாதாரண நிலையில் பூர்- பூமி, புவஹ - பிராண உலகம், ஸ்வஹ - மானச உலகம் இவற்றை தொடர்பு கொள்ளும் சக்தியினைத்தரும், ஏனெனில் இவை மூன்றுமே மனித வாழ்வில் உடனடி தொடர்பில் உள்ளவை, இதற்கு மேலுள்ள உலகங்கள் ஆன்ம சக்தி வலுப்பெற்றவர்கள் மாத்திரமே தொடர்பு கொள்ளக்கூடியவை. காயத்ரி மந்திர சாதனை மூலம் சூஷ்ம உலகுடன் தொடர்புகொள்ளும் முறை பற்றியும் வேறொரு பதிவில் பார்ப்போம்.
  • ஆகவே மற்றைய உலகுடன் தொடர்பு தொடர்பு கொள்ள எமது சூஷ்ம உடலில் உள்ள மேற்கூறிய ஏழு நிலைகளை செயல் படுத்தினால் அந்தந்த நிலைக்கு ஏற்ற சூட்சும பார்வை, புலனுணர்வுகள் ஏற்படும். 
  • பௌதீக பார்வையினை பெற கண்களும் மூளையும் நரம்பும் உள்ளது போல், சூஷ்ம பார்வையினை பெற மனம், புத்தி, சித்தம், அஹங்க்காரம் என்ற அந்தக்கரணங்கள் உள்ளன. 
  • உதாரணமாக கனவு நிலையில் எமது கண்கள் செயற்படுவதில்லை, ஆனால் காட்சிகளை காண்கிறோம், எப்படி? சித்தமாகிய ஆழ்மனதில் பதிந்த எண்ணப்பதிவுகள் உறக்க நிலையில் மனதில் செயற்பட்டு காட்சிகளாகின்றது, அதனை புத்தியும் அஹங்காரமும் ரசிக்கின்றன. இதுபோல் குறித்த சூட்சும உலகில் ஒருவிடயத்தினைப் பற்றி மனதினை இருத்தி ஆன்மசக்தியினை செலுத்தினால் அந்த உலகத்திற்கான காட்சியினை காணலாம்.
  • எப்படியெனில் ஒருவருடைய கர்மா என்ன என அறிய முதலில் எமது பிராண, மன உடலில் கவனத்தினை செலுத்தி பின்னர் அதன் மூலம் ஒருவரை தொடர்பு கொள்ள அவரது கர்மா பற்றிய சம்பவங்கள் மனதில் திரைப்படம் போன்று ஓடத்தொடங்கும். 
  • இந்த அடிப்படையிலேயே சூட்சுமப் பார்வை செயற்படுகிறது. இதனையே சூஷ்ம திருஷ்டி எனக் கூறுவர். 
அடுத்த பதிவில் சூட்சும திருஷ்டியின் அறிவியல் அடிப்படை பற்றி பார்ப்போம்.

சத்குரு பாதம் போற்றி!

Tuesday, July 03, 2012

சித்தர் காப்பு பிரயோகம்

எனது ஆன்மீக சகோதரர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது, வாசகர்களுக்கு பயன்படும் எனக் கருதி இங்கு பதிகின்றோம், விநாயகர் கவச பதிவில் கூறப்பட்டது போன்று இதனையும் பிரயோகிக்கலாம். 

"முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலைகாப்பு; 
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ; 
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர்பாதங் காப்பு ; 
அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ; 
அன்பே உருவாக்கும்அகப்பேய் பாதங் காப்பு ; 
பரம கயிலாய குரு போகர் பாதங் காப்பு ; 
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு; 
சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர் பாதங் காப்பு ; 
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங் காப்பு ; 
வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர் பாதங் காப்பு ; 
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங் காப்பு ; 
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர் பாதங் காப்பு ; 
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங் காப்பு ; 
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங் காப்பு ; 
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங் காப்பு ; 
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங் காப்பு ; 
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங் காப்பு ; 
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங் காப்பு ; 
கொல்குணம் போக்கும் கோரக்கர் பாதங் காப்பு ; 
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங் காப்பு ; 
தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்டதேரையர் பாதங் காப்பு ; 
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங் காப்பு ; 
போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர் பாதங் காப்பு ; 
நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ; 
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ; 
பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ; 
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ; 
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ; 

காப்பான கருவூரார் , போகநாதர்கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரமம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார்கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே ".

குருப்பூர்ணிமை



இன்று குருப்பூர்ணிமை நாள், அவரவர் குருவை ஸ்தூலமாகவும், மானசீகமாகவும் வணங்கி ஆசிபெற சிறந்த நாள். இந்த நன்நாளில் குருவைப்பற்றி தியானிக்க உதவியான சில வரிகளை இங்கு பதிவிடுவோம்.



குருமண்டல தியானம் குரு கீதையின் படி...

ஹம்சம் எனும் இரண்டு சஞ்சரிக்கும் இதழ்களைக் கொண்ட தெய்வீகமான சஹஸ்ராரத் தாமரையில் உலகின் தோற்றத்திற்கும், மறைவிற்கும் காரணமாயும், பல உடல்களில் உறைவதாயும், சுதந்திரமாயும், ஆனந்தமளிப்பதாயும், ஆதியிலும், அந்தத்திலும் ஒரு நிலையுடையதாயும், பிளவுபடாததாயும், அறிவென்னும் சுவை நிறைந்ததாயும் அளவு கடந்ததாயும், மங்கள வடிவினதுமானதும், அஷரப்பொருளே உருக்கொண்டு கண்ணெதிரியில் வந்தாற்போன்றதாயும், எங்கும் நிறைந்ததாயும், என்றும் உளதாயும் விளங்க்கும் குருபதத்தை தியானிக்கிறேன்.

எங்கும் வியாபித்தவரும், மாசற்றவரும், என்றுமுள்ளவரும், சிறந்தவரும், பாகுபாடற்றவரும், என்றும் ஆனந்தமே வடிவானவரும், இன்பத்திற்கு ஒரே உறைவிடமானவரும், என்றும் மங்கள ஸ்வரூபியும்,ஆவயம் பிரகாசரும், பரமஹம்ஸரும், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவரும், தங்கு தடையற்ற சகல சாஸ்திர வடிவினரும் ஆகிய ஆதிதேவரை, என்றும் மலர்ந்த சகஸ்ராரக் கமலத்தில் மறைந்துள்ள அஷர மண்டபத்தில் தியானிக்கிறேன். 

ஓம் ஸத்குருபாதம் போற்றி!

ஓம் நவகோடி சித்தர்பாதம் போற்றி!



Monday, July 02, 2012

சூட்சுமப் பார்வையின் செயல்முறை அடிப்படை என்ன? - பகுதி 02

எந்த ஒரு விடயத்திற்கும், செயலுக்கும், காரியத்திற்கும் காரண காரியத் தொடர்பு இருக்கும் என்பது பற்றி பொதுவாக அடிப்படை அறிவியல் பயின்றவர்கள் அறிந்திருப்பார்கள். பௌதீக விஞ்ஞானத்தில் பொதுவாக ஒரு காரியத்தின் மூலமாக பௌதீக காரணத்தினையே கண்டறிவார்கள். உதாரணமாக உடலில் நோய் வந்தது என்றால் அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைவு, பற்றீரியாத்தாக்கம், நோய்க்கிருமி என பௌதீக காரணங்க்களேயே கண்டறிவார்கள். ஆனால் எமது முன்னோர்கள் சித்தர்கள் ஒரு காரியத்திற்கான காரணம் பௌதீகத்திற்கு வருவதற்கு முன் அது சூஷ்மத்தில் உருவாகி வலுப்பெற்ற பின்னரே பௌதீகத்திற்கு வருகிறது என்று கண்டறிந்தார்கள். 

அதுபோல் இந்தப்பௌதீக உலகில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தும் ஓர் அறிவு சக்தி நிறைந்துள்ளது என்பதனையும் கண்டறிந்தார்கள். எப்படியென்றால் ஓர் விதை எப்படி மரமாகிறது என்பதற்கு கேள்வி பௌதீக விஞ்ஞானத்தில் விதையில் உள்ள டி.என்.ஏ அதன் பெற்றோரிலிருந்து சேகரித்த தகவலுக்கும் அதன் சுற்றுப்புற சூழலின் தன்மைக்கும் ஏற்ப வளர்ச்சி அடைகிறது எனப்பதில் கிடைக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்தறியும் உணர்வு ஒன்று எல்லாவற்றிலும் உள்ளது என்பதனையும் சித்தர்கள் கண்டறிந்தார்கள். 

ஆக ஒரு பொருள், செயலிற்கான சூஷ்ம செயல் முறையும் அதனை ஒழுங்கு படுத்தும் அறிவு சக்தியுமே உலகின் அனைத்து செயல், காரியங்களுக்கான அடிப்படை என்பதே சித்த வித்தை, யோக வித்தை கற்க விரும்புபவர்கள் அடிப்படையில் புரித்து கொள்ளவேண்டிய விடயமாகும். இந்த அடிப்படையிலேயே அனைத்து சாதனைகள், தியானம், அற்புதங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. 

சூஷ்ம காரணங்கள் திடுமென ஸ்தூலத்தில் வெளிப்படுவதில்லை. உதாரணமாக புற்றுநோய் ஒருவருக்கு வருகிறது என்றால் வெளிப்படையாக தெரிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அதற்கான குறிகள் சூஷ்ம உடலில் தோன்றி செயல் கொள்ளத்தொடங்கி இருக்கும். இப்படி அனைத்து செயல்களும் சூஷ்மத்தில் செயல்கொள்ளத்தொடங்கியே ஸ்தூலத்திற்கு வெளிப்படும்.

இந்த அடிப்படையில் சூஷ்மப் பார்வை எப்படி செயல் புரிகின்றது என்பதனை விளக்குவோம். 

ஸ்தூலத்தை தாண்டி சூஷ்மத்தினை பார்க்கும் சக்தியினை விழிப்படையச் செய்து, பின்னர் அதனை உணர்வுமயமான அறிவு சக்தியுடன் சேர்க்கத்தெரிந்தவனுக்கும் ஒரு பொருளின் பரிணாமம் விளங்கும் என்று ஒரு வார்த்தையில் குருதேவர் கூறுவார். இந்த வார்த்தை சற்று செறிவாக உள்ளதால் இதனை தற்கால உதாரணம் ஒன்றுடன் ஒப்பு நோக்கி விளங்கிக்கொள்வோம். 

உதாரணமாக கணிதக் கோட்பாடுகள் அடங்கிய மாதிரியுரு மென்பொருள் (Mathematical modeling software) ஒன்றினை எடுத்துக்கொள்வோம். இவற்றில் நீங்கள் உள்ளீட்டைக் (Input) கொடுத்தால் அது வரைபடமாக (Graph) ஒரு தொகுதியின் செயன்முறையினை (Functionality of the System) வெளிப்படுத்தும். இந்த செயன்முறைக்கு பின்னால் உள்ள அடிப்படையினை எடுத்து நோக்குவோமானால் குறித்த உள்ளீட்டினைக் கொடுக்கும் போது அவற்றை பெற்று, எமது தெரிவிற்கு ஏற்ற கணிதக் கோட்பாடுகளை தானாக தெரிவு செய்து, உள்ளே ப்றோகிறாம் மொழியில் எழுதப்பட்டுள்ள சமன்பாடுகள் மூலம் தீர்த்து எமக்கு விடையினை தருகிறது. இதே போன்ற செயன்முறைதான் சூஷ்மப் பார்வையிலும் நடைபெறுகிறது. உள்ளீடு என்பது எமது மனம் ஒருமைப்படும் விடயம் (நாம் சூஷ்ம பார்வையில் தெரிந்து கொள்ள எடுக்கும் பொருள்) அவற்றை சரியான இடத்தில் (இது எப்படி என்பது பின்வரும் பதிவுகளில் கூறப்படும்) ஒன்ற அவை இந்த பிரபஞ்ச விதிக்கேற்ப (பிரபஞ்ச விதியே கணிக்கும் சமன்பாடுகள்) எப்படி பரிணாமம் அடையும் என்பதனை தெய்வ அறிவு கணித்து நேருக்கு நேர் படத்தினைப் பார்ப்பது போல் காட்டும். மேற்கூறிய விளக்கத்தின் மூலம் சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுகிறது என விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். 

இந்த அடிப்படையில் எந்தவொரு பொருளினதும் நிகழ்கால, எதிர்கால, கடந்த கால அமைப்பு, பரிணாமங்களை அறிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் மேலும் சில விடயங்களை விளங்கிக்கொள்ளலாம், காத்திருங்கள்,

சத்குருபாதம் போற்றி

Sunday, July 01, 2012

சித்த வித்யா பாடங்கள்: 18 (அ) சூஷ்ம திருஷ்டி - சூட்சும பார்வை



உலகில் பலகாலமாக எதிர்காலத்தினை கணித்து அறிந்தவர்கள் (ஜோதிடத்தின் மூலம் அல்ல!), நடந்த சம்பவங்களை தமது மானச சக்தி மூலம் அறிந்தவர்கள் பலர் இருந்துள்ளார்கள், இருந்தும் வருகிறார்கள். இவர்கள் எப்படி இந்த ஆற்றலைப் பெற்றார்கள் என்பதனையே இந்த கட்டுரைத்தொடர் ஆராயப்போகிறது. அது மட்டுமன்றி சூஷ்ம திருஷ்டியினைப் பெறுவதற்கு உரிய சாதனைகள் எவை என்பது பற்றியும் பின்வரும் பதிவுகளில் விளக்கப்பட உள்ளது. அதனால வாசகர்களே ஆர்வமுடன் இந்த பதிவுத்தொடரினை எதிபார்த்து இருங்கள்.

இன்றையகாலகட்டத்தில் ஈ.எஸ்.பி, சைக்கோமெட்டரி என அதிதீத புலனாற்றல்கள் பற்றி பலர் படித்தறிந்திருப்பீர்கள். இந்த சூஷ்ம திருஷ்டி என்பதும் அத்தகைய ஆற்றலில் ஒன்றுதான். சூஷ்ம திருஷ்டி என்றால் சூஷ்மத்தினை பார்த்தறிதல் என்று பொருள். பொதுவாக பார்வை எனப்படுவது ஸ்தூலப் பொருட்களை பார்ப்பதையே கருதுவோம். சூஷ்ம திருஷ்டியில் ஒரு பொருளின் சூஷ்ம அமைப்பினை பார்த்தறியலாம். 

எது சூஷ்மம்? மனிதனை எடுத்துக்கொள்வோம், மனிதனது உடல், அங்கங்கள், ஸ்தூலம்! மனம், உணர்வு, ஆறு ஆதாரங்கள், பிராண ஓட்டம் என்பன சூட்சுமம். சூஷ்ம திருஷ்டி என்பது பௌதீக கண்களால் பார்ப்பதிலிருந்து மாறுபட்டது. எதிர்காலம், கடந்த காலம் என்பனவற்றின் பதிவுகள் மிக சூஷ்மமாக இந்த பிரபஞ்சத்தில் பதியப்பட்டுள்ளது, ஆக சூஷ்ம திருஷ்டி உள்ள ஒருவர் அவற்றை கண்டறியும் ஆற்றலைப்பெறுகிறார் என்பதே இந்த ஆற்றலின் மூலம் கடந்த கால, எதிர்கால சம்பவங்களை அறிகிறார் என்று பொருள். அதுபோல் ஒருவருடைய எண்ணங்களும் சூஷ்மமாக இந்த பிரபஞ்சத்தில் பரவியிருக்கும். அவற்றையும் சூஷ்ம திருஷ்டி உடைய ஒருவர் கண்டறியலாம். 

சூஷ்ம திருஷ்டி என்றால் சூட்சும பார்வை என்று பொருள் எனச் சொன்னோம், அப்படியானால் கண்களால்தான் இவற்றைப் பார்ப்போமா? என்ற கேள்வி எழுகிறதல்லவா! சூட்சும பார்வை என்பது வெறும் கண்களால் பார்பது என்ற பொருள் அல்ல, எமது கண்களை எவ்வளவு விருத்தி செய்தாலும் அவற்றால் சூட்சும பொருட்களையோ, எதிர்காலத்தினையோ, இறந்தகாலத்தினையோ பார்க்க முடியாது. இது வேறொரு சாதனை மூலம் சாதிக்கப்படுவது, அவை பின்வரும் பதிவுகளில் பதியப்படும். 

அதுபோல் ஒருவர் மனம் ஒன்றி ஏகாக்கிர நிலையில் இருக்கும் போது மனதில் திடுமென சில எண்ணங்கள் உதித்து பிரச்சனைக்கு வழிகாட்டும், இந்தகைய நிலையினைத்தான் சூஷ்ம திருஷ்டி என்பதா? எனக் கேட்பர். இந்தக் கேள்வியும் நியாயமானதே, மன ஏகாக்கிரம் மூலம் உணர்வு ஒன்றி பெறுவதல்ல சூட்சும பார்வை. 

சூட்சும பார்வை என்பது என்ன என்பதனை எமது குருநாதர் கண்ணைய யோகீஸ்வரர் விளக்கிய வார்த்தைகளில் அப்படியே தருகிறோம். 

" சூஷ்ம திருஷ்டி படைத்தவன் ஒரு சாதாரண மனிதன் நிகழ்கால சம்பவத்தை எப்படித் தன் கண்களூடாக நேருக்கு நேர் பார்ப்பானோ அப்படி கடந்த கால நிகழ்கால சம்பவங்களை அறிகிறான், ஒரு சாதாரண மனிதனிற்கு கடந்தகால சம்பவங்களும் நிகழ்கால சம்பவங்களும் தற்போது இல்லாத ஒன்றாக இருந்தாலும் சூஷ்ம திருஷ்டி உள்ளவனுக்கு அச்சம்பவங்கள் நிகழ்காலத்தில் நடப்பதுபோலவே அனுபவிப்பான். ஒருவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இடம் எப்படி இருந்தது என்று அறியவேண்டி சூஷ்ம திருஷ்டி சாதனையினை உபயோகித்தால் அவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தின் அமைப்பு, வீதிகளின் அமைப்பு, வீடுகள், வாழ்ந்த மக்கள் என்பவற்றை நேருக்கு நேர் காண்பது போல் காண்பான்"

அதாவது அவன் அந்த இடத்தில்,சம்பவத்தில் இருந்த உணர்விலேயே விடயங்களை நேருக்கு நேர் பார்த்து அறிந்து கொள்வான். 

ஆகவே சூஷ்ம திருஷ்டி என்பது மன ஊகத்தினால் தெரிந்து கொள்ளும் முறை அல்ல, நேருக்கு நேராக பார்த்தறிவது என்று பொருள். 

அடுத்த பதிவில் சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். 

சத்குரு பாதம் போற்றி! 

Saturday, June 16, 2012

கவச பிரயோகம் தாந்திரீக அடிப்படையில்

கீழ்வரும் பதிவுகளையும் வாசிக்கவும்:

விநாயகர் கவசம் பற்றிய 03வது பதிவில் குறித்த கவசப் பிரயோகத்தின் சாரத்தினை குறித்த தெய்வம் சாராமல் விளக்குவதாக கூறியிருந்தோம், அதன்படி இந்த பதிவில் அவற்றை விளக்குவோம். கவசம் என்பது தாந்திரீக வழிபாட்டில் தாம் உபாசிக்கும் தெய்வ சக்தியினை தமது ஸ்தூல, சூஷ்ம உடலினை மற்றைய தீய சக்திகள் அண்டாமல் பாதுகாப்பதற்காக சக்தி வாய்ந்த பீஜ மந்திரங்களையும், கட்டளைச் சொற்களையும் (suggestions) கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒருவகை மந்திர தோத்திரங்களாகும்.

மனிதன் என்பவன் பிராணன், மனம், உடல் என்பவற்றினால் ஆக்கப்பட்ட உணர்வின் கலவையே ஆவான். எந்த தெய்வசக்தியாக இருந்தாலும், தீய சக்தியாக இருந்தாலும் இந்த மூன்றையும் தாக்கியே ஒருவரிற்கு பலனை ஏற்படுத்தவேண்டும். உதாரணமாக நோய் உருவாவது எப்படி என்பது சித்தவித்யா விளக்கத்தில் பார்ப்போம், நோய் முதலில் ஆழ்மனதில் சூஷ்மமாக உருவாகி, பின் பிராணனை தடைப்படுத்தி ஸ்தூல உடலில் வெளிப்படும். ஆழ்மனதில் உருவாவதற்கான காரணம் பூர்வ கர்மம், தவறான ஆழ்மனப்பதிவுகள், பயம் என்பனவாகும், ஆழ்மனத்தில் பதியாமல் எந்த ஒன்றும் செயலுக்கு வருவதில்லை என்பது தற்கால மனவியலும் ஏற்றுகொண்ட பெருண்மை. இப்படிப்பட்ட தவறான பதிவுகள் சூஷ்ம உடலில் முதலிம் பிரண ஓட்டத்தினை தடைசெய்கின்றன. அதனால் பிராண ஓட்டம் சூஷ்ம உடலில் தடை பட்டு அந்த தடை உடலில் நோயாக உருப்பெறுகிறது. 

இதுபோல் மற்றயோரின் எண்ண சுழல்களும் மனதினை தாக்கி எமது பிராண ஓட்டத்தினை தடைசெய்யும் வல்லமை உடையவை, இது எண்ணுவோரின் மன பிராண வலிமையினைப் பொறுத்தது. இத்தகைய தடைகளை நீக்கி எமது பிராண மன ஓட்டங்களை சீராக்கி, பின்னர் எமது மனதில் பிராணனில், உடலில் பலமான தெய்வ சக்தியினை பதிப்பிக்கும் செயன் முறையே கவசம் எனும் தோத்திர முறையாகும்.

மனம் பிராணன் உடல் இடைத்தொடர்பும் இடைத்தாக்கமும்

மனம், பிராணன், உடல் என்பன ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்பும், இடைத்தங்கலும் உடையவை. ஒன்றை வைத்து இன்னொன்றினை கட்டுப்படுத்த முடியும் என்பது எமது சித்தர்களும், முன்னோரும் கண்டு பிடித்த இன்னொரு இரகசியமாகும். மனதில் ஒன்றை புகுத்தினால் அது பிராணனிலும், உடலிலும் மாறுதலைச் செய்யும், இதுவே மந்திர சாதனை தோத்திர பாடல்கள் என்பவற்றின் அடிப்படை தத்துவமாகும். 

இதன் படி கவச பாராயணத்தின் ஊடாக உடலின் ஒவ்வொரு பகுதியில் உணர்வைச் செலுத்த அதில் பிராண சக்தி பாய்ந்து பிராண ஓட்டத்தினை சீர் செய்ய தொடங்கும். மனம் எங்கு உள்ளதோ அங்கு பிராணனும் இருக்கும். இவை இரண்டும் இணைபிரியா இரட்டை சகோதரர்கள். இதுவே கவச பாராயணத்தின் அடிப்படை தத்துவம். இதனை கொண்டு கடவுள், மதம் சாராமல் எப்படிப் பயன் படுத்தலாம் என பார்ப்போம். முற்காலத்தில் கடவுளை சார்ந்து, யோக விளக்கங்கள் அறிந்தவர்களாகவே எமது முன்னோர்கள் இருந்தனர்,ஆனால் தற்காலத்தில் மதம் என்பது உண்மையான நோக்கத்தில் இருந்து விலகி பல குழப்ப நிலையில் இருப்பதால் அடிப்படையினை கொண்டு இதனை சாதிக்கும் முறையினை விளக்குவோம். இதன் படி சாதனை படிமுறை வருமாறு;

ஒளியால் கவசமிடல்

சாதனை:

  • தனியாக இதனை பயிற்சிப்பதற்கு அமைதியான, காற்றோட்டமான ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். 
  • சுகாசனம், சித்தாசனம் போன்று அமர்ந்த நிலையிலும் செய்யலாம். அல்லது சாய்ந்த நிலையிலும் மல்லாந்து படுத்த வண்ணமும் செய்யலாம். 
  • உங்களுக்கு இஷ்ட தெய்வம் இருப்பின் அந்த தெய்வத்தினது மந்திரத்தினைக் கொண்டு விநாயகர் கவச பதிவில் கூறியபடி செய்யலாம், இல்லையெனில் கீழ்வருமாறும் செய்யலாம்,
  • கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூச்சினை ஆழமாக இழுத்து சில முறை விடுங்கள். 
  • உடல் தளர்வாகிய பின்னர் ஒரு தங்க நிற ஒளி ஒன்று மூச்சினூடாக வெளியில் இருந்து நெற்றிப் பொட்டில் வந்து உறைவதாக பாவிக்கவும். ஒளி சூடற்ற குளிர்மையானதாகவும் பிரகாசம் பல சூரியனை ஒத்ததாகவும் பாவிக்கவும். பின்னர் இந்த ஒளி அப்படியே தலையின் உள்ளும் புறமும் சென்று மூளையினை நன்கு பலப்படுத்துவதாக பாவிக்கவும். 
  • அதன் பின் மூளையில், தலையில் அந்த ஒளி பரவிய பின்னர் அந்த பிரகாசம் அப்படியே இருக்க ஒளி அடுத்து படிப்படியாக ஒவ்வொரு உறுப்புகளினை அடைந்து அந்தந்த உறுப்புகளை ஒளியேற்றி பிரகாசிக்க செய்வதாக பாவிக்கவும். 


        1. புருவம்,
        2. கண்கள்
        3. மூக்கு
        4. காது
        5. வாய் 
        6. கழுத்து
        7. கைகள் இரண்டும்
        8. மார்பு
        9. நெஞ்சின் நடுப்பகுதி
        10. வயிறு
        11. தொப்புள்
        12. இன உறுப்புகள்
        13. தொடை
        14. முழங்கால்
        15. கணுக்கால்
        16. பாதம் 
        17. பெருவிரல் 

பின்னர் இந்த உறுப்புகளினூடாக பின்வரிசையில் ஒவ்வொரு உறுப்பகளினூடாக அந்தந்த உறுப்புகளில் ஒளி பிரகாசிப்பதை மனக்கண்ணில் கண்டு கீழ்வரும் ஒழுங்கில் செல்லவும். 
        1. பெருவிரல் 
        2. பாதம் 
        3. கணுக்கால்
        4. முழங்கால்
        5. தொடை
        6. இன உறுப்புகள்
        7. தொப்புள்
        8. வயிறு
        9. நெஞ்சின் நடுப்பகுதி
        10. மார்பு
        11. கைகள் இரண்டும்
        12. கழுத்து
        13. வாய்
        14. காது
        15. மூக்கு
        16. கண்கள்
        17. புருவம்,
        18. மூளை/தலை 

வரை சென்று பின்னர் மீண்டும் அந்த ஒளி புருவ மத்தியில் இருப்பதை உணருங்கள். இப்போது உங்கள் மனதில் உங்கள் உறுப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒளிக்கற்றை வீசுவதை மனக்கண்ணில் பாருங்கள். இப்பொது அடுத்தகட்டமாக இந்த ஒளியினை கவசமாக்கும் செய்முறையினைப் பார்ப்போம். 

இப்பொழுது மேற்குறித்த ஒவ்வொரு உடல் பகுதியிலுமிருந்து ஒளி விரிவடைந்து உடலைச் சூழ முட்டை வடிவில் உருவாவதை அனுபவியுங்கள். இது எவ்வளது தூரம் என்பது உங்களது பிராண மனோசக்திகளது ஆற்றலினால் தீர்மானிக்கபடும். சாதாரணமாக் உடலைச் சூழ முன்று - நாலு அடிகள் சூழ்ந்திருப்பதாக பாவியுங்கள். இந்த நிலையில் வேறு எந்த தீய சக்தியும் உங்க்களினுள் வரமுடியாது போகும். 

ஆரம்ப காலத்தில் காலையில் இப்படி சாதனை செய்துவிட்டு ஆபீஸுக்கு சென்றீர்களானால் மாலையில் வீடு வரும் போது மற்றவருடைய காந்தசக்தியினால் தாக்கமுற்று குறைந்திருக்கும். சிலமாத பயிற்சியில் நிரந்தரமான ஒளிகிரகணம் உடலைச் சூழ அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.

இந்த பயிற்சி செய்து உடலைச் சூழ ஒளி இருக்கும் போது மனதில் உங்க்களுக்கு வேண்டியவரிற்கு நல்லெண்ணத்தினை அனுப்பினால் அது அவரிற்கு பலிக்கும், இப்படி சிந்தித்தறிந்து கொள்வதன் மூலம் பல காரியங்க்களை செய்யலாம்.

இதன் அடிப்படை மனதிலும் உடலிலும் பிராண ஓட்டத்தினை சீராக்கி வலிமைப்படுத்தலேயாகும். 

பயிற்சித்து பலனைக் கூறவும். 

சத்குரு பாதம் போற்றி !

Friday, June 15, 2012

வாசகர் சந்தேகங்கள் : சித்தர்களின் சீடர்கள் ஆவதினால்/ தியானம் செய்வதினால் நம்மால் இல்லற வாழ்கை வாழ முடியாதா?

எமது சித்தவித்யா பதிவுகளை படித்த நண்பர் ஒருவர் சில சுவாரசியமான கேள்விகளை அனுப்பி வைத்திருந்தார். அவற்றிற்கு எம்மாலான பதிலை கூறியுள்ளோம். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.

1 . சித்தர்களின் சீடர்கள் ஆவதினால்/ தியானம் செய்வதினால் நம்மால் இல்லற வாழ்கை வாழ முடியாதா? (முடியும் எனில் ஏன் பிரம்மச்சரியம் ,பற்று அ ற்ற நிலை அல்லது பாசம் துறத்தல், விந்து கட்டுப்பாடு, காம நோய்? என பலவாறு கூறுகின்றனர் அது ஏன்) தியானம் செய்தால் குண்டலினி சக்தி மேலே எழுந்தால் ஆண்மை இருக்காது (குழந்தை பிறக்காது) என்று சில பதிவுகளில் படித்து அதிர்ந்து போனேன்.. இது தவறு என்று தெரிந்தாலும் மனதில் சிறு குழப்பம். இதுதான் என் கேள்வியின் அடிப்படை

இந்தக்கேள்வி எழுவதன் அடிப்படை எம்மனதில் உள்ள குழப்பமே என்பது எமது அனுமானம். இப்படியான குழப்பம் எழுவதன் ஆரம்ப புள்ளி நாம் எமது கலாச்சாரத்தின் பண்பாட்டின், தொடர்ச்சியினை இழந்து விட்டதன் விளைவு என்பதே எமது கருத்து.


எமது கலாச்சாரம் பண்பாடு அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்வின் மெய்யியலை எடுத்துக்கூறிய கலாச்சாரம் என்பதனை அறிந்திருப்பீர்கள். வாழ்வில் தர்மத்தினை கொண்டு பொருள் ஈட்டி, காமம் முதல் இன்பங்களை அழகாக அனுபவித்து வீடு எனும் முக்தியடைவதையே வாழ்வியலாக காட்டினர் எமது முன்னோர். இப்படியான கலாச்சாரத்தில் தியானம் செய்வதற்கு இல்லறம் முடியாது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. 


பற்று அற்ற நிலை என்பது ஒருவருடைய மனம் முதலான அந்தக்கரணங்கள்  சார்ந்த ஒன்று, அதற்கும் வெளிவேடங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை. காவிகட்டியவரெல்லாம் பற்று அற்றவருமில்லை, மனைவி மக்களுடன் தொழில் செய்து உலகவாழ்க்கை வாழ்பவரெல்லாம் சம்சாரியுமில்லை. ஒருவரது ஆன்ம முன்னேற்றம் என்பது தனது வாழ்க்கையினை மறுப்பதால் உண்டாவதல்ல, வாழ்ந்து அதில் பெற்ற அனுபவத்தினால் படிப்படியாக எமது மனம், புத்தி, அகங்காரம்,சித்தம் என்பவற்றை வசப்படுத்தி உலகில் இருந்தவண்ணம் தாமரை இலை நீர் போல் வாழ்தலே சித்தர் வாழ்க்கை. ஆன்மிக வாழ்க்கையினால் நாம் அனுபவஞானமே பேறவேண்டுமன்றி அனைத்தையும் துறந்துவிட்டு ஓடுவதல்ல! 

உங்கள் மனதின் எண்ண விருத்திகளும், ஆழ் மனப்பதிவுகளும் எப்படி உங்களில் செயல் புரிகின்றது என்பதனைப் புரிந்துகொண்டு அதன்படி எமது மனதை மெது மெதுவாக கட்டுப்படுத்தி மனதின் தளையிலிருந்து விடுபட்டு ஆன்ம அனுபவத்தினை பெறுவதே உண்மையான சாதனை வழி, இதை விடுத்து வேறு எதைச் செய்தாலும் மீண்டும் மீண்டும் இந்த சுழலில்தான் சுழல்வீர்களே தவிர மனதின் பிடியில் இருந்து விடுபடமாட்டீர்கள். 

ஆக தியானம் செய்வதற்கோ, ஞானம் பெறுவதற்கோ இல்லறம் ஒரு தடையில்லை, உங்கள் மனமே தடையாகும். குருநாதர் அகத்தியர் - லோபாமுத்திரை அம்மையார், காகபுசண்டர்-பகளாதேவி, வள்ளுவர் - வாசுகி என பெரும்பாலும் அநேக சித்தர்கள் தமது மனைவியுடனேயே இல்லறத்திலிருந்து சாதனை புரிந்தனர். அவர்கள் யாரும் கூறவில்லை இல்லறம் தடை என்று, ஆனால் ஒரு விடயத்தினை கவனத்தில் கொள்ளவேண்டும், இல்ல+அறம், அறத்துடன் வாழ்ந்தாலே இறைவாழ்க்கை, அல்லது இல்லை. 

இப்படியான கருத்து வருவதற்கு சித்தர்களில் இன்னொரு வகுப்பினரின் கருத்துக்களை தவறாக விளங்க்கிகொண்டமையும் காரணமாகலாம். பட்டினத்தார், பத்திரகிரியார் பாடல்கள் எல்லாம் உலக வாழ்க்கையினை சாடுவதாக காணப்படும். இதனை பொருள் கொள்ளும் போது அதனை தற்காலத்து பொருள் கூறும் ஆசிரியர்கள் விரக்தி நிலைப்பொருளாக உரைக்கின்றனர். அது விரக்தி நிலையில்லை "நிவிருத்தி" நிலை, எல்லாம் அனுபவித்து சலித்ததால் இனி என் இவை என்று பாடியவை, பட்டினத்தார் ராஜாவிற்கு பணம் கொடுக்க கூடியளவு செல்வந்தன், போக பாக்கியங்களையும் அ னுபவித்து இதெல்லாம் என்ன? என்று பாடியவை. 

உங்களின் அடுத்த விடயம் பிரம்மச்சார்யம் சார்ந்தது, பிரம்மச்சார்யம் என்பது பிரம்மத்தை ஆச்சரித்து (சார்ந்து) இருத்தல் என்று பொருள். விந்தினை வலுக்கட்டாயமாக அடக்குதல் என்று பொருளல்ல, பிரம்மத்தில் மனதை வைக்க, மனம் அடங்க, அதனுடாக, பிராணன் அடங்கி தானாக விந்து கட்டுப்படுத்தலே உண்மையான பிரம்மச்சார்யம். அதை விடுத்து வலுக்கட்டாயமாக அடக்கினால் ஆண்மை அற்றுப்போகும். 

நீங்கள் வாசித்து அறிந்த "தியானம் செய்தால் குண்டலினி சக்தி மேலே எழுந்தால் ஆண்மை இருக்காது (குழந்தை பிறக்காது)" என்ற கருத்து ஒருவகையில் உண்மையானதே, ஒரு சில சித்தமருத்துவர்களும், யோக ஆசிரியர்களும் வீணாக பீதியை கிளப்பி தம்மை பெரியவர்களாக காட்டிக்கொள்ள இப்படியான கருத்துக்களை பரப்பி ஆழ் மனத்தில் பதிவித்து விடுகிறார்கள். இதை உறுதியென அநேகர் நம்பி பெரும் உடல் மனக் கோளாறுகளுக்கு உள்ளாகின்றனர் . உண்மையில் காம சக்தி இல்லாத ஒருவன் எக்காரியத்தினையும் செய்யமுடியாது. காமம் என்பதும் பசி, கோபம், போன்றவொரு உணர்ச்சியே. அதனை அழித்து விட்டால் விதை இல்லாது போய்விடும். அதன் பின் ஆன்மிகமும் இல்லை, இல்வாழ்க்கையும் இல்லை.

விந்து சக்தியினை சரியான முறையில் பிராணாயாமத்தினால் ஆறாதாரங்களில் பிராண சக்தியுடன் கலந்து உயர் பரிணாமத்தினை அடைவதே குண்டலினி யோகத்தின் நோக்கம். இது முழு விழிப்புணர்வுடன் நடைபெறுவது. இப்படி நடைபெறும் போது உங்களது உணர்வின் கட்டுப்பாடு உடல் மீது கட்டாயம் இருக்கும். அதனால் ஆண்மை இழந்து விடுவோம் என்ற பயம் தேவையில்லை. சரியாக விளங்கிக்கொண்டு செய்தால் பிரச்சனை வர வாய்ப்பில்லை. அரைகுறை விளக்ககொண்டு, ஆழ்மனத்தில் பயத்தோடு செய்தால் இப்படி ஏற்பட வாய்ப்புண்டு. 

எமது முன்னோர்கள் காமத்தினை அடக்கச் சொல்லவில்லை, அனுபவித்து உயர்நிலை அடையவே வழிகாட்டினர். காமத்தினை அனுபவித்தல் என்பதன் பொருள் இக்காலத்தைப்போல் அல்லாமல் உணர்வை உயரிய பொருளில் வைத்து (எப்படி எனின் கோயில் சிற்பங்களில் ஆண் - பெண் உறவுகளை சித்தரித்து) அதனை புனிதமாக அணுகினார்கள். அதனால் அது சமூகத்திற்கும் தனி மனிதனிற்கும் உளவியல் ரீதியாக ஆரோக்கியமான ஒன்றாக விளங்கியது. இது அவர்களுக்கு இயல்பான பிரம்மச்சாரியத்தினை தந்தது. ஆனால் இன்று சமூகம் அப்படி இல்லை. இதனாலேயே இப்படியான பயங்கள் மனதினை ஆட்டிப்படைகிறது.

போகர் என்ற பெயரே போகத்தின் மூலம் யோகத்தினை அடைந்தவர் என்பதினால்தான். திருமூலரின் திருமந்திரம் மூன்றாம் தந்திரம் பரியங்க யோகத்தில் விரிவாக இதைப்பற்றி கூறியுள்ளார். இந்த தளத்தில் இது பற்றி இதற்கு மேல் விவாதிக்க முடியாது ஆதலால் குருவருள் இருப்பின் தனியான வலை ஒன்று அமைத்து இது பற்றி விவாதிப்போம்.

உங்களது இந்தக்கேள்வி எமது பாரம்பரிய அகவாழ்கையின் சிறப்பினை நாம் இழந்து நிற்கிறோம் என்பதனையும் மறைமுகமாய் சுட்டிக்காட்டுகிறது.

வாசகர்களே உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்!

மற்றைய கேள்விக்கான பதில்கள் தொடரும்...

சத் குருபாதம் போற்றி

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...