பிரம்ம முகூர்த்தத்தில் அகண்ட கண்ணுடையாள் தரிசனம்,
பாலும் சுத்த ஜலமும் ஆதிபீடத்திற்கு அபிஷேகம்,
காசி என்றால் சிவத்தின் ஒளி பரவும் இடமென்றாய் அம்மா
நகரமே சிக்கலும் விக்கலும் எச்சிலுமாய் இருக்கிறதே என்றேன்.
சிரித்தாள்; ஸ்தூலமுண்டு, சூக்குமம் உண்டு, அதி சூக்குமமும் உண்டு, இவை தாண்டிய காரணமும் உண்டு; அதற்கு மேல் மகாகாரணமும் உண்டு; கேள்வி கேட்டால் மகாகாரணம் ஏறும் வரை அப்பியாச வைராக்கியம் உனக்கு உண்டென்றால் அனைத்திற்கும் பதிலும் உண்டென்றாள் அன்னை!
சிறியேன் யான் உனது பஞ்சபூத ஆட்டத்தில் மயங்காமல் இருப்பது எப்படி, நீதான் அப்பியாச வைராக்கியம் தந்து வழி கூறவேண்டும் அம்மா! என்றேன்.
மந்தகாசப் புன்னகை உமிழ்ந்தாள்
கலி என்பது மகா குழப்பம், நேரற்ற தன்மை!
இதுவே காசியின் ஸ்தூல அமைப்பு.
ஸ்தூலம் என்பது அழுக்கு. அதற்குள் சிவ ஒளியை அறியும் நுட்ப ஆற்றல் பெறவேண்டும் மகனே என்றாள்!
காசி ஸ்தூல அமைப்பே உள்ளிருக்கும் சிவத்தின் ஒளியை அறியமுடியா உன்மனதினதும் உடலினதும் குழப்பம்!
தெய்வத்தைக் காணவென்று வழியெங்கும் ஸ்தூலக் கண்கொண்டு கவனம் இழந்தால் அழுக்கும், அசுத்தமும் என்று மனம் கலங்கும்!
பைரவரின் அருள் தரும் விழிப்புணர்வுடன் ஸ்தூலத்தில் இருக்கும் அழுக்கையும் பெருங்குழப்பத்தையும் தாண்டி, எனது அருளால் விசாலமான கண் பெற்றால் அழுக்கான ஸ்தூலத்திற்குள்ளேயே சூக்குமம், அதிசூக்குமமும், காரணமும், மகா காரணமும் காணும் ஆற்றல் பெறலாம்.
மலமும் சதையும் மூத்திரமும் நிறைந்த உடலுக்குள்ளே இறையின் அருள் பிரவாகிக்கும் சூக்கும நாடிகள் உண்டு. அந்த நாடிகளின் வழி உள்ளே சென்றால் புருவமத்தியில் காரணமான ஆன்ம ஒளி உண்டு; அது இன்னும் நுண்மையானால் மகாகாரணமான சிவத்தின் ஒளியும் உண்டு.
உனது கண் எப்போதும் புலன் வழி புறவயமாகப் பார்த்து பழகும்போது ஸ்தூலமே உணர முடியும். அதைத்தாண்டி பார்க்க உன் முயற்சி வேண்டும்! முயற்சி சிரத்தையானால் எனது அருளால் மற்றவை சித்திக்கும்; கவலை வேண்டாம்!
கண்ணை நேரே புறவயமாய் செலுத்தி புலன் வழி அழியும் நிலை போகம், அகமுகமாய் திரிபுடியில் செலுத்தினால் அது சிவயோகம்.
இட, பிங்கலை மூலாதாரம் தொடங்கி திரிபுடியில் இணைய மீனாக ஓடும் பிராண ஓட்டத்தை நடத்துவதால் நான் மீனாக்ஷி.
இந்த ஓட்டம் சிவத்தை அடையும் வரை சிவகாமத்தை உண்டுபண்ணுவதால் நானே காமாக்ஷி - சிவகாமி!
இந்த யோகத்தை நீ செய்ய விசாலமான சூக்கும அறிவைப் பெறச் செய்வதால் நான் விசாலாக்ஷி!
இதுவே அகவிழிப்பு பெற்றவனுக்கு நான் காட்டும் யோக வழி!
குரு காட்டிய வழியில் காசியில் எட்டுத்திக்கும் பைரவர் இருக்க அகங்காரம் அழிந்து அவரருளால் விழிப்புணர்வு பெற்றால் நான் உனக்கு விசாலமான அகக்கண்ணைத் தருவேன்; அந்தக்கண் கொண்டு பார்த்தால் ஸ்தூல அழுக்கிற்கு அப்பால் இருக்கும் சூக்குமமாகவும், அதிசூக்குமமாகவும், காரணமாகவும், மகா காரணமாகவும் இருக்கும் சிவத்தின் ஒளி உள்ளிருப்பதைக் காண்பாய் என்றாள் அன்னை!
இது உன்னுடலிற்குள் நடக்கிறது; இதை அறியும் பக்குவம் இல்லா மானிடர் அவரவர் பரிணாமத்திற்கு தக்க விளங்க காசித் தெருவில் நடந்து குழம்பி என் பீடம் வந்தால் சிரத்தையுள்ள சாதகனில் கோடியில் ஒருவனுக்கு விசாலமான அகக்கண்ணைத் தந்து சிவஒளி காணும் வழியை அருளுகிறேன் என்றாள் அன்னை விசாலாட்சி.
நானும் இதையடைய ஆசி வேண்டுகிறேன் என்று பணிந்தேன். நானே அகஸ்தியமயியாக நின்று உணர்த்துவிப்பேன் என்று ஒளிர்ந்தாள் விசாலாட்சி.
ஸ்ரீ ஸக்தி சுமனன்
பௌர்ணமி, பிரம்ம முகூர்த்தம்
காசி விசாலாட்சி சக்தி பீடம்
09-அக்டோபர்-2022
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.